மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை, வருகிற 2-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடத்தப் போவதாக வி.சி.க அறிவித்துள்ளது. அதில் மதவாத பாஜகவையும், சாதியவாத பாமகவையும் தவிர, திமுக, அதிமுக, தவெக உட்பட இதர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாமென அழைப்பு விடுத்துள்ளது.
விசிக.வானது, ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் இருப்பதால், சட்டமன்றத்திலேயே மது ஒழிப்பு கோரிக்கை எழுப்பி, அதற்கான தீர்மானத்தையும் கொண்டு வரலாம். மதுவை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் வலியுறுத்தலாம். ஆளும் கட்சியான திமுக, மறுக்கும் பட்சத்தில், கூட்டணியிலுள்ள இதர கட்சிகளுடன் இணைந்து மதிப்புப் போராட்டத்தை மக்களுடன் களத்தில் இறங்கி நடத்தி இருக்கலாம்.
அதை விடுத்து, லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து, ஒரு மாநாட்டை நடத்தி, அதில், டாஸ்மாக்கை வீதிகள் தோறும் மாறி, மாறி நடத்தி மகளிர் தாலியை அறுத்த அதிமுக – திமுகவையும் பங்கேற்க அழைப்பது எதற்கு? இவற்றை கேள்வியாக முன்வைத்து, அரசியல் விமர்சகர்கள் – எதிர்க்கட்சிகள் விவாதமாக எழுப்பினர். உடனே “இம் மாநாட்டின் மூலம் அரசியல் ஆதாயம் தேடவில்லை. தேர்தல் கூட்டணி என்பது வேறு, அரசியல் என்பது வேறு” என்று விளக்கவுரை ஆற்றினார் விசிக தலைவர்.
தேர்தல் என்பது அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான ஒரு களமே. இதனடிப்படையில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்து, சட்ட உறுப்பினர்களாகி அரசின் அங்கமான அரசாங்கத்தில் பங்கேற்று உள்ளீர்கள். இதன் மூலம், அவரவர் பகுதியில் அரசின் திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். இது அரசியல் அல்லாமல் வேறு என்ன?
கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டே, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பொதுவாக கோர முடியாது. கூட்டணி தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திமுக ஆட்சியிடம் தான் கோர முடியும். அப்படி கோருவது விசிக வின் உரிமையாக இருப்பினும், இவற்றையும் வெளிப்படையாக முன் வைக்காமல் பூடகமாக முன்வைப்பது ஒரு புறம் இருப்பினும், இது அரசியல் ஆதாயம் இல்லாமல் வேறென்ன?
மக்கள் பிரச்சினைகளில் இதுவரை குரல் கொடுக்காமல், போராடாமல் முடங்கி கிடந்த தவெக தலைவர் விஜய். நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான, அரசியல் அருகதையற்ற தவெக-வை மாநாட்டிற்கு அழைப்பது அரசியல் ஆதாயம் இல்லாமல் வேறென்ன?
இம்மாநாடு மூலம் ‘மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதையும், தேசிய அளவில் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதையும்’ வலியுறுத்துகிறது. “இதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணையும்படி” விசிக கோருகிறது. அப்படியெனில், தேசியத்தின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் ஊர், ஊராக டாஸ்மாக்’கை திறந்து, ஊர் முழுக்க ஊற்றிக் கொடுத்து, ஊர் மகளிர் தாலியை அறுத்த சாராய வியாபாரிகளான திமுகவையும், அதிமுகவையும் ஜனநாயக சக்திகளாக வரையறுத்து மாநாட்டிற்கு அழைப்பது என்பது அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமல்ல, அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம் இல்லையா?
அரசியலுக்கும், அரசியல் ஆதாயத்திற்கும், அரசியல் சந்தர்ப்பத்திற்கும் இது போன்ற விளக்கங்கள் எண்ணற்றத்தைத் தர முடியும். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் இருப்பது போல, ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு அரசியல் இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. அரசியலின்றி அணுவும் அசையாது என்பதை நினைவில் வைத்து திருவாய் மலருங்கள்.
மகளிரை பாதிக்கும் மதுவை ஒழிப்பது, விசிகவின் உண்மையான நோக்கமாக இருப்பினும், சாராய வியாபாரிகளான திமுக – அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும். மது ஒழிப்பை விரும்பும் ஜனநாயக சக்திகள் – புரட்சிகர சக்திகளுடன் இணைந்து, குறிப்பாக தமிழக அளவில் டாஸ்மாக் மூடும் போராட்டத்தை மக்கள் பங்கேற்போடு வீச்சாக, வீதி, வீதியாக முன்னெடுப்பது மூலமே, மதுவிலக்கை விரைவுப்படுத்த முடியும். இல்லையேல், இந்த மாநாடு அரசியல் ஆதாயம் தேடுவதாக அமையும்.
- மோகன்
வி சி க அரசியல் ஆதாயம் தேடுவதர்ககவே இந்த மாநாடு 👌👌
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு. இப்போது இருக்கிறீர்கள் தானே? கூடுதல் பங்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்றால் உங்களுக்கு கேட்க உரிமை உள்ளது. அதை நேரடியாக கேட்கலாம். ஊருக்கு ஊறு சாராயம் விற்கும் திமுக அதிமுக வியாபாரிகளை அழைத்து மாநாடு நடத்துவது அறுவறுப்பாக உள்ளது.
கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள்