பட்ஜெட் : வேலைவாய்ப்பு எனும் மாய்மாலம்

நூறாண்டுகளுக்கு முன்பே மக்களை வாழவைக்க வழியின்றி மதிப்பிழந்துவிட்ட முதலாளித்துவ பொருளாதாரக் கருத்துக்களை மோடியும், அவரது பொருளாதார புலிகளும் பட்ஜெட் என்ற பெயரில் வாந்தி எடுத்துள்ளனர். அதையே நல்லதென்று பத்திரிக்கை ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஊளையிடுகின்றன. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில் வேலைவாய்பை உருவாக்குவதற்கான சீரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஏனென்றால் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே முதலாளிகள் குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டி இலாபத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

நிதியமைச்சர் நிர்மலா சுமார் 4 கோடி இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காக ஆழ்ந்து சிந்தித்து ரூ 2 இலட்சம் கோடி நிதியை ஒதுக்கி, இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளதாக சங்கப் பரிவாரங்கள் பெருமையடித்து வருகிறார்கள்.

அமைப்பு சார் துறையில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மூன்று திட்டங்களையும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக இரண்டு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

இந்த ஐந்து திட்டங்களின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை நினைவாக்கிட முடியும் என்று நம்பச் சொல்கிறார்கள். வருடத்திற்கு  இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்பை உருவாக்கித் தருவதாக நம்பச்செய்து பின்னர் பக்கோடா போட்டு பிழைப்பு நடத்த சொன்னதை இளைஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமாட்டார்கள். நிற்க, இது முதலாளிகளையும் முதலாளித்துவத்தையும் பாதுகாப்பதற்கான பட்ஜெட் என்பதில் எல்முனையளவுகூட சந்தேகமில்லை என்பதை அதன் அறிவிப்புகளில் இருந்தே காணமுடியும்.

நிதியமைச்சர் நிர்மலாவின் வேலை உருவாக்கத்திற்கான பட்ஜெட் அறிவிப்பு:

  1. அதிகபட்ச மாத ஊதியம் ரூ 15,000 என நிர்ணயிக்கப்படும். முதல் முறையாக வேலையில் சேரும் 2.1 கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ 5,000 என 3 மாதத்திற்கு ரூ 15000 வழங்கப்படும்.
  2. புதிதாக வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ 3000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 72000 என நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
  3. குறிப்பாக உற்பத்தி துறையில் முதன் முறையாக வேலைக்கு எடுக்கும் 30 இலட்சம் இளைஞர்களுக்காக  ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  4. ஆண்டுக்கு 20 இலட்சம் பேர் வீதம், ஒரு கோடி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 500 கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி கொடுக்கப்படும். இதற்காக மாதம் ரூ 5000 என்ற அடிப்படையில் 12 மாதங்கள் ஊக்கத்தொகை மற்றும் ஒரு முறை உதவித்தொகையாக ரு 6000 வழங்கப்படும்.
  5. ஆண்டுக்கு 4 இலட்சம் இளைஞர்கள் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு 20 இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் 1000 தொழிற்பயிற்சி நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்.

முதலாளிகளுக்கு ஊக்கத்தொகையும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும்  கொடுத்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்குமா?

புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக ஊக்கத்தொகையை ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும்  அரசு கொடுக்கும் போது, முதலாளிகள் அவர்கள் கையிலிருந்து  ஊழியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை  தாமாகவே குறைத்து விடுவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

புதிய வேலைவாய்ப்பிற்காக  முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் திட்டத்தின் பின்னணி என்னவென்றால், முதலாளிகளால் வழங்கப்படும் ஊதியம் குறைவாக இருந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறது முதலாளித்துவ பொருளாதாரம்.

ஆனால் முதலாளிகள் புதிதாக முதலீடு செய்வதில்லை, எனவே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க சாத்தியமில்லை. இந்தநிலையில் அரசு அளிக்கும் ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொண்டு இலாபம் அடைவதுதான் இத்திட்டங்களின் மூலம்  நடந்தேறும்.

இத்தகைய திட்டங்களை தீட்டுவதற்குப் பின்னணியில் ’சே’ எனும் பிரஞ்சு பொருளாதார நிபுணரின் சந்தை விதி உள்ளது. அதாவது புளித்துப் போன முதலாளித்துவப் பொருளாதார விதியான ”வழங்கலே அதன் சொந்த தேவையை உருவாக்கும்; தேவையின் பற்றாக்குறை எப்போதும் இல்லை” என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டின் இந்த விதியை மார்க்ஸ் மட்டுமில்லை முதலாளித்துவ பொருளாதாரவாதியான கீன்ஸ்சும் தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் பெருமந்தத்தின் போது “சே“-யின் விதியை அடிப்படையாக கொண்டு ரூஸ்வெல்ட்டுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹெர்பர்ட் ஹூவர் என்பவர் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக  முதலாளித்துவ நிறுவங்கள் கொடுத்துவந்த  ஊதியத்தின் அளவைக் குறைக்கச் சொன்னார். இருப்பினும்  எந்த பயனும் இல்லை.

நூறாண்டுகளுக்கு முன்பே மக்களை வாழவைக்க வழியின்றி மதிப்பிழந்துவிட்ட முதலாளித்துவ பொருளாதாரக் கருத்துக்களை மோடியும், அவரது பொருளாதார புலிகளும் பட்ஜெட் என்ற பெயரில் வாந்தி எடுத்துள்ளனர். அதையே நல்லதென்று பத்திரிக்கை ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஊளையிடுகின்றன. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில் வேலைவாய்பை உருவாக்குவதற்கான சீரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஏனென்றால் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே முதலாளிகள் குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டி இலாபத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். கூடுதலாக வேலை வாய்ப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு கொடுக்கும் ஊக்கத்தொகையானது முதலீடு இல்லாமல் அவர்களின் கைகளுக்கு பணத்தைக் கொண்டு போய் சேர்ப்பதற்கான ஏற்பாடே இந்த பட்ஜெட் அறிவிப்புகள்.

அதேபோல திறன் மேம்பாட்டு பயிற்சி என்பதும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு பகுதியே ஆகும். வேலையின்மை என்பது திறமையில்லாததன் விளைவே; வேலையில்லாதவர்களுக்கு போதுமான வேலைகள் உள்ளன; ஒரே பிரச்சினை என்னவென்றால் வேலையில்லாதவர்களிடம் இருக்கும் திறனை விட  வேலைவாய்ப்பு அதிக திறனை கோருகிறது என்கிறது முதலாளித்துவ பொருளாதாரம்.

2014-ல் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது மோடி அரசு.  ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் முடிந்த நிலையில் வேலை வாய்ப்பு எங்கே என்று கேட்டால் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என்று சரடு விடுகிறது.

மோடி அரசு கொண்டு வந்த  திறன் மேம்பாடு (skill india) திட்டத்தின் மூலம் பயிற்சி  பெற்ற இளைஞர்களுக்கு இன்றுவரை எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

மோடி அரசு 2016-ம் ஆண்டு திறன் மேம்பாட்டிற்காக ஒரு புதிய அமைச்சகத்தையும், புதிய அமைச்சரையும் உருவாக்கியது.  அவர்கள் கொண்டு வந்த பயிற்சி மேம்பாடுத் திட்டத்தின் மூலம் 2016 முதல் 2022 வரை பயிற்சி பெற்றவர்களில் வெறும் 18 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்திருக்கிறது.

தகுதியுள்ள, திறனுள்ள ஊழியர்களை உருவாக்கிவிட்டால், அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுமா? கார்ப்பரேட் முதலாளிகள் இளைஞர்களின் தகுதியை பார்த்து ஆலையை தொடங்குவார்களா?    அடிப்படையில் நேர்மையற்ற திட்டத்தை கொண்டு தற்போதும் திறன் மேம்பாடு பயிற்சி என்கிற போர்வையில் வேலை வாய்ப்பு பெருக்கம் என இளைஞர்களை நம்பச் சொல்கிறார்கள். இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் எந்த ஒரு முதலாளியும் வேலை வாய்ப்பு எனும் நல்ல நோக்கத்தோடு பயிற்சி அளிப்பதில்லை. இளம் பயிற்சி தொழிலாளர்களை பயன்படுத்தி எவ்வாறு  ஒட்டச் சுரண்டலாம்  என்பதன் அடிப்படையிலே இந்த திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பயிற்சியாளராக  ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் சேர்பவர்கள், பயிற்சிக் காலம் முடிந்த பின்னரும் முறையான நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களாக உழலும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை நிரந்தரமாக்கி, குறைந்த கூலிக்கு வேலை செய்யும் நிரந்தரக் கொத்தடிமைகளாக இளைஞர்களை மாற்றுவதே மோடி கும்பலின் நோக்கமாக உள்ளது.

இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான 500 கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும்முதலாளிகளுக்கு சொந்தமானதாகத்தான் இருக்கப் போகிறது. உள்நாட்டு சிறு குறு நிறுவனங்கள் ஒருபோதும் இந்த வாய்ப்பை பெறப்போவதில்லை. இப்பெருநிறுவனங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலமே பெரும்பாலான வேலைகள் செய்து முடிக்கப்படுகின்றன. இதனால் பெருநிறுவனங்களில் தொழில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வரும்நிலையில் தானியங்கி இயந்திரங்களின் வேகத்துக்கு ஏற்ப வேலை செய்வதற்குப் பயிற்சியாளராக படித்து முடித்து வரும் மாணவர்கள் தான் இந்நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள் செயய வேண்டிய வேலைகளை இத்தகையப் பயிற்சியாளர்களை கொண்டு  வேலை வாங்குவதையே வேலை வாய்ப்புக்கான திட்டமாக மோடி  கும்பல் அறிவித்துள்ளது.

 

ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்களை மதிக்காத முதலாளிகள், இனி எவ்விதத் தயக்கமும் இன்றி பயிற்சி பெற்ற இளம் தொழிலாளர்களின் மீது சுரண்டலையும் அடக்குமுறையையும் தீவிரப்படுத்தி பெரும் இலாபத்தை அடைவார்கள் என்பதே உண்மை.

ஐந்து ஆண்டுகளில் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோடி அரசு செலவு செய்யத் தயாராக இருக்கிறது எனில் இந்நிதியைக் கொண்டு ஏற்ககெனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், புதிய பணியிடங்களை உருவாக்கவும் முடியும்.  மாறாக தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை தான் இந்த பட்ஜெட்டின் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

மோடி கும்பல் தீவிரமாக பின்பற்றி வரும் தாராளமய தனியார்மய கொள்கையானது பல நாடுகளில் பெருந்தோல்வியிலும் பேரழிவிலும்தான் முடிந்துள்ளது. இக்கொள்கை நமது நாட்டிலும் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியைத்தான் உருவாக்கியுள்ளது என்பதை சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் காவலர் பதவிக்கான 60,000 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 47 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பதிலிருந்தே இக்கொள்கை உருவாக்கி இருக்கும் வேலை வாய்ப்பின் இலட்சணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

நவீன தாராளமயக் கொள்கைகளை பின்பற்றுவதுதான் அரசின் கொள்கையாக மாறிவிட்டபிறகு வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, விவசாயத்தில் தன்னிறைவு என்று பேசுவதெல்லாம் வெற்றுக்கூச்சலின்றி வேறொன்றுமில்லை. ஆகப்பெரும் செல்வந்தர்களையும், ஆகப்பெரும் ஏழைகளையும் உருவாக்கும் இக்கொள்ளை நோயை பட்ஜெட்டிற்கு பட்ஜெட் ஏதாவது குறைந்துள்ளதா? மாதச் சம்பளதாரர்களுக்கு வரிக்குறைப்பு உள்ளதா? தங்கம் விலையும், பெட்ரோல் விலையும் குறைந்துள்ளதா? என விவாதிப்பதன் மூலமும், விவாதிப்பதைக் கேட்பதன் மூலமும் தீர்க்க முடியாது. மாறாக தீராப் பகைகொண்ட இக்கொள்கையை விரட்டியடிக்காமல் ஒருபோதும் வாழமுடியாது என்பதையே இப்பட்ஜெட் நமக்குணர்துகிறது.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன