எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடும்
வங்காளதேச மாணவர்கள்!

வங்காளதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாணவர்களின் எழுச்சியை வெறும் இட ஒதுக்கீட்டிற்கானப் போராட்டம் என்று சுருக்கி பார்க்கக் கூடாது, அங்கு பல ஆண்டுகளாக நிலவி வரும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கும், அரசின் ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடு என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர். மேலும் பிரதமர் சேக் ஹசீனா ஆட்சியின் அளவில்லாத ஊழல், விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் என்கின்றன பத்திரிக்கைகள்.

நடப்பில் இருந்துவரும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி கடந்த ஒரு வார காலமாக வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில்  படிப்படியாக மற்ற கல்வி நிலையங்களும் பங்கெடுக்க, அது நாடு தழுவிய மாணவர்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இப்போராட்டத்தினை தடுப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளை காலவரையின்றி மூடுவதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

மாணவர்களுடைய போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இணையவசதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன். நாடு முழுவதும் ஷட் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் இது வரை 105 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளியன்று நடந்த போராட்டத்தில் மட்டும் 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் பெரும்பாலோனர் மாணவர்கள். இப்போராட்டத்தை ஆளும் அவாமி லீக் கட்சியினுடைய மாணவர் பிரிவான “பங்களாதேஷ் சத்திர லீக்” அமைப்பை சேர்ந்தவர்களும் போலீசும் மற்றும் இராணுவத்தினரும் சேர்ந்து கடுமையாக ஒடுக்கி வருகின்றனர்.

நடப்பில் இருந்துவரும் இடஒதுக்கீட்டை இரத்து செய்யவேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான  கோரிக்கை. வங்கதேசத்தில்  அரசு வேலைகளுக்கு 56 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. மீதமுள்ள 44% பொது ஒதுக்கீட்டில் உள்ளது. இந்த 56 சதவீதத்தில், 30 சதவீதம் வங்கதேச ‘விடுதலைப் போராட்டத்தில்’ பங்கு கொண்ட குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 30 சதவீத ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என்பதே மாணவர்களுடைய கோரிக்கை. 

1971 இல் இந்தியா உதவியுடன் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உருவானது. இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவர் முஜிபூர் ரஹ்மான், தனது ஆட்சி அமைந்த உடன் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். இது ஐம்பது வருடமாக அமலில் இருந்து வருகிறது.

2018-ல் நடந்த நாடு தழுவிய மாணவர் போராட்டத்தின் காரணமாக 30 சதவீத இட ஒதுக்கீடு நிறுத்தி வைப்பதாக அப்போதைய பிரதமர் சேக் ஹசீனா அறிவித்திருந்தார். தற்போது உயர் நீதிமன்றம் மீண்டும் 30 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்கள் சேக் ஹசீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் அவருடைய திட்டமே என்கின்றனர் மாணவர்கள்.  எனவே உயர் நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்தும், 30% இடஒதுக்கீட்டை நிரந்தரமாக ரத்து செய்யவும் தான் மாணவர்கள் நாடு முழுதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அரசியல் தலைமை ஏதுமற்ற தன்னியல்பான போராட்டமாகவே இப்போராட்டங்கள் உள்ளது.

போராடும் மாணவர்களை, வங்கதேசத்திற்கு எதிரானவர்கள் என்றும் பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகள் அறிவாளிகள் இல்லையா? பாகிஸ்தான் கைகூலிகளுடைய பேரக்குழந்தைகள் மட்டும் தான் அறிவாளிகளா? என்று போராட்டத்தைத் தூண்டும் வகையில் பிரதமர் சேக் ஹசீனா பேசி வருகிறார்..

ஒவ்வொரு வருடமும் 3000 அரசு வேலைகளுக்கு 400000 படித்த இளைஞர்கள் போட்டி போடுவதாகவும், தனியார் நிறுவனங்களிலும் போதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் மாணவர்கள் கூறுகிறார்கள். மேலும் இருக்கின்ற 3000 அரசு வேலைகளையும் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கே ஒதுக்கப்படுவதாக போராடும் மாணவர்கள் பிரதமர் சேக் ஹசீனா மீது குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த 15 வருடங்களாக வங்கதேசத்தின் பிரதமராக சேக் ஹசீனா இருந்து வருகிறார். தற்போது ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார். இவர் எதேச்சதிகாரத்துடன் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள், ஜனநாயகப் போராட்டம் நடத்துபவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி செயல்பாட்டாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவுவதும், பொய் வழக்குகளில் சிறையில் அடைப்பதும், கொலை செய்வதும் நடைபெறுவதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் கூட நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி தலைவர்களை சிறையிலடைத்து பின்னர் பொதுத்தேர்தலை நடத்தியுள்ளார். மேலும் இதில் தானே வெற்றி பெற்றதாகவும் அறிவித்துக் கொண்டார்  

வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாணவர்களின் எழுச்சியை வெறும் இட ஒதுக்கீட்டிற்கானப் போராட்டம் என்று சுருக்கி பார்க்கக் கூடாது, அங்கு பல ஆண்டுகளாக நிலவி வரும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கும், அரசின் ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடு என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர். மேலும் பிரதமர் சேக் ஹசீனா ஆட்சியின் அளவில்லாத ஊழல், விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் என்கின்றன பத்திரிக்கைகள்.

ஆயத்த ஆடை உற்பத்தியில் உலகின் இரண்டாவது நாடாக வங்கதேசம் உள்ளது. பெரும்பாலான பன்னாட்டு ஆடை நிறுவனங்களுக்குத் தேவையான உற்பத்தி வங்கதேசத்தில் தான் நடைபெறுகிறது. ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய உற்பத்தி வலைப்பின்னலில் வங்கதேச தொழிலாளர்கள் மிகக்குறைந்த கூலிக்கு கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர். இச்சுரண்டலுக்கு ஆதரவாகவே சேக் ஹசீனாவின் ஆட்சியும் உள்ளது. இதன் விளைவாக வறுமையும், விலைவாசி உயர்வும், வேலையின்மையும் அந்நாட்டு மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இவை அனைத்தின் வெளிப்பாடாக மாணவர்களின் போராட்டம் உள்ளது. இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டமாக தோடங்கிய இந்த மாணவர் போராட்டம், தற்போது சமூகத்தின் மற்ற பிரிவு மக்களின் ஆதரவையும் பெற்று எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டமாக பரிணமித்து வருகிறது.

  • அழகு

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன