அதானி – செபி கள்ளக்கூட்டை
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
இந்தியாவிற்கு எதிரான சதி என
கதையளக்கும் காவி கும்பல்

அந்நிய மூலதன நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களது மனம் நோகாமல் நடந்து கொள்ளும் மோடி அரசு ஏதோ நாட்டு நலனுக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நிற்பது போலவும், அதனால் மோடி அரசைப் பழிவாங்குவதற்காக அதானி குறித்தும், செபியின் தலைவர் குறித்தும் அந்நிய நாடுகள் சதி செய்து பிரச்சாரம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானியின் முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்தி 18 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசு அதானி குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை.

அதானி மீதான பங்குச் சந்தை முறைகேடுகளை விசாரிப்பதாக கூறிய இந்திய பங்குச் சந்தைகளைக் கட்டுபடுத்தும் அமைப்பான செபி (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) இத்தனை நாளும் இவ்விசயத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் வாழாவிருந்தது. இந்த வழக்கில் செபியின் விசாரணை முட்டுச் சந்தில் நிற்பதாக உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியது.

இந்நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் செபி அமைப்பு இந்த விசாரணையை ஆமை வேகத்தில் நகர்த்திச் செல்வதற்கு முக்கிய காரணமே, செபியின் தற்போதைய தலைவராக இருக்கும் மாதபி பூரி புச், அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ய பயன்படுத்திய வெளிநாட்டு நிதிமூலதன நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதுதான், என அம்பலப்படுத்தியிருக்கிறது.

கடந்த ஜனவரி 2023ல் அதானி குழும நிறுவனங்கள், மொரீசியஸ் போன்ற வரியில்லா நாடுகளில் (Tax free Havens) போலியான நிதிமூலதன நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் இந்தியப் பங்கு சந்தையில் தங்களது நிறுவன பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி பெரும் கொள்ளையை நடத்தியிருப்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.

அதானியைப் பாதுகாப்பதற்காக, இந்த ஊழல் முறைகேடுகளைப் பற்றி விசாரிக்க முடியாது என ஒன்றிய அரசு கைவிரித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழுவும் ஒன்றரை வருட விசாரணைக்குப் பிறகு கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கி விற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதிநடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை செபி அமைப்பால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தது.

தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனம், செபியின் விசாரணை இப்படி முடிந்ததற்கு இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவன பங்குகளில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி முதலீடு செய்திருப்பதுதான் காரணம் என கடந்த வாரம் (ஆகஸ்டு 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்திட, கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, வரி இல்லா நாடுகளில் ஒன்றான பெர்முடாவில் இயங்கும் “குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட்” என்ற நிறுவனத்தைப் பயன்படுத்தினார் என்றும்,  அந்த நிறுவனம் மொரிஷியஸ் நிறுவனமான ஐபிஇ பிளஸில் முதலீடு செய்து, இதன் வழியாக இந்திய பங்குச் சந்தைக்குள் பணம் முதலீடு செய்யப்பட்டது என்றும் கூறுகிறது.

செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றனர் என்றும் ஹிண்டன்பர்க் கூறுகிறது.

இதன் காரணமாகத்தான் மொரிஷியஸ் மற்றும் பெர்முடாவில் உள்ள அதானி குழுமத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனங்களை விசாரிப்பதில் `செபி’ அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டுகிறது.

செபியின் தலைவரான மாதபி பூரியும் அவரது கணவரும் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை சிங்கப்பூரில் பணிபுரிந்த போது இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

இப்படி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த மாதவி பூரி 2017ம் ஆண்டு செபியில் முழுநேரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த பிறகு தன் வசம் இருந்த இந்த நிறுவன பங்குகள் அனைத்தையும் தனது கணவரின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த விசயம் அம்பலமான பிறகு அது 2015ல் தொடங்கப்பட்ட நிறுவனம், என் பெயரில் எதுவும் இல்லை, எல்லாம் என் கணவர் பெயரில் இருக்கிறது என கதையளக்கிறார். தன்னை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகேட்கிறார்.

மாதவி பூரியின் வாதத்தை அப்படியே பிரதியெடுத்துப் பேசும் செபி நிறுவனமும் ஹிண்டன்பர்க் அதானியை அம்பலப்படுத்தியதில் உள்நோக்கம் இருக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறது.

அதானியின் பங்குச் சந்தை முறைகேடும், கொள்ளையும் அம்பலப்பட்டதுடன் இன்றைக்கு அந்தக் கொள்ளைக்கு செபி அமைப்பு ஆதரவாக இருப்பதும் சேர்த்து அம்பலமாகியுள்ள சூழலில் ஆளும் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலானது இது இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வெளிநாடுகள் நடத்தும் சதி என்று கூறுகிறது.

“விஸ்வகுரு” மோடியின் ஆட்சியில் இந்தியா மிக வேகமாக முன்னேறி, கூடிய விரைவில் மகோன்னதமான நிலையை அடையவிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மோடியின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க, இந்தியப் பொருளாதார வளர்ச்சியை சீரழிக்க அந்நிய சக்திகளால் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்பதுதான் காவிக் கும்பலின் வாதம்.

இந்தியாவிற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் நடத்தியிருக்கும் சதிச் செயலின் ஒரு அங்கம்தான் இந்த பிரச்சனை என்று காவிக் கும்பல் பிரச்சாரம் செய்வதுடன், அதானி குறித்த ஹின்டன்பர்க் அம்பலப்படுத்தியிருப்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பிரச்சாரம் செய்பவர்களை வெளிநாட்டுக் கைக் கூலிகள் எனக் கூறுகிறது.

முதலில் மோடி தலைமையிலான பாஜக அரசானது அந்நிய ஏகாதிபத்தியங்களுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை, ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு எவ்வித முட்டுக்கட்டையும் போடவில்லை. அப்படியிருக்கையில் ஏன் மோடியின் ஆட்சிக்கு எதிராக அவை சதிசெய்ய வேண்டும்

அந்நிய நிதிமூலதன நிறுவனங்கள் நம் நாட்டிற்குள் தங்களது மூலதனத்தை தடையின்றிக் கொண்டுவரவும், அதனை எப்போது வேண்டுமானாலும் பன்மடங்காக திரும்ப எடுத்துச் செல்லவும் மோடி அரசு வகை செய்து கொடுத்துள்ளது.

அந்நிய நிதிமூலதனக் கும்பலின் கோரிக்கைகளை தலைமேல் சுமந்து நிறைவேற்றித் தருகிறது. தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம், விவசாயிகள் சட்டதிருத்தம், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க ஏற்ற வகையில் சட்ட திருத்தங்கள் என தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் கூட விண்வெளி உட்பட பல துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு இருந்த தடைகளை நீக்கியிருக்கிறது. இப்படி அந்நிய மூலதன நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களது மனம் நோகாமல் நடந்து கொள்ளும் மோடி அரசு ஏதோ நாட்டு நலனுக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நிற்பது போலவும், அதனால் மோடி அரசைப் பழிவாங்குவதற்காக அதானி குறித்தும், செபியின் தலைவர் குறித்தும் அந்நிய நாடுகள் சதி செய்து பிரச்சாரம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உண்மையில் அந்நிய சதி என்றால், சமீபத்தில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்தது போல, இன்னும் சொல்லப்போனால் லத்தின் அமெரிக்க நாடுகளில், ரஷ்யாவின் அண்டை நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்புகள் போன்றவைதான் சதி என்று கூறமுடியும்.

ஆனால் இங்கே ஆளும் காவிக் கும்பலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசும் சரி ஏகாதிபத்திய சேவையில் நான் நீ எனப் போட்டி போட்டுக் கொண்டு நிற்பவை. நம் நாட்டில் சதிசெய்ய ஏகாதிபத்தியங்களுக்கு எந்த தேவையும் இல்லை. ஏனென்றால் நடப்பது அவர்கள் ஆட்சி. என்ன வேண்டுமென்றாலும் அவர்கள் கேட்டால் போதும் செய்து தர ஆட்சியாளர்கள் தயாராய் இருக்கும் போது, வீணாகச் சதி செய்ய வேண்டுமா என்ன?

அதானி விசயத்தில் நடந்திருப்பது இரண்டு முதலாளிகளுக்கு இடையிலான தனிப்பட்ட விரோதத்தில் ஒரு முதலாளி இன்னொரு முதலாளியினை அம்பலப்படுத்துவதுதான்.

செத்துபோன திருபாய் அம்பானியின் தகிடுதத்தங்களை அன்றைக்கு கோயங்காவைப் பயன்படுத்தி மற்ற முதலாளிகள் அம்பலப்படுத்தியது போல, பின்னாளில் ரத்தன் டாடாவை நீரா ராடியா விசயத்தில் அம்பானியுடன் சேர்ந்து மற்ற முதலாளிகள் அம்பலப்படுத்தியது போல இன்றைக்கு அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகளையும், அவருக்குத் துணையாக நிற்கும் அதிகாரிகளையும் ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அதானியை அம்பலப்படுத்துவது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல், இந்தியாவின் மீதான தாக்குதல் என மடைமாற்றுகிறது காவிக் கும்பல். அவர்களைப் பொருத்தவரை அம்பானி அதானி போன்ற தரகு முதலாளிகள் தான் இந்தியா. முதலாளிகளின் நலன் தான் நாட்டின் நலன். அவர்களின் மீதான தாக்குதல் என்பது நாட்டின் மீதான தாக்குதல்.

18 மாதங்களாக அதானியின் மீதான வழக்கு விசாரணை எங்கேயும் போகாமல் தொடங்கிய இடத்திலேயே இருப்பதற்கு திருடன் கையில் சாவியைக் கொடுத்தது போல செபியை இந்த வழக்கை விசாரிக்கும்படிக் கூறியதுதான் காரணம் என ஹிண்டன்பர்க் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

அதானியின் ஊழலை விசாரிக்க செபியை நியமித்ததைப் போன்று இந்த நாட்டின் ஆளும் இடத்தில் காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் இருப்பதும் பாலுக்கு பூனையைக் காவல் வைத்தது போன்றதுதான். இந்தக் கும்பலை அகற்றாத வரை, அதானி போன்ற தரகு முதலாளிகளின் ஊழலும் முறைகேடுகளும், அதிகாரிகளின் உதவியோடு தொடரத்தான் செய்யும்.

  • அறிவு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. மோடி கூறுவது போல் இது ஏகாதிபத்திய சதி அல்ல. ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஆட்சி செய்யும் போது ஏகாதிபத்தியம் ஏன் சதி செய்ய வேண்டும் என்ற கேள்வி சரியானது.
    எழுத்து பிழை: வாலாயிருப்பது என எழுத வேண்டும்