வங்கதேசம் – ஏகாதிபத்தியத்தின் ஆசியுடன் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?
கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பிக்க, எரியும் நெருப்பில் விழலாமா?

“தனக்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த சதி செய்கிறது என்பது ஷேக் ஹசீனாவிற்கும் தெரிந்துதான் இருந்தது. அதன் காரணமாகத்தான் அமெரிக்காவின் கையாளான முகமது யூனுஸை கைது செய்து சிறையில் அடைக்கும் ஏற்பாட்டை 8 மாதங்களுக்கு முன்னரே அவர் முன்னெடுத்தார். முகமது யூனுஸின் மீது தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியது உள்ளிட்ட 198 வழக்குகள் ஹசீனாவின் அரசினால் பதியப்பட்டன.”

 

வங்கதேசத்தில் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த பாசிஸ்டான ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். தற்போது வங்கதேசத்தில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் விசுவாசியான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மாணவர் எழுச்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என ஒருசாரர் ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

15 ஆண்டுகளாக தொடர்ந்து வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசினா, இந்தக் காலகட்டத்தில் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நிலைநிறுத்திக் கொண்டார். தனது ஆட்சியில், சர்வதேச நிதிமூலதன கும்பல் வங்கதேசத்து தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு பக்கபலமாக இருத்து ஆதரித்தார். தங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்த போதெல்லாம் போலீசையும், இராணுவத்தையும் இறக்கிவிட்டு அவற்றைக் கடுமையாக ஒடுக்கினார்.

ஷேக் ஹசீனாவின் பாசிச ஒடுக்குமுறைக்கு ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போராட்டத்தை அவர் ஒடுக்கியது ஒரு சோற்றுப் பதம். சென்ற ஆண்டு இறுதியில் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடிய போது பல தொழிலாளர்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். பலர் காணாமலடிக்கப்பட்டனர். பல தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டு நிரந்தரமாக சிறையிலடைக்கப்பட்டனர். இது தொழிலாளர்கள் மத்தியில் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியைத் தோற்றுவித்தது.

அதுமட்டுமன்றி நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பணவீக்கம் அதிகரித்து விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்த அதே சமயம் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து மக்களைப் பெரும் துயரில் தள்ளியது. வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் அதிகரித்ததனால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் அதிருப்தியையும் அவர் சம்பாதித்தார்.

 

இந்த ஆண்டின் தொடக்கதில் நடந்த தேர்தலில் தான் வெற்றிபெறுவது சாத்தியமில்லை எனத் தெரிந்த பிறகு, வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழிகள் அனைத்தையும் பயன்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைப்பது முதல் தேர்தலை சீர்குலைக்கும் அத்தனை வேலைகளிலும் அவரது அவாமி லீக் கட்சி ஈடுபட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்துவிட, தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் பிரதமாரானார் ஹசீனா. இது ஏற்கெனவே அவர்மீதிருந்த அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த மாதம் முதல் அங்கு நடந்து வரும் மாணவர் போராட்டம் அமைந்தது. வங்கதேசத்து விடுதலைக்காக போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்த மாணவர் போராட்டத்தை, தேச துரோகிகள் பாகிஸ்தான் கைக்கூலிகளின் போராட்டம் என பாசிஸ்டுகளுக்கே உரித்தான திமிறுடன் விமர்சனம் செய்தார். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய இந்த மாணவர் போராட்டம் ஒரு கட்டத்தில் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கானதாக மாறியது.

உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்த பிறகும் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என மாணவர் பிரதிநிதிகள் அறிவித்தனர். அத்துடன் சென்ற திங்களன்று பிரதமரின் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அறிவித்து, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகரில் குவிந்தனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் ஒத்துழைக்காது என அறிந்து கொண்ட ஷேக் ஹசீனா உடனடியாக வங்கதேசத்திலிருந்து விமானம் மூலமாகத் தப்பித்து இந்தியாவிடம் தஞ்சமடைந்துள்ளார். கூடிய விரைவில் இங்கிலாந்தில் அடைக்கலம் கோரவிருப்பதாகவும் தெரிகிறது.

மாணவர் போராட்டத்தையும், ஹசீனாவின் பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான வங்கதேசத்து மக்களின் மனநிலையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளும் இராணுவமும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியிருக்கின்றன. மாணவர் போராட்டத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக அறிவித்ததுடன், இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யும் படி இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு பிரதானமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையான முகமது யூனுஸ் இடைக்கால அரசின் பிரதமராக அறிவிக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று. சர்வதேச நிதிமூலதன கும்பல்கள் வங்கதேசம் போன்ற மூன்றாம் உலக நாட்டின் ஏழை எளிய மக்களிடம் வட்டிக்கு விட்டு கொள்ளையடிப்பதற்கான நுண்கடன் திட்டங்களை உருவாக்கியதுடன், அதற்கென கிராமின் வங்கி என ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியும் காட்டியிருக்கிறார். முகமது யூனுஸின் இத்தைகய ஏகாதிபத்தியச் சேவையைப் பாராட்டியே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

 

அமெரிக்காவின் தூண்டுதலில் வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. 1975ம் ஆண்டு வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படுபவரும், ஹசினாவின் தந்தையுமான ஷேக் முஜ்பூர் ரகுமான், அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் தூண்டுதலின் பேரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பின் போது அவரது மாளிகையிலேயே குடும்பத்துடன் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சிஐஏவின் ஆவணங்கள் மக்களின் பார்வைக்காக வெளிடப்பட்ட போது அமெரிக்காவின் இந்தச் சதிச் செயல் அம்பலமானது. அதற்கு பிறகும் கூட இரண்டுமுறை அமெரிக்காவின் ஆசியுடன் வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது.

வங்கதேச அரசியலில் பல்வேறு ஏகாதிபத்தியங்களின், அண்டை நாடுகளின் தாக்கம் என்பது தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. புவியியல் ரீதியில் வங்கக்கடல் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதாலும், ஏகாதிபத்திய உற்பத்திச் சங்கிலியில் ஆயத்த ஆடை உற்பத்தியின் பிரதான கண்ணி என்ற வகையிலும் வங்கதேசத்துடனான உறவு என்பது அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது. அதே சமயம் ஆசிய பசிபிக் பகுதியில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ள போட்டியிட்டு வரும் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலும் வங்கதேசத்தை தங்கள் பக்கம் வைத்திருப்பது என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாகும். இந்த மூன்று நாடுகளையும் தாண்டி ரசியாவும், அமெரிக்காவின் செல்வாக்கின் கீழ் வங்கதேசம் முற்றிலுமாக சென்றுவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா பதவிக்கு வந்த போது அந்நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. இந்தியாவுடனும், சீனாவுடனுமான உறவிலும் ஒரு சமநிலையை அடைந்திட அது முயற்சித்து வந்தது. ஆனால் போகப் போக ஹசீனாவினால் அந்த சமநிலையைத் தொடர முடியவில்லை. ஆசிய பசிபிக் பகுதியில் வலுப்பெற்று வந்த இந்தியா சீனா இடையிலான பிராந்திய மேலாதிக்கத்திற்கான போட்டி வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கத்தைச் செலுத்தின.

அமெரிக்காவிற்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் ஒரு இராணுவதளம் அமைத்திட அது வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் செயின்ட் மார்டின் தீவினை கேட்ட போது ஷேக் ஹசீனா அதனை மறுத்துவிட்டார். இதற்கு சீனாவுடனான வர்த்தக உறவு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. சீனாவிடமிருந்து கடந்த பத்து ஆண்டுகளில் பெரும் அளவிலான ஆயுதங்களை வங்கதேசம் இறக்குமதி செய்துள்ளது. அது மட்டுமன்றி வங்கதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு சீனா கடனுதவி அளித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து பெரும் சிக்கலில் வங்கதேசம் மாட்டிக்கொண்ட போது அந்நாடு சீனாவிடம் 500 கோடி டாலர் தொகையை மிகக் குறைந்த வட்டிக்குக் கடனாக கேட்டுப் பெற்றது. இவை எல்லாம் ஷேக் ஹசீனாவின் அரசின் மீது அமெரிக்காவிற்கு கடும் அதிருப்தியைத் தோற்றுவித்தது.

 

 

தனக்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த சதி செய்கிறது என்பது ஷேக் ஹசீனாவிற்கும் தெரிந்துதான் இருந்தது. அதன் காரணமாகத்தான் அமெரிக்காவின் கையாளான முகமது யூனுஸை கைது செய்து சிறையில் அடைக்கும் ஏற்பாட்டை 8 மாதங்களுக்கு முன்னரே அவர் முன்னெடுத்தார். முகமது யூனுஸின் மீது தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியது உள்ளிட்ட 198 வழக்குகள் ஹசீனாவின் அரசினால் பதியப்பட்டன. அதில் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறிய வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேசமயம் யூனுஸ் மீதான நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேசிய அளவில் உருவான கடும் அழுத்தத்தின் காரணமாக அவரைக் கைது செய்யாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல அனுமதித்தார் ஹசீனா.

கடந்த மே மாதத்தில் செயிண்ட் மார்டின் தீவுகளை ஒட்டிய கடற்பிராந்தியத்திற்குள் அத்து மீறி நுழைந்த மியான்மர் இராணுவம், தாக்குதல் தொடுத்ததுடன், அந்த தீவை வங்கதேசத்திடமிருந்து முற்றிலுமாகப் பிரித்தது. அப்போது தனக்கெதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும், தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலக நாடுகள் முயற்சிப்பதாகவும் ஹசீனா பகிரங்கமாகவே அறிவித்தார். செயிண்ட் மார்டின் தீவுகள் விவகாரத்தில் விட்டுக் கொடுத்தால் நடந்து முடிந்த தேர்தலையும், ஹசீனா பிரதமரானதையும் அங்கீகரிப்பதாக அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் பேரம் பேசியதாக அவரது அறிக்கையில் மே மாதத்திலேயே அவர் கூறியிருக்கிறார்.

இது நடந்த அடுத்த மாதத்திலேயே மாணவர் போராட்டம் தொடங்கியது. சரியான தலைமையின்றி குறுகிய நலனுக்கான கோரிக்கைகளுடன் நடந்த மாணவர் போராட்டத்திற்குள் ஊடுருவுவது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகச் சுலபமான ஒன்று. இது போன்ற எண்ணற்ற போராடங்களுக்குள் ஊடுருவி தனக்குத் தேவையானபடிக்கு ஆட்சியைக் கவிழ்ப்பதும், தனக்கு நெருக்கமானவர்களை ஆட்சியில் அமர வைப்பதையும் அமெரிக்கா இதற்கு முன்னர் பல நாடுகளில், குறிப்பாக லத்தின் அமெரிக்க நாடுகள் பலவற்றில் அரங்கேற்றியிருக்கிறது.

இன்றைக்கு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரில் இறங்கியிருப்பதற்கு, 2014ம் ஆண்டும் உக்ரைனில் அமெரிக்கா நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புதான் முதல் படியாக அமைந்தது என்பதை நாம் இங்கே பொறுத்திப் பார்க்க வேண்டும். அன்றைய உக்ரைன் அதிபருக்கு எதிரான மக்களின் போராட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கவிழ்த்ததுதான், 2019ம் ஆண்டு அமெரிக்காவின் கையாளானா ஜெலன்ஸ்கி அதிபராக வழிவகுத்தது.

இன்றைக்கு வங்கதேசத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும், இதற்காக அரசியலமைப்புக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என இடைக்கால அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது போன்ற மாணவர் தலைவர்களையும், அவர்களது கோரிக்கைகளையும் எப்படிக் கையாள வேண்டும் எனவும், எப்படி வழிக்குக் கொண்டுவருவது எனவும் அமெரிக்காவிற்கு நன்றாகத் தெரியும். எனவே பாசிஸ்டின் ஆட்சியில் இருந்து தப்பித்துவிட்டதாக வங்கதேசத்து மக்கள் ஆசுவாசமடைய முடியாது, ஏனெனில் முகமது யூனுஸ் போன்ற மேற்குலக விசுவாசிகள் நாட்டை ஏகாதிபத்தியங்களின் காலனியாக மாற்றும் போக்கில் இழுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது.

  • அறிவு

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. பொதுவுடைமை கருத்துக்களை பரவ செய்வதும் அதன் அடிப்படையில் போராட்டங்களை கட்டியமைப்பதும் தான் சரியான முடிவாக இருக்கும்