குரங்கம்மை தடுப்பூசியைக் கொடுக்க
மறுக்கும் ஏகாதிபத்தியங்கள் பெருந்தொற்றின் பேரபாயத்திற்குள் தள்ளப்படும் காங்கோ மக்கள்

உக்ரைனில் நடக்கும் போருக்கும், காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கும் வரிந்துகட்டிக் கொண்டு உதவி செய்துவரும் ஏகாதிபத்தியங்கள், காங்கோ மக்கள் பெருந்தொற்றினால் சாவது குறித்து கவலைப்படுவதில்லை. மேலும் இந்த மக்களிடமிருந்து தங்கள் நாட்டிற்கு பரவிவிடாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற சுயநலத்தோடு ஏகாதிபத்தியங்கள் சிந்திக்கின்றன.

குரங்கம்மை (mpox) நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவிற்கு இதுவரை ஒரு தடுப்பூசி கூடக் கிடைக்கவில்லை. தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. எனவே காங்கோ பெருந்தொற்றின் மையப்பகுதியாக (Epicenter) மாறியுள்ளது. இந்த நோய் பரவ ஆரம்பித்து இரண்டு வருடங்களான பிறகும், காங்கோவிற்கு மட்டுமல்லாது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அதன் அண்டை நாடுகள் எதற்கும் இன்னமும் தடுப்பூசிகள் சென்று சேரவில்லை. அவை அனைத்தும் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளால் பதுக்கப்பட்டு மறுக்கப்படுகின்றன.

பெரியம்மை வைரசின் மாறுபாடாக பரிணமித்த இந்த குரங்கம்மை நோய் பல ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தாலும் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒரு பெருந்தொற்றாக அந்நாடுகளில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. இதனை “சர்வதேச பொது சுகாதார அவசரநிலை” (Public health emergency of international concern) என 2022ம் ஆண்டு ஜூலை மாதத்திலும், 2023ம் ஆண்டு மே மாதத்திலும் இரண்டு முறை அறிவித்துள்ளது. தற்போது மாற்றமடைந்த (mutated) குரங்கம்மை வைரஸ் காங்கோவில் பரவ ஆரம்பித்த சூழலில் மீண்டும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

இதுவரை லட்சக்கணக்கானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, ஆயிரம் பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். அதுமட்டுமன்றி இந்த நோய் குழந்தைகளுக்கு மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால் ஆப்பிரிக்க நாடுகளின் எதிர்காலமே இன்றைக்கு பெரும் ஆபத்தில் இருக்கிறது. இதுவரை இந்த நோய்த்தொற்றினால் உயிரிழந்தவர்களில் 82 சதவிதம் பேர் 15 வயதிற்கும் குறைவான குழந்தைகள்[1]. தற்போது காங்கோவில் சுமார் 16,000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர், இரண்டாவது அலையில் மட்டும் 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் பெரியம்மை நோய்க்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் சிறு மாற்றங்கள் செய்து குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. காங்கோவில் நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர குறைந்த பட்சம் 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதற்கு 800 கோடி ருபாய் வரை செலவாகும்[2].

ஆனால் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலினால் வறுமையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள காங்கோ நாட்டிற்கு இந்தப் பெருந்தொற்றை சமாளிக்கும் பொருளாதார உதவிகளோ, அல்லது தொழில்நுட்ப உதவிகளோ வழங்க எந்த நாடும் முன்வரவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்த நோயினால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் உலக சுகாதார அமைப்பும் கூட இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. தற்போதுதான் ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்புசி வழங்கும் ஏற்பாடுகளை உலக சுகாதார மையம் தொடங்கியுள்ளது. இதனை இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே அது செய்திருக்க வேண்டும்.[3]

தற்போது ஆப்பிரிக்காவிற்கு வெளியே 70 நாடுகளில் குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகள் உள்ளன. ஒரு தடுப்பூசியின் விலை கிட்டத்தட்ட 8000 ருபாய் வரை இருப்பதால் காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாட்டினால் வெளிநாட்டு உதவியின்றி இதனைப் பெரிய அளவில் வாங்கி தங்களது மக்களுக்கு கொடுக்க முடியாது. அதேசமயம் பணக்கார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் இந்த தடுப்பூசியினைப் பதுக்கி வைத்துக் கொண்டு ஏழை நாடுகளுக்குத் தர மறுக்கின்றன. ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான குரங்கம்மை தடுப்பூசிகளைப் பதுக்கிவைத்துள்ளன[4]. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தங்களது நாட்டில் இந்த நோய் பரவாமல் தடுக்க பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளதோடு, லட்சக்கணக்கான தடுப்பூசிகளை பதுக்கிவைத்துள்ளன.

காங்கோவில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைச் சமாளிக்க, இந்த நாடுகள் நினைத்தால் ஓரிரு நாட்களில் தேவைப்படும் அத்தனை தடுப்பூசிகளையும் மொத்தமாக கொடுத்து உதவிட முடியும். ஆனால் காங்கோ பல முறை இந்த நாடுகளிடம் தடுப்பூசி கொடுக்குமாறு கேட்ட பிறகும் அவை காதுகொடுப்பதாக இல்லை. உக்ரைனில் நடக்கும் போருக்கும், காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கும் வரிந்துகட்டிக் கொண்டு உதவி செய்துவரும் ஏகாதிபத்தியங்கள், காங்கோ மக்கள் பெருந்தொற்றினால் சாவது குறித்து கவலைப்படுவதில்லை. மேலும் இந்த மக்களிடமிருந்து தங்கள் நாட்டிற்கு பரவிவிடாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற சுயநலத்தோடு ஏகாதிபத்தியங்கள் சிந்திக்கின்றன.

இப்போது மட்டுமல்ல கொரோனா நோய்த்தொற்று பரவி வந்த போதும் ஏகாதிபத்திய நாடுகள் இதைப் போன்றுதான் நடந்து கொண்டன. கொரோனா பெருந்தொற்று மிகத் தீவிரமாக பரவி வந்த ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் சென்று சேர்வதைத் தடுத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் எதிர்காலத் தேவைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டன.

மூன்றாம் உலக நாடுகளில் பல லட்சம் பேர் தடுப்பூசி இல்லாமல் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருந்தபோது ஏகாதிபத்திய நாடுகளின் குடோன்களில் பயன்படுத்தப்படாமல் பதுக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் சிறிது காலத்திற்குப் பிறகு காலாவதியாகிக் கொட்டி அழிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டும், 40,000 கோடி ருபாய் மதிப்புள்ள 22 கோடி கொரோனா தடுப்பூசிகளைக் கொட்டி அழித்தன[5].

தற்போது குரங்கம்மை தடுப்பூசி விவகாரத்திலும் இதுதான் நடந்து வருகிறது. காசா இனப்படுகொலை எனும் மிகப்பெரிய மனிதப்பேரவலத்தை தங்களது சுயநலத்திற்காக முன்னின்று நடத்திவரும் ஏகாதிபத்தியங்கள், காங்கோவில் நோய்த்தொற்றினால் மக்கள் சாவது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படப் போவதில்லை. நேரடிக் காலனியாதிக்க காலகட்டம் தொடங்கி இன்றுவரை மிகப்பெரிய படுகொலைகளையும், இனஅழிப்புகளையும் நடத்திவரும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்து மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியுமா?   

  • சந்திரன்

 

தகவல் ஆதாரம்

[1] https://www.bloomberg.com/news/articles/2024-08-28/mpox-outbreak-children-in-congo-are-far-from-first-in-line-for-a-vaccine 

[2] https://www.bloomberg.com/news/articles/2024-08-15/mpox-response-held-up-with-congo-yet-to-request-for-vaccines

[3] https://www.thehindu.com/sci-tech/health/why-mpox-vaccines-are-only-just-arriving-in-africa-after-two-years/article68568344.ece

[4] https://www.firstpost.com/world/is-europe-making-the-same-mistake-with-mpox-that-it-did-with-covid-vaccines-13806856.html

[5] https://senkanal.com/index.php/2024/01/10/capitalist-terror/ – கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன