தொடர்ந்து அமுல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாழ வழியில்லாத நிலையை ஏற்படுத்திவரும் நிலையில், மக்களின் கோபம் தம் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க ஆளும்வர்க்கம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, அதில் முக்கியமானது பக்தி. தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணம் தெரியாமல், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியும் புரியாமல் கையறுநிலையில் இருக்கும் உழைக்கும் மக்களின் கடைசி புகழிடமாக இருப்பது பக்தி. இதனால்தான் ஐய்யப்பனுக்கும், பழனி முருகனுக்கும் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முன்னைக் காட்டிலும் மிகத் தீவிரமாக மறுகாலனியாக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலானது, சாமானிய மக்களின் இந்த நம்பிக்கையை வைத்து அரசியல் ஆதாயம் அடையவும், இந்துத்வக் கலவரக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தபோது இந்துத்வ கும்பல் கேரள மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்தது, அதே பாணியில் பழனிக்கு வேல்யாத்திரை போகிறோம் என்று தமிழக பாஜகவினர் செய்தது பலன் அளிக்காவிட்டாலும், பல லட்சம் மக்கள் கூடும் பழனி முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது ஆந்திரா தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில உழைக்கும் மக்களின் பக்திக்கு பாத்திரமான திருப்பதியை மையமாக கொண்டு கலவர அரசியலைக் கையிலெடுத்துள்ளனர்.
திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டு செய்ய பயன்படுத்திய நெய்யில் மாட்டு கொழுப்பும், மீன் எண்ணெய்யும் கலந்து கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதையடுத்து கடந்த ஒரு வாரமாக இது குறித்த கண்டனங்களும், விவாதங்களும் ஓயாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனை ஆந்திர மாநிலத்தைத் தாண்டி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் இந்துத்துவக் கும்பலின் விஷப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
லட்டு கலப்படம் குறித்து கருத்துக் கூற முடியாது என கூறிய சினிமா நடிகர் கார்த்தி முதல் பரிதாபங்கள் என்ற பெயரில் யூடியூபில் வீடியோ வெளியிடுபவர்கள் வரை, லட்டு விவகாரத்தில் பலரையும் இந்துத்வக் கும்பல் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளது. இவர்களை மிரட்டுவதில் இந்தக் கும்பலுக்கு புது வரவாக இணைந்துள்ள தெலுங்கு நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் முன்னே நிற்கிறார். சனாதன தர்மத்தினைக் காக்க, “சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்” என்ற ஒன்றை தேசிய அளவில் அமைத்து அதன் மூலம் இந்துக் கோவில்களை மேற்பார்வையிட வேண்டும் என அவர் கூறிவருகிறார்.
கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கரும் இதுதான் சமயம் என “கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது” என்று கோயில்களைச் சாமியார்களிடம் ஒப்படைக்க கோருகிறார்.
இது ஒரு புறம் என்றால் மற்றொருபுறம் சமூக வலைத்தளங்களில் புரளிகளைக் கிளப்பிவிடும் வேலையில் இந்துத்வ கும்பல் இறங்கியுள்ளது. திருப்பதியில் லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த ஏ.ஆர். டைரி நிறுவனம்தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது எனவே அதிலும் மாட்டு கொழுப்பு கலந்திருக்கலாம் என பிரச்சாரம் செய்தனர். இது பொய் என இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்த பிறகும் சங்கிகளின் பொய்ப்பிரச்சாரம் ஓய வில்லை. ஏற்கெனவே கோவில் நகைகளை உருக்கி, வங்கியில் போட்டு அதில் வரும் வட்டியை அரசு எடுத்துக் கொள்கிறது என்ற பொய்ப் பிரச்சாரத்துடன் இதனையும் சேர்த்துக் கொண்டு கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மீட்போம் எனக் கூவுகிறது இந்த சங்கி கும்பல்.
பவன் கல்யாண், ரவிசங்கர் தொடங்கி, தமிழ்நாட்டு சங்கிகள் வரை அனைவரும் இந்த பிரச்சனையில் சொல்ல வருவது ஒன்றுதான். கோடிக்கணக்கான ருபாய் வருமானம் வரும் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து அவற்றைச் சாமியார்களின், பார்ப்பன பூசாரிகளின் கொள்ளைக்குத் திறந்துவிட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் ஒன்றும் இல்லாத பிரச்சனையை ஊதி ஊதிப் பெரிதாக்குகின்றனர்.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்திருப்பதாக கூறப்படுவதே முதலில் உறுதிபடுத்தப்படாத தகவல். குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டு வெளியான அறிக்கையில் மாட்டு கொழுப்போ, மீன் எண்ணெய்யோ கலந்திருப்பதாக உறுதியாக கூறப்படவில்லை. இதுகுறித்த சந்தேகத்தை மட்டுமே எழுப்பியுள்ள அறிக்கை இதனை உறுதிபடுத்த அடுத்தகட்டமாக சோதனை செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. இதனை மறைத்துவிட்டு, மாட்டுக் கொழுப்பை கலந்துவிட்டார்கள் எனப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்த பிரச்சாரத்திற்கு பலியாகும் சாமானியர்கள் பலரும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட லட்டில் இறைச்சி கலந்தது கவலையளிப்பதாக கருத்து கூறியிருக்கின்றனர். ஆனால் இதே திருப்பதி கோவிலில் லட்டு பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என சில மாதங்களுக்கு முன்னர் வந்த விளம்பரத்தில், லட்டு பிடிப்பவர்கள் பார்ப்பன சாதியினராக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அப்போது, என்னதான் தலைசிறந்த பக்தனாக இருந்தாலும், வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு காசு சேர்த்து, திருப்பதி உண்டியலில் போடும் தீவிர நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் கூட தமக்கு கடவுளுக்கு படைக்கப்படும் அந்த லட்டை பிடிக்கும் அருகதையில்லை, பிறப்பால் பார்ப்பனராக இருந்தால் மட்டுமே அந்த வேலையைச் செய்ய முடியும் என்ற உண்மை, பக்தர்கள் எவரையும் உலுக்கவில்லை, யாருக்கும் கவலையளிக்கவில்லை. நேர்மாறாக அதுதான் வழக்கம் என்று ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்தும் அளவிற்கு சனாதன தர்மம், சாமானிய பக்தர்களின் மனதில் ஊடுருவியிருக்கிறது.
இப்போதும் கூட மாட்டுக் கொழுப்பு கலந்ததால் ஏற்பட்ட தீட்டை போக்குவதற்கு மாட்டு மூத்திரத்தை தெளித்து திருப்பதி கோவிலை பார்ப்பனக் கூட்டம் சுத்தம் செய்கிறது. மாட்டின் கொழுப்பு தீட்டு ஆனால் மாட்டு மூத்திரம் புனிதமா என எந்த பக்தரும் கேள்வி எழுப்பவில்லை. மதநம்பிக்கை என்ற பெயரில் சாதாரண மக்களின் மனதில் பதிந்துள்ள இது போன்ற சனாதன கருத்துக்களைத் தங்களுக்குச் சாதகாமக பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுத்தான், “சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்” அமைக்க வேண்டும் என காவிக் கும்பல் கூக்குரலிடுகிறது.
இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா என இப்போது கொந்தளிக்கும் இதே காவிக் கும்பல் லட்டு பிடிக்க பார்ப்பனர்கள் மட்டும்தான் தகுதியானவர்களா எனக் கேள்வி கூட எழுப்பவில்லை. இவ்வளவு ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை காவிக் கும்பல் எப்போதும் எதிர்த்தே வருகிறது என்பதுடன் அதனை எப்பாடு பட்டாவது முறியடிக்க வேண்டும் என்பற்காக தொடர்ந்து வழக்கு தொடுத்தும் வருகிறது. ஏனென்றால் அவர்களைப் பொருத்தவரை இந்துக்கள் என்பது பார்ப்பனர்கள் மட்டுமே. சனாதன தர்மம் என்பது என்பது பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறை என்பதை மறைத்து எல்லோரும் இந்துக்கள், நாம் எல்லாம் ஒன்று என்று புழுகுகிறது இந்த வஞ்சகர் கூட்டம்.
இந்து ராஷ்டிரம் என்ற பெயரில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவது தான் அவர்களது நோக்கம். அதற்கு சாமானிய மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் அவர்களது வழக்கம். எனவே பக்தி என்ற முகமூடியணிந்து வரும் காவி பாசிஸ்டுகளின், இதுபோன்ற விஷப்பிரச்சாரங்களைக் உழைக்கும் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். உழைக்கும் மக்களுக்கு எதிரான காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்திட ஒன்று சேரவேண்டும்.
- அறிவு