கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? – பாகம் 1

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும்

அன்பார்ந்த வாசகர்களே! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் வரலாற்றில் முதன் முறையாக தி்ருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது; அதுமட்டுமல்ல, அம்மாநிலத்தில் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 15.64% வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க., மோடி எதிர்ப்பலை வீசியதாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட 2024 தேர்தலில் 3.5% அதிகரித்து 19.14% வாக்குகளைப் பெற்றுள்ளது. பல தொகுதிகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்கள் ஒரே கண்ணோட்டத்தில் வாக்களிப்பதில்லை என்றாலும் கூட, இந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துக் கணக்குப் போட்டால், 11 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் இடத்திலும் 9 தொகுதிகளில் இரண்டாம் இடத்திலும் வந்துள்ளது.

சுருங்கக் கூறினால், கேரளத்தில் ஒரு மிகப்பெரும் சக்தியாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் வேர்பதித்து, கிளைபரப்பி வேகமாக வளர்ந்து வருகிறது.  

தெற்கில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வால் வளர முடியாது; வடக்கில், குறிப்பாக பசு வளைய மாநிலங்களில் மட்டும்தான் அதன் செல்வாக்கு உள்ளது என்பது போன்ற கதைகளையெல்லாம்  இச்சம்பவங்கள் பொய்யாக்கி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. காவி பாசிசக் கும்பலின் வளர்ச்சியை குறைத்து மதிப்பிடுவதும், அதன் மீது பாரமுகமாக இருப்பதும் எந்த வகையிலும் பாசிச எதிர்ப்புப் போருக்கு வலுச் சேர்க்காது. மாறாக, அதன் அபாயத்தை மக்களிடையே உணர்த்துவதும், அதற்கெதிராக மக்களைத் தட்டியெழுப்புவதும்தான் பாசிச எதிர்ப்பின் முதல்படியாகும்.

“பாசிசக் கும்பலின் அபாயத்தை உணர்த்துவது” என்ற இந்த நோக்கத்திற்காகவே “கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?” என்ற தலைப்பில் ஜூன், 2024 கேரவன் இதழில் வெளியான இக்கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம். பள்ளிகள், கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது, கல்விச் சேவையாற்றுவது என்ற பெயரிலும் மதரீதியான கூட்டங்கள் நடவடிக்கைகள் என்ற பெயரிலும் ஆர்.எஸ்.எஸ். தனக்கான அடித்தளத்தையும் புதிய அணிகளையும் எப்படி வென்றெடுத்து, அவர்களைக் கலவரங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபடுத்தியுள்ளது, அவர்களையே அரசு உறுப்புகள் அனைத்திலும் நுழைத்து, கேரளத்தின் அரசியல் அரங்கில் சகல விசயங்களையும் தீர்மானிக்கும் பெரும் அபாயகரமான சக்தியாக எழுந்து நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவும்.

பொதுவாகவே ஆர்.எஸ்.எஸ்.சின் வளர்ச்சி குறித்து எழுதப்படும் கட்டுரைகளில், அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அலசப்படும் அதே வேளையில், அதன் வளர்ச்சிக்கு காரணமாக சமூகப் பொருளாதாரக் காரணிகள் குறித்துப் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது  செயல்பட்டு வந்தாலும், தற்போது ஏன் மக்கள் மத்தியில் அதன் கருத்துக்களுக்கும், செயல்பாடுகளுக்கும் ஆதரவு பெருகிவருகிறது என்பது குறித்து பரிசீலிப்பதற்கு அவை பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்தக் குறை இந்தக் கட்டுரையிலும் வெளிப்படுகிறது. எனிமும் இது எல்லா முதலாளித்துவக் கட்டுரையாளர்களின் படைப்புகளிலும் வெளிப்படுவதுதான். அதேசமயம் பாசிசத்திற்கு எதிரான விழிப்புணர்வைப் பெறவும் மக்களுக்கு பாசிச அபாயத்தை உணர்த்தவும் இக்கட்டுரை உதவும் என்றும் நம்புகிறோம்.

படியுங்கள்! பரப்புங்கள்!

ஆசிரியர் குழு

செங்கனல்

000


 

 

சபரிமலை சந்நிதிக்கு மிக அருகில் வெளியே போலீசுக்கு மத்தியில் அமைதியாக நின்றுகொண்டு, “நாங்கள் இங்கே பக்தர்களாக வந்துள்ளோம். வயது வரம்புக்குட்பட்ட அனைவரும் அமைதியாக எந்த ஒரு பிரச்சினையுமின்றி சாமியை தரிசிக்க நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.” – என கேரளா போலீஸின் ஒலிப்பெருக்கியில் கூச்சலிட்டார் வல்சன்.

கேரளத்தின் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவரான இவர். இப்போது வாதிடும் அமைதிக்கு மாறாக, பல காலங்களாக வன்முறைப் போராட்டங்களை நடத்தியவராவார். அவரது சூழ்ச்சிகள் கேரளாவின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் ஆழமானதொரு பிளவையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வல்சன் பேசுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவரது தலைமையில் இந்துத்துவவாத கும்பலொன்று பக்தர்களைப் போல உடையணிந்துகொண்டு கோவிலின் எந்த சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் பிரகாரத்துக்குள் நுழைந்தனர். முன்பின் அறிந்திராத ஒரு 52 வயதுடைய பெண்மணியை ஆக்ரோசமாக மிரட்டினர். மாதவிடாய் வயதுடைய பெண்கள் (women of menstrual age) கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று கூறப்படும் தெய்வத்தின் கட்டளையை அப்பெண் மீறியதாகக் குற்றஞ்சுமத்தினர். ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள், சாமியே சரணம் ஐயப்பா என முழங்க, அந்தப் பெண்மணி  கோவில் வளாகத்தை அடைந்ததும் அவரைத் தாக்கி இறுதியில் அவரைக் கீழேதள்ளிச் சாய்த்தனர். பின்னர் இப்போராட்டக்காரர்கள் ஓரமாக நின்றுகொண்டிருந்த பத்திரிகையாளர்களைத் தாக்கினர். ஒரு பத்திரிக்கையாளரின் நெற்றியில் தேங்காயை விட்டெறிந்தனர். அதேநேரத்தில் கும்பலில் இருந்த சிலர் அருகிலுள்ள கட்டிடத்தின் விளிம்பில் தஞ்சம் அடைய முயன்ற கேமராமேன்கள் மீது நாற்காலிகளை வீசியெறிந்தனர்.

மக்களின் வழிபாட்டுரிமையை மீறுவதாகக் கூறப்படும் சபரிமலைக் கோவிலின் கட்டுப்பாடுகளை உடைத்து, அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் 2018க்கும், ஜனவரி 2019க்கும் இடையில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் எண்ணிறந்த உதிரி அமைப்புகள் கேரளா மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். ஏழு கடையடைப்பு போராட்டங்கள், பெருவாரியான தீவைப்பு சம்பவங்கள், அரசு பேருந்துகளை அடித்து உடைப்பது, இவற்றில் முக்கியமாக பெண்கள், பத்திரிகையாளர்கள் மீது தீவிர தாக்குதல்கள் – என ஏராளமான கலவர நடவடிக்கைகள் இந்து தேசியவாதிகளால் நிகழ்த்தப்பட்டன. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைதும் செய்யப்பட்டனர்.

பிந்து அம்மினி, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் வெற்றிகரமாக கோவில் படிகளில் ஏறியதுடன் இந்நெருக்கடி முடிவுக்கு வந்தது. ஆனால், கேரளாவின் அரசியல் அரங்கில் அதுவரையில் குறைந்த முக்கியத்துவமுடையவர்களாக இருந்த வலதுசாரிகள் குறிப்பிடத்தக்களவில் வலிமையடைந்துவிட்டனர் என்பதும் அச்சம்பவத்தின்போது தெளிவாகத் தெரியவந்தது. அதுவரை பெரும்பாலான மலையாளிகளுக்கு சாந்தகுணமுள்ள ஒரு ஆசிரியராக அறியப்பட்ட வல்சன், கேரள பா.ஜ.க.வின் ஒப்பீட்டளவிலான மென்மையான தலைவர்களுக்கு மாற்றாக தேடிக்கொண்டிருந்த [ஒரு மூர்க்கமான] தலைவராக, இந்துத்துவ வலதுசாரிகளின் கதாநாயகனாக உருவெடுத்தார்.

 

 

இந்த வன்முறைகளைத் தொடர்ந்து, கேரளாவில் கம்யூனிஸ்டுகள் எல்லா இந்துக்களையும் வன்முறையால் அடிமைப்படுத்த முயல்கின்றனர் என்று சொல்லப்படும் விஷத்தனமான “சிவப்பு அட்டூழியம்” (Redtrocity) என்ற சதிப்பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரச்சாரகர்களால் வட இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டது. அவர்களால் நடத்தப்பட்ட கருத்தரங்கங்களும், புகைப்படக் கண்காட்சிகளும், ஊடகப் பிரச்சாரங்களும் நாடுமுழுவதும் கேரளாவை வில்லனாகச் சித்தரித்தன. கேராளவில் சபரிமலை நுழைவு எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் விதமாக பல்வேறு  வலதுசாரி அமைப்புகளை ஒன்றிணைத்து “ஆச்சார சம்ரக்‌ஷனா சமிதி” (ஆச்சாரத்தை அதாவது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் குழு) என்ற ஒரு கூட்டமைப்பு தொடங்கப்பட்டது; அந்தக் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் அந்த நேரத்தின் கதாநாயகனாகவும் வல்சன் இருந்தார். வலதுசாரிகளின் சமூக வலைத்தளப் பக்கங்களின் ஆதர்ஷன நாயகனாகவும், அவர்களால் கேரளத்தின் போட்டி முதலமைச்சர் (parallel CM) என்று கொண்டாடப்படுபவராகவும் வல்சன் மாறினார்.

இந்த சிவப்பு அட்டூழியம் என்ற பிரச்சாரத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 5 2016 அன்று, வல்சனுடன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கேரளா மாநிலத் தலைவர் பி. கோபாலன் குட்டி, பிராந்திய தலைவர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மலையாள பத்திரிக்கையான ஜென்மபூமியின் நிர்வாக இயக்குனர் சேதுமாதவன் ஆகியோர் ஸ்ரீ எம் எனும் சாமியாரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட விலையுயர்ந்த சொகுசு விடுதியின் ஒரு அறையில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி போலீஸ் பந்தோபஸ்தும் ஏதுமின்றி கேரளா இடதுசாரி அரசியலின் மிகப்பெரும் புள்ளிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனும் கேரளத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனும் அங்கே வந்தனர்.

பல பத்து ஆண்டுகளாக வடகேரளத்தில் – குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் –கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் இடையே நடந்துவரும் கொடூரமான வன்முறைக்கு முடிவு கட்டுவதே அந்த இரகசிய சந்திப்பின் நோக்கமாகும். ஆர்.எஸ்.எஸ். – சி.பி.எம். இன் எல்லா மட்டங்களிலுமான தலைவர்கள் அடிக்கடிச் சந்தித்துக் கொள்வதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குமான வழிமுறைகளை அத்தலைவர்கள் அக்கூட்டத்தில் முடிவு செய்தனர். ஸ்ரீ எம் என்பவர் மத்தியஸ்தராக இருந்த இரண்டாவது இரகசிய சந்திப்பு கண்ணூரில் நடைபெற்றது. 2000 முதல் 2016 வரை ஆர்.எஸ்.எஸ். – சி.பி.எம். அணிகளிடையே 66 அரசியல் கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு இருதரப்பினரிடையேயான கொலைகள் குறைந்தன. கண்ணூரில் மட்டும் ஒரு சில கொலைகள் என்றளவில் சுருங்கிப் போயின. ஆனால், முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடையே எடுத்த பல நேர்காணல்களின் மூலம் நாங்கள் தெரிந்துகொண்டது என்னவென்றால், இந்த சமரச ஒப்பந்தத்தினால் ஆர்.எஸ்.எஸ். இழந்ததை விடவும் பெற்றது அதிகம் என்பதைத்தான்.

ஆர்.எஸ்.எஸ். தனது தொடக்க காலத்தில் நாடு முழுவதிலும் செய்துவந்த அதே நடவடிக்கைகளைத்தான் அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு கேரளத்திலும் வல்சனின் வழிகாட்டுதலின் கீழ் செய்தது. அதாவது மிகப்பெரிய வன்முறைகளை நிகழ்த்திவிட்டு பின்னர் பேச்சு வார்த்தை என்று கூறி ஒப்பீட்டளவிலான அமைதியை நிலைநாட்டுவதுதான் அந்த நடவடிக்கையாகும். ஒவ்வொரு வன்முறை – பேச்சுவார்த்தையின் போதும் ஆர்.எஸ்.எஸ்.ஸை மக்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் (public acceptence) திசையில் அது மேன்மேலும் வளர்ந்தது. இந்தக் கலையை ஏற்கனவே 20 ஆண்டுகளாக செவ்வனே செய்து, கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கான அடித்தளத்தை வலுவாக்கிய வல்சனுக்கு இது ஒரு கைதேர்ந்த வித்தையாக இருந்தது. வல்சனால் தூண்டிவிடப்பட்டு நடத்தப்பட்ட இத்தகைய கலவரங்களிலும் வன்முறைகளிலும் அவருக்கு சிறிய காயம் கூட ஏற்பட்டதில்லை; அதற்காக அவர் ஒருமுறைகூட கைதானதும் இல்லை. ஆனால், சமரச பேரங்களின்போது அவர்தான் ஆர்.எஸ்.எஸ். சார்பில் முதல் ஆளாய் நிற்பார். தனது எதிர்ப்பாளர்களிடையே நியாயமாக பேரம்பேசுபவர் என்ற பாராட்டையும், சக ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடையே நல்ல பலன்களை வெற்றிகரமாகப் பெற்றுத்தருபவர் என்ற நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றார், வல்சன்.

ஆர்.எஸ்.எஸ்.ஸானது தனக்கே உரிய செயல்திட்டத்தைக் கொண்டுள்ளது. கடலோரக் கர்நாடகாவிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை எங்கெல்லாம் குறிப்பிடத்தக்க அளவில் அவ்வமைப்பின் இருப்பு உள்ளதோ அங்கெல்லாம் பா.ஜ.க. மக்களிடம் ஆதரவைப் பெறுவது நடந்தேறியுள்ளது. தனக்கென தெளிவான மாற்று சித்தாந்தத்தைக் கொண்ட தமிழ்நாட்டிலும் கேரளத்திலும், வன்முறைகளின் மூலம் கட்சியை வளர்க்கும் உத்தியை வரலாறாகக் கொண்ட மேற்குவங்கத்திலும்தான் பா.ஜ.க. கால்பதிப்பதில் தோல்வியடைந்துள்ளது. எனினும், தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு பார்க்கையில், இந்துத்துவ தேசியவாதம் குறிப்பிடத்தக்களவில் இப்பகுதிகளில் நிலவுகின்ற காரணத்தினால், எதிர்க்கட்சிகளின் கோட்டைகளாகத் திகழும் இந்தப் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு தனக்கான செல்வாக்கை அதிகரித்துள்ளது என்பதையும் தனக்கான சித்தாந்த ரீதியான புதிய வாரிசுகளையும் எவ்வாறு உருவாக்கியுள்ளது என்பதையும் புரிந்துகொள்வது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

 

ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு தனது சித்தாந்தத்தை எளிய மக்களிடம் கொண்டுசென்று பரந்துபட்ட அம்மக்களிடம் நல்லெண்ணத்தைப் பெற்று, ஓரு நிழலாக இருந்துகொண்டே முக்கியமான அரசியல் நிகழ்வுகளை பாதிக்கிறது என்பதற்கு வல்சன் தில்லங்கேரியின் நீண்டநெடிய அரசியல் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாகும். இத்தகைய நடவடிக்கைகள் தேர்தலில் தனக்கு வெற்றியை வசப்படுத்தும் என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆரம்பகட்டத்தில் பணிகளைத் தொடங்கிய வல்சன், அங்குள்ள மக்களிடையே நன்மதிப்பை விரைவில் சம்பாதித்தார். அதேவேளையில், ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கான புதிய தலைமுறை அணிகளையும் வென்றெடுத்து, அவர்களின் விசுவாசத்திற்குரிய நபராகவும் மாறினார்.

கண்ணுரின் அரசியல் கொலைகளின் வரலாற்றை மேன்மேலும் அதிகரிப்பதற்காக கர்நாடகத்தில் இருந்து ஆயுத கடத்தலிலும் ஈடுபட்டார். வல்சனால் ஊதிப்பெருக்கப்பட்ட [வெறுப்புப்] பேச்சுக்கள்தான் கொடூரமான பல்வேறு அரசியல் கொலைச் சம்பவங்களுக்குக் காரணம் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக நீங்கள் காணலாம். போலீசானாலும் சரி, கம்யூனிஸ்டுகளானலும் சரி [வன்முறையை நிகழ்த்திவிட்டு] இவர்களிடத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு முன்னின்று பேசி முடித்துவைப்பது வல்சன்தான் என்றும், இப்போது அவர் முதலமைச்சரோடே இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார் என்றும் கூறுகிறார், முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர். அவர் நடத்தும் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்ற நபர்களை, போலிசுத்துறை உட்பட கேரள மாநில அரசாங்க உறுப்புகளின் எல்லா இடங்களிலும் நீங்கள் காணலாம். கேரளாவில் நாற்பதாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காகப் பணியாற்றிய வல்சனின் செயல்பாடுகளின் விளைவு என்னவென்றால், அதிகாரத்தின் நெம்புகோலின் (levers of power) மீது நிரந்தரமாக செல்வாக்குச் செலுத்தும் நிலையை ஆர்.எஸ்.எஸ். எய்தியுள்ளதுதான்.

000

தில்லங்கேரி என்ற கிராமம் அறுபது ஆண்டுகள் கம்யூனிச பாரம்பரியம் கொண்டதாகும். 1940-களில் கண்ணூர் பகுதி முழுவதும் நிலப்பிரபுத்துவம் ஆழமாக வேரூன்றியிருந்தது; உயர்சாதி நம்பியார்கள் நிலப்பிரபுக்களாக இருந்தனர்; அதிகாரம், நிலம், விவசாய விளைபொருட்கள் என அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. “குடியான்” என்றழைக்கப்பட்ட வன்னியன், திய்யா (தற்போது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) சாதி மக்கள் இவர்களிடத்தில் வேளாண்குடிகளாக (tenant farmers) வேலை செய்து வந்தனர். தமது கடும் உழைப்பால் ஈட்டிய விளைபெருட்களின் பெரும்பாலான பகுதியை நிலப்பிரபுக்களிடம் ஒப்படைத்துவிட வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தனர். அடிக்கடி அந்தப் பகுதியை தாக்கிய பஞ்சம் அவர்களது வாழ்க்கையின் அவலநிலையை மேன்மேலும் மோசமாக்கியது.

1948-ஆம் ஆண்டில், தில்லங்கேரியைச் சேர்ந்த விவசாயிகள், குறிப்பிடத்தக்க எதிர்ப்பு நடவடிக்கையாக, தங்கள் உணவு தானியங்களை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மறுத்தனர். விவசாயிகள் தமக்குக் கீழ்ப்படிய மறுப்பதைக் கண்டஞ்சிய நிலப்பிரபுக்கள், எழுச்சியை ஒடுக்க போலிசுத் துறையினரை தன் கையில் போட்டுகொண்டனர். இதன் விளைவாக 7 அப்பாவி விவசாயிகளை கொல்லப்பட்டனர். அரசு எந்திரத்தின் மீதான நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டினால், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் உடல்களைக்கூட அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலிசு மறுத்தது. தில்லங்கேரியில் கைது செய்யப்பட்ட 5 விவசாயிகள் சென்னை மாகாணத்திற்குட்பட்ட சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 1950-ஆம் ஆண்டில், சிறைக்கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமைகளுக்கு எதிராக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தியபோது, ​​சிறைக் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தில்லங்கேரியைச் சேர்ந்தவர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு படுகொலைகளும் நீண்ட காலமாக கேரளாவில் நினைவுகூறப்பட்டு வருகிறது. தில்லங்கேரி தியாகிகளின் பூமியாக நினைவுகூறப்படுகிறது. 1950-களில் பதவியேற்ற முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் கீழ் இப்பகுதியில் நடைபெற்ற தீவிர நிலச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இந்த கிராமம் நடைமுறையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கிராமமாக இருந்தது. கட்சி-கிராமம் என்றால் அக்கிராமம் கம்யூனிஸ்ட் கட்சியால் செல்வாக்கு செலுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது என்றும், பெரும்பகுதி மக்களிடையே கம்யூனிச சித்தாந்தம் வேரூன்றியுள்ளது என்றும் பொருளாகும்.

இப்பகுதியின் முதன்மையான சாகுபடியாளர்களான திய்யா சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 1964-இல் வல்சன் பிறந்தார் என்பதால், இவரின் குடும்பம் நில சீர்திருத்தங்களின் விளைவாக அப்போதுதான் நிலத்தைப் பெற்ற குடும்பமாக இருந்திருக்கக்கூடும். இருப்பினும், அவரது குடும்பம் இன்னும் கிராமத்தின் சமூக விளிம்பு நிலையில்தான் இருந்தது. குடும்பத்தினர் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தனர். மட்டனூர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த அவர், பின்னர் கல்லுடைக்கும் வேலைக்குச் சென்றார். வல்சன் பிறந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், பத்திரிகையாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளராக மாறியவருமான ராஜேஷ் தில்லங்கேரியின் கூற்றுப்படி, வல்சன் ஒரு இணை-கல்லூரியில் (parallel college) [இணைக் கல்லூரி என்பது பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்படாத, தனியார் சமூக சேவை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவன முறையாகும்] படித்து தொலைதூரக் கல்வியின் மூலம் மலையாள இலக்கியத்திலும் பட்டம் பெற்றார் என்று அறிகிறோம். ஆனால் ராஜேஷுக்கு வல்சனின் வாழ்க்கையைப் பற்றி வேறெந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை. தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து வல்சனும் எப்போதும் எங்கும் வாய்திறந்ததே இல்லை.

 

 

1970-களின் பிற்பகுதி மற்றும் 1980-களின் காலம் என்பது கேரளாவில் இணைக் கல்லூரிகளின் சகாப்தமாகும். மாநிலம் முழுவதும் பல்வேறு சாயல்களைக் கொண்ட சமூக-அரசியல் அமைப்புகளால் பல இணைக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. கண்ணூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சிறிய மலைப்பாங்கான நகரமாக அமைந்திருந்த இரிட்டி, தனக்கான கல்லூரிக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மோசமான நிலையில் இருந்தமையால், அங்கு எந்த இணைக் கல்லூரியும் நிறுவப்படவில்லை. 1942-ஆம் ஆண்டிலிருந்தே கண்ணூர் மற்றும் கோழிக்கோடு போன்ற கடலோர நகரங்களில் ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே தனக்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. கண்ணூரின் அருகாமை நகரமான புன்னாட்டில், பேருந்து நிறுத்தத்தின் அருகே ஒரு சிறிய, மங்கலான கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. “முன்னேற்றம்” என்று பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லான “பிரகதி” என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை பெருமுயற்சியெடுத்து மூத்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ஆர்.ஹரி என்பவர் தொடங்கியதாக ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர் எங்களிடம் கூறினார்.

நல்ல கல்வி நிறுவனங்களுக்கு இருந்த பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மூத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட உள்ளூர் மக்களைச் சேர்ந்த பலர், இந்த நிறுவனத்தைத் தொடங்க உதவினர். ஆர்எஸ்எஸ்-ஸால் நிறுவப்பட்ட மற்ற கல்வி நிறுவனங்களைப் போல கடுமையான சித்தாந்த வழிமுறைகளை பிரகதி பின்பற்றவில்லை. ஆரம்பத்தில் அங்கு கற்பித்த ஆசிரியர்கள் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றனர். அது பிரகதிக்கு அதிக மாணவர்களை விரைவில் ஈர்த்துக் கொடுத்தது. பல மாணவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளாக இருந்தனர். உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் பிரகதியில் தினசரி டியூஷன் வகுப்புகள் நடப்பதால் மிக எளிதில் படித்து தேர்ச்சி பெற்றனர். பிரகதி மாநில அரசின் பாடத்திட்டத்தைத்தான் கற்பித்தது என்றாலும் ஒவ்வொரு வகுப்பும் சரஸ்வதி மந்திரத்துடன்தான் தொடங்கின.

1980-களில் வல்சன் முதன்முதலில் பிரகதிக்குச் சென்ற நேரத்தில், அது ஒரு இணைக் கல்லூரியாக உயர்ந்திருந்தது. புன்னாட்டில் உள்ள பிரதான மசூதிக்கு அருகமையில் ஆர்எஸ்எஸ். வாங்கிய கொட்டகையில் இருந்து இது இயங்கியது. ஆர்.எஸ்.எஸ்.ஸானது காங்கிரஸுக்கு மேன்மேலும் விரோதமாக மாறிய நேரத்தில் வல்சனின் ஆர்.எஸ்.எஸ்.ஸுடனான தொடர்பு, அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் ஆழமானதொரு பிளவை ஏற்படுத்தியது. இதனால் வல்சன் பிரகதியிலேயெ வாழத் தொடங்கினார். விரைவில் அதன் ஊழியர்களில் ஒருவராக மாறி, ஆர்.எஸ்.எஸ். அணிவரிசையில் படிப்படியாக உயரத் தொடங்கினார். அப்போதிருந்து அவரை அறிந்தவர்கள், வல்சனுக்கு படிப்பதற்கும் கற்பிப்பதற்குமே நேரம் சரியாக இருக்குமென்றும் பிற வேலைகளுக்கு அவருக்கு சிறிதளவு அவகாசமே இருந்தது என்றும் கூறுகின்றனர். அவர் ஒரு மிகச்சிறந்த பேச்சளராக தன்னை வளர்த்துக் கொண்டார். மேலும் சிறந்த நினைவாற்றலையும் கொண்டிருந்தார். 1980-களின் பிற்பகுதியில், வல்சனை பிரகதியின் முதல்வராக ஆர்எஸ்எஸ். நியமித்தது. [தோற்றத்தில்] ஓரளவுக்கு மதச்சார்பற்ற பள்ளியாக இருந்த பிரகதி, விரைவில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் உண்மையான சுயரூபத்திற்கே உரிய வடிவை எடுத்தது.

வல்சன் பிரகதியின் முதல்வாராகப் பெறுப்பேற்றபோது மாணவராக இருந்தவரும், சிலகாலம் ஆர்.எஸ்.எஸ்.ஸில் செயல்பட்டவருமான ஒருவர், வல்சன் பொறுப்பேற்ற பிறகு நடந்த மாற்றத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்: “சாவர்க்கர் போன்ற இந்துத்துவா தலைவர்களின் புகைப்படங்கள் அப்போது நிறுவனத்தின் வகுப்பறைகள் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தன.” “வரலாற்று வகுப்புகளின் போது, ​​ஆசிரியர்கள் சிவாஜி போன்ற மன்னர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் பிற தலைவர்களின் பங்களிப்பை படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். ‘தேசிய உணர்வுகள்’ என்பனவற்றை வகுப்புகளினூடாகச் சொல்லிக்கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் மீண்டும் நிலைநாட்ட விரும்பும் வேதகாலமான அர்ஷ பாரதத்தைப் பற்றியும் கற்றுத் தருவார்கள்.”

அவர் மேலும் கூறுகையில், வகுப்புகள் முடிந்த பின்னர், கல்லூரி வளாகத்தின் வெளிய டீ கடையில் அமர்ந்து நேரம் செலவிடுவதை விடவும் பல மாணவர்கள் பிரகதியில் நடைபெறும் முறைசாரா சாகாகளில் (informal shaka) [சாகா என்றால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படைப் பயிற்சி வகுப்பு என்று பொருள்] சேர்ந்தனர் என்கிறார். “நமஸ்தே சதா வத்சலா” என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழிபாட்டுக்குப் பின்னர், மாணவர்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு அரசியல் பேசுவார்கள்” என்கின்றனர் பிரகதியின் முன்னாள் மாணவர்கள். இந்த ஷாகாக்களின் மூலம் பலதரப்பட்ட வயதுடைய மாணவர்களும் ஆசிரியர்களும் இடையே ஒரு உறுதியான பிணைப்பு வளரத் தொடங்கியது. “மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் – ஆசிரியர்களில் பெரும்பலோர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் – மிக நெருக்கமான உறவு வளரத் தொடங்கியதால், இதைக் கண்ட பல அரசியலற்ற (Apolitical) மாணவர்களும்கூட இந்த சாகாவில் சேர தொடங்கினர்”  “சி.பி.எம். கட்சியின் கோட்டையாக விளங்கிய பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களை ஆசிரியர்கள் கவனம் கொடுத்துப் பார்த்தனர். அம்மாணவர்களுக்கு தனிச்சிறப்பான கவனம் கொடுக்கப்பட்டதுடன் கட்டணத் தள்ளுபடியும் செய்யப்பட்டது. சக மாணவர்கள் அங்கே படித்தது அப்பகுதிகளைச் சேர்ந்த பிறர் மீதும் செல்வாக்குச் செலுத்தியமையால் (peer influence) பெருவாரியான மாணவர்கள் பிரகதியை நோக்கி வரத்தொடங்கினர்” என்கிறார்கள் பிரகதியின் முன்னாள் மாணவர்கள்.

 

 

வகுப்புகள் முடிந்ததும் பிரகதியானது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அலுவலகமாக மாறிவிடும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கிய விழாக்கள் இங்கே கொண்டாடப்பட்டன. குரு பூஜையின் போது, ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியரை அழைத்து வந்து அந்த வகுப்பின் ஆசிரியரால் பாதபூஜை செய்யப்படும்; விருப்பமுள்ள மாணவர்களும் இதில் கலந்துகொள்வார்கள்; இந்த பாதபூஜை கட்டாயமாக இல்லாவிட்டாலும் கூட மற்ற மதத்தை சார்ந்த மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர் என பிரகதியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ரீஜா கூறுகிறார். “பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், பிரகதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் பயில்வதாகவும்” அதன் முன்னாள் மாணவரான முர்ஷித் கூறுகிறார். ஒருபோதும் எதிர் பாலின மாணவர்களுக்கு இடையில் சகோதரத்துவ உறவு வளராமல் பிரகதி தீவிரமாகக் கண்கானித்ததால், முசுலீம் பெற்றோர்கள் இந்நிறுவனத்தைப் பெரிதும் நம்பினர். “இந்த நிகழ்ச்சிகள் யாவும் எங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல. என்றாலும் கூட பிரகதியில் நாங்கள் அதை வல்சன் மாஸ்டருக்காக செய்தோம்” என ஒரு முன்னாள் முஸ்லீம் மாணவி எங்களிடம் கூறினார்.

பிரகதியில் பிரிவு உபச்சார விழாக்கள் (farewell) பெரும்பாலும் ஆழமான உணர்ச்சியைத் தூண்டும் வண்ணமே நடத்தப்பட்டன. மற்ற இணைக் கல்லூரிகளின்  பிரிவு உபச்சார விழாக்களைப் போலல்லாமல், ஒவ்வொரு துறையும் தங்களது வகுப்பறையில் உள்ள ஜன்னல்கள் மற்றும் விளக்குகளை மூடி, ஒரு பாரம்பரிய பித்தளை விளக்கை ஏற்றிவைத்து அதனருகே சரஸ்வதி தேவியின் படம் வைக்கப்பட்டு இருக்கும். அங்கே “ஸ்லோகம் வாசிப்பதன் மூலம் விழா தொடங்குகிறது” “ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு அகல் விளக்கு வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரும் வளாகத்துக்குள் நுழைந்து விளக்கை அங்கே வைப்பார்கள். ஒருங்கிணைப்பாளரின் உணர்ச்சியைத் தூண்டும் விதமான உரையுடன் விழா முடிவடையும். பெரும்பாலான மாணவர்கள் கண்ணீருடன் வளாகத்தை விட்டு வெளியேறுவார்கள்” என்கிறார் ரீஜா. இந்த சடங்கானது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோடைக்கால பயிற்சி வகுப்பான “சங் சிக்‌ஷா வார்க்” என்ற இரவு நேர வகுப்பை ஒத்திருந்தது. இந்நிகழ்வில் அகண்ட பாரதத்தின் வரைபடம் தரையில் சுண்ணாம்புக் கோலால் (சாக்பீஸால்) வரையப்பட்டிருக்கும். புராணங்களில் வரும் முக்கிய இடங்கள், நகரங்கள் அந்த வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். பின்னர் “அங்கே விளக்குகள் அனைக்கப்படும். ஒவ்வொரு நபரும் இந்த வரலாற்று நகரங்களின் குறிக்கப்பட்ட இடத்தில் அகல் விளக்குகளை வைக்குமாறு பணிக்கப்படுவர். உணர்ச்சிகரமான பாடல்கள் பாடப்படும். இந்நிகழ்வு எங்களுக்கும் இழந்த இந்த நிலங்களுக்கும் இடையே ஒரு உறுதியான பிணைப்பை உருவாக்குகிறது” என்று பிரகதியில் பயின்று தற்போது ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

“பிரகதியில் படித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துத்துவா விவகாரங்களில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்றும் “அவர்கள் இந்துத்துவத்தைப் பரப்பாவிட்டாலும், அதை உறுதியாக எதிர்க்க மாட்டார்கள்; இந்த மாயைகளை உருவாக்கும் உத்தியால் முற்றிலுமாக அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்; மாணவர்களை விட்டுவிடுங்கள், அவர்களின் பெற்றோரிடம் கூட இதே எண்ணம்தான் உள்ளது” என்றும் கூறுகிறார், பிரகதியின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வந்த சிபிஐ(எம்) சித்தாந்தவாதி ஒருவர். மேலும், இந்தப் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அணிகளில் பெரும்பாலானோர் பிரகதியின் முன்னாள் மணவர்கள்தான் என்றும் அவர் கூறுகிறார்.

பிரகதி வேகமாக விரிவடைந்தது. 1990-களில், இது தாலுகா தலைமையகமான இரிட்டிக்கு மாற்றப்பட்டது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.ஏ, பி.காம், பி.பி.ஏ. மற்றும் எம்.காம் பட்டங்களை வழங்கியது. அரசு பணியாளர் தேர்வுகள், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விரிவான பயிற்சியை வழங்கும் ஒரு வேலைக்கு-வழிகாட்டும் நிறுவனத்தையும் (career-guidance) 2010-ஆம் ஆண்டில் பிரகதி தொடங்கியது. ஏறக்குறைய அனைத்து கேந்திரமான அரசுத் துறைகளிலும் பிரகதியின் முன்னாள் மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமைக்குச் சொந்தக்காரனாகியது. இரிட்டி நகரமும் இதற்கிடையில் பெருமளவில் மாற்றம் பெற்றது. இரிட்டியிலும் அதற்கு அருகமையிலுள்ள கிராமங்களிலும் பிரகதியில் படிக்கும் மானவர்களுக்கென 12-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உருவாகின. பிரகதியின் வகுப்பறைகளுக்குப் பக்கத்தில், படிக்க விரும்பும் பெற்றோர்களுக்காக இந்து புராணக் கடவுள்களின் பெயரால் பகல்நேரப் பராமரிப்பு மையம் (day care) ஒன்றும் புதிதாகத் தொடங்கப்பட்டது. பிரகதியால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை மற்றும் விளையாட்டு விழாவான சரகோத்சவத்தின் போது இரிட்டி நகரம் அடையாளம் தெரியாதவாறு உருமாறிவிடுகிறது. சினிமா நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்த விழாவின் கடைசி நாளில், மாணவர்களின் ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் வேத சின்னங்களைப் பதாகைகளில் ஏந்தியபடியும், புராண, இதிகாச கற்பனைக் கதைகளை நாடகமிட்டு காட்டியபடியும் இந்த ஊர்வலம் நகர் முழுவதும் செல்கிறது.

000

பிரகதி என்பது ஆர்.எஸ்.எஸ். மீது பொது மக்களின் நம்பிக்கையை அறுவடை செய்வதற்கான ஒரு வழி என்று வல்சன் தனது ஊழியர்களிடம் எப்போதும் அழுத்தமாகக் கூறுவார். “மாணவர்களின் பட்டியலை சரிசமமாக பிரித்து நிர்வாகம் ஆசிரியர்களிடையே அளிக்கிறது” “ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பட்டியலில் உள்ள மாணவர்களின் வீட்டிற்குச் செல்வார்கள். இது அவர்களின் குடும்பச் சூழலைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நாங்கள் அவர்களின் வீடுகளை ஆய்வு செய்கிறோம். படிக்கும் அறைகளைப் பார்க்கிறோம். மேலும் தெரிந்துகொள்ள பெற்றோருடன் தொடர்பு கொள்கிறோம்” என்று கூறுகிறார், முன்னாள் பிரகதி ஆசிரியர் ஒருவர். இது தவிர, ஒரு மாணவர் இரண்டு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால், அவர்கள் பிரகதி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது அவர்களின் குடும்பத்தினரை பிரகதியின் ஊழியர்கள் தொடர்பு கொள்வார்கள். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரை தொலைதூர கிராமத்தில் உள்ள அவரின் வீட்டுக்கே சென்று வல்சனும் இன்னும் 5 ஊழியர்களும் விசாரித்ததைப் பற்றி பிரகதியின் முன்னாள் மாணவரான அவர் பின்வருமாறு கூறுகிறார் : “வீட்டின் வாசலில் இருந்த சிறிய பலகையில் அவர்கள் வந்து அமர்ந்தனர்” “எனது தந்தையிடம் ஒரு நீண்ட உரையாடலை அவர்கள் நிகழ்த்தினர். தேவைப்பட்டால் உதவுவதாகவும் தெரிவித்தனர். இந்த செயல்களால் என் தந்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார்” என்கிறார் அவர். வழியில் எதேச்சையாக மாணவர்களின் பெற்றோர்களைக் கண்டாலும் பெரும்பாலான பிரகதியின் ஆசிரியர்கள் அவர்களோடு நீண்ட உரையாடலை நிகழ்த்தினார்கள். “நாங்கள் ஒரு குடும்பம் போல நடத்தப்பட்டோம்” என்கிறார் அம்மாணவர். இதன் விளைவாக, பிரகதியில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. கிறிஸ்துவர்கள், முசுலீம்கள், பிற அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என யாருடைய வீட்டில் ஒரு திருமணமோ இறப்போ நேர்ந்துவிட்டால், தான் அழைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாவிட்டாலும் ஒரு நிகழ்வைக் கூட தவறவிடாமல் அனைத்திலும் கலந்துகொள்வார், வல்சன். தனது சொந்தப் பெற்றோர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் “அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர்” என்று பிரகதியின் முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகிறார்.

வல்சன் தனது மாணவர்களுடன் கட்டியெழுப்பிய இந்த குடும்ப ரிதியிலான பிணைப்பு, அவர்கள் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகும் நன்றாகத் தொடர்ந்தது. தனது அரசியல் செல்வாக்கைச் செலுத்துவதற்கான மிகப் பரந்த வலைப்பின்னலாகவும் ஆதாரமாகவும் இந்தத் தொடர்புகள் இறுதியில் மாறின. “ஒருமுறை ஒருவரைச் சந்தித்தாலும் அவர்களின் பெயர்களை மறக்கமாட்டார்” “அவர் காட்டும் அன்புக்கும் அக்கறைக்கும் ஈடாக அவருக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் அளவுக்கு விசுவாசியாக ஒரு நபர் மாறிவிடுவார்” என்கிறார் பிரகதியின் பழைய மாணவர் ஒருவர். கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் அடிக்கடி மருத்துவமனைகளில் சேர்க்குமளவுக்கு காயங்களும் சேதங்களும் ஏற்படும் காலமான, அவரது கல்லூரிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் செயல்பட்ட நாட்களை அவர் நினைவு கூர்ந்தார். அத்தகைய மோதல்கள் நடக்கும்போது பிரகதியின் மாணவர்கள் வல்சனுக்கு தகவல் கொடுப்பார்கள். வல்சனும் அந்தப் பகுதியில் உள்ள பிற ஏ.பி.வி.பி மாணவர்களுக்கு தமது ஆட்கள் மூலம் எச்சரிக்கை விடுப்பார். “அவர்கள் 3-4 கி.மீ தொலைவில் உள்ள என் வீட்டிற்கு நடந்தே வந்து அந்த மோதல்களைப் பற்றித் தகவல் கூறுவார்கள்” “பின்னர் நாங்கள் பிரகதிக்குச் செல்வோம். அங்கே வல்சன் எங்கள் மருத்துவத்திற்கு தேவையான செலவுகளை ஏற்பாடு செய்து கொடுப்பார். வேறு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் சேர்ந்து நேரடியாக வந்து கல்லூரி வளாகத்தைப் பார்வையிடுவார்.” என்கிறார், அந்தப் பழைய மாணவர்.  

முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரராகவும் வல்சனின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து, பின்னர் 2018-இல் சி.பி.எம். கட்சியில் இணைந்தவருமான மின்னி என்பவரை, கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கல்விச் செயல்பாடுகளின் விரிவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் சந்தித்தோம். மெல்லிய தலை முடிகளையும் தாடியையும் கொண்ட மின்னியின் இரண்டு தொலைபேசிகளும் அடிக்கடி ஒலித்த வண்ணம் இருந்தன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயல்பட்டு தற்போது அதிலிருந்து விலகி அதற்கெதிராக போர் புரியத் தொடங்கிய சிலர் மின்னியை தொலைபேசியில் அடிக்கடி அழைத்துப் பேசினர். அவர் தனது மகளுடன் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். தனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இருந்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைப் பற்றி தான் அறிந்தவற்றை அவர் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், வருந்தத்தக்க நிகழ்வுகள் வரும்போது இடையிடையே கவிதைகளையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கூறினார். வித்யா பாரதி என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கல்வி சார் பிரிவு நாடு முழுவதும் செயல்படும் மிகப்பெரிய தனியார் கல்வி நிறுவன வலைப்பின்னலாகும். அது 3,000-க்கு மேற்பட்ட பள்ளிகளையும் 32 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்டு இயங்கிவருகிறது. அந்த நிறுவனமானது கேரளாவில் “வித்யா நிகேதன்” என்ற பெயரில் இயங்குகிறது. இங்குதான் ஆர்.எஸ்.எஸ். மின்னியை முதலில் நியமித்தது.

“ஆதிவாசிகள், பழங்குடிகள் மற்றும் சேரிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களிடையே வேலை செய்வதற்காக ஆர்.எஸ்.எஸ்.ஸானது “ஏகலைவா வித்யாலையாஸ்” என்ற அமைப்பை நடத்துகிறது” “தற்போது ஆர்.எஸ்.எஸ். கேரளா முழுவதும் 600 ஏகலைவா வித்யாலயாக்களை நடத்தி வருகிறது. முக்கியமாக ஆதிவாசிகள் அதிகமுள்ள பகுதிகளிலும் அட்டப்பாடி, இடுக்கி, வயநாடு போன்ற பகுதிகளிலும் இவை இயங்குகின்றன” என்கிறார், மின்னி. மின்னி இங்கே வேத கணிதத்தைக் கற்பித்தார். வேத கணிதம் என்பது பண்டைய இந்தியாவில் செய்யப்பட்டு வந்த எளிய கணித முறை என்று கூறப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்புகள் நடந்த பகுதி என்று 2021 இல் செய்தி வெளியான அட்டப்பாடி பகுதியில்தான் மின்னி ஒரு உயர்நிலைப் பள்ளியில் கணிதம் கற்பித்தார். மூன்று வகுப்புகளுக்குப் பிறகு, வகுப்பைப் பற்றிய கருத்துக்களை தங்கள் பெயர் மற்றும் முகவரியோடு எழுதித் தருமாறு மாணவர்களிடையே மின்னி கூறினார்.

“நான் இன்னொரு ஆர்.எஸ்.எஸ்.காரரோடு சேர்ந்துகொண்டு அந்த பட்டியலை தரம் பிரித்தேன். அந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நாங்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்தோம். வார இறுதியில் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் வீட்டில் நடக்கும் புராண வகுப்புகளுக்கும் அவர்களை அழைத்தோம்” என்கிறார் மின்னி. அந்த வீடு பூக்களல் அலங்கரிக்கப்பட்டது. கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுளர்களின் சிலைகள் அங்கே வைக்கப்பட்டன. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரசாதம் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பும் தொடங்கப்பட்டது. மின்னியும் பிற பிரச்சாரகர்களும் பின்னர் அக்குடும்பங்களில் நிகழ்த்தப்பட்ட பூஜைகளுக்குச் செல்லத் தொடங்கினர். மின்னியின் குறுகிய காலச் செயல்பாட்டில் அட்டபாடியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பூஜைகளை அவர் நடத்தியுள்ளார். “இந்த வகுப்புகளின் போது, முசுலீம்கள், கிறுத்துவர்களின் குடியேற்றத்தினால் [கேரளத்தில் இந்துக்களுக்கு] அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் கட்டுக் கதைகளை நாங்கள் புணைந்து கூறுவோம். இந்துவாக இருப்பதிலும் இந்துவாக உணர்வதிலும் உள்ள பெருமித உணர்வை நாங்கள் அவர்களிடையே விதைப்போம்” என்கிறார், மின்னி.

இதே பாணியில் ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்துதான் மின்னியும் வந்துள்ளார். வல்சானால் நிகழ்த்தப்படுவதையொத்த ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் தான் இளைஞனாக இருந்தபோது இரிட்டியில் நடத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். “அருகாமையில் உள்ள கோயில்களிலும், பள்ளிக்கூடங்களிலும் சிறிய நிகழ்வுகள் நடத்தப்படும்போதெல்லாம், இராமயாணம், மகாபாரதம், பஞ்சதந்திரக் கதைகள் என இவற்றிலிருந்து வல்சன் நிறைய குட்டிக் குட்டிக் கதைகளைக் கூறுவார். தனது சிறந்த கதை சொல்லும் திறமையின் மூலம் இந்தக் கற்பனைக் கதைகளை தனது பேச்சைக் கேட்பவர்கள் நம்பும் வண்ணம் அவரால் கூற முடியும். இந்தக் கற்பனைக் கதையில் வரும் பாத்திரங்கள் அரசியல் கருவியாக காண்பிக்கப்படும். ஒருவர் வெறுமனே இந்துத்துவக் கதைகளைக் கேட்பதற்கும் படிப்பதற்கும் மாறாக, இந்துத்துவத்தை ஏன் நடைமுறையில் அமல்படுத்த வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறுவார். இந்தக் கற்பனைக் கதைகளுக்கு ஒரு ஆழமான பொருளைக் கற்பிப்பதற்கு அவர் பெரும் முயற்சியெடுத்தார். இந்தக் கதைகளின் சிறு சிறு துணுக்குகளை மட்டுமே அறிந்திருந்த மக்களுக்கு இவற்றைப் பற்றிய முழுமையான விளக்கத்தைக் கொடுப்பார்.” என்று இச்சம்பவங்களை நினைவு கூறுகிறார், மின்னி.

வேறொரு ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இதே பாணியிலான பேச்சுதான் மின்னியின் தாய் மின்னியை சாகாவில் சேர்க்கக் காரணமாக அமைந்தது. “நான் ஸ்லோகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும்; அவற்றைக் கூட்டங்களில் பாடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் என் தாய் என்னை அறிவுறுத்தினார். குழந்தையாக இருக்கும்போதே நான் புராணங்களை அறிந்திருந்தேன். குழந்தையாக இருக்கும்போதே இந்த தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றும் அதுதான் என் தாய்க்கும் பெருமை சேர்க்கும் என்றும் கருதியிருந்தேன். [இப்போது எண்ணிப் பார்க்கையில்] நான் முற்றிலுமாக மூளைச் சலவை செய்யப்பட்டிந்தது போல உணர்கிறேன். சாகா வகுப்புகளுக்குள் நுழைந்த பிறகு, பெரும்பாலான குழந்தைகள் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டடனர்; அங்கீகரிக்கப்பட்டனர். அதன் பிறகு ஆண்டுகள் எவ்வாறு கழிந்தன என்பதே தெரியவில்லை” என்கிறார், மின்னி. “தனது ஒவ்வொரு உரையின்போதும் வல்சன் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். வல்சனை நாற்பது ஆண்டுகளாக அறிந்திருந்த ராஜேஷ் என்பவர் என்னிடம் “வல்சன் பொறுமையான குணமுடையவார்கவும் இயல்பிலேயே வசீகரத் தன்மையுடையவராகவும் இருக்கிறார்” என்று தன்னிடம் கூறியதாக் கூறுகிறார், மின்னி. வல்சனின் புகழ் அந்தப் பகுதி முழுவதிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. தனது பெயருடன் “தில்லங்கேரி” என்ற ஊர் பெயரையும் பின்னர் சேர்த்துக் கொண்டார். இந்தப் பெயர் பா.ஜ.க.வின் முன்னாள் கேரள மாநிலத் தலைவராகவும் வல்சனின் குருவாகவும் இருந்த கே.ஜி.மாரார் என்பவரால் தனக்கு சூட்டப்பட்டதாக வல்சன் அடிக்கடி கூறுவார்.

இந்தக் காலகட்டத்தின் போது வேறு சில ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் கண்ணூர் மாவட்டத்தில் அமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். புன்னாட்டிற்கு வெளியிலுள்ள தனது வாழைத் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த வழியில், முன்னாள் ஆர்.எஸ்.எஸ். கார்யவாஹான (ஷாகாகளின் பொறுப்பாளர்) கிருஷ்ண குமார் என்பவரைச் சந்தித்தோம். அவர் தனது வகுப்பு நண்பரும் சக ஆர்.எஸ்.எஸ்.காரராகவும் இருந்த அஸ்வினி குமார் என்பவரைப் பற்றிக் கூறினார். வல்சனுக்கு இணையாக அஸ்வினி குமாரும் கண்ணூரின் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் நபராக இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியமான பதிலி அமைப்பாக கேரளத்தில் இருந்த ஒரு அமைப்பின் தலைவராக அவர் வளர்ந்துகொண்டிந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ். கேரளாவில் மக்களிடையே குறைவான வரவேற்பையே பெற்றிருந்ததை அவ்வமைப்பே அங்கீகரிக்கும் விதமாக, இந்து ஐக்கிய வேதி (இந்துக்களின் ஐக்கியத்திற்கான மேடை) என்ற ஒரு புதிய அமைப்பொன்று தொடங்கப்பட்டது. இன்றுவரை அதுதான் பொது மக்களை நேருக்கு நேர் எதிகொள்ளும் பணியை [ஆர்.எஸ்.எஸ்.ஸின் பதிலியாக இருந்துகொண்டு] செய்துவருகிறது. இவ்வமைப்பு தமிழ்நாட்டில் உள்ள இந்துமுன்னணியைப் போன்றதாகும். அவ்வமைப்பின் நோக்கம் என்று கூறப்படுவது “இந்து அமைப்புகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் திரட்டுவது” என்பதுதான். வல்சன், அஸ்வினி குமார் போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களாலும், கே.பி. சசிகலா போன்ற சில ஆர்.எஸ்.எஸ்.ஸில் இல்லாத இந்துத்துவ தேசியவாதிகளாலும் அவ்வமைப்பு நடத்தப்பட்டது.

பிரகதியில் கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளோடு, கீதா கிராமம் என்ற மிகப்பெரிய புதிய நடவடிக்கையை கிருஷ்ண குமார் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காகத் தொடங்கினார். கம்யூனிஸ்டு கிராமங்களில் மிகவும் மோசமான நிலையிலுள்ள கிராமங்களை ஏளனம் செய்வதுதான் கீதா கிராமம் என்ற நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸானது பகவத் கீதை பற்றிய கதைகளை ஊட்டி வளர்த்தது. இந்த சோதனை முயற்சியானது வியத்தகு பலனை அளித்தது. கீதா கிராமங்களிலிருந்து கடிதங்களும் அழைப்புகளும் [ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு] வந்தன. “இந்த முன்முயற்சியை வல்சன் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குள் எப்போதும் முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் தனது சொந்த மூளையால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு போல அவர் தனது பேச்சுக்களில் இதைக் குறிப்பிடுவார்” என்கிறார் கிருஷ்ண குமார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் வல்சன் வகித்த பதவி மிகவும் சாதரணமானதாகவே நீடித்தது என்றாலும் கூட, வட கேரளத்தின் ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்பு முழுவதிலும் தலையிடுவதற்கும் நிர்வாகம் செய்வதற்கும் அவர் அனுமதிக்கப்பட்டார். இத்தகைய நிலைமைக்குப் பின் ஒரு தேர்ந்த நிர்வாகியாக அவர் ஆர்.எஸ்.ஸுக்குள் செயல்படத் தொடங்கினார். முன்னுதாரணமிக்க வகையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையும் அவரது பேச்சுத் திறமையையும் ஆர்.எஸ்.எஸ். நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. தனது வண்ண ஜாலமிக்க பேச்சுக்களாலும் நகைச்சுவைத் திறனாலும் இரிட்டியின் அடுத்த சில தலைமுறை இளைனஞர்கள் மீது வல்சன் செல்வாக்குச் செலுத்தினார்.

அட்டப்பாடிக்கு அடுத்தபடியாக, மதச்சர்பற்ற பள்ளிகளுக்கும் கிறுத்துவ, முசுலீம் நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும் மின்னியை ஆர்.எஸ்.எஸ். அனுப்பியது. வேத கணிதத்தைக் கற்றுக் கொடுத்த அதேவேளையில் இப்பள்ளிகளில் உள்ள இந்து மாணவர்களைப் பட்டியெலெடுத்து, அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தையும் அணுகினார், மின்னி. பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கூட மின்னி வரவேற்கப்பட்டார். கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரா என்ற பகுதியில் உள்ள ராணி பொதுப் பள்ளி என்ற பள்ளியில் சுமார் 9 மாதங்கள் அவர் வேத கணிதத்தை இலவசமாகக் கற்றுக் கொடுத்தார். இதற்கிடையில், அங்கு பயின்ற வட இந்திய மாணவர்களின் பெயர்கள், முகவரிகளைச் சேகரித்து, அவர்களை அணுகி, ஆர்.எஸ்.எஸ்.ஸால் நடத்தப்பட்ட பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் (என்.ஜி.ஓ) அவர்களை உறுப்பினர்களாக்கினார். “குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பட்டியலை நான் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அனுப்பியுள்ளேன்” என்கிறார் மின்னி. அவரைப் போலவே இன்னும் நிறைய பேர் கேரளாவில் செயல்படுவதாகவும், அவர்களெல்லோரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கேரள வட்டாரத்தில் “சாணக்கியர்கள்” என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார். “[இத்தகைய] சாணக்கியர்கள் என்று அறியப்பட்ட 900 ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள் குறைந்தபட்சம் கேரளா முழுவதும் இயங்கி வருகின்றனர். கேராளத்தின் பள்ளிகளில் ஊடுருவுவதும் அப்பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிடிக்குள் கொண்டுவருதும்தான் அவர்களின் வேலைத்திட்டமாகும்” என்கிறார், மின்னி. வல்சனோ, பிரகதியோ, ஆர்.எஸ்.எஸ்.ஸோ யாரும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அனுப்பிய விரிவான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

வல்சன், மின்னி [அவர்களைப் போன்றவர்களின்] செயல்பாடுகளின் விளைவாக [மூளைச்சலவை செய்யப்பட்டு] வென்றெடுக்கப்பட்ட புதிய நபர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குள் நுழைந்த பிறகு, அவர்கள் எதை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தார்களோ அந்த அமைதி, அக்கறை, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு மாறாக வேறுபட்ட ஒரு உலகத்தைக் கண்டார்கள்.

(தொடரும்..)

கார்த்தி

 

 

 

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. மே.வங்கம், கேரளா போன்ற இடங்களில் இலக்கு வைத்து RSS வளர்ந்துள்ளது. குறிப்பாக முன்னாள் CPM MLA -க்கள் அதிகமாக RSS க்கு சென்றுள்ளனர்.