மின்துறை தனியார்மயமாவதைத் தடுக்காமல்,
கட்டண உயர்வைத் தடுக்க முடியாது

“மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை, ஒன்றிய அரசு மேலிருந்து மாநிங்களின் மீது திணிக்கும் நடவடிக்கையாக மட்டுமே திமுக அரசு காட்டுகிறது. அதன் பின்னால் ஒளிந்துள்ள கார்ப்பரேட் நலனை திமுகவும் சரி அதனை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளும் சரி மக்கள் முன்னாள் கொண்டு வருவதேயில்லை.”

 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொடர்ந்து மூன்றாவது முறையாக மின் பயன்பாட்டிற்கான கட்டண உயர்வை அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டில் 26.73 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டும் 2.18 சதவீதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டண உயர்வை மட்டும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளப்போவதாக அறிவித்தது. மேலும் எம்.எஸ்.எம்.இ. எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த மின்கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே அதற்கெதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

ஆனால் அவர்களது போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றிற்கு 20 முதல் 55 காசுகள் வரை அதிகரிக்கும். பார்ப்பதற்குச் சிறிய தொகை போலத் தெரிந்தாலும் இதே போன்று ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போனால் அது சாமானிய மக்களின் மீதும் எம்.எஸ்.எம்.இ. தொழிற்துறையின் மீதும் பெரிய பாரத்தை சிறுகச் சிறுக ஏற்றி அச்சாணியை ஒடிப்பதாக மாறிவிடும்.

இந்த மின்கட்டண உயர்வுக்கும் தமிழ்நாடு, மின்சார வாரியம் சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடனானது 2021-22 ஆண்டில் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக இருந்தது எனவும், அதற்கான வட்டி ஆண்டுக்கு 16 ஆயிரத்து 511 கோடியாக இருந்தது எனவும், அதனை ஈடுகட்ட மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயம் எனவும் கூறியது. மேலும் ஒன்றிய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஒன்றிய அரசின் நிதியைப் பெற முடியும் என நிர்பந்திப்பதால் வேறு வழியின்றி மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.

மின்கட்டண உயர்வை தற்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். பாஜகவின் அண்ணாமலையோ ஏன் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார். எடப்பாடி பழனிச்சாமிதான் உதய் மின் திட்டத்தில் கையெழுத்துப் போட்டார் அதன் காரணமாகத்தான் தற்போது ஒன்றிய அரசின் அழுத்தத்தை எதிர்கொண்டு மின் கட்டணத்தை உயர்த்தவேண்டியிருக்கிறது எனவும், ஒன்றிய அரசின் அழுத்தம் பற்றி வாய்திறக்காமல் சூரிய ஒளியில் மின்சார உற்பத்தி பற்றி கதைவிடுகிறார் அண்ணாமலை என்றும் திமுக தரப்பில் எதிர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மற்ற மாநிலங்களின் மின்கட்டணங்களோடு ஒப்பிட்டு, தமிழ்நாட்டில்தான் மின்கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுவதற்கு மின்வாரியத்தின் கடன்கள் காரணம் அல்ல மின்சார வாரியத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது தான் அதன் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் என நாங்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளோம். அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை என்று அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் நாங்கள் கூறினோம். அதுதான் தற்போது நடந்து வருகிறது.

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசின், காவி பாசிச நடவடிக்கைகளை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், காவி பாசிசத்துடன் கலந்து வீரீய ஒட்டுரகமாக வளர்ந்துள்ள கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகள் குறித்து அவை கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் கொள்கையளவில் இந்தக் கட்சிகள் கார்ப்பரேட் பாசிசம் முன்நகர்த்தும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்பவையாகவே இருக்கின்றன.

மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை, ஒன்றிய அரசு மேலிருந்து மாநிங்களின் மீது திணிக்கும் நடவடிக்கையாக மட்டுமே திமுக காட்டுகிறது. அதன் பின்னால் ஒளிந்துள்ள கார்ப்பரேட் நலனை திமுகவும் சரி அதனை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளும் சரி மக்கள் முன்னாள் கொண்டு வருவதேயில்லை. காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை முறியடிக்காமல், மின்சாரத்துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தாமல், மின்சாரக் கட்டண உயர்வைத் தடுக்க முடியாது. இந்த உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று உணர்த்தி அதற்கெதிராக மக்களைத் திரட்டுவது ஒன்றுதான் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும்.

  • மகேஷ்

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன