கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 3

தொடர் நிலச்சரிவுகள், பெருவெள்ளம், புவிசூடேறுதல்
மறுகாலனியாக்கச் சுரண்டலே பிரதானக் காரணம்

300 ஆண்டுகால காலனியாதிக்கம் செய்ததெல்லாம் ஒன்றுமில்லை என்று எண்ணுமளவுக்கு 30 ஆண்டுகால மறுகாலனியாக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையை சிதைத்துச் சின்னா பின்னமாக்கியுள்ளது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.

இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் இவ்வாறு பலவீனப்பட்டுப் போனதுதான் கேரளத்தில் நடந்துவரும் தொடர் நிலச்சரிவுகளுக்கான காரணமாகும். இலாபத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும் முதலாளித்துவ பயங்கரவாதம், குறிப்பாக அதன் கோர வடிவாமான மறுகாலனியாக்கமே இதற்கான பிரதானக் காரணமாகும்.

மண்ணுக்கேற்ற மரங்கள் ஆழமான வேர்ப்பிடிப்புக் கொண்டவையும் அந்த மண்ணைச் சரியாமல் தாங்கி நிற்கும் தன்மையும் கொண்டவையாகும். ஆனால் யூகோலிப்டஸ் போன்ற அந்நியத் தாவரங்கள், மரங்கள் அகலமான வேர் கொண்டவையும் மண்ணின் ஈரப்பததத்தை உறிஞ்சி பலவீனப்படுத்துபவையாகும். தேயிலை, காபி, இரப்பர் தோட்டங்களும் இதே நிலையைத்தான் ஏற்படுத்துகிறது. இதைவிட மோசமாக, ஆண்டாண்டுகாலமாய் நடக்கும் சுரங்கம், குவாரி தொழில்கள் இராட்சத எந்திரங்களைக் கொண்டு மலைகளைக் குடைவதால் அதன் அதிர்வலைகளை (shock waves) மலையெங்கும் பரப்புகின்றன. இதனால், பல இலட்சம் ஆண்டுகள் பழமையான, உறுதியான கற்பாறைகள் கூட அதீதமாக பலவீனமடைகின்றன. கேரளத்தின் 40% பகுதிகள் மலைப்பாங்கானவையாகும். அவை அனைத்துமே 20 டிகிரிக்கும் மேலான சரிவைக் (slope) கொண்டவையாகும். முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது 30 டிகிரி சரிவைக் கொண்ட பகுதியாகும்.

இந்த மலைப்பாங்கான பகுதிகளில் பல இடங்கள் பாறைகளும் மண்ணும் பலவீனப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல, பல இடங்களில் பொத்தல்களும் (caveties) ஏற்பட்டுள்ளன. முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலும் பொதுவாகவே வயநாடு முழுவதிலும் நிலத்தில் ஏராளாமான பொத்தல்கள் இருப்பதைப் பற்றி ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, இயல்புக்குச் சற்று அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டாலே நிலம் சரிந்துவிழுந்து விடும் அபாயத்தில்தான் வயநாடு மட்டுமல்ல, பெரும்பாலான கேரளப் பகுதிகள் இருக்கின்றன.

ஜூலை 30 ஆம் தேதியன்று முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு தூண்டுதலாக இருந்தது பெருமழைதான். 572 மி.மீ மழைப் பொழிவானது, அதாவது ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையின் அளவில் 6%-ஆனது சில மணிநேரங்களில் கொட்டியது. தூற வேண்டிய மழை வானிலிருந்து வெடித்து விழுந்தது (burst instead of drizzling). அரபிக் கடலில் உருவான Mesoscale Convective Momplex (MCC) எம்.சி.சி. என்று சொல்லப்பபடும் இராட்சத மேகத் திரளானது – இந்த எம்.சி.சி. மேகத்திரள்கள் சில சமயங்களில் ஒரு மாநிலத்தின் பரப்பளவையே ஆக்கிரமிக்கும் வகையில் கூட இருக்கும் – இத்தகைய மழைப் பொழிவைக் கொடுத்ததே இந்நிலச்சரிவிற்கான தூண்டுதலாகும். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, நிலச்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களில் இந்திய அளவில் 13 ஆவது இடத்திலும் கேரள அளவில் 5 ஆவது இடத்திலும் உள்ள வயநாடு இப்பெருமழையை எதிர்கொள்ள முடியாமல் சரிந்து விழுந்தது.

 

 

தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதியில் இருந்து 11 கி.மீ. தொலைவில்தான் 2019-இல் நிலச்சரிவைச் சந்தித்த புத்தமலை அமைந்துள்ளது. இத்தகைய நிலச்சரிவுகளில் இருந்து பாடமேதும் கற்றுக் கொள்ளாமல், சூழலியலாளர்களின் அறிவுறுத்தல்கள் எதற்கும் செவிமடுக்காமல் 2019-க்குப் பின்னர் காடழிப்பு நடவடிக்கையை கேரளத்தில் தீவிரப்படுத்தியுள்ளது ஆளும் சி.பி.எம். அரசு. ஏற்கனவே கூறியதைப் போல கேரளத்தில் 2008-இலிருந்து 2023 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்தேறிய காடழிப்பானது 2018-க்குப் பிறகுதான் உச்சத்தை தொட்டுள்ளது. இப்பதினைந்து ஆண்டுகளில் நடந்த காடழிப்பு 2021–2023 காலகட்டத்தில்தான் 35 மடங்கு அதிகரித்தது. அதுமட்டுமல்ல, மேற்குத் தொடர்ச்சி மலையை சுமார் 7 கி.மீ நீளத்திற்குக் குடைந்து வயநாட்டையும் கோழிக்கோட்டையும் இணைக்கும் வகையில் 868 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவின் மூன்றாவது நீளமான 7 கி.மீ சுரங்கப்பாதையை அமைக்கத் தீவிரமாக முயன்று வருகிறது. அதேபோல முண்டக்கை, சூரல் மலை உள்ளிட்ட பகுதிகளை காட்கில் அறிக்கை அதிதீவிர கூருணர்வு மண்டலமாக 2011-இலேயே அறிவித்து மட்டுமின்றி, கஸ்தூரி ரங்கன் அறிக்கையும் கூருணர்வு மண்டலமாக அறிவித்தது. ஒன்றியத்தில் ஆண்ட காங்கிரசு, பா.ஜ.க. அரசுகள் இவ்விரு அறிக்கைகளையும் கழிவறைக் காகிதமாக்கின. இதன் விளைவுதான் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் பலியான கோரச் சம்பவமாகும். எனவே, இது இயற்கைப் பேரிடர் அல்ல; அரசமைப்பே நடத்திய பச்சைப் படுகொலையாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலை பலவீனமடைந்ததுதான் இந்நிலச்சரிவிற்கு காரணமென்றும், பெரும் மழைப்பொழிவுதான் அதற்கான தூண்டுதல் என்றும் பார்த்தோம். அம்மலையை பலவீனப்படுத்தியமைக்கு மட்டுமல்ல இப்பெருமழைக்கும் முதலாளித்துவம்தான் குறிப்பாக மறுகாலனியாக்கம்தான் பிரதானக் காரணமாகும். பொதுவில் காலநிலை மாற்றத்திற்கும் புவிவெப்பமாதலுக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்புதான் காரணம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், அரபிக் கடல் அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு அருகமையில் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் மிகத் தீவிரமான அளவில் சூடேறுவதற்கு பிரதானமான காரணம் மேற்குத் தொடர்ச்சி மலையின் சீரழிவுதான் என்று கூறுகிறார்கள் சூழலியலாளர்கள்.

இந்த முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்டமை குறித்த இந்தியா டுடே பேட்டியில் “அபரிமிதமான மழைப்பொழிவுதானே இந்நிலச் சரிவிற்கு காரணம்; இதற்கு யார் என்ன செய்திருக்க முடியும்” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு மாதவ் காட்கில் பதிலளிக்கிறார் :

“பெருமளவு மழை பெய்தமைக்கும் வளிமண்டலத்தில் திரண்டிருக்கும் தூசுப்படலமே (aerosol load) காரணமாகும். உலகத்தின் தூசுபடலங்களின் தலைநகரமாகத் இந்தியா திகழ்கிறது. இந்த தூசுப்படலங்களானது மழையின் தீவிரத்தன்மையை மேன்மேலும் அதிகரிக்க வல்லவை. 4-5 மணிநேரத்தில் பெய்ய வேண்டிய மழை அரைமணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும்”

 

 

ஆம். 4-5 மணி நேரங்களில் அல்ல; ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழையின் 6% சில மணிநேரங்களில் முண்டக்கையில் கொட்டித் தீர்த்துள்ளது.  தூசுப்படலங்கள் மழைப் பொழிவின் மீது செலுத்தும் தாக்கங்கள் பற்றிய ஆய்வுகள் தற்போது ஏராளமாக வெளிவந்துள்ளன. ஒட்டுமொத்தப் பருவ காலத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு குறைவதற்கு (total monsoon rainfall) காரணமாக இருக்கும் இதே தூசுப் படலங்கள்தாம், குறைவான நேரத்தில், நாட்களில் அதிக மழைப்பொழிவதற்கும் (extreme rainfall in short period) காரணமாக அமைகின்றன. உதாரணமாக, 1950 – 2010 வரையிலான மழைப்பொழிவை ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த பருவகால மழை கடுமையாக வீழ்ச்சியுற்றிருக்கும் அதேவேளையில், குறுகிய நாளில் அதிதீவிர மழைப்பொழியும் நிகழ்வுகள் கடுமையாக அதிகரித்திருப்பதைக் காணலாம். காண்க வரைபடம். மோடி பொறுப்பேற்ற பிறகான இந்தப் பத்தாண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் கட்டமைப்பு மேன்மேலும் சிதைக்கப்பட்டிருப்பதன் விளைவாக இது மேன்மேலும் அதிகரித்திருக்கும் என்பதும் கூறாமலே விளங்கும்.

இத்தகைய தூசுப்படலங்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம், குவாரி, சுரங்கம் போன்ற தொழில்களே ஆகும். ஒருபுறம் காடழிப்பை மூர்க்கமாக மேற்கொண்டு தென்கிழக்கு அரபிக்கடலை அதீதமாக சூடாக்கி பருவ காலத்தை மாற்றியுள்ள மறுகாலனியாக்கம்; மறுபுறம், குவாரிகள், சுரங்கங்கள் மூலம் தூசுப்படலத்தைத் தோற்றுவித்து ஒரு மாநிலத்தின் பரப்பளவுக்கு இணையான எம்.சி.சி. இராட்சத மேகத்திரள்களைத் தோற்றுவித்துள்ளது. குறுகிய காலத்தில் அதிதீவிர மழைப் பொழிவை முன்னெப்போதுமில்லாத வகையில் தோற்றுவித்துள்ள அதேவேளையில், ஒட்டுமொத்த பருவகாலத்தின் மழைப்பொழிவை குறைத்து நீர்த்தட்டுப்பாட்டையும் வறட்சியையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தோற்றுவித்துள்ளது.

எனவே, பொதுவாக உலகம் முழுவதும் நடந்தேறிவரும் காலநிலை மாற்றத்திற்கும், புவி சூடேறுதலுக்கும் மட்டுமின்றி, குறிப்பாக அரபிக் கடல், மேற்குத் தொடர்ச்சி மலையில் நிகழ்ந்துவரும் வரலாறு காணாத மாற்றங்களும் பேரிடர்களுக்கும் பேரழிவுகளுக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரிலான மறுகாலனியாக்கச் சுரண்டலே பிரதானக் காரணமாகும். இக்கொள்கையைத் தலைமுழுகாதவரை மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டுமல்ல, புவிக்கோளத்தையே அழிவிலிருந்து காக்க முடியாது. பல்வேறு பேரிடர்களில் மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு போவதையும் தடுக்க முடியாது.

பேரழிவுப் பாதையில் பீடுநடைபோடும்
ஒன்றிய மாநில, அரசுகள்

ஆனால், நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மோடி அரசு நாலுகால் பாய்ச்சலில் இம்மறுகாலனியாக்க நடவடிக்கைகளை வெறித்தனமாக அமல்படுத்தி வருகிறது.

2014-இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் முதலாளிகள் உச்சி குளிரும் வண்னம் செய்த முதன்மையான திருப்பணிகளில் ஒன்று நீர்த்துப் போன கஸ்தூரி ரங்கன் அறிக்கையைக் கூட இரத்து செய்ததுதான். அதேபோல, மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கட்டற்ற வகையில் முதலாளிகள் கனிமவளங்களைக் கொள்ளையடிக்க ஏதுவாக, புதிதாக தொழில் தொடங்கும் முதலாளிகள் இனி சுற்றுச் சூழல் சான்று பெறத் தேவையில்லை; ஒற்றைச் சாளர முறையில் பிரதமர் அலுவலகத்தில் அனுமதி பெற்று தொழில்களைத் தொடங்கலாம் – என்று தான் பிரதமாரான அடுத்த மாதத்திலேயே அறிவித்தார்.

அதேபோல 2020 ஆம் ஆண்டு கொண்டுரப்பட்ட சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கையானது ஏற்கனவே பெயரளவில் இருந்த 2006 கொள்கையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது. ஒரு பகுதியில், சூழலியல் முக்கியத்துவமுள்ள பகுதிகளில் கூட தொழில் தொடங்குவதற்கு முன்னால் மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்றிருந்த பெயரளவு விதியை அடியோடு நீக்கியது. அதேபோல, சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் வழங்கப்பட்ட பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளை அடியோடு மீறியது; இதைவிட முக்கியமாக முதலாளிகள் செய்யும் சூழலியல் விதிமீறல்களை அரசு கண்கானிப்பதையே அடியோடு கைவிட்டு அதை ‘மூன்றாம் தரப்புக்கு’ (third party) வழங்குவது என்ற பெயரில் ஒரு முதலாளியின் தவறை இன்னொரு முதலாளி விசாரிக்கும் வகையில் பெயரளவிலான கண்காணிப்பைக் கூட அடியோடு ஒழித்துக் கட்டியுள்ளது.

 

 

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தமானது காடுகள் என்ற சொல்லுக்கான வரையறையே அடியோடு மாற்றியது. அதன் மூலம் காடுகளில் உள்ள பழங்குடிகளை முற்றாகத் துடைத்தெறிந்து முதலாளிகள் இதுவரை நுழைய இயலாத பல்வேறு காப்புக்காடுகள், சூழலியல் கட்டமைவின் இதயமாக விளங்கும் பகுதிகளைக் காடுகளே அல்ல என்று கூறி கட்டற்ற சுரண்டலை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது. காவி பாசிசக் கும்பல் மணிப்பூரில் கலவரத்தைத் தூண்டிவிட்டு குக்கி பழங்குடி மக்களை வெளியேற்றத் துடித்து வருவதே இதற்கான சிறந்த சாட்சி.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, சூழலியல் பாதுகாப்பு மக்களின் கருத்துக் கேட்பு இவையெல்லாம் காகிதத்தில்தான் இருக்கின்றன என்பதை மாதவ் காட்கில் வேதனையோடு பின்வருமாறு கூறுகிறார் :

ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன் அதன் “சூழலியல் தாக்க மதிப்பீடு பற்றிய ஆவணங்கள் உண்மையில் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், புனைவுகளின் அடிப்படையில் எழுதப்படுகின்றன. அதிகாரிகள் எழுதித் தரும் இப்புனைகதைகள் எவ்விதக் கேள்விகளுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நாம் ஒரு சட்டத் தளைகளற்ற சமூகத்தில் (Lawless) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசுகள் சட்ட விதிமுறைகளை எவ்விதத்திலும் மதிப்பதே இல்லை”[1]

சுருங்கக் கூறினால், காங்கிரசு ஆட்சிக் காலத்தில் எவையெல்லாம் திருட்டுத் தனமாகவும் சட்டவிரோதமாகவும் செய்யப்பட்டு வந்தனவோ, அவற்றையெல்லாம் சட்டப் பூர்வமாக்கும் வகையில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. புவி வெப்பமாதல் என்பது உண்மையில் ஒரு பிரச்சனையல்ல; மாறாக, நமக்கு வயதாவதால் குளிரையும் வெய்யிலையும் தாங்கும் திறனை இழந்துவருகிறோம் என்று மோடி ஒரு மாநாட்டில் பேசியது நினைவிருக்கலாம். இதேபோல பாசிசக் கோமாளி டிரம்பும் பேசியுள்ளார். இவை தற்செயலானவையோ, முட்டாள் தனமானவையோ மட்டுமல்ல, பாசிஸ்டுகள் சுற்றுச் சூழல் பிரச்சனையை உண்மையில் இப்படித்தான் பார்க்கிறார்கள்.

நமது நாட்டின் இயற்கை வளங்களை வெட்டி துரித கதியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்டவும், குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் நமது நாட்டைப் பாலைவனமாகவும் சுடுகாடாகவும் மாற்றவும் மோடி அரசு பாரத் மாலா பாரியோஜனா, சாகர்மாலா என்ற திட்டங்களை மூர்க்கமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. நாடுமுழுவதும் உள்ள சாலைகளையும் துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் சிறப்புப் பொருளாதார மணடலங்களையும் குறுக்கும் நெடுக்குமாக இணைத்து இந்திய நாட்டை மொட்டையடிக்கும் திருப்பணி அசுர வேகத்தில் நடந்தேறி வருகிறது.

ஒன்றிய மோடி அரசு மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களின் அரசுகளும் ‘கேரளமாடல்’ ‘திராவிட மாடல்’ ‘மேற்குவங்க மாடல்’ என்ற பெயரில் இதே கொள்கையைத் தான் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

கேரளத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட்து போல 2018-க்குப் பிறகு தொடர் பேரிடர்கள் நடக்கும் காலத்தில் காடழிப்பு, சுரங்கப்பாதைப் பணிகள் மேன்மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தின் விழிஞ்சம் பகுதியில் 5,000 மீனவர்களை விரட்டியடித்து கடல் வளத்தை நாசமாக்கி அதானி துறைமுகம் கட்டிக் கொள்ள அனுமதியளித்துள்ளது, சி.பி.எம். அரசு.

அதேபோல தமிழகத்தில் கல்வராயன் மலை, சேர்வராயன் மலையில் உள்ளிட்ட பல்வேறு மலைகளில் உள்ள இரும்பு, மாக்னீசு, பாக்சைட் ஆகியவற்றை ஜிண்டால், டாடா உள்ளிட்ட முதலாளிகள் வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபமீட்டுவதற்கான 8 வழிச் சாலைத் திட்டப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு. இத்திட்டம் மலைகளை மண்ணோடு மண்ணாக்குவது மட்டுமின்றி, 277 கி.மீ நீள சாலைக்கான மணல் காவிரி, செய்யாறு, பாலாறு, தாமிரபரணி நதிகளில் இருந்து தான் அள்ளப்படவிருக்கிறது. தமிழகத்தின் நீராதாரத்துக்கான தாயாகத் திகழ்பவையும் ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பவையுமான இந்நதிகள் சாக்கடையாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதனால், கிட்டத்தட்ட தமிழகத்தின் சரிபாதி பகுதியில் நீர்த் தட்டுப்பாடும் வறட்சியும் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாகச் சாகும் அபாயம் உள்ளது.

இத்திட்டத்தினால் ஏற்படும் சூழலியல் மாசுபாடுகள், பாதிப்புகள் பற்றிய ஆய்வுகளோ, மக்களிடம் கருத்துக் கேட்பதோ, சமூக ரீதியில் மக்கள் பாதிக்கப்படுவது குறித்த ஆய்வுகளோ (EIA, SIA) பெயரளவில் கூட நடத்தத் தேவையில்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இரண்டு மாதங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இவையனைத்தும் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகளை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது. ஏற்கனவே இமயமலைத் தொடர் மாநிலங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் மாநிலங்களிலும் பெருவெள்ளமும் நிலச் சரிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது ‘புதிய இயல்பு நிலையாக’ மாறி வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் தீவிரம் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்பதை கூறத் தேவையில்லை.

இத்தகைய மறுகாலனியாக்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்தவே கடுமையான ஒடுக்குமுறைச் சட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் மக்கள் மீது ஏவுகின்றன. குறிப்பாக, மோடி அரசு தான் பொறுப்பேற்றதுமே ‘நகசல் எதிர்ப்பு’ பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியது. காட்டு வேட்டை என்ற பெயரில் மாவோயிஸ்டுகளையும் பழங்குடிகளையும் மன்மோகன் – சிதம்பரம் கும்பல் தீவிரப்படுத்திய போதும், நாடுமுழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்புக்கு அது பணிய வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் மோடி அரசோ சட்டிஸ்கர், ஜார்கண்டு, கேரளம், மகாராஷ்டிரம் என ஆண்டுக்கு 20, 30 பேரை மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சுட்டுக் கொல்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்களாவர். நாட்டையும் இயற்கையையும் மக்களையும் நேசிக்கும் தேசபக்தர்களான நக்சல்பாரிகளை ‘தேசவிரோதிகளாக’ எல்லாக் கட்சிகளும் அரசுகளும் சித்தரிக்கின்றன. அதேவேளையில் நாட்டை கூறுபோட்டு ஏற்றுமதி செய்யும் தேசவிரோதச் செயலையே ‘தேசபக்தி, தேசத்தின் வளர்ச்சி’ என்று பீற்றிக் கொள்கின்றன.

மக்களாகிய நாம் மோடி கும்பல் உள்ளிட்ட சகல ஓட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் ‘தேச விரோதிகள்’ என்று பிரகடனம் செய்ய வேண்டும்.

மாவோயிஸ்டுகளையும் பழங்குடிகளையும் காட்டில் இருந்து துப்புறவாகத் துடைத்தெறிவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள மோடி-ஷா கும்பல் முதலாளிகளின் சுரண்டலுக்கிருந்த மிகப்பெரிய தடையை உடைத்துவிட்டதாப் பீற்றிக் கொள்கிறது. பழங்குடியினருக்காகப் போராடிய, குரல்கொடுத்த சுதா பரத்வாஜ், வரவரராவ், ஸ்டேன்சுவாமி, அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டே போன்ற அறிவுத்துறையினர், செயல்பாட்டாளர்களின் மீது ஊபா உள்ளிட்ட கடுமையான கறுப்புச் சட்டங்களை ஏவி கடுமையாக மோடி அரசு ஒடுக்கி வருகிறது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மூன்று குற்றவியல் சட்டங்களையும் திருத்தி போராடும் மக்கள் யாரையும் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கவும் ஒடுக்கவும் வழிவகை செய்துள்ளது.

இத்தகைய பாசிச அடக்குமுறைச் சட்டங்கள், நடவடிக்கைகளெல்லாம் ஏகாதிபத்திய, இந்தியத் தரகு முதலாளிகளின் மறுகாலனியாக்கச் சுரண்டல் நலனுக்காகவே கொண்டுவரப்படுகின்றன. மோடி அரசு மேற்கொள்ளும் ஒரு சில பாசிச நடவடிக்கைகளில் பிற கட்சியினர் வேறுபட்டாலும், அடிப்படையில் எல்லாக் கட்சியினரும் ஏற்றுக் கொண்டிருக்கும் பொருளாதாரக் கொள்கை என்பது இதுதான். எனவே, தவிர்க்கவியலாமல் தமது மாநிலங்களிலும் இத்தகைய அடக்குமுறைகளை அனைத்து அரசுகளும் கட்சிகளும் மேற்கொள்கின்றன.

 

மறுகாலனியாக்கத்தைத் தூக்கியெறிவோம்!
இயற்கையையும் மக்களையும் அழிவிலிருந்து மீட்க,
சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயக
அரசியல், சமூக, பொருளாதார அமைப்பைக் கட்டியெழுப்புவோம்!

அவ்வாறாயின் இயற்கையின் மீது மனிதகுலம் எவ்வித வினையாற்றவும் கூடாதா; இயற்கையை பாதிக்காமல் எவ்வாறு வாழ முடியும்; இவையெல்லாம் தேசத்தின் வளர்ச்சிக்கானவைதானே; இதனால் வேலைவாய்ப்பு பெருகுகிறதே – என்கிற கேள்விகள் எழலாம்.

முதலாவதாக, மேலே குறிப்பிட்ட விவரங்களில் இருந்தே நமது நாட்டில் வெட்டியெடுக்கும் கனிம வளங்களில் ஆகப் பெரும்பாலானவை சொந்த நாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை; மாறாக, அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முதலாளிகள் கொள்ளை இலாபமீட்டவதே நடந்தேறுகிறது என்பது விளங்கும். சொந்த நாட்டில் இக்கனிமங்கள், கற்கள், கிராணைட்டுகளை நுகர்பவர்களில் கூட ஆகப் பெரும்பாலானோர் சாதாரண ஏழை உழைக்கும் மக்களல்ல; ஐந்து, நான்கு, மூன்று நட்சத்திர விடுதிகளை நடத்துபவர்கள், அதில் தங்கும் பணக்காரர்களே ஆவர்.

இரண்டாவதாக, வளர்ச்சி என்பதும் தேசம் என்பதும் அருவமான ஒன்றல்ல; இந்த தேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களையும் நேசிப்பதும் பாதுகாப்பதுமே உண்மையான உண்மையான தேசபக்தியாகும். இந்த நாட்டின் இயற்கை வளங்கள் இந்த நாட்டில் உள்ள கோடிக் கணக்கான மக்களின் வாழ்வை முன்னேற்றவும் வளர்க்கவும் பயன்படுத்தப்பட வேண்டுமன்றி, அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்களும், அவர்களின் பாதந்தாங்கிகளான தரகுமுதலாளிகளும் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக அல்ல.

மூன்றாவதாக, இத்தகைய சுரங்கங்கள், குவாரிகள், மேற்கூறிய தொழில்கள் மக்களது வாழ்வில் எவ்வித வளர்ச்சியையும் கொடுத்ததில்லை; வேலைவாய்ப்பையும் கொடுத்ததில்லை; சொல்லப்போனால் இருந்த வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்புகளையும் பறித்தெடுத்து மக்களை ஓட்டாண்டியாக்கியுள்ளது. பொதுவாக தனியார்மயம் என்ற மறுகாலனியக்கம் வேலைவாய்ப்பற்ற ஜி.டி.பி. வளர்ச்சியைத்தான் கொண்டுவந்துள்ளது என்பது மட்டுமல்ல; குறிப்பாக, மேற்கூறிய நிறுவனங்கள் தொழிலாளிகளை கொத்தடிமைகளை விடவும் கேவலமாகத்தான் நடத்துகிறார்கள். எனவே, மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு என்று ஒன்றிய, மாநில அரசுகள் பேசுவது பச்சையான பொய்யாகும்.

இக்கொள்கையை தேசத்தின் வளர்ச்சி, தேசத்தின் முன்னேற்றம் என்று பேசுவதெல்லாம் பச்சையான அயோக்கியத்தனமானதாகும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஆளும் வர்க்கங்களும் அரசும் செய்துவரும் இப்பொய்ப் பிரச்சாரத்தை அரசியல் அரங்கில் தாக்கித் தனிமைப்படுத்த வேண்டும். நமது தேசத்தின் நலனுக்கு நேரெதிரான தேசவிரோதக் கொள்கைதான் மறுகாலனியாக்கம். இலாபத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும் ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பின் கோர வடிவம்தான் மறுகாலனியாக்கம். அக்கொள்கைதான் நமது நாட்டைக் கிட்டத்தட்ட சுடுகாடாகவும் பாலைவனமாகவும் மாற்றியுள்ளது.

எனவே, தொடர் பேரிடர்களும் பேரழிவுகளும் இத்தகைய அரசியல், சமூகப் பொருளாதாரப் பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும்; வெறும் சூழலியல் கண்ணோட்டத்திலிருந்தல்ல, மறுகாலனியாக்க எதிர்ப்பு என்ற அரசியல் கண்ணோட்டத்திலிருந்து காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டும்.

இயற்கையை மற்ற உயிர்களெல்லாம் அப்படியே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டும்தான் அதன்மீது தன்னுணர்வோடு வினையாற்றுகிறான். இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றால் மனித குலமே உருவாகியிருக்காது என்பது முற்றிலும் உண்மையே. ஆனால், முதலாளித்துவமானது குறிப்பாக மறுகாலனியாக்கமானது இயற்கையை வரைமுறையின்றிச் சிதைத்து அதற்கும் மனிதகுலத்துக்குமான சமநிலையை அறுத்தெறிந்துள்ளது. இன்னும் சில தலைமுறைகளுக்குப் பின் புவிப்பரப்பில் மனிதகுலமும் உயிரினங்களும் இருக்குமா என்று சூழலியளார்கள் எண்ணுமளவு அதை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

இயற்கையுடனான மனித உறவை மீட்டெடுத்து, முதலாளித்துவம் உருவாக்கியுள்ள சூழலியல் சீரழிவையெல்லாம் சரிசெய்ய சோசலிச சமுதாயத்தால் மட்டுமே முடியும். இலாபத்துக்கான உற்பத்தி என்பதை தேவைக்கான உற்பத்தியாக மாற்றியமைக்கும் சோசலிச சமூக அமைப்பு மட்டுமே இந்த சமநிலையை மீட்டெடுப்பதற்கான ஒரே மருந்து. அத்தகைய சோசலிச சமூகத்தின் கூறுகளை உள்ளடக்கிய புதிய ஜனநாயக அரசியல், சமூக, பொருளாதார அமைப்பைக் கட்டியெழுப்புவதே நம்முன்னுள்ள ஒரே தீர்வாகும். மறுகாலனியாக்கக் கொள்கையை முற்றாகத் தலைமுழுகி, தேசத்தின் ஆகப் பெரும்பாலான மக்களின் நலனைப் பிரதிபலிக்கும் புதிய ஜனநாயகப் பொருளாதார அமைப்பைக் கட்டியெழுப்பாமல் நாம் இச்சுழலியல் சீர்கேட்டைச் சரிசெய்வதிலும் மக்களையும் இயற்கையையும் அழிவிலிருந்து மீட்டெடுப்பதிலும் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது. அத்தகைய பொருளாதார அமைப்பை அரசியல் அதிகாரத்துக்கான புரட்சியின்றி கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

***

  • ரவி

 

குறிப்புகள்

[1] தி இந்து யூடியூபில் வெளியான மேற்கூறிய ஆவணப்படத்துக்கு காட்கில் அளித்த பேட்டியில்..

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன