சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை காணச் சென்றவர்களில் 5 பேர் பலியான சோக நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. சென்னையின் கடற்கரையை ஒட்டி கடந்த ஞாயிறு அன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம் பேர் குவிந்ததால் சென்னை நகரின் போக்குவரத்தே ஸ்தம்பித்து போனது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடந்த நிகழ்ச்சிக்கு மெரினா கடற்கரையில் காலை 6 மணி முதலே மக்கள், கூடத் தொடங்கி விட்டிருந்தனர். நேரம் போக போக வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர். உச்சி வெயிலில் நிகழ்ச்சி முடிந்த போது 200க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் அதிகமாக கூடக் கூடிய இந்த நிகழ்விற்கு போதுமான வசதிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். போக்குவரத்தை சீர் செய்வது, ஒழுங்குபடுத்துவது, அதிகப்படியான பேருந்துகள், ரயில்கள் இயக்குவது என எதையும் அரசு செய்யவில்லை. அத்தியாவசிய தேவையான குடிநீரைக் கூட அரசு முறையாக ஏற்பாடு செய்யவில்லை. அரசின் அலட்சியத்தின் காரணமாகவே 5 உயிர்கள் இன்று பறிபோயுள்ளன.
அரசின் அலட்சியம் ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் இது போன்ற நிகழ்வுகளுக்கு மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்த துயரச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு, சென்னையின் அரும்பாகத்தில் ஒரு வணிக வளாகத்தில் காலணி விற்கும் கடை ஒன்றில் ஒரு ஷீ வாங்கினால் இரண்டு ஷீ இலவசம் என விளம்பரம் செய்ததையடுத்து பல ஆயிரம் பேர் அங்கே குவிந்ததால் கூட்டத்தை சமாளிக்க போலீசார் வர வேண்டியதாயிற்று. இதற்கு முன்பும் கூட கோவையில் புத்தாண்டுக்கு சலுகை அறிவித்த பிரியாணி கடையில் குவிந்த மக்கள் கூட்டத்தை போலீசார் வந்து கலைத்த சம்பவமும் நடந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியின் போதும் இதே போன்று பல ஆயிரம்பேர் நிகழ்ச்சியைப் பார்க்க காசு கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி கலந்து கொண்டதும், அதன் காரணமாக அந்தப் பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததும் நடந்தது.
முன்பெல்லாம் கோவில் திருவிழாக்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கில் கூடுவார்கள். ஆனால் இன்றோ இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூட, சாதனைப் புத்தகத்தில் இடம்பெரும் அளவிற்கு, லட்சக் கணக்கானவர்கள் கூடுவது சகஜமாகிவிட்டது.
இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, நம் நாட்டைப் போன்றே சமூக சூழல் கொண்ட பாகிஸ்தானிலும் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சியில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்ததில் சலுகை விலையில் பொருட்களை விற்கிறார்கள் எனக் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் ஒரு சில நிமிடங்களில் அந்த வணிக வளாகத்தில் இருந்த கடைகளின் பொருட்கள் அனைத்தையும் அள்ளிச் சென்றனர். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. போலீசார் வந்து தடுத்திருக்காவிட்டால் கராச்சியில் நடந்தது போன்றே சென்னை அரும்பாக்கத்திலும் நடந்திருக்கும்.
மேலே கூறியுள்ள நிகழ்வுகளில் விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்பு போன்று எதுவும் நடக்கவில்லை என்றாலும், அடிப்படையில் இவை எல்லாம் ஒரே மாதிரியான நிகழ்வுகள் தான்.
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசங்களைக் காண அரை நாளில் 15 லட்சம்பேர் திரண்டது என்பது, அதே இடத்தில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் நடந்த உணர்வுப்பூர்வமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மொத்த எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். இது போன்ற நிகழ்வுகளுக்கு கூடும் மக்கள் கூட்டமும், அவற்றிற்குக் கிடைக்கும் ஆதரவும், மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கு கிடைப்பதில்லை.
பாசிச மோடி அரசையே பணிந்து வரச் செய்த விவசாயிகள் போராட்டத்தில் கூட இவ்வளவு பேர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் விமான சாகசத்தை காணவும், ஷீ வாங்கவும், பிரியாணி கடையிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதற்கு இந்த ஏகாதிபத்திய சமுக கட்டமைப்பின் இரண்டு அமசங்கள் முக்கிய காரணமாக உள்ளன. அதில் முதலாவது, ஏகாதிபத்திய சக்திகளினால் ஊட்டி வளர்க்கப்படும் நுகர்வு வெறி. அளவு கடந்த நிதி மூலதனத்தை குவித்து வைத்திருக்கும் ஏகாதிபத்தியம் பொருட்களை அபரிமிதமாக உற்பத்தி செய்து வைத்துள்ளது. அப்படி குவிக்கப்பட்டுள்ள பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நுகர்வு வெறியை வளர்கிறது. மக்களை வாங்க தூண்டுவதற்காக தொடர்ந்து விளம்பரம் செய்கிறது. வாங்குவதற்கு கையில் பணம் இல்லையா பிடி கடனை என கடன் வழங்குகிறது. வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியவில்லையா தவணை முறையில் (ஈ.எம்.ஐ) கட்டு என்கிறது. வாங்குபவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்பது தெரிந்தாலும் கடனைப்பிடி பொருளை வாங்கு என வாரிக் கொடுக்கிறது.
இதன் காரணமாக நுகர்வு வெறி என்பது மக்கள் மத்தியில் அபாயகரமான அளவிற்கு அதிகரித்துள்ளது. எவையெல்லாம் முன்னர் ஆடம்பரமாக இருந்ததோ அவையெல்லம் இன்றைக்கு அத்தியாவசியமாகிவிட்டன. உண்ணும் உணவில் கூட பல வகைகளில் வித்தியாசம் வித்தியாசமாக உண்ண வேண்டும், அதற்காக கடை கடையாக போக வேண்டும் என நினைக்கும் வகையில் மக்களின் மனநிலையை மாற்றியிருக்கின்றனர். மிட்நைட் பிரியாணி விடியற்காலை பிரியாணி என எல்லா நகரங்களிலும் பிரியாணியை நுகர்வதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
ஷீ வாங்குவதற்கு குவிந்த கூட்டத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு ஷீ வாங்கினால் இரண்டு ஷீ இலவசம் என விளம்பரம் செய்கிறார்கள். ஒருவர் மூன்று ஷீக்களை வைத்து என்ன செய்ய போகிறார் என நாம் நினைக்கலாம் ஆனால் இன்று, உடுத்தும் உடைக்கு ஏற்ப காலணியை வாங்கி குவிப்பது என்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. ஜெயலலிதாவும் சசிகலாவும் வாங்கி வைத்திருந்த செருப்புகளைக் கண்டு வாயடைத்த காலம் போய் இன்று யூடியூப் சேனல் நடத்துபவர்கள் கூட கலெக்சன் என்ற பெயரில் அதை விட அதிகமாக குவித்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை செல்போனை மாற்றுவது என்பது இன்றைக்கு இளைய தலைமுறையிடம் சர்வ சாதாரணமாகிவிட்டது.
நுகர வேண்டும் என்பது மேலோங்கி அதுவே தற்போது வெறியாக மாறியிருக்கிறது. ஏகாதிபத்தியம் உருவாக்கித் தந்திருக்கும் வசதிகள் அனைத்தையும் எப்படியாவது நுகர வேண்டும், அதற்காக திருடலாம் கொள்ளையடிக்கலாம் என்று கூட இளைஞர்கள் பலர் கருதுகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடும் இளைஞர்கள் குறித்த செய்திகளே இதற்கு ஆதாரம்.
அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு இந்த நுகர்வு வெறியும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் நுகர்வது என்பது வெறுமனே பொருட்களை மட்டுமல்ல. காண்பது, கேட்பது, உணர்வது என அனைத்தையும் நுகர வேண்டும் என்ற வெறி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதனால் தான் விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக லட்சக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர்.
மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற மாற்றத்திற்கு, ஏகாதிபத்தியத்தினால் திட்டமிட்டு பரப்பப்படும் நுகர்வு வெறியை போன்றே இன்னொரு காரணமும் இருக்கிறது. அது உழைப்பை துன்பமாகவும், நுகர்வை இன்பமாகவும் கருதுகின்ற பண்பாகும். மனிதன் மனிதனாக இருப்பதற்கு அடிப்படையாக இருக்கின்ற உழைப்பினை துன்பமாக கருதும் இந்தப் பண்பினை மார்க்ஸ் அந்நியமாதல் என்று கூறுகிறார். சிங்கமானது வேட்டையாடுவதை துன்பமாக கருதுவதில்லை, தேனியானது தேன் சேகரிப்பதை துன்பமாக கருதுவதில்லை. அவை இயற்கையாக, இயல்பாக இருக்கின்றன. ஆனால் மனிதர்களிடம் உழைப்பதை துன்பம் என்றும் வார இறுதியில் இது போன்று சென்று நுகர்வதை இன்பம் என்றும் கருதும் பண்பு உருவாகியிருக்கிறது.
இந்த பண்பு, ஏகாதிபத்திய சமூக கட்டமைப்பில் உள்ள சுரண்டலின் விளைவாக தோன்றியதாகும். சமூகமாக உற்பத்தியில் ஈடுபட்டு உருவாக்கிய பொருட்களின் பலனை ஒருசில முதலாளிகள் சுரண்டியெடுத்து அனுபவிப்பதும், தனது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள தனது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலையில் இருப்பது என்பதும், உழைக்கும் தொழிலாளியை தான் உற்பத்தி செய்யும் பொருட்களிடமிருந்தும், சக தொழிலாளிகளிடமிருந்தும், ஏன் உழைப்பிடமிருந்துமே அந்நியப்படுத்துகிறது. இதன் காரணமாக உழைப்பை ஒரு தொழிலாளி இயற்கையானதாக, இயல்பானதாக பார்ப்பதில்லை. மாறாக உழைப்பது என்பது மனிதனிக்குத் துயரமானதாக மாறிவிடுகிறது. கிடைக்கும் சொற்ப கூலியை வைத்துக் கொண்டு தான் உழைத்து உருவாக்கிய பொருட்களை நுகர்வது என்பது மனிதனுக்கு இன்பமானதாகிவிடுகிறது. அதனால்தான் இதுபோன்ற நுகர்வுகளைத் தேடி மனிதன் ஓடுகிறான்.
ஒருபக்கம் நுகர்வு வெறி என்பது ஏகாதிபத்தியத்தினால் திட்டமிட்டு பரப்பபடுகின்றது என்றால், இன்னொரு பக்கம் எகாதிபத்திய சுரண்டலின் விளைவாக, சமூகத்தில் தொழிலாளர்கள் மத்தியில் அந்நியமாதல் தோன்றுகின்றது. இவை இரண்டுமே நம் சமூகத்தினைப் பீடித்துள்ள மிக மோசமான பண்புகள்தான். ஏகாதிபத்திய சுரண்டலே இவற்றின் அடிப்படையாக இருக்கிறது. எனவே ஏகாதிபத்தியச் சுரண்டலை ஒழிப்பதற்கான பாதையில் முன்னேறுவதும், அதற்காக மக்களை பல்லாயிரக்கனக்கில், லட்சக் கணக்கில் திரட்டுவதும் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கமால் தடுப்பதற்கான வழியாகும்.
- அறிவு
கார்ப்பரேட்களின் லாபவெறி நுகர்வு வெறி