பங்குச் சந்தை சூதாட்டத்தில் சிக்கிப் பணத்தை இழக்கும் இந்திய இளைஞர்கள்!

இந்தச் சூதாட்டத்தில் போட்ட பணத்தைப் பறிகொடுப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய் ஈட்டும் 30 வயதிற்கும் குறைவான இளைஞர்களே. நிதிச்சேவை நிறுவனங்களும், அந்நிய முதலீட்டாளர்களும், உள்நாட்டு நிதிநிறுவனங்களும், பங்குச்சந்தை தரகர்களும் இச்சூதாட்டத்தில் இலாபமடிக்கும் சூரப்புலிகளாக இருக்கின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்  ஜுன் 4-ம் தேதியன்று பாஜகவும், பங்குச்சந்தையும் புதிய சாதனையின் உச்சத்தை தொடும் என மோடி பரப்புரை செய்தார். தாம் உருவாக்கிய சந்தை சார்பு சீர்திருத்தங்கள், வெளிப்படையான, வலுவான நிதிச் சூழலை உருவாக்கியதாக தம்பட்டம் அடித்தார்.

பங்குச்சந்தை உயர்வு பற்றி மோடியின் வாய்ச்சவடால் அனைத்தும் அப்பட்டமான பித்தலாட்டம் என செபியின் சமீபத்திய அறிக்கை ஒன்று நிருபித்துவிட்டது. தேசியப் பங்குச்சந்தையின் ஒரு பிரிவான ப்யூச்சர் அண்டு ஆப்சன் (Futures and Options) என்பதன் இலாப நட்டக் கணக்கு பற்றிய அறிக்கையொன்றை செபி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. செபி வெளியிட்ட இவ்வறிக்கையின் முடிவுகள் மூலம் மோடியின் ஆட்சியில் பங்குச்சந்தையில் இலாபம் வெள்ளமென பாய்ந்து வளம் பெருகும் என்ற கணிப்பு இன்று பகற்கனவாகி போயுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக (2022 முதல் 2024 வரை) பங்குச்சந்தையின் ஒரு பகுதியான ப்யூச்சர் அண்டு ஆப்சன் என்பதில் மட்டும் சுமார் ரூ 1,81,000 கோடியை 1.13 கோடி முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக செபியின் அறிக்கை கூறுகிறது.

கார்ப்பரேட் முதலீட்டு நிறுவனங்கள் தமது பங்குகளில் வீழ்ச்சி அடைந்து இவ்வளவு தொகையை இழந்து இருக்கலாம் என நீங்கள் எண்ணலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ப்யூச்சர் அண்டு ஆப்சன் எனும் பங்குச்சந்தைச் சூதாட்டத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களில் 92% பேர் ரூ 5 இலட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருவாய் ஈட்டும் இந்திய இளைஞர்கள். அதிலும் குறிப்பாக இந்த இளைஞர்களில் 93% பேர் 30 வயதுக்கும் குறைவானர்கள். ஃப்யூச்சர் அண்டு ஆப்சனில் 2024-ம் ஆண்டில் மட்டும் முதல் முறையாக 42 இலட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். மேலும் 22.4 இலட்சம் பேர் நட்டம் அடைந்த போதிலும் திரும்பத் திரும்ப மூன்று ஆண்டுகளாக முதலீடு செய்திருக்கிறார்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குற்றமோ, தவறோ கிடையாது என்கிற மனப்போக்கில் இளைஞர்களும் தமது பணத்தை இழந்தாலும் இதில் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள். அஸ்ஸாமைச் சேர்ந்த பி.டெக் மாணவர் ஒருவர் தன் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் நுன்கடன் ஆப் மூலம் பணத்தைத் திரட்டி ப்யூச்சர் அண்டு ஆப்சனில் முதலீடு செய்து  இரண்டே ஆண்டுகளில் ரூ 26 இலட்சத்தை இழந்திருக்கிறார் எனும் செய்தியை பத்திரிக்கைகள் சமீபத்தில் வெளியிட்டிருந்தன.

இப்பிரிவின் 2024-ம் ஆண்டின்  இலாப நட்ட கணக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ரூ 75,000 கோடி பணம்  போண்டியாகி உள்ளது. இதில் தனிநபர் முதலீட்டாளர்கள் என்ற பெயரில் முதலீடு செய்த இளைஞர்கள் மட்டும் ரூ 41,544 கோடியை இழந்துள்ளனர். தனிநபர் முதலீட்டாளர்களுக்கு பெரும்பாலும் இதில் நட்டம் ஏற்படுகிறது என்றால் இவ்வளவு பணத்தை கொள்ளை இலாபமாக ஈட்டுபவர்கள் யார்?

2024-ம் ஆண்டில் மட்டும் இப்பிரிவில் நிதி மூலதனச் சேவை நிறுவனங்களும் (ரூ 33,037 கோடி), அந்நிய முதலீட்டாளர்களும் (ரூ 27,965 கோடி), உள்நாட்டு நிதிநிறுவனங்களும் (ரூ 210 கோடி) எனக் கொள்ளை இலாபத்தை சம்பாதித்துள்ளன. இதுமட்டுமில்லாமல், இந்தப் பங்கு சந்தை சூதாட்டத்தில் பணப்பரிவர்த்தனை தொகை எனும் பெயரில் பங்குச்சந்தை தரகர்களும்,  அரசும் சேர்ந்து  முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பிரிவில் முதலீடு செய்ததற்காக அனைத்து முதலீட்டாளர்களிடமிருந்து பணப்பரிவர்த்தனை தொகையாக ரூ 49,480 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதில் 2024-ம் ஆண்டு மட்டும் பணப்பரிவர்த்தனை தொகையாக ரூ 22,541 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இப்பணப் பரிவர்த்தனை தொகையில் பங்குச்சந்தை தரகர்களுக்கு ரூ.11,364 கோடியும், பரிவர்த்தனைக் கட்டணமாக ரூ 4,469 கோடியும், பரிவர்த்தனை வரியாக ரூ 3,454 கோடியும், ஜி.எஸ்.டிக்காக ரூ 2,868 கோடியும், முத்திரை தீர்வையாக ரூ 199 கோடியும், செபிக்கான கட்டணமாக ரூ 97 கோடியும்  வசூலிக்கப் பட்டிருக்கிறது.

முதலாளித்துவ அமைப்பு முறை உருவாக்கும் நுகர்வு வெறி மூலம், இளைஞர்கள் தமது சேமிப்பு, கையிருப்பு, கடன்கள் மூலம் பணத்தைப் பெருக்க முயலுகின்றனர். இதற்கு அதிக இலாபம் சம்பாதிக்க கூடிய முறையாக பங்குச்சந்தையை தேர்ந்தெடுக்கின்றனர். இதில் முதலீடு செய்வதற்கு என பல பிரிவுகள் உள்ளன.

பங்குச்சந்தையில் வெளியிடப்படும் பங்கு பத்திரங்களை சரியானவற்றை விலைக்கு வாங்கி, அவற்றையே பிறகு உயர்ந்த விலைக்கு விற்று இலாபத்தை ஈட்டுவதும், ஆனால் அதே பங்கு பத்திரங்களின் விலை வீழ்ச்சி அடைந்தால் நட்டம் ஏற்படுவதும் பங்குச்சந்தை சூதாட்டத்தின் ஒரு வகை மாதிரி என்றால் ப்யூச்சர் அண்டு ஆப்சன் எனும் பிரிவு பங்குச்சந்தை சூதாட்டத்தின் அதி தீவிர வடிவம் ஆகும்.

குதிரைப் பந்தயத்தில் எந்த குதிரை வெற்றி பெறும் என்பதைக் குறித்து பந்தயம் கட்டுவதைப் போலவே பங்குச்சந்தையில் எதன் மதிப்பு ஏறும், இறங்கும் என்பது குறித்தும் பந்தயம் கட்டி சூதாடுவது தான் இந்த ப்யூச்சர் அண்டு ஆப்சன் எனும் பங்குச்சந்தை சூதாட்டம். இப்பிரிவில் சேரும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதில்லை. அதற்கு மாறாக பங்குச்சந்தையின் போக்குகள் குறித்து பந்தயம் கட்டி சூதாடுகின்றனர். இப்படிச் சூதாடித் தோற்றவர்களின் என்ணிக்கையைத் தான் செபி அறிக்கையாக வெளிட்யிட்டுள்ளது.

ப்யூச்சர் அண்டு ஆப்சன் என்பது தேசியப் பங்குச் சந்தையில் இருக்கும் ஒரு தனிப்பகுதி தான். இதில் பரிவர்த்தனை செய்ய பங்குச் சந்தை தரகருடன் ஒரு கணக்கை கட்டாயம் தொடங்க வேண்டும். இப்பிரிவைப் பொறுத்தவரை இதில் யாரும் பங்குகளை வாங்குவதில்லை; விற்பதில்லை. பங்குகளை இந்த விலையில் இந்த மாதத்துக்குள் வாங்குகிறோம் என ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒரு காண்டிராக்ட் பத்திரம் எழுதி அதைத் தான் வாங்குவார்கள்; விற்பார்கள் கடைசி வரையில் நிஜமான பங்குகளை யாரும் வாங்குவதும் இல்லை விற்பதும் இல்லை.

இதில் பங்குகள் டெலிவரி கிடையாது; லாட் லாட்டாகத்தான் வாங்க முடியும். மற்ற முறைகளை போல ஒரு பங்கு, இரண்டு பங்கு என்றெல்லாம் வாங்க முடியாது. ஒரு லாட்டின் அளவு 500 பங்கு என்று வைத்துக் கொண்டால், இந்த 500 பங்குக்கும் சேர்த்து மொத்தமாக நீங்கள் பணம் கட்ட வேண்டிய தேவையில்லை. மார்ஜின் பணம் எனப்படும் ஒரு தொகையை கட்டிவிட்டாலே போதும்; நீங்கள் எவ்வளவு பங்குகளை வேண்டுமானாலும் வாங்கிக் குவிக்கலாம். ஆனால் அதற்குண்டான மார்ஜின் பணத்தை கட்டிவிட வேண்டும். அன்றாடம் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும் போது, நீங்கள் தரகருக்கு அவ்வீழ்ச்சிக்கான மார்ஜின் பணத்தை கட்டாயம் கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.  பங்கு விலை உயர்ந்தால் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என இச்சூதாட்டத்தில் பல விதி முறைகள் உள்ளன.

இந்தச் சூதாட்டத்தில் போட்ட பணத்தை பறிகொடுப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய் ஈட்டும் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்களே. நிதிச்சேவை நிறுவனங்களும், அந்நிய முதலீட்டாளர்களும், உள்நாட்டு நிதிநிறுவனங்களும் பங்குச்சந்தை தரகர்களும் இச்சூதாட்டத்தில் இலாபமடிக்கும் சூரப்புலிகளாக இருக்கின்றனர். செபியும் பல்வேறு கட்டணங்கள், வரிவிதிப்புகள் என்ற பெயரில் இந்த இளைஞர்களிடமிருந்து பணத்தை வேறு வசூலித்து விடுகின்றன.

தாராளமயத்திற்கு முன்பு பெருநகரங்களிலும் மாநிலத் தலைநகரங்களிலும் மட்டுமே இருந்த பங்குச் சந்தை விற்பனை மையங்கள் இன்று ஓரளவு வளர்ந்துள்ள தொழில் மற்றும் வணிக நகரங்களிலும் தனது கிளைகளையும் விற்பனை நிலையங்களையும் அமைக்கத் தொடங்கியுள்ளன. இதனோடு இன்றைய ஸ்மார்ட் போன் வளர்ச்சி மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்து கொண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் எனும் வாய்ப்பு இளைஞர்களுக்கு உருவாகியிருக்கிறது. 2024-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக  பணத்தை இழந்தவர்களில் 46% பேர் இந்திய துணை நகரங்களில் இருந்து முதலீடு செய்தவர்கள் என்பதன் மூலம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பங்குச்சந்தை வளர்ச்சி பற்றிய மாயையை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் பங்குச்சந்தை வளர்ச்சி மூலம் நாடு பொருளாதாரத்தில் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுவதாக முதலாளித்துவ ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளுகின்றன. ஆனால் பங்குச்சந்தையில் கொட்டப்படும் மூலதனம் நேரடியாக சரக்கு உற்பத்தியிலோ, பரிமாற்றத்திலோ ஈடுபடப்போவதில்லை. புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கப்போவதில்லை மாறாக தரகர்களும், நிதிநிறுவனங்களும், கார்ப்பரேட் முதலாளிகளும் கொள்ளையடிக்கத் தான் இது உதவும். நடுத்தர இந்திய இளைஞர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வரும் நிலைமையைத் தான் இதுபோன்ற பங்குச்சந்தை சூதாட்டங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.

  • தாமிரபரணி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. பங்கு சந்தை என்பது பற்றி தெரியாத நபர்கள் கூட, இதில் பணம் வரும் என்று நம்பி செல்வது தமிழகத்தில் அதிகமாக உள்ளது.