அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
நமது நாடு ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது; ஆம்! முசோலினி, ஹிட்லர் வரிசையில் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல், நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்து முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிறுவ வெறித்தனமாக முயன்று வருகிறது.
பாசிசம் என்பது மதவெறி, சாதிவெறியைக் கொண்டது மட்டுமல்ல; முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதாகும். முதலாளிகளின் நெருக்கடிகளின் சுமையை மக்களின் தலைமீது சுமத்துவதாகும். இதற்காகத்தான் ஜனநாயக உரிமைகளை அறவே வெறுக்கும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் (உ.த.தா) என்ற மறுகாலனியாக்கக் கொள்கையைக் கடைபிடிக்கும் முதலாளி வர்க்கம், ஜனநாயகத்தை வாசனையின்றி ஒழித்துக் கட்டத் துடிக்கும் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பலை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது.
2014-இல் அதிகாரத்துக்கு வந்தபிறகு உ.த.தா. கொள்கையை ஒரு வெறியோடு நடைமுறைப்படுத்தி முதலாளிகளின் கஜானாவை நிரப்பிவரும் மோடி கும்பல், உழைக்கும் மக்களின் வாழ்வை மரணக்குழியில் தள்ளியுள்ளது.
கடன் தொல்லையால் ஒருமணி நேரத்துக்கு ஒரு விவசாயியைத் தற்கொலைக்குத் தள்ளியுள்ள மோடி கும்பல், கடந்த 10 ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் வாராக்கடன்களாகத் தள்ளுபடி செய்துள்ளது. மக்களிடமிருந்து மாதாந்திரம் 1.50 இலட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. என்ற பெயரில் கொள்ளைடித்து, கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 30% இலிருந்து 22% ஆகக் குறைத்துள்ளது. மக்களுக்கான கல்வி, மருத்துவம், விவசாயம், மின்சாரம், எரிவாயு போன்றவற்றுக்கு வழங்கிய மானியங்கள், செலவீனங்களை இரத்து செய்து, அவற்றைக் கார்ப்பரேட்டுகளுக்கு மானியங்களாகவும், மூலதனச் செலவீனங்களாகவும் வாரி வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற பெயரில் வெறித்தனமாக நடைமுறைப்படுத்தப்பட்ட உ.த.தா. கொள்கையால் 2000-இல் 35%-ஆக இருந்த படித்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை, 2022-இல் 67%-ஆக எகிறியுள்ளது. இதன்விளைவாய் தூய்மைப் பணியாளர் வேலைக்கு இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள் 46,000 பேர் விண்ணப்பிக்கும் அவலமும் சோற்றுக்கு வழியில்லாமல் பெற்ற பிள்ளையை விற்கும் அவலமும் நாட்டில் அரங்கேறி வருகிறது.
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., மூலப் பொருள் விலையேற்றம் போன்றவற்றால் சிறுகுறு, நடுத்தர தொழில்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்கு வந்துள்ளன. அதேசமயம் சில்லரை வணிகத்தில் 100% அந்நிய முதலீட்டைத் திறந்துவிட்டு அமேசான், பிளிப்கார்ட் போன்ற வல்லூறுகள் நாட்டைக் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்ற 125 நாடுகளில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தானுக்குப் பிந்தைய நிலையில் 111 ஆவது இடத்தில் நமது ‘பாரத தேசம்’ இருக்கிறது. நாட்டின் ஆகப் பெரும்பாலான மக்கள் வேலையின்மையாலும், வறுமையாலும், பட்டினியாலும் பஞ்சைப் பராரிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் சொத்துக்கள் இலட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் எகிறியுள்ளது. ஒரு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானமே 2 இலட்சம் ரூபாய்தான். அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் ஒரு நாள் வருமானமோ 1,000 கோடி ரூபாய்க்கு மேல்.
விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடித்து வேளாண்துறையையும் உணவுப் பொருள் சந்தையையும் கார்ப்பரேட்டுகள் முற்றாகக் கைப்பற்றிக் கொள்ள மூன்று வேளாண் சட்டத் திருத்தங்கள்; தொழிலாளர் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக்க தொழிலாளர் சட்டத் திருத்தம்; மின்விநியோகத்தையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்து மக்களை இருளில் தள்ள மின்சார சட்டத் திருத்தம்; இயற்கை வளங்களை வரைமுறையின்றிச் சூறையாடவும், அதற்காக பழங்குடிகளைக் காடுகள், மலைகளில் இருந்து அடித்து விரட்டவும் சூழலியல், வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்கள்; 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கல்விச் சந்தையை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்க புதிய கல்விக் கொள்கை – போன்றவை அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் அப்பட்டமான சுரண்டலையும் சர்வாதிகாரத்தையும் உழைக்கும் மக்களின் மீது நிலைநாட்டுவதற்கே!
இவற்றை எதிர்க்கும் அறிவுத்துறையினர், ஜனநாயக சக்திகள், பத்திரிக்கையாளர்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்கிய மோடி அரசு, இதன் உச்சமாக மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தபின் போராடும் மக்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, போலிசு, இராணுவம், அதிகார வர்க்கம் என நீதித்துறை உட்பட அரசின் அனைத்து உறுப்புகளிலும் காவி பாசிஸ்டுகளைக் கொண்டு நிரப்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைவதற்கிருந்த தடையையும் விலக்கி, அரசு எந்திரத்தை மேன்மேலும் காவிமயமாக்கி வருகிறது.
மேலும், பாசிசக் கும்பலானது போலிசு, இராணுவம் போன்ற அரசு ஒடுக்குமுறை எந்திரத்தை மட்டுமே நம்பி இல்லை. பசுப்பாதுகாப்புப் படை, லவ்ஜிகாத் படை, இராமன் சேனா, அனுமன் சேனா போன்ற பல்வேறு முகமூடிகளில் இரகசிய, அரை இரகசிய ஆயுதப் படைகளை நாடெங்கும் கட்டியமைத்துள்ளது. இம்முறை மோடி பதவியேற்ற பின்னர் இப்பாசிச குண்டர் படைகள் நடத்தும் வெறியாட்டங்கள் நாடெங்கும் தீவிரமடைந்துள்ளன. இன்று இசுலாமியர்கள், பகுத்தறிவாளர்கள் மீதும் ஏவிவிடப்படும் இப்படைகள்தாம் நாளை உழைக்கும் மக்கள் தமது வாழ்வுரிமைக்காகப் போராடினால் அவர்களை அடக்கி ஒடுக்கும்.
இம்முறை பெரும்பான்மையின்றி மோடி பதவியேற்றதால் தனது பாசிச நடவடிக்கைகளை முன்புபோல தொடர முடியாது என்று எதிர்க்கட்சிகள் கண்ட கனவை மோடி கும்பல் தகர்த்துள்ளது என்பதையே இவை நிரூபிக்கின்றன.
இவ்வாறு ஏறித்தாக்கி வரும் பாசிசத்தை எதிர்த்து முறியடிக்கவில்லையெனில் ஒரு இருண்ட காலத்துக்குள் நாம் தள்ளப்படுவோம். வெல்ல முடியாதவர் என்ற மோடியின் கொட்டத்தை அடக்கி மண்டியிட வைத்தவர்கள் வேளாண் சட்டங்களுக்கெதிராகப் போராடிய விவசாயிகள்; நிலத்திற்கடியில் இருப்பதெல்லாம் தன்னுடையது என்று கொக்கரித்த வேதாந்தாவின் கொழுப்பை அடக்கி நாசகர ஸ்டெர்லைட் ஆலையை நாட்டைவிட்டே விரட்டியடித்தவர்கள் தூத்துக்குடி உழைக்கும் மக்கள். இவையெல்லாம் எந்த ஓட்டுக் கட்சிகளையும் நம்பாமல் மக்கள் தமது சொந்தக் கரங்களால் சாதித்தவையாகும்.
கார்ப்பரேட்டுகளுக்கான ஒருசில திட்டங்களைத் தடுத்து நிறுத்தவே அத்தகைய போராட்டங்கள் தேவைப்பட்டதென்றால், கார்ப்பரேட்டுகளுக்காக நிறுவப்படவிருக்கும் சர்வாதிகாரத்தை முற்றாகத் தூக்கியெறிய எத்தகையதொரு போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்! ஆம், இது காவி பாசிசக் கும்பல் நம்மீது தொடுத்திருக்கும் போர்!
*****
- தேசவிரோத, ஜனநாயக விரோதக் கொள்கையே உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்கிற மறுகாலனியாக்கம்!
இதை மூர்க்கமாக நடைமுறைப்படுத்தவே மோடி கும்பல் பாசிசத்தைத் திணிக்குது!
- விவசாயிகள், தொழிலாளர் விரோத சட்டங்களைத் திணித்து அவர்களின் வாழ்வுரிமையைப் பறித்து கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புது!
- கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர் – அனைத்தும் கார்ப்பரேட்மயம்!
- எதிர்த்துப் போராடும் உழைக்கும் மக்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கவே மூன்று குற்றவியல் சட்டங்கள்!
- உழைக்கும் மக்களாய் ஓரணியில் திரள்வோம்! காவி-கார்ப்பரேட் பாசிசத்தைத் தூக்கியெறிவோம்!
புரட்சிகர மக்கள் அதிகாரம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி