உத்தரப்பிரதேச ஹத்ராஸ் மாவட்டத்தின் அருகில் உள்ள புல்ராய் முகல்குடி கிராமத்தில் போலே பாபா என்கிற இந்து ஆன்மீக சாமியார் நடத்திய நிகழ்வில் 120-க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி சாவைத் தழுவியுள்ளனர் என்ற கொடூரத்தை எவரும் அறியாமல் இருக்க முடியாது.
இது போன்ற சாவுகள், கொலைகள் நீக்கமற நடந்து வருவதோடு, இது வரை 2000-க்கும் மேற்பட்டவர்களின் மரண ஓலங்கள் நமது செவிப்பறைகளைக் கிழிக்காமல் இல்லை. இவை அனைத்தும் கண்டனங்களால், அறிவுரைகளால் கடந்து விடுகின்றன. தீர்வுகளோ, முடிவுக்கு கொண்டு வரவும் முடியவில்லை;முடியாது.
மதுவை ஊத்திக் கொடுத்து மக்களின் சிந்தனைகளைச் சீரழிப்பது போல, மத போதையையூட்டி மக்களின் வர்க்கப் உணர்வை சிதைத்து வரும் ஆளும் வர்க்கம் + ஆட்சியாளர்களின் கள்ளக் கூட்டை ஒழிக்காமல் இது போன்ற மரண ஓலங்களை நிறுத்த முடியாது.
நடந்து முடிந்த சம்பவங்களின் விவரங்களைத் தொகுத்தாலே உண்மை என்னவென்று விளங்கிவிடும். அதிலிருந்து ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியும்.
போலே பாபா என்கிற சூரஜ் பால் பாலியல் குற்றத்திற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவன். மேலும், கார்ப்பரேட் பணத்தின் சாமியார் வேடம் தரித்து, சகல வசதிகளுடன், சொகுசு வாழ்க்கையுடன் வலம் வருபவன். இது போன்ற ஆன்மீகக் கூட்டங்களை வரம்புக்கு மீறிய வகையில் ஒரு பாலியல் குற்றவாளி ஆன்மீகப் பெயரில் தொடர்ந்து நடத்தி வருபவன் என்பதை ஆட்சியாளர்கள் அறியாமல் இல்லை. அவனை வழிபடாதவர்களும் இல்லை, ஆசி பெறாதவர்களும் இல்லை. இவையெல்லாம் அறிந்தும், அறியாமல் இருப்பது போல் நடிப்பது, நாடகமாடுவது என்கிற கேள்வியை இவர்களிடம் எழுப்பாமல் இருந்தால், விடிவும் பிறக்காது; இதற்கு எதிராக போராடாமல் இருந்தால் முடிவும் காண முடியாது.
நிவாரணம், நீதி விசாரணை, குற்றவாளிகள் தண்டிப்பு போன்றவைகளால் நடந்து முடிந்த மது கொலைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டன. போலே பாபாவால் நிகழ்த்தப்பட்ட இந்த இந்து மத ஆன்மீக கொலையும், சாமியார் -யோகி ஆதித்யநாத்து அறிவிப்புகளால் முடித்து வைக்கப்படும். தப்பித்து, விட்டதாகக் கூறப்படும் பாலியல் குற்றவாளி போலே பாபாவும், அவனது மனைவி மாதாஜியும் இந்துமத ஆன்மீக சாமியார்கள் என்பதால், இந்த கோர சம்பவம் சமூக விரோதிகளின் செயல் எனச் சொல்லி, அவர்களை நிரந்தரமாக இந்த கொலை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க, அனைத்து சதி வேலைகளையும் மேற்கொண்டு வருகிறது சாமியார் – யோகி ஆதித்யநாத் அரசு.
பரமாத்மா, ஜீவாத்மாக்களைக் காப்பாற்றுவது இந்துமத ஆன்மீக தர்மம். இதை வரித்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வரும் இந்துமத ஆன்மீக சாமியார் போலே பாபா, தன்னை நம்பிவந்த பக்தர்கள் (ஜீவாத்மாக்கள்) மிதிபட்டு சாவும் போது, செத்து கிடக்கும் போது ஓடி ஒளியும் இவனெல்லாம் ஒரு இந்து ஆன்மீக சாமியாரா? என்கிற குறைந்தபட்ச கேள்வியைக் கூட இந்துமத காவலர்களான மோடியும், அதன் சங்பரிவாரங்களும் எழுப்பவில்லை. மது கொலைக்கு காரணமான ஸ்டாலினை பதவி விலகும்படி கர்ஜித்து அண்ணாமலையும், எடப்பாடியும், இவர்களின் கூட்டாளிகளும் இந்து மத ஆன்மீக சாமியார் போலே பாபா பிரச்சாரத்தில் ஏற்பட்ட மத கொலைக்கு காரணமான யோகி ஆதித்யநாத்’தை பதவி விலகும் படி ஏன்? கர்ஜிக்கவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
ஆளும் கட்சியாக இருக்கும் போது அடக்கி வாசிக்கும், எதிர்க்கட்சியானால் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகள் இச்சமூகத்தின் கேடுகள். இவற்றை துடைத்தெரியாமல் மது – மதவெறி மரண ஓலங்களை நிறுத்த முடியாது.
சமூகத்தைப் பிளந்திருக்கும் வர்க்கப் பகைமையை, அதையொட்டி எழும் வர்க்கப் போராட்டங்களை மது போதையும், மத போதையும் மூடி மறைப்பதோடு, அதன் வர்க்க கோபத்தையும் நீர்த்துப்போக வைக்கும். இந்த சமூக கேடுகளை ஒழித்துக் கட்ட சமூகப் புரட்சி தேவையிருப்பினும், இதற்கு ஒரு முன்னோட்டமாக, மாற்றத்தை நேசிக்கும் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க மது போதையையும் – மத போதையையும் ஒழித்தாக வேண்டும்.
இதற்கு டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களைப் போல, மத போதனை என்ற பெயரில் மத போதையை ஊட்டும் அயோக்கியப் பேர்வழிகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை பெருந்திரள் மக்களால் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டும். இதன் மூலமே, மது போதையால், மத போதையால் நடந்தேறும் மரண ஓலங்களை நிறுத்த முடியும்.
- மோகன்
வட மாநிலங்களில் கடவுள் பெயரியல் கொள்ளையடிப்பது அதிகமாக உள்ளது. சிந்தப்பது, பகுத்தறிவு எல்லாம் அறியாத மக்களாக உள்ளனர்.