கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 4

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும்

தான் வளர்த்தெடுத்த கண்ணுர் படுகொலை மாதிரியை (model) – வன்முறையைத் தூண்டிவிட்டு பின்னர் அதில் தன் பாத்திரத்தை மறுத்துவிடும் அதேசமயம், பேச்சு வார்தைக்கு எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நபரைப் போலத் தோற்றமளிப்பதும்; போலிசுடன் நெருக்கமாக இருந்துகொண்டு வேலைசெய்வதும் என்ற மாதிரியை –  வல்சன் கேரள மாநிலம் முழுவதும் செயல்படுத்தினார். 2010-களில் இடது ஜனநாயக முன்னணிக்கு பினராயி விஜயனும், கொடியேறி பாலகிருஷ்ணனும் தலைமை தாங்கினர். இக்காலமானது வல்சனுக்கு அதிர்ஷ்ட காலமாக மாறியது. கேரள சி.பி.எம்-இன் தென்பகுதியில் இருந்து வந்த அறிவுஜீவிகளைப் போலல்லாமல், படிப்பு வட்டங்களுக்கு இணையாக கேரளத்தின் வடக்கில் படுகொலைகள் மேலாதிக்கம் புரிந்தது. இப்படி அரசியல் ரீதியில் மோசமான பகுதியில் இருந்து வந்தவர்கள் தான் இவர்கள் இருவரும் [விஜயன், பாலகிருஷ்ணன்].

ஆர்.எஸ்.எஸ்-சின் முதல் தலைமுறையிலிருந்தே கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் சி.பி.எம்-முக்கும் இடையிலான பேரங்கள் தொடங்கிவிட்டன. ஆர்.எஸ்.எஸ்-சின் இரண்டாவது தலைவராக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர், கேரளத்தில் அவ்வமைப்பின் யூனிட்டை அமைப்பதற்காக, தனது ஆகமிக நம்பகமான படைத் தளபதியாக இருந்த தத்தோபாத் தெங்காடி என்பவரை 1942-ல் மலபாருக்கு [அப்போது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை] அனுப்பினார். நீண்டகால செயல்பாட்டின் விளைவாக கண்ணூரிலும் கோழிக்கோட்டிலும் வேர்மட்ட அளவிலான வலைப்பின்னலை அமைத்த பிறகு, அவர் ஆர்.எஸ்.எஸ்-சின் அறிவுத்துறை ரீதியான முக்கிய ஜாம்பவான்களில் ஒருவர் என்ற நிலைமைக்கு உயர்ந்தார். ஏறத்தாழ அவ்வமைப்பின் கேந்திரமான எல்லா செயல்பாடுகளையும், பொருளாதாரப் பிரிவுகளையும் நிறுவினார். கேரளத்தை விட்டு தான் வெளியேறிய சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1980-களில் தெங்காடியும் ஜன சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த பி.பரமேஸ்வரனும் அன்றைய கேரள சி.பி.எம். அரசின் உள்துறை அமைச்சராகவும் சி.பி.எம். கட்சியை நிறுவியவர்களில் ஒருவருமான பி.ராமமூர்த்தியைச் சந்தித்தனர். கொச்சியில் நடந்த அந்த அமைதிப் பேச்சு வார்த்தை பயனற்றது என்பது நிரூபனமானது. அதன் விளைவாக வன்முறைகள் சிறிதளவு குறைத்தாலும், கீழ்மட்ட அணிகள் வரையிலும் நடந்த வன்முறைகள் குறைந்தபாடில்லை. இருந்தபோதிலும், [2016-இல்] வல்சனுக்கும் பினராயி விஜயனுக்கும் இடையிலான புதிய பேச்சு வார்த்தையானது பலனைக் கொடுத்தது.

 

 

இந்தப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப விதையானது, சி.பி.எம். கட்சியால் 2014-ல் கண்ணூரில் நடத்தப்பட்ட, ஸ்ரீ எம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒரு யோகா பயிற்சி வகுப்பில் போடப்பட்டது. மும்தாஜ்-அலிகான் தம்பதியருக்குப் பிறந்து, ஆந்திராவின் சித்தூரில் உள்ள ஆசிரமப் பள்ளியில் பணியாற்றிய ஸ்ரீ எம் என்ற இச்சாமியார், தனது சிறுவயதின் பெரும்பாலான காலத்தைக் கேரளாவில் கழித்தவராவார். கேரளத்தின் கரடுமுரடான அரசியல் வரலாற்றை நன்கு அறிந்தவருமாவார். அவர் அந்த யோகா பயிற்சி வகுப்பில் பினராயி விஜயனைச் சந்தித்தார். கண்ணூரில் நடந்துவரும் வன்முறைகளைப் பற்றியும் அமைதிக்கான வழிகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டார். “இரு தரப்பினரும் அமைதிக்கான தேவையிருப்பதை உணர வேண்டுமே?” என்று பதிலுக்கு விஜயன் கூறினாராம். பின்னர் ஒரு சந்திப்பில், ஆர்.எஸ்.எஸ்-சின் தலைவரான மோகன் பகவத்திடமும், பொதுச் செயலராக இருந்த சுரேஷ் ஜோஷியிடமும் பேசிய போதும் இதே மாதிரியான பதில்தான் ஸ்ரீ எம்-முக்குக் கிடைத்தது. பின்னர், அந்தச் சாமியார் பினராயி விஜயனையும் கொடியேரி பாலகிருஷ்ணனையும் பினராயி விஜயனின் போட்டியாளராகவும் அதேசமயத்தில் கண்ணூர் மாவட்டத்தின் அணிகளிடையே பெரும் விசுவாசத்தைச் சம்பாதித்தவருமான அம்மாவட்டச் செயலாளரையும் சந்தித்தார்.

கேரளத்தின் முதலமைச்சராக பினராயி விஜயன் பெறுப்பேற்றுக் கொண்ட ஏழு மாதங்களுக்குப் பின்னர், கேரள மாநிலமானது இந்துக்களுக்குப் பாதுகாப்பற்றது என்ற வட இந்தியாவில் நடந்துவந்த பிரச்சாரத்தைக் கண்டு சி.பி.எம். அரசு அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் முதல் சந்திப்பானது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடந்தது. டெல்லியில் புகழ்பெற்ற “கான்ஸ்டிடியூசன் கிளப்” என்ற கட்டிடத்தில் “சிவப்பு அட்டூழியம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-சின் தேசிய கொள்கைப் பரப்புச் செயலாளர் ஒருவர் ஆகஸ்டு 2016-ல் நடத்தினார். “கம்யூனிஸ்டுகளால் தலைமைதாங்கி நிகழ்த்தப்படும் வன்முறைகள்” பற்றிய விவகாரத்தை நாடுமுழுவதும் விவாதமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட [பொய்ப்] பிரச்சாரம், விரைவில் கேரளா நெடுகிலும் பல பத்திரிக்கையாளர்கள் பயணம் செய்வதற்கும் வார இதழ்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் இப்பிரச்சனை பேசுபொருளாக்குவதற்கும் இட்டுச் சென்றது. கடந்த காலங்களில், மாநிலத்தின் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளது என்று கூறி அரசே கலைக்கப்படும் நிலைமைக்கு இத்தகைய பிரச்சாரங்கள் இட்டுச் சென்றுள்ள காரணத்தினால், பினராயி விஜயன் இந்தக் கூட்டத்திற்கு வந்தது ஒன்றும் வியப்புக்குரிய ஒரு விசயமல்ல. தினேஷ் நாராயணன் என்பவர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ்-சும் ஆழமான தேசியத்தைக் கட்டியெழுப்பியமையும்” (The RSS and the Making of the Deep Nation) என்ற நூலிலும் அவர் கொடுத்த பல நேர்காணல்களிலும் இந்த சந்திப்பு குறித்துப் பேசவும் எழுதவும்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் தினேஷ் நாராயணன் சந்தித்துப் பேசியபோது, வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர இரு தரப்பினரும் தீவிர முயற்சிகளை மேற்கொள்வாதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்ட்தாகவும், தொடர்ந்து கண்ணூரில் இருதரப்பினரின் அணிகள் மட்டத்தில் இன்னொரு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புகொண்டதாகவும், இதைத் தாண்டி அவர்கள் யாரும் வேறெந்த விவரத்தையும் கூறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

கண்ணூர் சந்திப்பானது இருதரப்பும் பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் விசயங்களை உள்ளடக்கியிருந்தது என்பது தெள்ளத் தெளிவான ஒரு விசயமாகும். எதேனும் சிக்கல்கள் எழுந்தால் தொடர்பு கொள்வதற்காக உள்ளூர் தலைவர்களின் தொலைபேசி எண்கள் இரு தரப்பிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கீழ்மட்ட அணிகள் ஏதேனும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்தால், எந்தவிதமான சட்ட உதவிகளையும் தலைமை செய்துதரக்கூடாது என்ற அடிப்படையைக் கொண்ட ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டது. யோகா பயிற்சி வகுப்புக்கு அடுத்த ஒரு பாதையாத்திரையில் ஸ்ரீ எம்.முடன் ஜெயராஜனும் பி.கோபாலன் குட்டியும் [சி.பி.எம். தலைவர்கள்] அணிவகுத்துச் சென்ற சம்பவமானது, இரு அமைப்புக்கும் இடையில் உறவுப்பாலம் உறுதியாது  விரைவில் தெள்ளத் தெளிவாய்க் காட்டியது.

[இந்தச் சந்திப்பிற்குப் பிறகு] கண்ணூரில் அரசியல் படுகொலைகள் குறைந்தன என்பது மறுக்க முடியாத ஒன்றுதான். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-சுடன் இராஜதந்திர உறவைப் பராமரிக்க வேண்டும் என்ற பினராயி விஜயனின் நிலைப்பாட்டினால் [சி.பி.எம்.இன்] மதிப்புமிக்க [கண்ணூர்] நிலத்தை அவ்வமைப்புக்கு விட்டுக் கொடுத்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ். போட்டுக் கொண்ட ஒப்பந்தங்களுக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை. ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ஒவ்வொரு அம்சத்தையும் மதிக்காமல் நடந்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் தான் எதிர்பார்த்த எந்த நிவாரணத்தையும் பெறாமல் சி.பி.எம். ஆனது தோல்வியுற்றது. உண்மையில், அந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகும் டெல்லியின் கன்ஸ்டிடியூசன் கிளப் கட்டிடத்தில் “சிவப்பு அட்டூழியம்” குறித்த கருத்தரங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தன. அதேபோல, கேரளாவைப் பற்றிய பரபரப்பான செய்திகளும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. கம்யூனிஸ்டுகளின் மறைமுகமான உதவியோடு [கேரளத்தில்] இப்போது பொய்யானா பீதியூட்டும் வகையிலான பிரச்சாரங்கள் முசுலீம்கள் மீது திருப்பிவிடப்பட்டன. வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். அநேகமாக எதையும் செய்யவில்லை. கம்யூனிஸ்டு அல்லாதவர்களைக் குறிவைத்து, வல்சனின் வெறியூட்டும் டம்பமான பேச்சுக்களும் இரத்தக்கிளறிகளும் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தன.

டிசம்பர் 18, 2021-ல், இந்து ஐக்கிய வேதி அமைப்பின் ஆழப்புழா மாவட்டக் கமிட்டியானது “கேரளம் மத பயங்கரவாதத்தின் முன்னே சரணடையாது” என்ற தலைப்பின் கீழ் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில், பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ (PFI, SDPI) ஆகிய இசுலாமிய அரசியல் அமைப்புகளின் பெயர்களை அடிக்கடிக் குறிப்பிட்டு வல்சன் மேடையிலிருந்து உறுமினார். “எங்களைச் சீண்டாதீர்கள். எங்களின் அமைதியின் பொருள் எங்களுக்கு நாதியில்லை என்பதல்ல. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்களை மீண்டும் சீண்டுவீர்களேயானால், ஆர்.எஸ்.எஸ்-சால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்பீர்கள்” என்று பேசினார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு எழுச்சியை நட்த்திய படைக்குத் தலைமைதாங்கிய வைக்கம் பத்மநாப பிள்ளை என்பவரைக் குறிப்பிட்ட வல்சன், “ஜிகாதிகளை அழிப்பதற்காக ஆயிரக்கணக்கான வைக்கம் பத்மநாப பிள்ளைகள் வாளேந்திப் போர் தொடுப்பார்கள்” என்றார். அந்தக் கூட்டம் முடிந்த பிறகு இரவில், கூட்டத்தில் பங்கேற்ற இரு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கே.எஸ்.ஷான் என்ற எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாரை வழிமறித்து இரும்பு ராடால் அடித்தும் வாளால் சரமாரியாக வெட்டியும் கொன்றனர்.

வல்சனுக்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை. வல்சன் அக்கூட்டத்தில் பேசிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்து, இந்தப் படுகொலைக்கு அந்தப் பேச்சுதான் தூண்டுதலாக இருந்தது என்றும் குறிப்பிட்டனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) இரு மதப் பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டுதல், கலவரத்தைத் தூண்டுதல், இன்ன பிற பிரிவுகளின் கீழ் இந்தப் பேச்சு கச்சிதமாகப் பொருந்தக் கூடியது என்றும் குறிப்பிட்டனர். ஷானின் படுகொலை நடந்த 12 மணிநேரத்திற்குப் பிறகு, இரஞ்சித் என்ற பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவு தலைவரை எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் கொன்றனர். வன்முறைச் சம்பவங்களின் சுழலானது மேலும் பெருகியது.

ஆர்.எஸ்.எஸ்-சுக்கு எதிரான பினராயி விஜயன் அரசின் வரம்புக்குட்பட்ட நடவடிக்கைகள், எவ்வாறு அவ்வமைப்பின் [வளர்ச்சிக்கு] இடமளித்ததாகவே அமைந்தது என்பதற்கு சபரிமலை போராட்டம் சிறந்த உதாரணமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை மேம்போக்காகக் கையாள்வது என்பதன் பொருள் அவ்வமைப்பு செய்யக் கூடிய ஒரே செயலான [சமூகத்திற்கு] தீவைப்பதை அனுமதிப்பதே ஆகும். அக்டோபர் 2018-ல், யாரும் சட்ட ஒழுங்கை தன் கையில் எடுப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பினராயி விஜயன் வாக்களிந்திருந்த போதிலும், [சபரிமலைக்கு வந்த] வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களில் பெண்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டனர். கேரளத்தின் தெற்கு மண்டல ஏ.டி.ஜி.பி. நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில்தான் இச்சம்பவமானது நடந்தது. போலிசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பலமணிநேரம் நீடித்த சண்டைக்குப் பின்னர், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்ததுடன் அந்த நாள் முடிவுக்கு வந்தது. ஒரு மாதம் கழித்து, 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் வல்சனின் தலைமையின் கீழ் ஆயிரக்கணக்கான இந்துத்துவவாதிகள் சபரிமலைக் கோயிலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதையும் அவர்கள் போலிசின் கண் முன்பே செய்தனர். ஒரு ஒலிப்பெருக்கியை வல்சனின் கையில் கொடுத்துவிட்டு, அவர் திரட்டிவந்த கூட்டத்தை அவரால்தான் கட்டுப்படுத்த முடியுமென்று நம்பி நின்றுகொண்டிருந்ததைத் தவிர சபரிமலையில் காவலுக்கு இருந்த போலிசால் வேறு எதையும் செய்ய இயலவில்லை. தற்காலிகமாக சட்ட-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்த்ததைத் தவிர போலிசின் இந்தச் செயல்பாடு வேறெதையும் செய்யவில்லை. சில நாட்களில், மாநிலம் நெடுகிலும் வல்சன் ஆயிரக்கணக்கானோரிடையே உரைகளை நிகழ்த்தினார். நூற்றுக்கணக்கான பேருந்துகளும் கடைகளும் கொளுத்தப்பட்ட பயங்கரமான வெறித்தனமான வன்முறைகளுக்கு அவை இட்டுச் சென்றன.

 

 

[வல்சன்-விஜயனிடையிலான] ஒப்பந்தமானது கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ்-சுக்கு அச்சுறுத்தக்கூடிய பகைவனாக விளங்கிய [சி.பி.எம்.இன்] ஜெயராஜனை பலவீனப்படுத்தியது. வன்முறைகளினூடாக வளர்ந்தவரும், 1999-ல் ஆர்.எஸ்.எஸ்-சால் ஒரு கை வெட்டப்பட்டு பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டவருமான ஜெயராஜன் இந்த ஒப்பந்தம் குறித்து தயக்கத்தோடுதான் இருந்தார். கண்ணூர் மாவட்டத்தின் சி.பி.எம். யூனிட்டுக்குத் தலைமையளித்த ஜெயராஜன், ஆர்.எஸ்.எஸ்-சின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அணியிலிருந்து சிலரை கம்யூனிஸ்டுகளின் பிடியில் கொண்டுவந்து அவர்களுக்கு மறுவாழ்வளிக்கவும் செய்தார். கட்சிக்குள் இரண்டாவது அதிகார மையமாக இவரை எல்லோரும் பார்க்கத் தொடங்கினர். இவரை கிருஷ்ணராகவும் விஜயனை அர்ஜூனனாகவும் சித்தரித்து கண்ணூர் சி.பி.எம்.இன் அணிகள் போஸ்டர் ஒட்டினர். “கட்சிக்கு மேலாக தன்னை நிறுத்திக் கொள்கிறார்” என்று ஜெயராஜன் மீது விஜயனும் கட்சித் தலைமையும் கண்டனங்களைத் தெரிவித்த போதிலும், 2018-ல் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட சி.பி.எம். கண்ணூர் யூனிட்டுக்கான தேர்தலில் இவர் அந்த யூனிட்டின் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டில், யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி நடவடிக்கையாக அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, பினராயி விஜயனின் தனிப்பட்ட செயலராக எம்.வி.ஜெயராஜன் [அதே பெயருடைய வேறு நபர்] என்பவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

ஜெயராஜனைச் சந்தித்து அந்த ஒப்பந்தம் குறித்துக் கேட்டபோது, தனது கட்சியின் விதிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த அவர் “நான் முற்றிலும் கட்சியின் முடிவுகளைப் பின்பற்றினேன்” என்று பதிலளித்தார். “இப்போது எங்களது நடவடிக்கைகள் தற்காப்புத் தன்மையிலானவை, வன்முறையைத் தூண்டும் தன்மையற்றவை” என்று பின்னர் ஒப்புக் கொண்டார். உறுதியான கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலத்தை [எதிரிக்கு] விட்டுக் கொடுத்ததோடு, கண்ணூரின் தெருக்களின் மீது யார் ஆட்சி செலுத்துவது என்ற பிரச்சனையில் வல்சனோடு ஜெயராஜனுக்கு இருந்த நீண்டகாலப் பகையானது முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. விஜயனால் வாழும் தியாகி என முன்னர் கொண்டாடப்பட்ட ஜெயராஜன், நீண்டகாலம் கண்ணூரின் சில பகுதிகளுக்குள் ஆர்.எஸ்.எஸ்-சை கட்டுப்படுத்தி வைத்திருந்தமையையும், பின்னர் விஜயனுடனான ஒப்பந்தத்திற்குப் பின்னர் இப்போது கேராளா முழுவதும் அவ்வமைப்பு வளர்ந்திருப்பதையும் பார்க்கும் போது உண்மையில் அவர் எப்படி உணர்ந்தார் என்பது குறித்து நாம் வியப்படைய வேண்டும்.

இந்த ஒப்பந்தமானது வேறு சிலருக்கும் பலனைக் கொடுத்தது. பிப்ரவரி 26, 2021-ல் தேர்தல் ஆணையம் கேரளத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்த நாளன்று, செருவாக்கல் கிராமத்தில் உள்ள சுமார் 17.84 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ எம்.க்கு ஒதுக்கீடு செய்யும்படி ஒரு அரசு உத்திரவானது திருவனந்தபுரத்தின் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்காக ஸ்ரீ எம்.முக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேபினட் அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த அரசு உத்திரவானது மாவட்ட ஆட்சியருக்கு வந்தது என்று மலையாளத்தின் தினசரியான மத்யமம் ஒரு மாதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்டது. கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை மத்யமம் ஆரய்ந்தபோது, நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஸ்ரீ எம். கோரிக்கை வைத்ததற்கான எந்தக் குறிப்பும் அதில் இல்லை என்பது தெரியவந்தது. கேபினேட் கூட்ட விவாதம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் இந்த நில ஒதுக்கீடு தொடர்பான தலைப்பானது கடைசி நேரத்தில், முதலமைச்சர் அலுவலகத்தின் அறிவுறுத்தலால், சேர்க்கப்பட்டது. இதுகுறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீ எம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

திருச்சூருக்கு வெளியில் உள்ள போலிசுப் பயிற்சி மையத்தின் உணவகமானது மே 20, 2016 அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கேரளத்தின் சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். கட்சியானது மாபெரும் வெற்றி பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, வெற்றியைக் கொண்டாடும் விதமாக, போலிசுப் பயிற்சியில் இருந்த சி.பி.எம். ஆதரவாளர்கள் உணவகத்தில் மாட்டுக்கறி பறிமாறினர்.  அந்த நிறுவனத்தின் தலைவராக அப்போது பணியாற்றிய சுரேஷ் ராஜ்புரோகித் என்ற அதிகாரி, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்திரவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின. சுரேஷ் ராஜ்புரோகித்தின் உத்திரவானது ”போலிசுத் துறையில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது” என்ற அடிப்படையில் விசாரிப்பதற்கான உத்திரவல்ல; மாறாக, உணவகத்தில் மாட்டுக்கறி பரிமாறப்பட்டது தொடர்பான விசாரனைக்கான உத்திரவாகும்.

புன்னாடு வன்முறைச் சம்பவங்களின் போது கண்ணூரில் சுரேஷ் ராஜ்புரோகித் பணியாற்றினார். அதன்பிறகு மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக தண்டர்போல்ட் கமேண்டோ யூனிட் என்ற படைப்பிரிவின் தலைவராக காங்கிரசு அரசால் நியமிக்கப்பட்டார். இப்படைப்பிரிவு ‘என்கவுண்டர்கள்’ என்ற பெயரில் பலரையும் கொன்றொழித்தது என்ற இழிபுகழ் பெற்றதாகும். அதன்பிறகு இவர் 2014-ல் போலிசுப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக மாற்றப்பட்டார். இப்பயிற்சி நிறுவனத்திற்கு ஐந்து உணவகங்கள் இருந்தன. அதில் மாட்டுக்கறி பறிமாறப்படுவதை ஒழிப்பது என்பது இவரது முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.

அப்போழுது கேரளாவில் எளிதில் தொற்றக்கூடிய நோய்கள் பரவியது. இதன் காரணமாக மாட்டுக்கறிக்கு தடை என்பது அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. எனினும் இத்தடையானது ஆர்.எஸ்.எஸ்-சின் நிகழ்ச்சி நிரலை கேரளத்தில் செயல்படுத்த முயலும் தந்திரம் என்று சி.பி.எம். தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் 2020-ல் இவர்கள். ஆட்சியில் இருந்தபோதும்கூட இத்தடையானது அதிகாரப்பூர்வமற்ற வகையில் நீடிக்கவே செய்தது. இச்சர்ச்சையை மேலும் மோசமாக்கும் வகையில், அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதையும் பல அதிகாரிகள் எதிர்ப்பதையும் தொடர்ந்து, பல மூத்த, இளைய எஸ்.பி. மட்டத்திலான போலிசு அதிகாரிகளை ` ராஜ்புரோகித் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின் பொழுது இப்பயிற்சி நிறுவனத்தில் ”ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும், இதனை அதிகாரிகள் தடுக்க விரும்பினால் தடுத்துப் பார்க்கட்டும்” என்று அவர்களிடத்தில் வெளிப்படையாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராஜ்புரோகித் பதிலளிக்கவில்லை.

இதில் கவலையளிக்கக் கூடியது என்னவென்றால், இத்தகைய நிகழ்வுகள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவையல்ல. அம்மாநிலத்தின் போலிசுத் துறையில் ஆர்.எஸ்.எஸ். கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வருவதைப் பற்றி கேரளா நெடுகிலும் உள்ள ஏராளமான செயல்பாட்டாளர்கள், வழக்குறைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் எங்களிடம் விவரித்தனர். வரலாறு காணாத கம்யூனிச எதிர்ப்பு கேரளப் போலிசுத் துறையில் நிலவுவதாக துஷார் நிர்மல் சாரதி என்ற வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். “கேரளப் போலிசுத் துறையின் இணையத்தில், வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும் பகுதியில், மாப்பிள்ளா போராட்ட எழுச்சியை மதக் கலவரமாக சித்திரித்துள்ளனர். அந்த எழுச்சியை நசுக்கியமைக்காக தெற்கு மலபார் போலிசைப் பாராட்டியுள்ளனர். இவை பிரிட்டிஷாரும் நிலப்பிரபுக்களும் கூறியவற்றை கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பதன்றி வேறல்ல” என்கிறார், துஷார் நிர்மல் சாரதி. 1921-ல் நடைபெற்ற மாப்பிள்ளா கிளர்ச்சியானது மாப்பிள்ளா பகுதியைச் சேர்ந்த விவசாயிகளான முசுலீம்களால் பிரிட்டிஷாருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட [ஆயுதமேந்திய] எழுச்சியாகும். இதைத்தான் இந்துத்துவ வலதுசாரிகள் இந்துக்களுக்கு எதிரான தக்குதலாகச் சித்தரிக்கின்றனர். “நாடு சுதந்திரம் பெற்றதையடுத்து, மலபார் போலிசானது கேரள போலிசுடன் இணைக்கப்பட்டது. இந்துத்துவ ஆதரவு, முதலாளித்துவ ஆதரவுப் போக்குகள் எவ்வித மாற்றமுமின்றி போலிசில் இன்னும் அப்படியேதான் நீடிக்கின்றன” என்கிறார் அவர். ஆனால் உண்மையில், ஆர்.எஸ்.எஸ்-சுடனான கேரளப் போலிசில் உள்ளவர்களின் ஒட்டுறவானது கடந்த இருபது ஆண்டுகளில் துரிதகதியில் வளர்ந்துள்ளது.

 

 

இதன் அறிகுறிகளை 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே கண்டதாக மின்னி கூறுகிறார். அந்தக் காலத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தின் பிரவோம் என்ற பகுதியில் சின்மயா மிஷன் என்ற ஆசிரமத்தில் அவர் தலைமறைவாக இருந்தார். [ஆர்.எஸ்.எஸ்.] கல்வி நிறுவனங்களில் அவர் முன்னர் ஆற்றிய பணியின் காரணத்தினாலும் சின்மயா கல்வி நிறுவனமானது மாநிலம் நெடுகிலும் பல்வேறு மதச்சார்பற்ற கல்வி நிலையங்களைக் கொண்டு இயங்கிவந்த காரணத்தினாலும் அக்கல்வி நிலையங்களில் [உள்ளவர்களை] ஆர்.எஸ்.எஸ்-சுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் வேலையை அவ்வமைப்பு அப்போது அவருக்குக் கொடுத்தது. “நான் அங்கே தங்கியிருந்த போது போலிசு அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளுடன் இரகசிய சந்திப்புகள் நடப்பதை நான் பார்த்துள்ளேன். அவர்கள் எங்களுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினராவர். அவர்கள் என்ன பிரச்சினையைச் சந்திக்க நேர்ந்தாலும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வர். ஒன்றிய [வாஜ்பாய்] அரசின் கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் தொலைபேசி எண்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொள்வர்” என்கிறார், மின்னி.

கைராலி மக்கள் என்ற தொலைக்காட்சியின் ஒரு அறிக்கையானது ஆர்.எஸ்.எஸ்-சோடு தொடர்புடைய ஒரு பிரிவினர் கேரளப் போலிசில் இருப்பதாகக் குறிப்பிட்டது. ஆர்.எஸ்.எஸ்-சுடன் நீண்டகாலம் உறவு கொண்டுள்ள கன்னியாகுமரியின் விவேகானந்தா கேந்திரா என்னும் இடத்தில், பதனா ஷிபிராம் [அறிவுசார் வகுப்புகள்] என்ற கூட்டத்தை ஆகஸ்டு 2017-ல் கேரளப் போலிசின் அதிகாரிகள் பலர் ஒருங்கிணைந்து நடத்தியதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது. போலிசுத் துறைக்குள் ஆர்.எஸ்.எஸ்-சின் செயல்பாடுகளை வலிமையாக்கும் நோக்கத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 27 அதிகாரிகள் “தத்வஸ்வாமி” என்ற வாட்ஸ்அப் குழு ஒன்றைத் தொடங்கினர். யோகா வகுப்புகள் என்ற மூடுதிரையின் கீழ் ஒவ்வொரு மாதமும் கூட்டங்களை நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். இரண்டு கிரைம் பிரிவு போலிசு அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்ததாக, அந்த வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்பட்ட போஸ்டர்களைப் பார்த்த ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிடுகிறார். இந்தக் குழுவிற்கான நிதித் தேவைகளுக்காக ஒரு சீட்டுக் கம்பெனியை (chit fund) நடத்தும் பொறுப்பு இன்னொரு அதிகாரிக்கு ஒப்படைக்கப்பட்டது. திருவனந்தபுரம் மாநகர போலிசு கட்டுப்பட்டு அறையில் பணிபுரியும் ஒரு அதிகாரி அந்தக் குழுவின் தலைவராகவும், விழிஞ்சம் சுற்றுலாத்துறை போலிசில் பணிபுரியும் ஒரு அதிகாரி அக்குழுவின் செயலாளராகவும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் பணிபுரியும் இன்னொரு அதிகாரி அக்குழுவின் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜாக்கோப் தாமஸ் போன்ற பல மூத்த போலிசு அதிகாரிகள் தாம் ஓய்வு பெற்றவுடன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அதேசமயம், டி.பி.ஷேன்குமார் போன்ற பல முன்னாள் அதிகாரிகள் வெளிப்படையாக பா.ஜ.க.வுக்கு வக்காலத்து வாங்கும் வண்ணம் அடிக்கடி பேசியுள்ளனர். இவை தொடர்பாக நாங்கள் அனுப்பிய விரிவான கேள்விகளுக்கு பினராயி விஜயனின் அலுவலகமோ, கேரளாவில் உள்ள கண்ணூர் போலிசோ எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

போலிசுத் துறையில் ஏற்பட்ட இந்த மாற்றமானது ஏதோ தற்செயலான ஒரு விபத்தல்ல. போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பிரகதி அளித்த ஏராளமான பயிற்சியின் காரணமாக, கேரளத்தின் வடபகுதியில் மிகப்பெரிய பயிற்சி மையங்களை நடத்தும் இடங்களில் ஒன்றாக இரிட்டி வளர்ந்தது. போலிசுத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், அதிகாரிகளை பணியமர்த்திய பெருமைக்கு பிரகதி சொந்தக்காரனாகியது. பல உயர்மட்ட அதிகாரிகள் வட மாநிலங்களில் இருந்து இந்து-தேசியவாத ஆதரவு மனப்பான்மையுடன் கேரளத்திற்கு வந்தது, பல கீழ்மட்ட அதிகாரிகள் வல்சன் மற்றும் ராஜ்புரோகித் போன்றவர்களால் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளே வந்தது [ஆகிய இரண்டின் விளைவாக] போலிசுத் துறையின் நிறம் வெகுவிரைவில் மாறியது. அரசியல் அரங்கில் உள்ள அநேகமாக ஒவ்வொருவரும் இதன் விளைவை ஒப்புக் கொண்டுள்ளனர். இடது ஜனநாயாக முன்னணி ஆட்சி செய்த போதிலும் கூட, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நபர்கள் போலிசுத் துறையின் படிநிலையில் உள்ள கேந்திரமான பதவிகளைக் கைப்பற்றியுள்ளனர் என்று சி.பி.ஐ. கட்சியின் கேரளத் தலைவரான ஆன்னி ராஜாவும் சி.பி.எம். தலைவரான பாலகிருஷ்ணனும் கூறுகின்றனர். [உண்மையில் “புலம்புகின்றனர்” என்று எழுதியிருக்க வேண்டும்]. பாலகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டதற்குப்பின் ஒரு நாள் கழித்து, கேரள பா.ஜ.க. தலைவரான கே.சுரேந்திரன் [ஆர்.எஸ்.எஸ். அரசுத் துறையில் செலுத்தும்] இந்தச் செல்வாக்கை ஒப்புக் கொண்டார். “போலிசில் மட்டுமா ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் உள்ளனர்? நமது குடியரசுத் தலைவரே ஆர்.எஸ்.எஸ்.காரர்தான். 95% கேபினட் அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தாம். இடதுசாரி ஆதரவாளர்கள் நோகாத பதவிகளைத் தேடிக்கொண்டிருப்பதால், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் போலிசு நிலையங்கள் உள்ளிட்ட [கீழ்மட்ட] பதவிகளிலும் கூட இருக்கின்றனர். முன்பு இடதுசாரி ஆதரவாளர்கள் வகித்த இடத்தை இப்போது ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் அடைந்துள்ளனர்” என்கிறார், கேரள பா.ஜ.க. தலைவரான கே.சுரேந்திரன்.

இதனால் கேரளத்தில் உள்ள முசுலீம்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் மிகவும் வெளிப்படையானதாகும். சர்ச்சைக்குரிய, பல முசுலீன்களின் வாக்குரிமையைப் பறித்துவிடும் என்று பலராலும் விமர்சிக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA, NPR, NRC) ஆகியவற்றை சி.பி.எம். கட்சியானது கடுமையாக எதிர்த்த போதிலும், இக்கொள்கையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது கேரளப் போலிசானது ஏறத்தாழ 835 வழக்குகளைப் பதிந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் முசுலீம்கள் ஆவர்.

மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் இடதுசாரிகள் தங்களின் இருப்பைப் படிப்படியாக இழக்கவில்லை. மாறாக மாநிலத்தை ஆளும் நிலைமையில் இருந்து கிட்டத்தட்ட அம்மாநிலங்களில் இருப்பே இல்லை என்ற நிலைக்கு அதிரடியாகவும், நிலைமைகளின் ஊடகவும் ஒருசில மாதங்களிலேயே அந்த இழப்பு நேர்ந்தது. கேரள அரசியலின் நிகழ்ச்சி நிரலையே தீர்மானிப்பதற்கு தகுதி படைத்திருப்பது, வன்முறைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஆர்.எஸ்.எஸ். ஆட்களை அதிகார வர்க்கத்தின் எல்லா உறுப்புகளிலும் ஊடுருவச் செய்திருப்பது – என வல்சன் போட்டு வைத்திருக்கும் வேர்மட்ட அளவிலான அடித்தளமானது [மே.வங்கம், திரிபுராவில் நடந்ததைப் போன்ற] அத்தகையதொரு மூர்க்கமான மாற்றத்திற்கு ஏதுவான சூழலை [கேரளாவில்] உருவாக்கியுள்ளது. தேர்தலில் இது எந்த பாதிப்பையும் இன்னும் ஏற்படுத்தவில்லை என்றாலும்கூட, வல்சனது வெற்றியானது கேரள மாநிலத்தின் வாழ்வின் பல அம்சங்களில் மேலாதிக்கம் செலுத்தும் தீர்மானகரமான சக்தியாக ஆர்.எஸ்.எஸ்-சால் நீடிக்க முடியும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அம்மாநிலத்தில் தொடர்ந்து விரிவடைந்து வரும் ஆர்.எஸ்.எஸ்-சின் முன்னே, கேரளா மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கு நோக்கிச் செல்கிறது என்ற வாதங்களெல்லாம் பொருளற்றவையாகியுள்ளன. இதுதான் கேரளத்தின் உண்மை நிலையாகும். ஆர்.எஸ்.எஸ்-சும் தன்னளவில் இந்த உண்மையின் மீது நம்பிக்கை கொண்டே உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-சின் நூற்றாண்டான 2025-க்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் நோக்கில் பா.ஜ.க.வானது சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் மேலாதிக்கம் செலுத்த முயன்று வருவதாகக் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தில் கேரள சி.பி.எம்-மின் மாநிலச் செயலாளரான எம்.வி.கோவிந்தன் கூறினார். இந்தப் பேச்சுக்கு பதிலளித்த வல்சன், கோவிந்தனை நோக்கிப் பின்வரும் கேள்வியை எழுப்பினார்: “நீங்கள் என்ன எங்கள் இந்துப் பிரச்சாரகர்களில் ஒருவரா? நீங்கள் எங்களைப் போலவே பேசுகிறீர்கள். சுற்றியும் பாருங்கள், நாம் ஏற்கனவே இந்து ராஷ்டிரத்தில் தான் இருக்கிறோம்.”

 (முற்றும்)

“கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?” என்ற தலைப்பில் ஜூன், 2024 கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

தமிழாக்கம்

  • ரவி

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன