அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே!
இந்தியப் புரட்சிகர இயக்கத்தில் தோன்றிய வலது, இடது சந்தர்ப்பவாதங்களைத் திரைகிழித்து உதித்தெழுந்த மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க (மா-லெ)-வை நிறுவி அதற்கு, அரசியல்-சித்தாந்த ரீதியாகத் தலைமையளித்தவர்களில் முதன்மையானவராகவும் அணிவேராகவும் திகழ்ந்த, நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதன் 17.06.2024 அன்று வயதுமூப்பு, உடல்நலப் பிரச்சனையால் தனது 74-ஆம் வயதில் மறைந்தார்.
1925-இல் தோன்றிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியானது, நாட்டுக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருந்து புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, காங்கிரசின் வாலாகச் சீரழிந்து போனது; வலது சந்தர்ப்பவாதச் சகதியில் சிக்கிக் கிடந்தது. அதிலிருந்து பிளவுபட்டு உருவாகிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)-உம் சாராம்சத்தில் அதன் நகலாகவே போனது. அணிகளின் அளப்பரிய தியாகமும் தலைமையின் துரோகமும் நிறைந்ததுதான் அதுவரையிலான இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு என்று ஒரு வரியில் கூறலாம்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிச இயக்கத்தைக் கவ்வியிருந்த வலது சந்தர்ப்பவாதக் காரிருளைத் திரைகிழித்து 1967 மே 25-இல் வசந்தத்தின் இடிமுழக்கமென எழுந்தது, நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி. அதைத் தொடர்ந்து 1969 ஏப்ரல் 22-இல் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற ஆசான் லெனினின் பிறந்தநாளில் தோற்றுவிக்கப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) நாட்டுக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருந்து புரட்சியை முன்னெடுத்துச் சென்றது. இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஆளும் வர்க்கங்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த நமது இ.பொ.க (மா-லெ)-வானது பிறந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே இடது சாகசவாதத்துக்குள் சிக்குண்டு போனது.
“தனிநபர்களை அழித்தொழிப்பது” என்ற ஒரே போராட்ட வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட இடது சாகசவாதப் பாதையின் விளைவாக மக்களிடமிருந்து கட்சி அந்நியப்படுவதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நரவேட்டையாடத் தொடங்கின. இ.பொ.க (மா-லெ)-வின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அப்பு என்கிற அற்புதசாமி போன்ற பல தலைவர்கள் தியாகிகளாயினர். பின்னர் 1972-இல் தோழர் சாரு மஜூம்தாரும் தியாகியானார். சாருவின் மறைவுக்குப் பிறகு கட்சி முதலில் பல மையங்களாகவும் பின்னர் பல குழுக்களாகவும் சிதறுண்டு போனது. அரசின் அடக்குமுறை கோரத் தாண்டவமாடிய காலம் அது. நக்சல்பாரி அணிகளிடையே குழப்பமும் சந்தேகமும் அவநம்பிக்கையும் பெருகின. இடது சாகசவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் இ.பொ.க. (மா-லெ)-வின் அடிப்படை நிலைப்பாடுகளின் மீதே அவதூறுகள், கேள்விகள் எழுப்பப்பட்டு மீண்டும் தேர்தல் பாதைக்குச் திரும்ப வேண்டுமென்ற வாதங்களும் இயக்கத்தில் கிளம்பின.
1971-இல் அன்றைய கருணாநிதி அரசு தலைமையிலான போலிசால் தோழர் அப்பு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தோழர் அப்புவின் மரணத்தை போலிசும் அரசும் இரகசியமாக வைத்திருந்தது. அவரின் மறைவுக்குப் பிறகு கட்சியின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஏ.எம்.கே., உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். கணி, புலவர் கலியபெருமாள் போன்றவர்களை உள்ளடக்கி புணரமைக்கப்பட்ட மாநிலக் குழுவோ கோட்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க முயலாமலும் அணிகளிடையே உருவாகிவந்த அதிருப்தி, அவநம்பிக்கையைக் களைய முயலாமலும் குழப்பத்தில் மூழ்கிப்போய் செயலின்மையில் இருந்தது. இந்த தமிழ்நாடு மாநிலக் குழுவின் கீழ் ஒரு பிராந்தியக் (மேற்கு) குழுவில் அங்கம் வகித்தவர்தான் தோழர் கபிலன் ஆவார்.
மொத்தத்தில் கட்சிக்குள் இடது சாகசவாதத்தை முறியடிக்காமல் கட்சி ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது தேங்கி நின்றது. அதேசமயம் “மக்கள் திரள்” பாதை என்ற பெயரில் மீண்டும் சில வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைத்துக்கத் தொடங்கியிருந்தன. இ.பொ.க(மா-லெ)-வின் தேக்கத்தை உடைத்து புரட்சிகரமான மக்கள்திரள் வழியை வகுத்து புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மகத்தான கடமை அப்போது கட்சியின் முன் நின்றது. இந்த மகத்தான பணியை தன் தோள்களில் ஏந்திக் கொண்டவர்தான், தோழர் கபிலன். இது மிகையல்ல வரலாற்று உண்மை!
வரலாற்றைத் தனிநபர்கள் தமது விருப்பத்திற்கேற்ப உருவாக்குவதோ தீர்மானிப்பதோ இல்லை என்பது முற்றிலும் உண்மையே; ஆனாலும்,
“மகத்தான ஒரு மனிதர் மகத்தானவர்தான். ஏனென்றால், பொதுவான மற்றும் குறிப்பான காரணங்களில் இருந்து எழுகிற தான் வாழும் காலத்தின் மகத்தான சமூகத் தேவைகளுக்கு ஏற்பச் சேவையாற்றும் சிறந்த தகுதிகளை அவர் கொண்டிருப்பதால் அவர் மகத்தான மனிதாராகிறார். … ஒரு மகத்தான மனிதர் துல்லியமானதொரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறார். ஏனென்றால், அவர் மற்றவர்கள் பார்ப்பதை விடவும் நெடுந்தொலைவு பார்க்கிறார். விசயங்களை மற்றவர்கள் விரும்புவதை விடவும் மிகவும் உறுதியாக விரும்புகிறார்.” – என்பார் பிளக்கானவ்
ஆம்! அன்று பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முன்னின்ற மகத்தான கடமைகளை நிறைவேற்றும் தகுதிகள் கொண்டவராகவும், மற்றெவரையும் விட புரட்சியை நெடுந்தொலைவு பார்க்கக் கூடியவராகவும், அதை உறுதியாக விரும்பக் கூடியவார்காவும் தோழர் கபிலன் திகழ்ந்தார்.
தனிநபர் அழித்தொழிப்பு என்ற சாகசவாதப் பாதையை எதிர்ப்பதாகக் கூறிய பலரும் ஒன்று தேர்தலுக்குள் சறுக்கி விழுந்தனர். வேறுசிலர் வெளிப்படையான மக்கள்திரள் அமைப்புகளைக் கட்டி பொருளாதரப் போராட்டத்தையே போர்க்குணமாக நடத்துவதும், அத்துடன் கட்சித் திட்டத்தையும் பிரச்சாரம் செய்து மக்களைத் திரட்டுவதையே மக்கள் திரள் பாதை என்று செயல்பட்டனர். மக்கள் திரள் அரங்குகளைக் கட்டுவதும், வெளிப்படையாக மக்களை அணிதிரட்டிப் போராடுவதும் மட்டுமே மக்கள் திரள் பாதையல்ல. புரட்சிக்கு மக்களைத் திரட்டும் போர்த்தந்திரம், செயல்தந்திரத்தை மையப்படுத்திய வேலைமுறையும் மக்களைத் திரட்டும் முறையும் தேவை; அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டுவதுதான் உண்மையான மக்கள்திரள்பாதை என்பதை முதன் முதலாக இந்தியாவில் பிரகடனம் செய்தவர், தோழர் கபிலன்.
இந்தியப் புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் அதுகாறும் புறக்கணிக்கப்பட்டிருந்த போர்த்தந்திரம், செயல்தந்திரத்தின் மகத்தான முக்கியத்துவத்தை வெளிக்கொணர்ந்ததும்; அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டுவதுதான் உண்மையில் மக்கள்திரள் பாதை என்று நிலைநாட்டியதும்; அதன்படி மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டி புரட்சியை முன்னெடுத்ததும்தான் தோழர் கபிலனின் பங்களிப்புகளிலேயே முதன்மையான முக்கியத்துவமுடையதாகும்.
“செயல்தந்திரத்தை மையப்படுத்திய பாதை” என்ற இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் எமது அமைப்புகள் 1980-களில் “காங்கிரசு பாசிசத்தையும் இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிப்போம்” என்பதையும்; 1990-2015 இல் “பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தையும் நாடு மறுகாலனியாவதையும் முறியடிப்போம்” என்பதையும்; 2015-இல் “கட்டமைப்பு நெருக்கடி” என்பதையும் செயல்தந்திர முழக்கங்களாக முன்வைத்து அதன் அடிப்படையில் மக்களைப் புரட்சிக்குத் திரட்டியது; இந்த செயல்தந்திர முழக்கங்களின் கீழ் எண்ணற்ற மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து தமிழகத்திலேயே மிகப்பெரிய நக்சல்பாரி அமைப்பாக மா.அ.க. எழுந்து நின்றது. மேற்சொன்ன அனைத்து செயல்தந்திரங்களையும் எழுதி வைத்து நிறைவேற்றியதில் முதன்மையான பாத்திரம் ஆற்றியவர் தோழர் கபிலன் ஆவார். மாநில அமைப்புக் கமிட்டியின் அரசியல்-சித்தாந்த ரீதியான ஆணிவேராகவும் இந்தியப் புரட்சியின் திசைவழியை வகுத்து வழிநடத்திய மகத்தான தோழராகவும் விளங்கினார், கபிலன்.
இத்தகைய பார்வையை கருவடிவில் கொண்டவைதான் 1974 முதல் 1977 வரையில் அவர் அங்கம் வகித்த மேற்கு பிராந்தியக் குழுவால் எழுதப்பட்ட “பிராந்தியக் குழு ஒன்றின் நகலறிக்கை”, “இடது தீவிரவாதத்துக்கு எதிராக”, “அன்புக்குரிய தோழர் கோதண்டராமனுக்கு” ஆகிய ஆவணங்களாகும்.
தமிழ்நாடு மாநிலக் கமிட்டி மேற்குப் பிராந்தியக் குழுவை வெளியேற்றிய பிறகு, 1976 ஜனவரியில் முதல் பிளீனம் நடத்தப்பட்டு மாநில அமைப்புக் கமிட்டி (இ.பொ.க (மா-லெ)) உருவெடுத்தது. முதல் மா.அ.க.வின் செயலராகப் பொறுப்பேற்றவர் தலைமையில் மீண்டும் “தேர்தலைப் பயன்படுத்துவது” என்ற பெயரில் வலது சந்தர்ப்பவாதம் தலைதூக்கியது. அப்போது தோழர் கபிலனும் தோழர் அன்பழகனும் இணைந்து அதை முறியடித்தனர். அதன் பிறகு கட்சியின் இரண்டாவது பிளீனத்தில் இரண்டாவது செயலராகத் தோழர் கபிலன் தேர்வு செய்யப்பட்டார்.
முதலாவது பிளீனத்திற்கு பின்னர் தலைதூக்கிய வலது சந்தர்ப்பவாதத்தை முறியடித்த இரண்டாவது பிளீனம் கட்சியின் அரசியல் சித்தாந்த நிலைப்பாடுகளை வகுத்தளித்து வைக்கும் கடமையை அமைப்பு முன்வைத்தது. அதற்குள்ளாகவே மீண்டும் 1979 வாக்கில் கட்சிக்குள் சில ஓடுகாலிகள் தலைமையில் வலது சந்தர்ப்பவாதப் போக்கு தலைதூக்கியது. இதனை முறியடித்ததிலும், கட்சி முன்வைத்த கடமையை நிறைவேற்றவும் இந்தியப் புரட்சிக்கான பருண்மையான மா-லெ கோட்பாடுகள், நிலைப்பாடுகளை ஐந்து ஆவணங்களாக [இரு முக்கிய முடிவுகள், இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம், வர்க்கப் போராட்டத்தின் கேந்திரக் கண்ணி, இந்திய சமுதாயத்தின் அடிப்படை முரண்பாடுகளும் பிரதான முரண்பாடும், இந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும்] எழுதி முன்வைத்ததிலும் பிரதானப் பங்காற்றினார்.
சர்வதேச ரீதியில் 1976-இல் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான தலைவர் மா-சே-துங் இன் மறைவிற்குப் பிறகு பதவியேற்ற தெங்-சியாவோ-பிங் கும்பலானது சீனத்தை முதலாளித்துவப் பாதைக்குக் கொண்டு சென்றதை இரு முக்கிய முடிவுகள் என்ற ஆவணம் அறிவித்தது; பல்வேறு கம்யூனிசப் புரட்சியாளர்களும் “ஒருசில கூறுகளை மட்டும் வைத்துக் கொண்டு சீனத்தை அவ்வளவு எளிதில் முதலாளித்துவ நாடு என்று வரையறுக்க முடியாது” என்று தடுமாறி வந்த சூழலில் தோழர் கபிலனால் எழுதப்பட்ட அறிக்கை அதை விளக்கி நிறுவியது; சீனத்தை முதலாளித்துவ நாடு என்று இந்தியாவிலேயே முதன் முறையாக 1981-இல் எமது அமைப்பு அறிவித்தது; அதேபோல சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் அணிசேர்க்கையை ஆய்ந்து, மா-சே-துங் ஆல் முன்வைக்கப்பட்ட “மூன்றுலகக் கோட்பாட்டை” 1981-லேயே “மூன்றுலகக் கோட்பாடு : சர்வதேசப் புரட்சியின் சக்திவாய்ந்த போர் ஆயுதம்” என்று பிரகடனம் செய்தது எமது அமைப்பு.
இக்கோட்பாட்டின் ஒளியில் 1990-இல் சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஒற்றை துருவ உலக மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டிருப்பதையும்; உலகம் இரு முகாம்களாக மாறியிருப்பதையும் தோழர் கபிலன் ஆய்வு செய்து முன்வைத்தார். இவ்வாறு மகத்தான தலைவர் மாவோ வகுத்தளித்த மூன்றுலகக் கோட்பாட்டை வெறுமனே பாதுகாத்து உயர்த்திப் பிடித்தது மட்டுமல்ல; அதன் ஒளியில் சர்வதேச நிலைமைகளை ஆய்ந்து மூன்றுலகக் கோட்பாட்டுக்கான பொருளாதார அடிப்படையையும் விளக்கி, அதனை வளப்படுத்தினார்; வளர்த்தெடுத்தார், தோழர் கபிலன்.
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரப் படிவத்தை ஆய்ந்து மார்க்ஸ், ஏங்கல்சால் முன்வைக்கப்பட்டு லெனினால் உயர்த்திப்பிடிக்கப்பட்ட “ஆசியபாணி உற்பத்தி முறை” என்ற கோட்பாட்டைத் தோண்டியெடுத்து வலியுறுத்தினார். புரட்சியின் மையமான, சாரம்சமான கடமை “நிலவும் அரசு எந்திரத்தைத் தகர்த்து புதிய அரசை நிறுவுவது” என்று சாரு மஜூம்தார் புரிந்துகொண்டிருந்த போதும், நிலவும் அரசதிகாரத்தைப் பற்றிய முழுமையற்ற, தவறான பார்வை அவரிடம் இருந்தது. அதன் விளைவாக கிராமப்புறங்களில் பண்ணையார்களை அழித்தொழித்தால் அரசதிகாரத்தில் வெற்றிடம் ஏற்படும் என்ற பார்வை மா-லெ இயக்கத்தில் அப்போது கோலோச்சியது. இவற்றை மறுத்து, அரசு பற்றிய மார்க்சிய போதனையைப் பருண்மையாகப் பிரயோகித்து மேற்கட்டுமானத்துக்கும் அடிக்கட்டுமானத்துக்கும் இடையிலான இயங்கியல் உறவுகள்; மேற்கட்டுமானத்திலேயே உள்ள பல்வேறு உறுப்புகளுக்கிடையிலான இயங்கியல் உறவுகள் நிலவுவதை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில் நிறுவினார். இதன் அடிப்படையில் இந்தியாவில் நிலவும் அரசு எந்திரத்தின் தன்மை, அதன் வரலாறு, தனிச்சிறப்பியல்புகள் ஆகியவற்றை விரிவாக விளக்கி “வர்க்கப் போராட்டத்தின் கேந்திரக் கண்ணி” என்ற ஆவணம் எழுதப்பட்டது.
சீனாவைப் போன்றே இந்தியாவும் அரைக்காலனிய, அரைநிலப்புரபுத்துவ நாடென்பதால் நீண்டகால மக்கள்யுத்தப் பாதையை அங்கு அமல்படுத்தப்பட்டதைப் போன்றே இங்கும் நடைமுறைப்படுத்தி வந்தனர் / வருகின்றனர் முன்னாள் மக்கள் யுத்தக் குழுவினரும் இந்நாள் மாவோயிஸ்டு கட்சியினரும். ஆனால் ரசிய, சீனப் புரட்சியின் பொது அனுபவங்களைக் கற்றறிகிற அதேவேளையில், குறிப்பான இந்திய நிலைமைகளில் அவற்றைப் பிரயோக்கிக்கும் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஆவணம்தான் “இந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும்” என்பதாகும். இந்த ஆவணம் போர்த்தந்திரம், செயல்தந்திரத்தின் அதிமுக்கியத்துவத்தைப் பறைசாற்றியதோடு, சீன-இந்தியப் புரட்சிகளுக்கான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிப்பாக ஆய்ந்து முன்வைத்தது. குறிப்பாக சீனாவில் யுத்தப் பிரபுக்கள் இருந்தது; ஆளும் வர்க்கங்களுக்குள் முரண்பாடும் மோதலும் ஆயுதப் போராட்ட வடிவில் நிலவியது; மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரம் இல்லாதது; சீர்திருத்தமும் அதற்கான அரசியல், பொருளாதார அடிப்படையும் இல்லாதது – போன்ற காரணங்களால் அங்கு ஆயுதப் போராட்டம் பிரதான வடிவத்தை எடுத்தது. இதற்கு நேரெதிராக, இந்தியாவில் இந்நிலைமைகள் தலைகீழாக உள்ளது. அதாவது, அரசையும் ஆளும் வர்க்கங்களையும் அம்பலப்படுத்துகிற கடமை முதன்மையானதாகவும் சமரச சீர்திருத்த சக்திகள் கருத்துக்களை முறியடிக்க வேண்டிய கடமை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. எனவே நம் நாட்டில் முதலில் எதிரியின் அரசியல் செல்வாக்கை அறுத்தெறிய வேண்டிய “அரசியல் போராட்டம்” பிரதான வடிவம் பெறுகிறது; அரசியல் போராட்டங்கள், அம்பலப்படுத்தல்கள், கிளர்ச்சிகள் மூலம் எதிரியின் அரசியல் அடித்தளத்தை அறுத்தெறியும்போதுதான் எதிரிக்கும் மக்களுக்குமான நேரடி யுத்தம் வெடிக்கும் என்ற நிலைமை உள்ளது – என்பதையெல்லாம் இந்தியாவில் முதன்முறையாக அந்த ஆவணம் கூறியது. அரசியல் போராட்டம் பிரதானமாக உள்ள இன்றைய நிலையில் தொடங்கி நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் ஆயுதப் போராட்டத்தை வளர்த்தெடுத்து புரட்சியை எவ்வாறு இந்தியாவின் பருண்மையான நிலைமைகளில் நிறைவேற்றுவது என்பதை ஆவணம் நிலைநாட்டியது.
இத்தகைய பார்வை இல்லாது – குறிப்பாக போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றிய பார்வை அறவே இல்லாது – மா-லெ குழுக்கள் வலது, இடது சந்தர்ப்பவாதத்தில் சிக்கிக் கிடக்கும் நிலைதான் இந்தியப் புரட்சியின் முன்னேற்றத்திற்கு இன்றுவரை முதன்மையான முட்டுக் கட்டையாக இருக்கிறதென்றால் மிகையல்ல!
ஏற்கனவே கூறியது போல, 1990-களில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஒற்றை துருவ உலக மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டிருப்பதையும் இரு முகாம்களாக உலகம் இருப்பதையும் நிலைநாட்டியது மட்டுமல்ல; 20 ஆம் நூற்றாண்டின் இடையில் பாட்டாளி வர்க்க முகாம் தாக்குதல் நிலையிலும் ஏகாதிபத்திய முகாம் தற்காப்பு நிலையிலும் இருந்தபோது நேரடி காலனிய வடிவத்துக்கு மாறாக மறைமுகமாக மற்ற நாடுகளைச் சுரண்டும் நவகாலனிய வடிவத்தைப் பிரதானமாகக் கொண்ட செயல்தந்திரத்தை ஏகாதிபத்திய முகாம் கையாண்டது. 1980-களில் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்ட நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக – சோவியத்தின் முகாம் முற்றாகச் சிதைந்தது, அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றை துருவ உலக மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டது போன்றவை காரணமாக – மேற்கூறிய தற்காப்பு நிலை தலைகீழாக மாறி அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய முகாம் தாக்குதல் நிலையை எடுத்தது. இத்தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக காலனிய நாடுகளைப் புதிய வடிவில் சுரண்டவும் சூறையாடவும் மறுகாலனியாக்கம் என்னும் வடிவிலான செயல்தந்திரத்தைக் கைக்கொண்டது. இதனை 1990-களிலேயே கணித்து முன்வைத்ததில் முதன்மைப் பங்காற்றினார், தோழர் கபிலன்.
இவையெல்லாம் தோழர் கபிலன் இந்தியப் புரட்சிக்காக செய்த மகத்தான பங்களிப்புகள் ஆகும்.
◊◊◊
1970-இல் தோழர் அப்புவால் தொடங்கப்பட்ட “புரட்சிப் புயல்” என்ற உட்கட்சி இதழைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில் மீண்டும் 1974-இல் மே.பி.குழுவினர் கொண்டுவந்தனர். லெனினால் தொடங்கப்பட்ட “இஸ்க்ரா”வைப் போல அவ்விதழ் நக்சல்பாரி அணிகளை ஒன்றுபடுத்தப் போராடியது. 1981 வரையிலான காலகட்டத்தில் ஆய்வை நிறைவு செய்ய வேண்டிய அதே காலத்தில், கட்சியைக் கட்டி அமைப்பையும் விரிவுபடுத்த வேண்டிய தேவை இருந்தது; கட்சிக்கு புதிய பகுதிநேர, முழுநேர ஊழியர்களைக் கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது; இத்தேவையிலிருந்து தொடங்கப்பட்டவைதாம் வைகறை, கனல் ஆகிய இதழ்களாகும். பின்னர் கட்சியின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்று மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டும் நோக்கில் புதிய ஜனநாயகம் இதழ் பிறந்தது.
புதிய ஜனநாயகத்தின் இதழை 1985 முதல் 2010 வரை தலைமையேற்று தோழர் கபிலன் நடத்தினார். ஆர்.கே., மாணிக்கவாசகம் ஆகிய பெயர்களில் கட்டுரைகளை எழுதினார். அதேபோல 2010 வரையிலான ஆசிரியர் குழு கட்டுரைகளும் தலையங்கக் கட்டுரைகளும் அவரால் எழுதப்பட்டவையே. புதிய ஜனநாயகமும் புரட்சிப் புயலும் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியதாகும். அவை சொல்லில் அடக்கமுடியாதவை.
மா-லெ புரட்சியாளர்களிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டும்; சிதறுண்ட கட்சியை ஐக்கியப்படுத்த வேண்டும் என்பது அன்றுமுதல் இன்றுவரை புரட்சியை நேசிப்பவர்கள் அனைவரும் விரும்பும் விசயமாகும். ஆனால் ஐக்கியம் பற்றிய லெனினியப் பார்வையின்றி சந்தர்ப்பவாதமான முயற்சிகள் பல்வேறு மாலெ குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மா-லெ புரட்சியாளர்கள் எல்லோரும் முதலில் ஒன்று சேர்ந்து கொள்ளலாம்; பின்னர் கருத்து வேறுபாடுகளையும் அமைப்பின் நிலைப்பாடுகளையும் ஜனநாயக மத்தியத்துவம் அடிப்படையில் பேசி வகுத்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டனர்.
லெனினின் ஐக்கியம் பற்றிய கண்ணோட்டத்தை வழுவாது கற்ற தோழர் கபிலன், மேற்கண்ட அணுகுமுறை சந்தர்ப்பவாதமானது என்று உறுதியாக எதிர்த்தார். ஐக்கியத்திற்கான லெனினிய வழியை கறாராக வலியுறுத்தினார். 1.மார்க்சிய-லெனினியத்தைக் கற்பதிலும் பிரயோகிப்பதிலும் ஒத்த அணுகுமுறை; 2.போர்த்தந்திரம், செயல்தந்திரம் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒத்த கருத்து; 3.கட்சியின் வரலாற்றைத் தொகுத்து சரி, தவறுகளை விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் பரிசீலித்து ஒத்த முடிவுகளுக்கு வருவது – ஆகிய மூன்றும் ஐக்கியத்திற்கான முன்நிபந்தனை ஆகும். இவை மூன்றிலும் ஒற்றுமையின்றி ஏற்படும் ஐக்கியம் லெனினிய வழிப்பட்டது அல்ல; சந்தர்ப்பவாதமானது; அது மேலும் பல்வேறு பிளவுகளுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதை உறுதியாகக் கூறினார். இந்தக் கண்ணோட்டத்தில்தான் “ஐக்கியப்பட்ட கட்சியைக் கட்டுவோம்” “ஐக்கியம் பற்றி” “ஐக்கியத்திற்கு யார் தடை” போன்ற கட்டுரைகள் புரட்சிப் புயலில் எழுதப்பட்டன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் “சந்தர்ப்பவாதத்திற்கெதிராக : புரட்சியாளர்களின் ஐக்கியமும் கூட்டு நடவடிக்கையும்” என்ற சிறுநூல் 1988-இல் வெளியிடப்பட்டது.
பிற குழுக்களைப் பற்றி புறம்பேசுவதும்; அவர்கள் அணிகளிடையே அவதூறு பேசுவதும் தோழமையற்ற அணுகுமுறை என்று சாடிய அதேவேளையில், அக்குழுக்களை பகிரங்கமாக விமர்சிப்பதும் விவாதங்களில் ஈடுபடுவதுமான (polemics) சித்தாந்தப் போராட்டம்தான் “ஐக்கியத்திற்கான திறவுகோல்” என்பதை தோழர் கபிலன் உறுதியாக நம்பினார். அந்த அடிப்படையில் மா.அ.க.வால் முன்வைக்கப்பட்ட ஐந்து ஆவணங்களைக் கொண்டு சித்தாந்தப் போராட்டத்தை நடத்தியது மட்டுமல்ல; புரட்சிப் புயலின் மூலம் பிற குழுக்களின் தவறுகளை வெளிப்படையாக, நேர்மையாக விமர்சித்தார். 1974 முதல் 1996 வரையிலான புரட்சிப் புயலில் வெளியான கட்டுரைகளே இதற்கு சாட்சி!
“வர்க்கப் போரில் இறங்கியுள்ள சமரன் மார்க்சிய-லெனினியத்தை ஏந்தி வர வேண்டும்” “உலகத் தொழிலாளிகளே பிளவுபடுங்கள் – புதிய வடிவில் ஓடுகாலிகளின் ஆளும் வர்க்கச் சேவை” “உட்கட்சிப் போராட்டம் பற்றிய மா-லெ அணுகுமுறை” “பாட்டாளி வர்க்கப் பண்பாடு – பாட்டாளி வர்க்கக் கட்சிக்கு அவசியமான முன்நிபந்தனை” போன்ற எண்ணற்ற கட்டுரைகள் பிற மா-லெ குழுக்களின் அரசியல், சித்தாந்த, பண்பாட்டுத் தவறுகளை பகிரங்கமாக விமர்சித்ததோடு, மார்க்சிய-லெனினிய இயக்கத்துக்குள் தலைதூக்கி இருந்த கட்சிக் கலைப்புவாத, அராஜகவாத, வலது, இடது சந்தர்ப்பவாதக் குப்பைகளையெல்லாம் அடித்துச் சென்றது, புரட்சிப் புயல்!
1985 நவம்பர் 7 இல் “எத்தியோப்பியாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் பட்டினிச் சாவுகள்” என்று தலைப்பிட்டு புதிய ஜனநாயகத்தின் முதல் இதழ் வெளியானது. 1981 முதல் மாநில அமைப்புக் கமிட்டியின் செயலாரக இருந்த தோழர் அன்பழகனால் எழுதப்பட்ட பிரகடனத்தைத் தாங்கி வந்த அவ்விதழ்தான் இன்றுவரை தமிழகத்தின் அழிக்க முடியாத அரசியல் சுவடுகளைப் பதித்துள்ளது. நக்கீரன், விகடன், ரிப்போர்ட்டர் போன்ற எண்ணற்ற பத்திரிக்கைகள் வணிக நோக்கில் புற்றீசலாகப் புறப்பட்டு வந்தன. அரசியலையே மசாலா தடவி கிசுகிசு பாணியில் மேற்சொன்ன இதழ்கள் வெளிவந்து, மக்களின் அரசியல் உணர்வை மழுங்கடித்த காலத்தில், மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்துடன் அரசியலை எளிமையாக புரிந்துக்கொள்ளும் வகையில் உழைக்கும் மக்களின் போர்க்குரலாக புதிய ஜனநாயகமும் புதிய கலாச்சாரமும் வெளிவந்தன.
வெளிநாடுகளில் குறிப்பாக ஈழத்தமிழர்கள், தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் புதிய ஜனநாயகம் தனக்கான எண்ணற்ற வாசகர்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாட்டிற்கும் 20, 30 என இதழ்கள் பறந்தன. மேற்சொன்ன இதழ்களின் உரிமையாளர்களெல்லாம் கண்டு வியக்கும் வண்ணம் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகிய இதழ்கள் நடத்தப்பட்டன.
தோழர் கபிலனால் புதிய ஜனநாயகத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் தீப்பொறியாய் மக்களிடையே பரவியது என்றால் மிகையல்ல. 1980-களில் நக்சல்பாரிகளை நரவேட்டையாடிய வால்டர் தேவாரத்தை ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய் என்று அம்பலப்படுத்தி துணிச்சாலாக எழுதப்பட்ட கட்டுரை புரட்சியாளர்கள், மக்களிடையே புதிய உத்வேகத்தை அளித்தது; எம்.ஜி.ஆர். இறந்த போது “ஒரு பாசிஸ்டின் மரணம்” என்று அம்பலப்படுத்தி எழுதியது; 1990-இல் ராஜீவின் படுகொலையின் அரசியல் நியாயத்தை எழுதியது; ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரிக்கிற அதேவேளையில் ஈழப் போராளிக் குழுக்களின் அரசியல் தவறுகளை பகிரங்கமாக 1980-கள் முதல் விமர்சித்தது; இட ஒதுக்கீடு சாதியை ஒழிப்பதற்கு பதிலாக உட்சாதி ஒதுக்கீடு கேட்கும் நிலையை உருவாக்கி சாதிவெறி சங்கங்கள், அமைப்புகள் புற்றீசல் போல பெருகுவதற்கு ஒரு காரணமாயுள்ளது என்று எழுதப்பட்ட “இடஒதுக்கீடு ஒரு மா-லெ பார்வை”, – இவையெல்லாம் அவதூறுகளையும் ஆதரவையும் ஒருசேரப் பெற்றுத் தந்தன. 1990-களில் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை இந்தியாவில் திணிப்பட்ட பிறகு உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப் இவைதான் இந்தியாவின் அரசியல், பொருளாதாரக் கொள்கையைத் தீர்மாணிக்கின்றன என்பதை அம்பலப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளும் வெளியீடுகளும் அரசியல் சக்திகளிடையே தீயாகப் பரவின.
அதேபோல சமரச சீர்திருத்த சக்திகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதில் புதிய ஜனநாயகம் அளப்பரிய பங்காற்றியது; 1987 இல் “அம்பேத்கர் குட்டிமுதலாளித்துவ சீர்திருத்தவாதிதான்” என்ற கட்டுரையை வெளியிட்டது முதல் 2012 ஆம் ஆண்டு “அம்பேத்கரியம் சாதித்தது என்ன?” என்ற கட்டுரை வரையிலும் அதற்குப் பின்பும் தோழர் கபிலனால் எழுதப்பட்ட கட்டுரைகள் சாதியை ஒழிக்க அம்பேத்கரியம் ஏன் உதவாது என்பதை ஆணித்தனமாக நிறுவின. நக்சல்பாரிப் பாதைதான் சாதியை ஒழிக்கும் என்று பறைசாற்றின. அரசியல் புரட்சி, சமூக சீர்திருத்தம் இவையிரண்டில் அம்பேத்கர் இரண்டாவதற்காகத்தான் நின்றார். அம்பேத்கரே “கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சிசெய்” (educate, organize, agitate) என்றுதான் கூறியுள்ளார். பின்னர் வந்தவர்கள் அவரே கூறாத புரட்சி என்பதை அவரோடு ஒட்ட வைத்து “கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்” என்று அவரைப் புரட்சியாளராக்க முனைகிறார்கள் என்று கூர்மையாக அம்பலப்படுத்தியது.
ஒருபுறம் அம்பேத்கர், பெரியாரை புரட்சியாளர்களாக்கும் முயற்சிகள், இன்னொருபுறம் அவர்கள் மீது ஒவ்வாமை என மா-லெ இயக்கத்தில் இவ்விரு போக்குகள் நிலவிய காலத்தில் அவர்களின் பங்களிப்புகளை சரியாக மா.அ.க. மதிப்பீடு செய்தது. அவர்களின் உன்னதமான நோக்கத்தை மதிக்கிற அதேவேளையில் அவர்களது பாதையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியது. அவ்வகையில், 1978-இல் தந்தை பெரியாரின் நூற்றாண்டில் “பெரியார் தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதி” என்ற கட்டுரையை புரட்சிப் புயலில் எழுதினார், தோழர் கபிலன். சாதிஒழிப்பு, பெண்விடுதலை, தமிழ் தேசியஇன உரிமை போன்றவற்றுக்காகப் போராடிய பெரியாரின் நோக்கம் எவ்வளவு உன்னதமானதாக இருந்தாலும் அவரது பாதையின் வரம்புகளை அக்கட்டுரை சுட்டிக் காட்டியது. அவரது நோக்கங்களையே நிறைவேற்றுவது கூட நக்சல்பாரிப் பாதையில் அணிதிரளாமல் சாத்தியமில்லை என்பதை நிறுவியது.
பெரியாருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய சி.என்.அண்ணாதுரை பெரியார் உயிருடன் இருக்கும்போதே எப்படி அவரது கொள்கைகளைக்குச் சமாதி கட்டினார் என்பதையும் பிழைப்புவாத அரசியலைத் தமிழகத்துக்குள் நுழைத்தார் என்பதை அக்கட்டுரை 1978-லேயே பேசியது. 2008-இல் அண்ணாதுரையின் நூற்றாண்டு வந்தபோது “பிழைப்புவாதத்தின் பிதாமகன்” என்ற கட்டுரை புதிய ஜனநாயகத்தில் வெளியானது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” “பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டோம்” என்றெல்லாம் அண்ணாதுரை பெரியாரின் கொள்கைகளைக் கைகழுவிய பின்னர்தான் தி.மு.க.வே பிறந்தது என்பதைத் துணிச்சலாகவும் கூர்மையாகவும் சரியாகவும் பறைசாற்றின புதிய ஜனநாயகமும் புரட்சிப் புயலும்.
ஏறத்தாழ இரண்டு தலைமுறை இளைஞர்கள், அரசியல் முன்னணியாளர்கள் மீது புதிய ஜனநாயகம் இதழ் அளப்பரிய தாக்கம் செலுத்தியது; ஆளும் வர்க்கங்களையும், ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளையும் கொடுங்கனவாக அச்சுறுத்திய அதேவேளையில் உழைக்கும் மக்களின் போர்க்குரலாக முழங்கியது என்றால் மிகையல்ல! ஊடகத்துறை முதல் அரசியல் கட்சிகள் வரை அரசியல் முன்னணியாளர் யாராகினும் புதிய ஜனநாயகத்தின் பெயர் அறியாதவர் யாருமில்லை எனலாம்.
பத்திரிக்கை என்பது ஒரு பிரச்சாரகன், கிளர்ச்சியாளன் மட்டுமல்ல ஒரு அமைப்பாளனும் ஆகும் என்பார் ஆசான் லெனின். அதற்கு இலக்கண பொருத்தமாக விளங்கிய மா-லெ இதழ் புதிய ஜனநாயகம் ஆகும். புதிய ஜனநாயகம் ஒரு பகுதிக்குச் செல்கிறதென்றால் ஒரு முழுநேரப் புரட்சியாளரோ அல்லது முழுநேரப் புரட்சியாளர்களைக் கொண்ட குழுவோ அங்கு செல்கிறது என்று பொருள்! அங்குள்ளவர்களை அது அமைப்பாக்குகிறது என்று பொருள்! இவை மிகையல்ல; எதார்த்த உண்மை! தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாசகர் வட்டங்களை உருவாக்கியதோடு, அமைப்புக்கு எண்ணற்ற ஊழியர்களையும் வென்றெடுத்துக் கொடுத்தது புதிய ஜனநாயகம். உழைக்கும் மக்களுக்கு புதிய வெளிச்சத்தைக் காட்டி அவர்களுக்கான விடியலை நோக்கி வழிநடத்தியது!
எமது இதழ்களைப் படித்து வரும் பிற குழுக்களிடம் தோழர் கபிலன் பேசுவதும்; அவர்களுக்கு வகுப்பெடுப்பதும் அவர்களைப் பெரிதும் கவர்ந்துவிடும்; அடுத்த சந்திப்பு எப்போது என்று அவர்களே ஆவலாய் கேட்கும் அளவுக்கு அவரது விளக்கமும் பேச்சும் இருக்கும். அதேபோல தோழர்களிடையே உரையாடும்போதும்; தோழர்கள், அணிகளுக்கு வகுப்புகள் விளக்கக் கூட்டங்கள் நடத்தும்போதும் ஒரு அசாதாரணமான திறமையுடன் கண்ணோட்டத்துடன் அவரது விளக்கம் இருக்கும். தெரிந்த விவரங்களை கூட புதிய கண்ணோட்டத்தில், புதிய திசையில் பார்க்க கற்றுத் தருவார். ஒவ்வொருமுறை அவர் பேசி முடித்த பின்னரும் புதிய ஒளியைப் பாய்ச்சியதைப் போலவும், புதிய திசை பிறந்தது போன்றும் இருக்கும்.
அன்றைய காலகட்டத்தில் உருவான மா-லெ குழுக்களெல்லாம் இடது தீவிரவாதம், போர்க்குணமிக்க பொருளாதாரவாதம், தேர்தல் பாதை என இடது, வலது சந்தர்ப்பவாத நச்சு சுழலில் சிக்கித் தவித்திருந்த அல்லது பல்வேறு மா-லெ விரோதப் போக்குகளுக்கு ஆட்பட்டிருந்த சூழலில், தோழர் கபிலனால் வழிகாட்டப்பட்ட மாநில அமைப்புக் கமிட்டி மட்டும் எங்கனம் மார்க்சிய-லெனினியத்தில் ஊன்றி நிற்க முடிந்தது? இதற்கான பதிலை அவரே வேறு ஒரு சூழலில் கூறியுள்ளார். ‘வெளியே மார்க்சியத்திற்கு விரோதமான அவதூறுகள் கிளம்பும்போது சலனமடையக் கூடாது; புரட்சியின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மார்க்சியத்தில் விடை உள்ளது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும்; வெறுமனே மார்க்சியத்தைக் கற்பது என்று மட்டுமல்லாமல், மார்க்சிய அணுகுமுறையைக் கற்றுத் தேர வேண்டும்; மார்க்சிய ஆசான்கள் எவ்வாறு அந்த முடிவுகளுக்கு வந்தடைந்தார்கள் என்பதை ஊடுருவிக் கற்றுத்தேர வேண்டும்; அவ்வாறு கற்கும்போது மார்க்சிய ஆசான்கள், சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகள், அகிலங்கள் என எல்லாவற்றின் முடிவுகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தும் துணிச்சலும் முன்முயற்சியும் வேண்டும்’ இவ்வாறு மார்க்சியத்தைக் கற்பதிலும் பிரயோகிப்பதிலும் லெனின் பின்பற்றிய அதே அணுகுமுறையை தோழர் கபிலன் கைக்கொண்டார். அதையே மற்ற தோழர்களும் கைக்கொள்ளும்படி வலியுறுத்தினார். இவ்வாறுதான் அவர் மார்க்சிய ஆசான்களையும் மார்க்சியத்தையும் பயின்றார். அதனால்தான் அவரால் மற்றவர்களை விட நெடுந்தொலைவு பார்க்க முடிந்தது; தன் காலத்தின் மகத்தான சமூகத் தேவைகளுக்கான தகுதியை கொண்டிருக்க முடிந்தது. இந்தப் பார்வையை நீங்கள் அவரது ஒவ்வொரு எழுத்துக்களிலும் பார்க்கலாம்!
◊◊◊
இத்தகைய மகத்தான பணிகளை ஆற்றிய தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதனின் ஆளுமை வளர்ச்சி மாநில அமைப்புக் கமிட்டியின் வளர்ச்சியோடும் இந்தியப் புரட்சிகர இயக்கத்தில் நடைபெற்ற சித்தந்தப் போராட்டங்களின் வரலாறோடும் பின்னிப் பிணைந்ததாகும்.
20.12.1950 இல் ஈரோட்டுக்கு அருகில் உள்ள கொடுமுடி என்ற ஊரில் அர்த்தநாரி – பாவாயி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது பிள்ளையாக தோழர் கபிலன் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர்தான், ருக்மாங்கதன். தனது சிறு வயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமுடையவராகத் திகழ்ந்த அவர், 11 ஆம் வயதிலேயே திராவிட இயக்க ஆசிரியரின் செல்வாக்கினால் ஈர்க்கப்பட்டு நாத்திகரானார். அதிலிருந்து அவர் கோவில்களுக்குப் போவதும் கடவுளை வழிபடுவதும் அறவே செய்ததில்லை. படிப்பில் விளையாட்டில் மட்டுமின்றி மாணவர் சங்கத் தலைவராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார். அப்போதே மாணவர்களைத் திரட்டி கோரிக்கைகளுக்காகப் போராடுபவராகவும் ஊரில் அனைவராலும் மதிக்கப்படும் இளைஞராகவும் திகழ்ந்தார். 1968-இல் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.யூ.சி. முடித்த அவர், கோவையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியில் கெமிக்கல் என்ஜினியரிங் சேர்ந்தார்.
அப்போது உருவான நக்சல்பாரி பேரெழுச்சியால் ஈர்க்கப்பட்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இ.பொ.க.(மா-லெ) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது படிப்பையும் குடும்பத்தையும் உதறியெறிந்து முழுமையாகப் புரட்சிகர இயக்கத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பத்தாம் வகுப்புவரை படித்தவர்களே உத்திரவாதமான வாழ்க்கை, பணி என்று வாழ்ந்து வந்த அந்தக் காலத்தில், அத்தகைய வாழ்க்கையை வெறுத்தொதுக்கி மக்களுக்காக வாழ்ந்து மடிவதே உன்னதமானது என்று தன்னை முழுமையாக நக்சல்பாரி இயக்கத்துடன் அர்ப்பணித்துக் கொண்டார்.
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த தோழர் கபிலன், ஆங்கிலம், தமிழ் நாளேடுகளை ஒரு சேரப் படிப்பார். அவருடைய பொழுதுபோக்கே ஆங்கில அகராதி (Dictionary) படிப்பதுதான். அகராதி படிப்பதை எப்படி ஒரு பொழுதுபோக்காக நீங்கள் கூறுவீர்கள் என்று சிலர் கிண்டலடிக்கும் போதும், அதைப் படித்துதான் நான் ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன் என்று சிரித்துக் கொண்டே சொல்வார். இதுதான் அவர் ஆங்கிலம் கற்றுக் கொண்ட முறை. ஆனால் ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் மட்டுமே தேர்ந்த பேச்சாளரைப் போல ஆங்கிலத்தில் உரையாடுவார். மெத்தப் படித்திருந்தும் எவ்விதமான பகட்டையும் ஆரவாரத்தையும் அவரிடம் பார்க்க முடியாது.
உண்மையில் பிளக்கானவ் சொல்வது போல நமது காலத்தின் மகத்தான மனிதர் அவர்! அவர் உருவாக்கிய பாதையில் பயணிப்பதும்; அவரைப் போன்றே மார்க்சிய-லெனினிய அணுகுமுறையைக் கற்றுத் தேர்வதும்; அவர் உருவாக்கி வைத்துள்ள அரசியல் கோட்பாட்டு ஆவணங்கள் என்ற ஆயுதங்களை சுழற்றக் கற்றுக் கொள்வதும்; மக்களுக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருந்து ஊசலாட்டமின்றி புரட்சியை முன்னெடுத்துச் செல்வதும்தான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!
***
குறிப்பு :
தோழரின் இறப்பு செய்தி வெளியானவுடன், வழக்கம் போல எமது அமைப்பின் மீது தீராப் பகை கொண்டவர்களும், எமது அமைப்பின் விவகாரங்களை அரைகுறையாக அறிந்திருப்பவர்களும் முகநூல், சமூக வலைத்தளங்களில் பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
தோழர் கபிலன் காட்டிய புரட்சிகர வழியில் நிற்க முடியாமல் சந்தர்ப்பவாத பாதைக்கு மொத்த கட்சியையும் இழுத்து செல்ல முயன்ற மருதையன் தலைமையிலான கலைப்புவாதிகளையும், வினவுக்கு தலைமையளிக்கும் லும்பன் கும்பலையும் அமைப்பில் இருந்து வெளியேற்றினோம். இந்தக் கலைப்புவாத கும்பலும் லும்பன் கும்பலும் தோழர் கபிலன் மீது அள்ளி வீசிய/வீசும் அதே அவதூறுகளை சில ஜனநாயக சக்திகளும் வேறொரு வடிவில் பரப்பி வருகின்றனர். “அவர் உருவாக்கிய அமைப்பு, இறுதியாக அவரையே பராமரிக்காமல் நாதியற்று விட்டுவிட்டதாக” என சிலர் தவறாக முன்வைக்கின்றனர். இவையெல்லாம் “கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் அணிகளையும், ஊழியர்களையும் பாதுகாக்காது கைவிட்டுவிடும்; நிற்கதியாக விட்டுவிடும்” என்று ஆளும் வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பரப்பி வரும் அவதூறுகளுக்கு வலுச்சேர்க்கும் விளைவை ஏற்படுத்துபவையே அன்றி வேறல்ல!
உண்மையில், தோழர் கபிலன் உருவாக்கிய மக்கள்திரள் பாதையில் ஊன்றி நிற்கும் மாநில அமைப்புக் கமிட்டியானது அவரை இறுதிவரை பேணிப் பராமரித்தது; பாதுகாத்தது. அவர் உருவாக்கிய பாதையின் வழியாக ஊசலாட்டமின்றி புரட்சியை முன்னெடுத்துச் செல்ல உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
***
தோழரின் ஒளியில் பயணிப்போம்