இந்தியாவில் அதிகரித்துவரும் ஏற்றதாழ்வு:
தாமஸ் பிக்கெட்டி vs ரகுராம் ராஜன்
முட்டுச் சந்தில் நின்று சண்டையிடும் முதலாளித்துவவாதிகள்!

 

 

அண்மையில் தாமஸ் பிக்கெட்டி என்ற பிரபல பொருளாதார நிபுணர், “இந்தியாவில் உள்ள தீவிர ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க ஒரு செல்வ வரி தொகுப்புக்கான முன்மொழிவுகள்” (‘Proposals For a Wealth Tax Package to Tackle Extreme Inequalities in India’) என்ற ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் உள்ள ஏற்றதாழ்வு நிலைமையை சரிசெய்ய 10 கோடிக்கு மேல் உள்ள நிகர சொத்துக்கு 2 சதவீத வரியும், 33 சதவீத பரம்பரை சொத்து வரியும் (inherent tax) விதிப்பது என்ற முறையைப் பரிந்துரைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த மே 25 அன்று “India & Global Left” என்ற யூடியூப் சேனலில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநரும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார நிபுணராகவும் பணி புரிந்தவருமான ரகுராம் ராஜன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை, விவசாய வளர்ச்சி என பலவற்றை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.1 இதில் குறிப்பாக சொத்து ஏற்றத்தாழ்வுகளை (asset inequalities) சரிசெய்ய பெருமுதலாளிகள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் மேல் சொத்து வரி, பரம்பரை சொத்து வரி விதிப்பதை பற்றி கேள்வி எழுப்பபட்டது. அப்போது தாமஸ் பிக்கெட்டியின் கருத்தை முழுவதுமாக மறுத்து அப்பேட்டியில் வாதிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.

ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை அரை மனதாக ஒப்புக்கொள்ளும் ரகுராம் ராஜன் அதை சரிசெய்ய சொத்து வரி, பரம்பரை வரி போன்ற வழிமுறைகளை முற்றிலும் மறுக்கிறார். சொத்து வரி போன்றவற்றை பணக்காரர்கள் கட்டாமல் சுலபமாக தவிர்த்து விடுவார்கள், அரசை ஏமாற்றிவிடுவார்கள் என்று வாதிட்டு, ஏற்றத் தாழ்வுகளை தாமஸ் பிக்கெட்டியின் முன்மொழிதல்கள் உதவாது என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

பிக்கெட்டி முன்வைக்கும் வாதமும், அதற்கு ரகுராம் சொல்லும் மறுப்பும் என்று இவ்விரு வாதப்பிரதிவாதங்கள் இன்று உலகம் முழுவதும் பெருகிவரும் ஏற்றதாழ்வை சரிசெய்ய முதலாளித்துவத்திடம் எவ்விதத் தீர்வுமற்று இருப்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முதலாளித்துவம் முட்டுச் சந்தில் சிக்கித் தவிப்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

 வரலாறு காணாத இந்தியாவின் ஏற்றத்தாழ்வு

இந்திய தரகு முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து இந்திய உழைக்கும் வர்க்கத்தையும், நாட்டின் வளங்களையும் சூறையாடி லாபம் ஈட்டி வருவதை நாம் அறிவோம். இப்படி சேர்க்கப்படும் சொத்து நாட்டில் வரலாறு காணாத ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் உலக சமத்துவமின்மை ஆய்வகம் (World inequality Lab) நடத்திய “1922-2023 இந்தியாவில் வருவாய் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு: பில்லியனர்களின் ஆட்சியதிகாரத்தின் எழுச்சி(INCOME AND WEALTH INEQUALITY IN INDIA, 1922-2023: THE RISE OF THE BILLIONAIRE RAJ) என்ற ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் பொருளாதார நிபுணர் மைகேல் ராபர்ட்ஸ் பின்வருமாறு விவரிக்கிறார்,

“இந்திய மக்கள்தொகையில் 10% பேர் மட்டுமே, இப்போது மொத்த தேசிய செல்வத்தில் 77% ஐ வைத்துள்ளனர். 2018 மற்றும் 2022-க்கு இடையில், இந்தியா ஒவ்வொரு நாளும் 70 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களின் மொத்த செல்வம் 2018-19 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த தேசிய பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான உலகளாவிய பணக்காரர்களின் பட்டியலின்படி, 2023ல் மட்டும் 94 புதிய பெரும் கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டு, இந்தியாவில் தற்போதைய மொத்த பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 271 ஆக உள்ளது. புதிய பில்லியனர்கள் உருவாவதைப் பொறுத்தவரை, இது அமெரிக்காவைத் தவிர வேறெந்த நாட்டிலும் நிகழாத வளர்ச்சியாகும். இந்த பில்லியனர்களின் ஒட்டுமொத்த செல்வம் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் அல்லது ஒட்டுமொத்த உலகின் செல்வத்தில் 7% ஆகும்.”2

 

 

மேலும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் ஆய்வில் பின்வரும் தரவுகளும் வெளிவந்துள்ளது. அதாவது 1962-2023 கால கட்டங்களில் மொத்த தேசிய சொத்தில் பெரும் பணக்காரர்களான 1% பேர் மற்றும் அடுத்தபடியாக உள்ள 40% பேர் எவ்வளவு பங்கு சொத்துக்களை வைத்துள்ளனர் என்ற தரவாகும். இதில் 1980-க்கு பின்பாக, அதவாது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற நவீன தாராளவாத, மறுகாலனிய பொருளாதார கொள்கை அமுல்படுத்தப்பட தொடங்கியதற்குப் பின்பு, மேற்தட்டு 1% மக்களிடம் சொத்து குவிய தொடங்குவதையும் கீழ்த்தட்டு 50% மக்களின் சொத்தின் பங்கு வீழ்வதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக 1991ல் மறுகாலனியக் கொள்கைகள் அமலான பின்பு மேற்தட்டு 1% மக்களுடைய சொத்தின் பங்கு செங்குத்தாக அதிகரித்து (steep increase) 2023-யில் ஏறத்தாழ 40% ஆக உயர்ந்துள்ளது. அதாவது மேற்தட்டு 1% பேரிடம் சொத்து பங்கு குவிந்து கொண்டே போகிறது; கீழ்த்தட்டு 50% மக்களிடம் சொத்தில் பங்கு கிடைக்காமல் தொடர்கிறது.

 

 

பிக்கெட்டியின் தீர்வும், ரகுராம் ராஜனின் மறுப்பும்

மேற்கண்ட ஆய்வைத் தொடர்ந்து உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் (World inequality Lab) “இந்தியாவில் உள்ள தீவிர ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க ஒரு செல்வ வரி தொகுப்புக்கான முன்மொழிதல்கள்” ( ‘Proposals For a Wealth Tax Package to Tackle Extreme Inequalities in India’)3 என்ற ஆய்வு கட்டுரை வெளியிடபட்டது. இதில் தாமஸ் பிக்கெட்டி எனும் பொருளாதார நிபுணர் பெரும்பங்காற்றினார். அந்த ஆய்வு கட்டுரையில் இந்தியாவில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க 10 கோடிக்கு மேல் உள்ள நிகர சொத்துக்கு 2% வரியும், 33% பரம்பரை சொத்து வரியும் விதிப்பது போன்ற வழிமுறைகள் முன்மொழியப்பட்டன.

அதாவது சொத்து குவித்து வைத்திருக்கும் பணக்காரரிடம் இருந்து சொத்து வரி மற்றும் பரம்பரை சொத்து வரி போட்டு அரசு தனது வருவாயை அதிகரித்து கீழ்த்தட்டு மக்களின் பயன்பாட்டிற்கு  சொத்தை மறுபகிர்வு செய்வதுதான் (asset redistribution) அதன் உள்ளடக்கம்.

பெருமுதலாளிகள், பணக்காரர்களின் சொத்துக்கு குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று பதறி இதுபோன்ற சொத்து வரிகளை முற்றிலும் எதிர்கிறார் முதலாளித்துவ பொருளாதர மேதை ரகுராம் ராஜன். பிக்கெட்டி போன்றோர் சொல்லும் சொத்து வரி மற்றும் பரம்பரை சொத்து வரி  போன்ற தீர்வுகள் அபத்தமானது என்றும், நடைமுறையில் சாத்தியமல்ல என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

அதற்கு அவர் சொல்லும் ஒற்றை காரணம் : “Rich will always find a way around” என்பதுதான். அதாவது சொத்து குவித்து வைத்திருக்கும் பணக்காரர்கள் இது போன்ற வரி செலுத்துவதை தவிர்க்க ஏதேனும் ஒரு வழியை கண்டறிந்து விடுவார்கள் என்பதுதான்! அது குறிப்பாக வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோதமான முறையில் நடந்தேற அவசியம் இல்லை; மிக சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு சட்டபூர்வமாகவே வரி கட்டுவதை தவிர்க்க வழியைக் கண்டறிவார்கள்; என் வாழ்வில் போதுமான அளவுக்கு இதுபோன்ற வரி மேலாண்மையைப் (tax management) பார்த்துள்ளேன்; தேவைப்பட்டால் தன் சொத்தை மறுபங்கீடு செய்வதை தடுக்க சட்டம் இயற்றவும் முயல்வார்கள் எனவும் வாதிடுகிறார், ரகுராம் ராஜன். மேலும், இவ்வாறு சொத்துவரி, பரம்பரை வரிகள் நடைமுறையில் உள்ள முன்னேறிய நாடுகளில் கூட வெறும் அற்பசொற்ப தொகைதான் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடுகிறார்.

மேலும் ஏற்றதாழ்வுகளை சரிசெய்ய சொத்து வரி எவ்வளவு “அபத்தமானது” என்பதை விளக்க ஒருபடி மேலே செல்லும் ராஜன், “சொத்துவரி போடுவதற்கு பதிலாக கம்யூனிசப் புரட்சி செய்துவிடுங்களேன்?” என்று நக்கலடிக்கிறார். “ரத்தம் தெறிக்க வன்முறையுடன் புரட்சி செய்யுங்கள்; பின் மிகுந்த வறுமை தலைவிரித்தாடும். சமத்துவம் வேண்டும் என்றால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும்” என்று கிண்டலும் கேலியுமாகக் குறிப்பிடுகிறார்.

நாள்தோறும் மக்களின் மீது வன்முறையைத் தொடுத்துவரும், உலகெங்கும் போர்வெறி பிடித்தலைந்து உலகையே சுடுகாடாக மாற்றிவரும் முதலாளித்துவத்துக்காக கேடுகெட்ட முறையில் பரிந்து பேசும் ராஜன், கம்யூனிசத்தைக் கிண்டலடிப்பதில் வியப்பேதுமில்லை.

ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய ராஜன் சொல்லும் வழி என்ன ?

முதலாளித்துவ அமைப்பின் கீழ் ஏற்றதாழ்வுகளைச் சரிசெய்ய பிக்கெட்டி முன்வைக்கும் தீர்வு அபத்தமானதென்ற ராஜனின் வாதம் உண்மைதான். ஆனால் அதற்கு ராஜன் முன்வைக்கும் தீர்வோ அதைவிடவும் அபத்தமானதாகும்.

பிக்கெட்டி சொல்லும் தீர்வுகளை அபத்தமென மறுக்கும் ராஜன் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க சொல்லும் வழி இதுதான்: “எல்லா தொழில் துறைகளிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) சமமான வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும்; அரசு இத்துறைக்கு கடன்கள் தர வேண்டும்; தொழில் துறைகளில் பலமான போட்டி ஆணையங்கள் (competition commissions) அமைத்து ஏகபோகத்தை தவிர்க்க வேண்டும்; இது போன்ற முன்னெடுப்புகள் ஏற்றத்தாழ்வுகள் குறையும் என்று வாதிடுகிறார்.

ராஜனின் முதல் பரிந்துரையின் படி, சிறு, குறு மற்றும் நடுத்தர (MSME)  நிறுவனங்களுக்கு கடன் உதவி தருவது பற்றி பாப்போம். MSME நிறுவங்களுக்கு நிதியுதவி தர வேண்டும் என்றால் அதனை அரசு மக்களின் பணத்திலிருந்துதான் தரவேண்டும்.

பெரும் முதலாளிகளிடம் வரி வசூலிக்காமால் மக்கள் பணத்தை தரவேண்டும் என பரிந்துரைக்கும்  இதே ரகுராம் ராஜன் கடந்த காலங்களில் அரசு செலவினங்களை பற்றிக் கூறியது என்ன?

கொரோனா தொற்றின்போது வீடுகளில் மக்கள் மோடி அரசால் முடக்கப்பட்டபோது, வேலை இல்லாமல் பட்டினி சாவில் பரிதவித்தபோது, நீண்ட நடைபயணமாக இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக புலம்பெயர் தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு நடந்தபோது,  மக்களின் நலன்களுக்காக இந்திய அரசு எவ்வித செலவும் செய்யவில்லை. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய அரசு ஊரடங்கு காலத்தில் மக்கள் நலன்களுக்காக செலவிட்ட தொகை மிகவும் குறைவாகவே இருந்தது; இதனால் மக்களின் துயரங்கள் மேலும் அதிகரித்தன.

 

 

அரசு இப்படி ஒரு நெருக்கடி சூழலிலும் செலவுகளை தவிர்ப்பது குறித்து ராஜனிடம் கேள்வி எழுப்பபட்ட போது பின்வரும் வாதங்களை அவர் வைத்தார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%க்கும் அதிகமாக  செலவழிக்கின்றன; ஏனென்றால் அவை வெளிநாட்டு முலதனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றிற்கு தர நிர்ணய நிறுவனங்கள் (Credit Rating Agencies)  மூலதன ஈர்ப்பு தர மதிப்பீடுகளைக் குறைத்து வழங்குவது குறித்த அச்சம் இல்லை. ஆனால், இந்தியாவுக்கு அந்த அச்சம் உள்ளது; நாட்டின் செலவீனங்கள் அதிகரித்தால் அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நாம் இழக்க நேரிடும் – என்று வாதிட்டார்.

“தர மதிப்பீட்டு நிறுவனங்களால் குறிப்பிட்ட அளவு தொகை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்படும்” என்று மிகவும் வெளிப்படையாகக் கூறினார். இதன் மூலம், உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையின் கட்டமைப்பானது உள்நாட்டில் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக வெளிநாட்டில், இந்திய மக்களின் எந்தத் தலையீடும் இல்லாமல், தீர்மானிக்கபடுகிறது என அவர் தெளிவாகக் கூறினார்.”4

இது ஆர்.பி.ஐ (RBI) முன்னாள் கவர்னர்கள் டி.சுப்பாராவ், உர்ஜித் படேல் போன்றோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2014 ராஜனால் அமைக்கப்பட்ட “நிபுணர் குழு” மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA), உணவு பாதுகாப்பு சட்டம் ( Food Security Act) போன்ற கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களிலும், உள்நாட்டு உணவு பாதுகாப்பில் அரசு செலவுகளை குறைக்க  பரிந்துரைத்தது.

பொதுவாக அரசு மக்களுக்குச் செய்யும் செலவீனங்களையே வெட்டி தமக்கு வரித் தள்ளுபடியாகவும், சலுகைகளாகவும் மாணியங்களாகவும் வழங்கக் கோரும் கார்ப்பரேட்டுகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கு அரசு செலவிடுவதை எப்படி விரும்பும்? அவர்களின் நலன்களுக்காக இயங்கும் வெளிநாட்டு தர மதிப்பீட்டு நிறுவனங்கள் எப்படி விரும்பும்? சில்லரை வணிகத்தில் 100% அந்நிய முதலீட்டைத் திணித்து சி.கு.ந. நிறுவன்ங்களின் கழுத்தை நெறித்து வரும் அந்நிய மூலதனமானது, இந்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்தால் அமைதி காக்குமா?

ராஜனின் தீர்வுகள் அவர் முன்னர் பேசியதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல; நடைமுறையில் அபத்தமானதுமாகும்.

அடுத்து ராஜன் சொல்லும் இன்னொரு விசயத்தைப் பார்ப்போம். தொழில் துறைகளில் பலமான போட்டி ஆணையங்கள் (competition commissions) அமைத்து ஏகபோகத்தை தவிர்க்க வேண்டும்!

போட்டி ஆணையங்கள் மூலம் முதலாளித்துவத்தை நெறிப்படுத்தி தடையில்லாப் போட்டியை (free competition) உறுதி செய்து, ஏகபோகத்தை (Monopoly) தவிர்க்க வேண்டும்; இது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கட்டுக்குள் கொண்டு வரும் என்று ராஜன் வாதிடுகிறார்.

தடையில்லாப் போட்டி, சுதந்திர வாணிகம் என்பதெல்லாம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வழக்கொழிந்து போய்விட்ட ஒன்றாகும். இவைபற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்:

“முதலாளித்துவம் அதன் ஏகபோகக் கட்டத்தில் உற்பத்தியானது மிக விரிவான அளவில் சமூகமயமாக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது; முதலாளிகளை, அவர்களது விருப்பத்துக்கும் உணர்வுக்கும் மாறாக, ஒரு வகைப் புதிய சமுதாய முறையினுள், அறவே தடையில்லாப் போட்டியிலிருந்து முற்றும் சமூகமய மாக்கப்படுதலுக்கு மாறிச்செல்வதற்கான இடைநிலையாகிய ஒன்றினுள் இழுத்துச் செல்கிறது எனலாம் .

உற்பத்தியானது சமூகமயமாகிறது, ஆனால் சுவீகரிப்பு (appropriation) தொடர்ந்து தனியார் வசமே உள்ளது. சமுதாய உற்பத்திச் சாதனங்கள் தொடர்ந்து ஒருசிலரது கனிச் சொத்தாகவே இருக்கின்றன. சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கப்படும் தடையில்லாப் போட்டியின் பொதுவான கட்டமைப்பு நீடிக்கிறது; அதே போது ஏகபோகக்காரரார்கள் ஒருசிலர் ஏனையமக்கள் தொகையோரின் மீது செலுத்தும் ஒடுக்குமுறை ஆதிக்கம் நூறு மடங்கு மேலும் கடுமையானதாய் , அழுத்துவதாய் , சகிக்க முடியாததாய் ஆகிறது”6

முதலாளித்துவம் ஆரம்ப கட்டங்களில் தடையில்லா போட்டியில் இயங்கினாலும் வரலாற்று போக்கில் ஏகபோக சகாப்தத்தை அடைந்துள்ளது. முதலாளித்துவ உற்பத்திமுறையினாலேயே ஏற்பட்டுள்ள இந்த ஏகபோகத்தை, ராஜனின் பரிந்துரைப்படி,  யார் “நெறிப்படுத்துவது”? அதாவது வரலாற்று சக்கரத்தை யார் தலைகீழாக சுழற்றுவது? எப்படி சுழற்றுவது?

அதாவது ராஜனின் பரிந்துரையின்படி போட்டி ஆணையங்களை உருவாக்கி ஏகபோகத்தை கட்டுப்படுத்தி முதலாளித்துவத்தை இயக்க வேண்டும் என்றால் அதை யார் செய்வது? அரசு தான் செய்ய வேண்டும்.

ஆனால் ராஜன் சொத்து வரி, பரம்பரை சொத்து வரி போடுவதற்கு எதிராக வைத்த வாதம் என்ன?: சொத்து வரிகள் போடப்பட்டால் பணக்காரர்கள் (ஏகபோகவாதிகள்) அதை ஏய்க்க வழி கண்டுபிடித்துவிடுவார்கள், ஏன் தங்கள் சொத்துக்களை தற்காத்துக்கொள்ள புது சட்டங்களையும் ஏற்றுவார்கள் என்பதுதான்! அதாவது தங்கள் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட “ஜனநாயக” அரசை நிர்பந்தித்து அதை சாதித்து கொள்ள கூடிய வலிமை மிக்கவர்களாக உள்ளார்கள் என்பதுதான் ராஜனே முன்வைக்கும் வாதம்.

அப்படி இருக்கையில் ராஜனின் வாதத்தின்படியே இந்த ‘போட்டி ஆணையம்’ வழிமுறையும் அதே போல தலையீடுகள் மூலம் ஏகபோகவாதிகள் தடுத்து விடுவார்கள் தானே? இல்லையெனில் அதை ஏய்க்க சட்டபூர்வமான வழி கண்டுபிடித்து ஏகபோகத்தை காப்பற்றி கொள்வார்கள் தானே?

மேலும், அதானி போன்ற தரகு முதலாளிய ஏகபோகவாதிகளின் லாபம் அந்நிய மூலதனத்துடன் பிண்ணிப் பிணைந்துள்ளது. இது அந்நிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலமாகவும், நிதி கடன் பத்திரங்கள் மூலமாகவும் நடைபெறுகிறது.

“2015 மற்றும் 2021 க்கு இடையில், ஆறு வெவ்வேறு அதானி குழும நிறுவனங்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கிகளால் சந்தைப்படுத்தப்பட்ட 18 அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திர விற்பனை மூலம் சுமார் $10 பில்லியனை திரட்டின – ஃபோர்ப்ஸ் இந்த வங்கிகளுக்கு “ஜூசி ஃபீஸ்” என்று அழைத்தது. குழுமத்தின் முதல் ஐந்து நிறுவனங்களின் கடன் மார்ச் 2019 மற்றும் மார்ச் 2022க்கு இடையில் ரூ. 83,600 கோடி அதிகரித்தது (தொடர்புடைய கட்சிகள் மற்றும் குழுவில் உள்ள பிற நிறுவனங்களின் கடன்களைத் தவிர்த்து). இந்த கடன் வளர்ச்சியில், 56 சதவீதம் வெளிநாட்டு கடன் பத்திரங்கள் மட்டுமே” 7

 

 

இப்படி அந்நிய முதலீட்டுடன் பிண்ணிப் பிணைந்திருக்கும் ஏகபோகவாதிகளுக்கு எதிரான அந்நிய  முதலீட்டாளர்களை பாதிக்கும்  நடவடிக்கைகளை அரசு எடுக்குமா? முந்தைய பகுதியில் ராஜன் உட்பட முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக நாம் பார்த்தது போல “உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையின் கட்டமைப்பானது உள்நாட்டில் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக வெளிநாட்டில், இந்திய மக்களின் எந்தத் தலையீடும் இல்லாமல், தீர்மானிக்கப்படுகிறது… நிலைமை இப்படி இருக்கையில் முதலீட்டாளர்களின் நலன்களுக்கு எதிராக இந்திய அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும்?

முதலாளித்துவ உற்பத்தி முறையையும், ஏகாதிபத்திய நிதி மூலதனத்தையும் தக்க வைத்துக் கொண்டே, அதன் சுரண்டலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமலேயே ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம் என்ற அவரைப் போன்ற முதலாளித்துவ பொருளாதார மேதைகளின் முழக்கம் நடைமுறையில் அபத்தமாகிப்போகிறது.

பிக்கெட்டி, ரகுராம் ராஜன் போன்ற முதலாளித்துவ அறிஞர்களுக்கு ஏற்றத்தாழ்வுகளை பற்றிய கவலை ஏன் ?

ஏற்றத்தாழ்வுகள் மக்கள் நலன்களுக்கு எதிராக இருக்கும் காரணத்தினால் தான் முதலாளித்துவ அறிஞர்கள் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முயல்கிறார்களா? என்ற கேள்விக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.

முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஏற்றத்தாழ்வுகளை கட்டுக்குள் கொண்டு வர துடிப்பதற்கு பிரதானமாக 2 காரணங்கள் உண்டு. அவை

  1. முதலாளித்துவ உற்பத்தி முறையால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் கூர்மையடைந்து மக்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் நிலவும் சமூக அமைப்பின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அதிருப்தி அடைய நேரிடும். இந்த அப்பட்டமான நியாயமற்ற சமூக அமைப்பு முறையைத் தூக்கி எறிய மக்கள் கிளர்ச்சி செய்யவும் வாய்ப்புண்டு.
  1. முதலாளித்துவத்தில் உற்பத்திக்கும்-நுகர்வுக்குமான சமநிலை பராமரிக்கப்பட்டு பொருளாதாரம் சீராக இயங்குவதற்கே ஏற்றத்தாழ்வுகள் தடையாக இருக்கிறது.  நாட்டின் மேற்தட்டில் சொத்து குவியும்போது மறுபக்கம் கீழ்த்தட்டு மக்களிடம் சொத்து குறைகிறது; வருமானம் தேங்குகிறது அல்லது குறைகிறது. இதனால் கீழ்த்தட்டு மக்களிடம் வாங்கும் சக்தி (purchasing power) கணிசமாக குறைகிறது; இப்படி பெரும்பான்மை மக்களிடம் வாங்கும் சக்தி குறைவதால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் தேவையும் (demand) குறைந்து; உற்பத்தியான பொருட்கள் தேக்கமடையும் அபாயம் உள்ளது. உற்பத்தி பொருட்கள் விற்காமல் தேக்கம் அடைவதால் பொருளாதாரமே இயங்காமல் போகும் அபாயம் உண்டாகிறது.

இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏற்றத்தாழ்வுகளால் மக்கள் கிளர்ச்சி

மூலதனத் திரட்டல் எந்த அளவுக்கு நடைபெறுகிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளியின் கதி- அவரது ஊதியம் உயர்வானதென்றாலும் சரி, தாழ்வானதென்றாலும் சரி-மேலும் மோசமடைந்தே தீரும்…….இது (முதலாளித்துவ திரட்டலின் பொது விதி) மூலதன திரட்டலோடு கூடவே துன்ப துயரங்களையும் அதே அளவுக்கு திரளச் செய்கிறது. ஆகவே, செல்வமெல்லாம் ஒரு முனையில் திரள, எதிர் முனையில், அதாவது எந்த வர்க்கத்தின் உற்பத்திப் பொருள் மூலதனமாக வடிவெடுக்கிறதோ அந்த வர்க்கத்தின் முனையில், துன்பதுயரமும், ஓயாமற் பாடுபடுவதன் வேதனையும் அடிமை இயல்பும் அறியாமையும் மிருகத்தனமும் ஒழுக்கச் சீர்கேடும் திரளக் காண்கிறோம் – கார்ல் மார்க்ஸ் 8

இப்படி முதலாளித்துவ உற்பத்தி முறையால் ஏற்படும் மூலதன திரட்டலின் விளைவாக மறுபக்கம் உழைக்கும் வர்க்கங்கள் நசுக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி போகிறது என்று ஆசான் மார்ஸ் எழுதியுள்ளது வரலாறு நெடுக நிரூபணம் ஆகிக்கொண்டே வருகிறது.

பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இந்த நெருக்கடியினால் வாழ வழியற்று தினம் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கும் போதே மறுபுறம் மேல்தட்டில் ஒரு சிறு கூட்டத்தாரிடம் சொத்து குவிந்து கொண்டே போகும் சூழல் உள்ளது , இதை பெரும்பான்மை மக்கள் உணர்ந்தாள் என்ன நேரிடும்? அப்படி பட்ட அரசியல் விழிப்புணர்வின்  ஊடாக ஏற்படும் மக்களின் அதிருப்தி பல அரசியல் தாக்கங்கள் உண்டாக்கும். முதலாளித்துவத்திற்கும், அதை கட்டிக் காக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான அரசியல் தாக்கங்களை உண்டாக்கும்.

2024 G20 மாநாட்டில் உலக ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்த பெரும் பணக்காரர்கள் மீது குறைந்தபட்ச வரி செலுத்துவது பற்றியான அறிக்கையை சமர்ப்பித்த பொருளாதார நிபுணரான ஸுக்மன் (Zucman) அவரது பேச்சின் சுருக்கத்தில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

“பெரும் செல்வந்தர்கள் அங்கு செல்வதற்கு (சொத்துவரி கட்டுவதற்கு) பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் வேகமாக செயல்படுவதில் தான் நமது  கூட்டு நலன் உள்ளது; ஏனெனில் ஆபத்தில் இருப்பது உலகளாவிய சமத்துவமின்மையின் எதிர்காலம் மட்டுமல்ல; உலகமயமாக்கலின் எதிர்காலம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலமும் தான்.”9

அதாவது ஏற்றத்தாழ்வுகள் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்றால், எந்த உலகமயமாக்கல்  கொள்கையின் ஊடாக ஏகபோக பெரும் முதலாளிகள் சொத்து குவித்தார்களோ அந்த உலகமயமாக்கல் கொள்கைக்கே வேட்டு வைப்பது போல் ஆகிவிடும் என்கிறார். மக்களிடம் பெருகிவரும் தொடர் அதிருப்தியால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகி போகும் என்கிறார்.

பொருளாதார நிபுணர்கள் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க முயல்வதற்கு மக்களின் அதிருப்தி ஊடான அரசியல் தாக்கங்கள் ஒரு காரணமாக அமைகிறது.

பொருளாதாரம் இயங்குவதற்க்கே தடையாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்

சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே  சொத்து குவிந்து மறுபக்கம் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் சொத்தும், கூலியும் குறைவதனால் மக்கள் தொகையில் வளர்ந்து வரும் பெரும் பகுதிக்கு வாங்கும் சக்தி இல்லாமல் போகிறது, இதனால் பொருளாதாரம் தொடர்ந்து இயங்குவதற்க்கே முட்டுக்கட்டை ஏற்படுகிறது. வாங்கும் சக்தி இல்லாமல் போவதால், உற்பத்தி பொருட்களின் தேவை மந்த நிலையை அடைகிறது. உற்பத்தி பொருட்கள் தேங்கி விற்க முடியாத நிலையில் முதலாளிகளின் லாபத்திற்கு இடர் உண்டாகிறது. லாபத்திற்காக மட்டுமே உற்பத்தி நடத்தும் முதலாளிகள் லாபம் இல்லாமல் போகும் சூழலில் உற்பத்தியை குறைக்கும், நிறுத்தும் அபாயமும், இதன் தொடர்ச்சியாக பொருளாதாரமே செயல் இழக்கும் அபாயமும் உண்டாகிறது.

இப்படி முதலாளித்துவ உற்பத்தி முறையாலேயே உருவானே ஏற்றத்தாழ்வுகளால் முதலாளித்துவமே தோல்வி அடைந்து நெருக்கடி உண்டாகும் அபாயம் இருப்பதால் ஏற்றத்தாழ்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முதலாளித்துவ அறிவுஜீவிகள் முனைப்பு காட்டுகின்றன. திவாலாகி போன முதலாளித்துவத்தை கட்டி காப்பாற்ற முயல்கின்றனர்.

ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கு வழி முதலாளித்துவத்தின் சீர்திருத்தங்கள் அல்ல, மாறாக சோசலிசமே!

ஏற்றத்தாழ்வுகளை கட்டுக்குள் வைப்பதற்கு சொத்து வரி , பரம்பரை சொத்து வரி போன்ற வழிகள் வாதத்துக்கு சரியாக இருப்பவை போலத் தோன்றலாம். ஆனால் அது வெறும் மேலோட்டமான பார்வைதான். நடைமுறையில் அது மிகவும் அபத்தமானதாகும்.

“2021 ஆம் ஆண்டில், 140 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 15% குறைந்தபட்ச வரி விகிதத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டன. எவ்வாறாயினும், இந்த முக்கியத்துவம்வாய்ந்த ஒப்பந்தமானது பெரிய ஓட்டைகளால் ‘வியத்தகு முறையில் பலவீனப்படுத்தபட்டுள்ளது’ என்று EU வரி கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

‘பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்மொழியப்பட்ட 15% குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி விகிதம்-ஆரம்பத்தில், மிகக் குறைவு; தொடர்ச்சியாக அந்த விதிகளில் ஓட்டைகளைப் போட்டது, சிதைக்கப்பட்டதன் காரணமாக அவ்விதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புகளாயின’ என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் அறிக்கையில் எழுதினார்”10

அப்படியானால் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க தீர்வுதான் என்ன? சமூகத்தில் இப்படி அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் உருவாதற்கான மூல காரணத்தை கண்டறிவது மூலமாகத்தான் நம்மால் தீர்வையும் கண்டறிய முடியும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாக  இருக்கிறது. இதனால் உற்பத்தியால் கிடைக்கும் உபரி மதிப்பும் தனியாரால் (உடமையை காரணம் காட்டி) சுவீகரிப்பு செய்யப்படுகிறது. பெரும்பான்மை தொழிலாளர்கள் உழைப்பை செலுத்தி உற்பத்தி நடத்தி உபரி மதிப்பை உருவாக்குகிற போதும்  சிறுபான்மை உடமையாளர்கள் உடமை என்ற அடிப்படையில் உபரி மதிப்பை மொத்தமாக அள்ளிக் குவிகின்றனர். இதன் தொடர்ச்சியாக சந்தைக்கு வந்த பின்னர் உபரி மதிப்பு லாபமாக உருவெடுக்கும் போது லாபம் முதலாளிகளிடம் குவிகிறது. இந்த குவிப்பே சொத்து குவிப்பாக வெளிப்படுகிறது. உபரி மதிப்பு லாபகரமாக உருவெடுப்பதின் அடிப்படையே உழைப்பு சுரண்டல் என்பதால், ஒரு புறம் முதலாளிகளிடம் சொத்து குவிப்பு நடக்கும்போது மறுபுறம் தொழிலாளிகளிடம் சொத்து சேராமல் போவது தவிர்க்க முடியாத ஒன்றாகி போகிறது. இதுவே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளாக வெளிப்படுகிறது.

இப்படி உற்பத்தி சாதனைகளின் தனியார் உடைமையால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தீர்ப்பதற்கு வழி உற்பத்தி சாதனங்களை பொது உடமை ஆக்குவது தான். உற்பத்தியின் பால் கிடைக்கும் உபரி மதிப்பு பொது சமூக மேம்பாட்டுக்கு  உபயோகிக்க வேண்டும். அத்தகைய சோசலிச சமூகத்தைப் படைக்க நமது நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை நட்த்தி முடிக்க வேண்டும். உள்நாட்டு பொருளாதார கொள்கைகள் மக்கள் நலன்களுக்காக வகுக்க தடையாக இருக்கும் ஏகாதிபதிய நிதி மூலதனத்தை மிதித்து வெளியேற்றவும் வேண்டும். IMF, உலக வங்கி, சர்வதேச கடன் மதிப்பீடு நிறுவனங்களின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து உற்பத்தியை உள்நாட்டு மக்களுக்கு பயன் தரும் வகையில் பெருக்க வேண்டும். இதுவே ஏற்றத்தாழ்வுகளை முற்றிலும் ஒழிக்கும் பாதைக்கு நம்மை இட்டு செல்லும்.

  • ஜெமினி

 

Citation : 

  1. https://www.youtube.com/watch?v=o30AtAnLd_E&t=5s
  2. https://thenextrecession.wordpress.com/2024/04/19/india-modi-and-the-rise-of-the-billionaire-raj/
  3. Crises and Predation , pg.49, words in brackets added
  4. ibid
  5. Report of the Expert Committee to Revise and Strengthen the Monetary Policy Framework (Mumbai: Reserve Bank of India, 2014), 21
  6. ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம் , பக்கம்.39
  7. https://rupeindia.wordpress.com/2024/02/01/indias-new-era-and-western-imperialism-in-2023-part-5/
  8. கார்ல் மார்க்ஸ் மூலதனம், பாகம் ஒன்று , புத்தகம் 2. பக்கம் 868
  9. https://x.com/gabriel_zucman/status/1763253147256967232
  10. https://www.weforum.org/agenda/2023/10/loopholes-weaken-minimum-global-corporate-15-percent-tax-eu/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன