மோடியின் ஆட்சியில் “சர்வம் அதானிக்கு அர்ப்பணம்”

இது வெறுமனே சட்டத்தை திருத்தும் பிரச்சனை மட்டும் கிடையாது, அதானிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி வாங்குவதற்கான ஒப்பந்தம், சுரங்கம் அமைத்திட எஸ்.பி.ஐ. வங்கியின் கடன், வங்கதேசத்திற்கும் அதானிக்கும் இடையிலான ஒப்பந்தம், அனல் மின் நிலையம் அமைக்கும் செலவில் 80 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொண்டது, அனல் மின்நிலையம் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்களை ஒடுக்கியது, வெளிநாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்காக புதிய சட்டம் கொண்டுவந்தது, தற்போது பிரச்சனை என்று வந்தவுடன் அதிலிருந்து காப்பாற்றக் கைகொடுத்திருப்பது என அதானியின் அத்தனை திட்டங்களிலும், அதன் ஒவ்வொரு கட்டத்திலும் மோடி அரசு துணையாக நின்றுள்ளது.

“உடுக்கை இழந்தவன் கை போல” என உண்மையான நட்புக்கு இலக்கணம் வகுத்தார் திருவள்ளுவர். திருவள்ளுவராவது ஆபத்து வரும்போது உடனே உதவி செய்வதை நட்புக்கு இலக்கணமாக்கினார், ஆனால் மோடியோ தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு பிரச்சனை வரும் முன்னரே, எதிர்காலத்தில் நஷ்டம் வந்துவிடுமோ என்றஞ்சும் சூழல் ஏற்பட்ட உடனேயே ஓடோடிச் சென்று உதவி செய்ததன் மூலம் நட்புக்கு புது இலக்கணம் வகுத்திருக்கிறார்.

 

 

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இடைக்கால அரசு பதவியேற்றுள்ள சூழலில், அந்நாட்டிற்கு மின்சாரம் ஏற்றுமதி செய்ய அதானி குழுமம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இரத்து செய்யப்படலாம் என்ற சூழல் தற்போது நிழவுகிறது. ஒருவேளை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதிலிருந்து அதானியைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை ”உள்நாட்டிலும் விற்பனை செய்யலாம்” என்று சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதானியின் நஷ்டத்தை நம் தலையில் ஏற்றியுள்ளது மோடி அரசு.

அதானிக்காக சட்டவிதிகளைத் திருத்தியதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இது வெறுமனே சட்டத்தை திருத்தும் பிரச்சனை மட்டும் கிடையாது, அதானிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி வாங்குவதற்கான ஒப்பந்தம், சுரங்கம் அமைத்திட எஸ்.பி.ஐ. வங்கியின் கடன், வங்கதேசத்திற்கும் அதானிக்கும் இடையிலான ஒப்பந்தம், அனல் மின் நிலையம் அமைக்கும் செலவில் 80 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொண்டது, அனல் மின்நிலையம் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்களை ஒடுக்கியது, வெளிநாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்காக புதிய சட்டம் கொண்டுவந்தது, தற்போது பிரச்சனை என்று வந்தவுடன் அதிலிருந்து காப்பாற்றக் கைகொடுத்திருப்பது என அதானியின் அத்தனை திட்டங்களிலும், அதன் ஒவ்வொரு கட்டத்திலும் மோடி அரசு துணையாக நின்றுள்ளது.

2014-ம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கார்மைகேல் பகுதியில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமும், அதிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரியை இந்தியாவிற்கு கொண்டுவர ஒரு துறைமுகமும், சுரங்கத்தையும் துறைமுகத்தையும் இணைக்கும் ரயில் போக்குவரத்தையும் உருவாக்கும்  மிகப்பெரிய திட்டம் ஒன்றை அதானி நிறுவனமும் குயின்ஸ்லாந்து மாகாணமும் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்திற்காகவே மோடி ஆஸ்திரேலிய நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

700 கோடி அமெரிக்க டாலர் செலவிலான இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு, நிதி திரட்டுவதற்கு எதிராக ஏற்கெனவே உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் கோலோச்சிய நிறுவனங்கள் முட்டுக்கட்டை போட்ட போது, எஸ்.பி,ஐ, வங்கியின் மூலம் 100 கோடி அமெரிக்க டாலர் கடனாக கிடைக்க மோடி அரசு வழி செய்து கொடுத்தது. அதுமட்டுமன்றி ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு பல்வேறு வரிச்சலுகைகளையும் வாரிக் கொடுத்தது. 

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் நிலக்கரியை இந்தியாவிற்குள் கொண்டுவர ஒரிசா மாநிலத்தின் தம்ரா துறைமுகத்தினை அதானி குழுமத்திற்கு வழங்கியிருந்தார் மோடி.

அடுத்த கட்டமாக இந்தியா கொண்டுவரப்படும் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும், அதனை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து கொடுத்தது. இதற்கென 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு ஷேக் ஹசீனாவைச் சந்தித்தார். 2015 ஆகஸ்டு மாதம் அதானி குழுமத்திற்கும் வங்கதேச அரசுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அடுத்ததாக மின்சாரம் உற்பத்தி செய்ய அனல்மின் நிலையம் அமைக்க வங்கதேசத்திற்கு அருகிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் 1600 மேகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனல் மின் நிலையம் அமைக்க இலவசமாக நிலம் கொடுப்பதுடன், மின்நிலையம் அமைக்கும் செலவில் 80 சதவீதத்தை ஜார்க்கண்ட் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் மீதமுள்ள 20 சதவீதத்தை மட்டும் அதானி கொடுத்தல் போதும் என மாநில அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

அனல்மின் நிலையம் அமைக்கப்படும் இடம் சிறப்புப் பொருளாதார மணடலமாக அறிவிக்கப்பட்டதுடன், அங்கே உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு பல்வேறு வரிச்சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

 

 

கோட்டா மாவட்டத்தில் 1214 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட அதானியின் அனல் மின் நிலையத்திற்காக பத்து கிராமங்கள் காலி செய்யப்பட்டன. மின் நிலையத்திற்கென ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதால், ஒட்டுமொத்த நீராதாரமும் அழிக்கப்பட்டு அந்தப் பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை எதிர்த்துப் போராடியவர்களை ஒடுக்க ஜார்க்கண்ட் மாநில அரசு போலீசை இறக்கிவிட்டது.

அதுமட்டுமன்றி ஆஸ்திரேலியாவிலிருந்து தம்ரா துறைமுகத்திற்கு வந்திறங்கிய நிலக்கரியை கோட்டா அனல் மின்நிலையம் வரை கொண்டு செல்ல தனி ரயில் பாதையை இந்திய ரயில்வே அமைத்துக் கொடுத்தது. ஒரிசாவில், தங்களது கிராமத்தின் வழியாக இந்த இரயில் பாதை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 700 பழங்குடியின குடும்பங்களை போலீசைக் கொண்டு ஒடுக்கி அவர்களது கிராமத்தையே ஒட்டுமொத்தமாக காலி செய்து ரயில்பாதை அமைக்கப்பட்டது.

அனல் மின் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு வங்கதேசத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக பல ஆயிரம் விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் தங்களது தோப்புகள் நாசமாக்கப்படுவதற்கு எதிராக போராடிய மேற்குவங்க விவசாயிகளின் போராட்டமும் போலிசைக் கொண்டு நசுக்கப்பட்டது.

இதற்கு முன்பு வேறு எந்த தனியார் நிறுவனமும் தான் தயாரிக்கும் 100 சதவீதம் மின்சாரத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவில்லை என்பதால் அதற்கான சட்டவிதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை. அதானியின் கோட்டா அனல் மின் நிலையத்தைக் கருத்தில் கொண்டு 2018-ம் ஆண்டு இதற்கென சட்ட விதிகளை வகுத்ததுடன் பல்வேறு வரிச்சலுகைகளையும் அளித்துள்ளது மோடி அரசு.

 

வங்கதேச அரசுடன், அதானி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை ஒரு மெட்ரிக் டன்னிற்கு 400 அமெரிக்க டாலர் என்றும், எனவே ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 11 ருபாய் என்றும் கூறியிருந்தது. ஆனால் சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை சராசரியாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு 250 அமெரிக்க டாலர்கள் என்ற அளவிளேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் அதானிக்குச் சொந்தமான சுரங்கத்திலிருந்தே நிலக்கரியைக் கொண்டுவருவதால், அதன் விலை சர்வதேச சந்தையில் கிடைப்பதைவிட மிகவும் குறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இருந்தும் யூனிட் ஒன்றிற்கு 11 ருபாய் என்பது பகற்கொள்ளையாகும்.

அதானியைத் தவிர மின் உற்பத்தி செய்யும் மற்ற நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 4 ருபாய்க்கு கொடுக்கும் போது, அதானியிடம் 11 ருபாய்க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி வங்கதேச மக்கள் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். தற்போது ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருப்பதால் அதானியின் ஒப்பந்தம் தொடர்ந்து செல்லுபடியாகுமா? வங்கதேச அரசு அதனியிடமிருந்து மின்சாரம் வாங்குவதைத் தொடருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதானி பாதிப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை ”உள்நாட்டிலும் விற்பனை செய்யலாம்”  எனச் சட்டவிதிகளைத் திருத்தியிருக்கிறது மோடி அரசு.

அதானியின் முறைகேடுகளையும், இம்முறைகேடுகளை மறைக்க செபி அமைப்பு முயல்வதையும் ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ள சூழலில், எக்காரணம் கொண்டும் கைவிடமாட்டோம் என்ற உறுதிமொழியை இச்சட்டதிருத்தத்தின் மூலம் அதானிக்கு வழங்கியுள்ளது மோடி அரசு.

அம்பானி அதானி போன்ற தரகு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தரகு முதலாளிகளின் வளர்ச்சி, வீழ்ச்சி என்ற அவர்களின் ஒவ்வொரு கட்டத்திலும் உற்ற துணைவனாக மோடி எவ்வாறெல்லாம் முடிவெடுக்கிறார் என்பதற்கு அதானியின் கோட்டா அனல் மின் நிலையம் ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு.

  • மகேஷ்

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. மிக விரிவான கட்டுரை. அதானிக்கு ஒரு நெருக்கடி என்றால் அனைத்தையும் செய்ய தயாராக உள்ள மோடி அரசு இதற்கு எதிராக போராடினால் புதிய குற்றவியல் சட்டம் பாயும் என்பத உறுதியாக நம்பலாம்.