ஒளிரும் இந்தியாவில், பட்டினியால் சாகும் விவசாய கூலித் தொழிலாளர்கள்

 

நாடு முன்னேறுகிறது, இந்தியா ஒளிர்கிறது, அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியின் பொருளாதாரத்தை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ப்போகிறது என ஆளும்வர்க்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. பங்குச் சந்தை பிரம்மாண்டமாக வளர்கிறது, வெளிநாட்டு மூலதனம் வந்து கொட்டுகிறது. சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன, அம்பானி உலகப் பணக்காரராக உயர்ந்திருக்கிறார், அதானியோ அவரைத் தாண்டி வளர்கிறார் என தினந்தோறும் வளர்ச்சியின் கதைகள் பல வடிவங்களில் மக்கள் மத்தியில் பரப்படுகிறது.

ஆனால் இப்படி ஊதிப் பெருக்கப்படும் பொருளாதார வளர்ச்சி, உழைக்கும் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த என்ன செய்தது என்று பார்த்தால் ஒன்றும் செய்யவில்லை என்பதுடன் இருக்கின்ற வாழ்வையும் பறித்து அதலபாதாளத்தில் தள்ளியிருக்கிறது. ஒளிரும் இந்தியாவின் தொழிலாளர்கள் இன்றைக்கு பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்படும் அவல நிலையில் இருக்கின்றனர். அப்படித்தான் மேற்கு வங்கத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த விவசாயக் கூலித் தொழிலாளி சமர்கான் சென்னை ரயில் நிலையத்தில் பட்டினியாகக் கிடந்து நேற்று மரணமடைந்திருக்கிறார்.

அரசால் திட்டமிட்டு அழிக்கப்படும் விவசாயம் இனியும் தங்களுக்கு சோறு போடாது என்ற நிலைமையில் அத்துக் கூலிகளாக நகரங்களை நோக்கி ஓடி வரும் கோடிக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்களில் ஒருவராக, சென்னையை அடுத்த பொன்னேரிக்கு, 300 ருபாய் தினக் கூலிக்கு, விவசாய வேலை செய்வதற்காக, வந்தவர்தான் சமர் கான். அவருடன் மேலும் 15 பேர் மேற்கு வங்கத்திலிருந்து கடந்த வாரம் சென்னைக்கு வந்துள்ளனர்.

வந்த இடத்தில் வேலை கிடைக்காமல், சாப்பாட்டிற்கு வழியும் இல்லாமல் 6 நாட்கள் பட்டினியாக இருந்தபோதும், சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல கையில் இருந்த பணத்தையெல்லாம் கொண்டு ரயில் டிக்கெட் வாங்கியிருக்கின்றனர். சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்திற்குச் செல்லும் ரயிலுக்காக காத்திருந்த போது, பட்டினியால் 15 பேரும் மயக்கமடைந்துவிட, ரயில்வே போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 15 பேரில் சமர்கான் இறந்துவிட்டார், இன்னொருவரின் நிலையும் ஆபத்தில் இருக்கிறது. மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து வந்துவிட்டு, சமர்கானின் உடலுடன் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தச் செய்தி வெளியானவுடன் பலரும் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு கிடைக்கிறதே அது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே என்று கருத்துக் கூறுகின்றனர். இன்னமும் சிலரோ தமிழக அரசு இதுபோல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும், புலம் பெயர் தொழிலாளர்கள் வரும் ரயில் நிலையங்களில் அவர்களுக்கு வழிகாட்ட வசதிகள் செய்ய வேண்டும் என பல வழிகளில் ஆலோசனைகளைக் கூறுகின்றனர்.

இதன் மூலம், வாழ வழியில்லாமல் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட புலம் பெயர் தொழிலாளி செத்துப் போகாமல், கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டுவதற்கு அவர்கள் வழிகாட்டுகின்றனர். ஆனால் புலம் பெயர் தொழிலாளர்களாக அவர்கள் அல்லபட வேண்டியதன் அவசிய என்ன? இந்த நிலை அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? இதனை மாற்ற என்ன செய்ய வேண்டும் என யாரும் யோசிப்பதில்லை. 

தனது மகன் திருமணத்திற்கு பல ஆயிரம் கோடி ருபாய் செலவு செய்யும் அம்பானி இருக்கும் இதே நாட்டில்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் பட்டினியால் சாகும் நிலையில் இருக்கின்றனர். ஆளும் வர்க்க கட்சிகள் எதுவாக இருந்தாலும் அவை வெளிநாட்டு மூலதனத்தை எப்படி ஈர்க்கலாம், முதலாளிக்கு என்ன என்ன சலுகைகளை வாரி வழங்கலாம் என்றுதான் சிந்திக்கின்றனவே அன்றி உழைக்கும் மக்கள் குறித்து அவர்களுக்குக் கிஞ்சிற்றும் அக்கறை கிடையாது.

இதுதான் இன்றைய இந்தியா!

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன