மறுகாலனியாக்கத்தை மறுதலிக்காமல், மாநில மக்களின் வேலை வாய்ப்பு என்பது வெற்றுக் கனவே!

தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில், சொந்த மாநில மக்களுக்கு, 100% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிற மசோதாவை, கர்நாடகப் பேரவையில் கொண்டு வருவதற்கு முன்பாக, கடந்த 15-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இம் மசோதாவானது, ‘பத்தாம் வகுப்புத் தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படித்தவர்கள், கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வை தனியாக எழுதித் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்’. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான, தொழிலாளர் உதவி ஆணையரை நியமிக்கவும், இதன் விதியை கடைப்பிடிக்கத் தவறும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது ரூபாய் 10,000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கவும் வலியுறுத்துகிறது.

இம்மசோதாவை ‘பாரபட்சமானது, பிற்போக்கானது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, இவற்றை காங்கிரஸ் அரசு கொண்டுவர துணிந்தது வியப்பளிக்கிறது’ என எகிறிக் குதிக்கிறது இன்போசிஸ் நிறுவனம்.

கர்நாடகா அரசின் மற்றொரு தவறானது, உள்ளூர் இட ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்துவதோடு, அவற்றை கண்டிப்பாக ஒவ்வொரு நிறுவனத்திலும் அரசு அதிகாரியை நியமித்து கண்காணிப்பது, அச்சுறுத்தும் செயல் என ஊலையிடுகிறது அசோசம் நிறுவனத்தின் கன்னடக் கிளை.

இம் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் தருவது, உள்ளூரில் திறமையானவர்கள் இல்லையெனில், நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியதிருப்பதாகவும், இதனால், இந்தியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு கர்நாடகம் என்று புகழ்பெற்றிருக்கும் நிலையை இழக்கப்போவதாகவும் இதன் விளைவு, கர்நாடகாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப் போவதாகும் அச்சுறுத்துகிறது, நாஸ்காம் என்கிற தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கம்.

இம் மசோதா, இன அடிப்படையில் பாகுபாடு காட்டும், மிருகத்தனமான பாசிச குணம் கொண்டதாக உள்ளதென அலறுகிறார் மணிப்பால் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன்தாஸ் பாய். தமிழ்நாடு அரசைப் போல, தமிழ் மொழியைப் படித்து தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்று காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தால் கார்ப்பரேட்டுகள் அமைதி காத்திருப்பர்.

ஆனால், அவை தங்கள் மீது திணிக்கப்பட்டு, குறைந்தக் கூலியில், அதிக வேலை உழைப்பை சுரண்டும் அபரிவிதமான கொள்ளைக்கும், சொத்துக் குவிப்பிற்கும் உலை வைக்கும் என்பதன் எதிர் விளைவே மேற்கண்ட உருட்டலும், மிரட்டலும். வாக்களித்த பெரும்பான்மை மக்களின், வேலை வாய்ப்பு இல்லாமல் பரிதவிக்கும் பெரும்பான்மை மக்களின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களின் ஆதரவோடு, அவற்றை எதிர்த்து முறியடிக்கும் வகையில், இம் மசோதாவை சட்டமாக்கியிருக்க முடியும். ஆனால், ஆளும் வர்க்கமான கார்ப்பரேட்டுகள் அனுமதி இல்லாமல் சட்டமாக்க முடியாது. அதனால் தான் கார்ப்பரேட்டுகள் இம் மசோதாவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என குரல் கொடுக்கிறது.

இது ஒருபுறமிருக்க, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளான இவர்களால், தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்கிற மறுகாலனியாக்கத்தை மறுத்து மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. கார்ப்பரேட்டுகளால் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்கத்தை ஏற்றுக் கொண்டு ஆட்சியாளர்களால் மறுதலிக்க முடியாது. மறுதலிக்கும் வல்லமை, மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களிலேயே அடங்கியுள்ளது என்கிற வகையில், வீதியெங்கும் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.

  • மோகன்

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன