தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான தொழில் மாநிலமாக மாற்றுவது என்றும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவதே தமது இலக்கு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். அந்த இலக்கை நிறைவேற்றுவதற்காகத்தான், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றதாகவும், அதை ஒட்டி ஏராளமான முதலீடுகளும்; வேலை வாய்ப்புகளும் சாத்தியமாகி இருப்பதாகவும் கூறுகிறது திமுக அரசு. ஏறத்தாழ 7,616 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் அதையொட்டி 11,616 வேலை வாய்ப்புகள் உருவாகப் போவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்சாலைக்கு அருகே வைக்கப்படும் டீ கடை, ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகளினால் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் சேர்த்து திமுக அரசு சொல்கிறதா என்று தெரியவில்லை. 18 நிறுவனங்களுடன் போட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் என்ன? அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்குவதாக ஒப்புக்கொண்ட சலுகைகள் என்னென்ன? போன்றவையெல்லாம் இன்னும் இரகசியமாகவே உள்ளது. மக்களுக்கு அதை செய்தேன் இதை செய்தேன் என மூலைக்கு மூலை போஸ்டர் அடிக்கும் திராவிடமாடல் அரசு கம்பெனி இரகசியத்தை சொல்லுமா என்ன?
“அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு நிறுவனங்களிடம் தொழில் வளர்ச்சிக்காக திமுக அரசு வெளியிட்ட 14 கொள்கைகள் குறித்து விளக்கினேன். அதனை அவர்கள் வரவேற்றதாக” பெருமிதத்துடன் தனது முரசொலி கட்டுரையில் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உலகின் முன்னணியான தொழில் நிறுவனங்களோடு நடத்திய பேச்சுவார்த்தையில், பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாகவும், கூகுள் நிறுவனம் நான் முதல்வன் திட்டத்தில் செயற்கை தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்றுத்தர ஒத்துக் கொண்டதாகவும் அக்கட்டுரையில் கூறியிருக்கிறார்.
ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தை வைத்து ஒரு தேர்தல் பரப்புரைக்கு சமமான பிரச்சாரத்தை பத்திரிக்கைகளிலும் சமூக ஊடகங்களிலும் செய்து முடித்திருக்கிறது திமுக அரசு.
ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் போது தான் இங்கே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக 10 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயர்வை வழங்கக் கோரியும் கடுமையான பணிச் சூழலை கண்டித்தும், எட்டு மணிநேர வேலை நேர உத்தரவாதம் மற்றும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தினை(SIWU) அங்கீகரிக்கக் கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திராவிடமாடல் தொழிலாளர் நலத்துறையோ SIWU சங்கத்தினை பதிவுசெய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. போலீசோ, தொழிலாளர்களை மிரட்டுவது, கைது செய்வது மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடக்கூடிய பல்வேறு அமைப்பின் முன்னணியாளர்களை கைது செய்வது என சாம்சங் நிறுவனத்திற்கு தன்னுடைய விசுவாசத்தினைக் காட்டியிருக்கிறது.
அந்நிய முதலீடு வந்தால் தான் தொழில்கள் வளர்ச்சி பெறும் பலருக்கும் வேலை கிடைக்கும் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது மறுகாலனியாக்கக் கொள்கைதான் வளர்ச்சிக் கொள்கை என்கிறார்.
ஆனால் நோக்கியா நிறுவனத்தின் கதை என்ன? தமிழக அரசிடம் இருந்தும் ஒன்றிய அரசிடமிருந்தும் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற்று தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த சம்பளத்தை கொடுத்து பல ஆயிரம் கோடிகளை லாபமாக ஈட்டிய அந்நிறுவனம் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கூட வழங்காமல், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரியைக் கூட கட்டாமல் நிறுவனத்தை மூடி விட்டது. இன்றுவரை நோக்கியா மீது எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை.
பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கியும் அடிமட்ட விலைக்கு நிலம், மின்சாரம் மற்றும் வங்கிக்கடன் ஆகியவற்றைக் கொடுத்தும் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்று வகைதொகை இல்லாமல் மக்களை சுரண்டுவதற்கும் இயற்கைவளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது இந்த அரசு.
பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களையும் அவர்களது உரிமைகளையும் ‘மயிரளவும்’ மதிப்பதில்லை. அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் துணையோடு, தொழிலாளர்களை அடிமட்ட ஊதியத்திற்கு சுரண்டுவதையும் அவர்களைக் கசக்கிப் பிழிந்து லாபம் ஈட்டுவதையும் செவ்வனே செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு பாஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்காக 706 கோடி ரூபாய் செலவில் பெண்களுக்கான தங்கும் விடுதியைத் தமிழக அரசு திறந்து வைத்தது. சீனாவில் உள்ளது போல தமிழ்நாட்டிலும் தொழிலாளர்களுக்கான விடுதியை கட்டி உள்ளோம் என்று பெருமையாக பேசினார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன். இவர்களின் கார்பரேட் சேவைக்கு வேறு என்ன உதாரணம் தேவை.
சீனாவில் உள்ள பாஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை சுமை தாங்காமல் தங்கும் விடுதியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே மாதிரியான ஒடுக்குமுறையை, வேலைச்சுமையை நம் பெண் தொழிலார்கள் மீது பாஸ்கான் நடத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
திராவிட மாடல் அரசாங்கம் என்பது சமூக நீதியைப் பின்பற்றுவது என்கிறார் ஸ்டாலின். சமூக நீதி என்றால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்வது என்று விளக்கம் சொல்கிறது திமுக. சாம்சங் நிறுவனத்திலும் பாஸ்கான் நிறுவனத்திலும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் என்ன சமூக நீதியை திமுக நிலைநாட்டியுள்ளது?
அந்நிறுவனங்கள் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்கும் லாபம் சம்பாதிப்பதற்கும் இவர்கள் துணைபோய் இருக்கிறார்களே ஒழிய அங்கு சமூக நீதி என்பதெல்லாம் “மயிரளவும்“ கிடையாது.
பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளைப் போலவே திமுகவும் மறுக்காலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டை பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய முதலாளிகள் சூறையாடுவதற்கு ஆதரவாக திமுக அரசாங்கம் செயல்படுவதை பல கட்டுரையாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
திராவிட மாடல் என்பதே மறுகாலனியாக்கக் கொள்கைகளை (தனியார்மயக் கொள்கைகளை) உள்ளடக்கியது தான். எனவே தமிழ்நாட்டிற்கு அமெரிக்காவிலிருந்தோ அல்லது பிற ஏகாதிபத்திய நாடுகளில் இருந்தோ பல லட்சம் கோடி மூதலீடு வருகிறதென்பதன் பொருள் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும்; இயற்கை வளங்கள் கொள்ளயடிக்கப்படுவதும் இன்னும் தீவிரமாக நடைபெறப்போகிறது என்பதாகும். எனவே சாம்சங் தொழிலாளர்களின் உறுதியானப் போராட்டத்தைப் போலவே, மறுகாலனியாக்கச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை உள்ளடக்கிய ஒரு வலுவான போராட்டத்தைக் கட்டியமைப்பது ஒன்றே தீர்வாகும்.
- அழகு