டிரம்பை ஆதரிக்கும் வால்ஸ்டிரீட்
நிதிமூலதனச் சூதாடிகள்

பணக்காரர்களுக்கான வரிகளைக் குறைப்பதாக டிரம்ப் உறுதியளித்திருப்பதால் நிதிமூலதன நிறுவனங்கள் அவரை ஆதரிப்பதாக பொதுவில் கூறப்பட்டாலும், தீவிர வலதுசாரியான டிரம்ப், உக்ரைன் போரிலும், இஸ்ரேல் போரிலும் தங்களுக்குப் பெருத்த லாபம் ஈட்டுவதற்கு வகை செய்து கொடுப்பார் என இந்த நிறுவனங்கள் நம்புவதால் தற்போது அவருக்கு ஆதரவளித்து வருகின்றன. 

அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் இச்சாதனைக்குச் சொந்தக்காரர். ஆபாச நடிகை ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக தனது நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடு செய்ததாக டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கிரிமினல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுவது டிரம்பின் ஆதரவு வட்டத்தில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அமெரிக்காவின் நீதிமூலதனச் சூதாடிகளின் கூடாரமான வால்ஸ்டிரிட்டை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் டிரம்பிற்கான தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

“இந்த தீர்ப்பு டிரம்பிற்கான எனது ஆதரவில் பூஜ்ஜியத்தை விட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்” என்று ‘1789 கேப்பிட்டல்’ எனும் நிதிமூலதன நிறுவனத்தின் தலைவர் ஒமீத் மாலிக், தீர்ப்பு வெளியான அன்றையதினமே செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடக் கூறிவிட்டார். ஒமீத் மாலிக் டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர் இவ்வாறு கூறுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்ற போதிலும், 2020ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி தனது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்து, தனது ஆதரவாளர்களைக் கொண்டு அமெரிக்க பாராளுமன்றம் இயங்கிவரும் கேப்பிடல் மாளிகையை டிரம்ப் தாக்கியதற்கு பிறகு அவரிடமிருந்து விலகியிருந்த நிதிமூலதன நிறுவனங்களின் தலைவர்கள் கூட தற்போது டிரம்பை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர்.

பணக்காரர்களுக்கான வரிகளைக் குறைப்பதாக டிரம்ப் உறுதியளித்திருப்பதால் நிதிமூலதன நிறுவனங்கள் அவரை ஆதரிப்பதாக பொதுவில் கூறப்பட்டாலும், தீவிர வலதுசாரியான டிரம்ப், உக்ரைன் போரிலும், இஸ்ரேல் போரிலும் தங்களுக்குப் பெருத்த லாபம் ஈட்டுவதற்கு வகை செய்து கொடுப்பார் என இந்த நிறுவனங்கள் நம்புவதால் தற்போது அவருக்கு ஆதரவளித்து வருகின்றன. 

ஜோ பிடன் அரசு உக்ரைனுக்கு நிதிஉதவியாக கொடுக்க இருந்த 2 பில்லியன் டாலர் தொகையை நிதி உதவியாக இல்லாமல் கடனாக கொடுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். நிதி உதவியாக கொடுக்கப்படும் பணத்தின் மீது எவ்வித நிபந்தனையும் விதிக்க முடியாது, அதே சமயம் கடனாக கொடுக்கப்படும் பணத்திற்கு ஈடாக அந்நாடு வாங்கும் ஆயுதங்கள் தொடங்கி அந்நாட்டின் இயற்கை வளங்களை அடகு வைப்பது வரை அனைத்து நிபந்தனைகளையும் விதிக்க முடியும். டிரம்பின் இந்த அனுகுமுறை நிதிமூலதன சூதாடிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

கோடீஸ்வரர் ஹோவர்ட் லுட்னிக், டிரம்பின் அதிபர் தேர்தலுக்கான நிதிதிரட்டலுக்காக, மான்ஹாட்டனின் நட்சத்திர விடுதி ஒன்றில் நடத்திய விருந்தில் பங்கேற்ற இந்த தலைவர்கள் டிரம்பிற்கான ஆதரவை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.

இந்த விருந்து நடந்து இரண்டு வாரங்களுக்குள் உலகின் முன்னணி பங்குச் சந்தை நிதி முதலீட்டு நிறுவனமான பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் இணை இயக்குநர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் மீண்டும் டிரம்பிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.

அதே போன்று டிரம்பிற்கு எதிரான தீர்ப்பு வெளியான அன்றே நியுயார்க்கின் மற்றொரு கோடீஸ்வரரான ஹெட்ஜ் பண்ட் முதலீட்டாளர் பில் அக்மேன் டிரம்பிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கிரிமினல் வழக்கில் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் நீதித்துறை ஒருபக்கச் சார்பாக நடந்து கொண்டிருக்கிறது எனவும் கூறி விமர்சிக்கின்றனர்.

“வால் ஸ்ட்ரீட் உயர்ந்த குணாதிசயங்களுக்கும் உயர் மதிப்புகளுக்கும் பெயர் பெற்றதில்லை” என்று  கூறும் முதலீட்டு வங்கியான “டொனால்ட்சன், லுஃப்கின் & ஜென்ரெட்டின் இணை நிறுவனர்” டான் லுஃப்கின், டிரம்ப் சரியான பாதையில் செல்வதாகத் தோன்றுவதால் தான் அவருக்கு ஆதரவளிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். லுஃப்கின் இதற்கு முன்னர் மற்ற வால்ஸ்டிரீட் முதலைகளைப் போல டிரம்பிற்கு பதிலாக நிக்கி ஹேலி குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக வரவேண்டும் என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் ஆனால் தற்போது தனது ஆதரவை டிரம்பின் பக்கம் திருப்பியிருக்கிறார்.

டிரம்பிற்கு எதிராக தீர்ப்பு வெளியான மறுகணமே அவரது கோடீஸ்வர ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடியரசுக் கட்சியுமே அவரது பின்னால் அணிதிரண்டது. டிரம்பை “அரசியல் கைதி” என்றும், “இதுதான் அமெரிக்காவின் முடிவுக்கான காலம்” என்றும் சித்தரித்து சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரச்சாரங்களின் விளைவை உடனடியாக கணிக்க வேண்டும் என்றால் டிரம்பின் தேர்தல் நிதிக்கு வந்திருக்கும் பணத்தின் அளவைக் கணக்கில் கொள்ள வேண்டும். டிரம்பிற்கு எதிரான தீர்ப்பு வந்த அன்றைய தினத்தின் மாலையில் மட்டும் அந்த கணக்கிற்கு 34.8 மில்லியன் டாலர் அளவிற்கு நிதி வந்து குவிந்துள்ளது. இவையெல்லாம் கோடீஸ்வர முதலாளிகள் கொடுத்த நிதி அல்ல. மாறாக சிறிய அளவில் நிதி வழங்கும் ஆதரவாளர்களிடம் இருந்து இத்தனை மில்லியன் டாலர் பணம் டிரம்பிற்கு வந்து குவிந்துள்ளதில் இருந்து டிரம்பிற்கான பிரச்சாரத்தின் வீச்சைப் புரிந்துகொள்ளமுடியும்.

கோடீஸ்வர முதலாளிகளில், டிரம்பின் தீவிர ஆதரவாளர்களும், முன்னாள் ஆதரவாளர்களும் மட்டும் அவர் பின்னால் நிற்கவில்லை, இதற்கு முன்னர் டிரம்பை தீவிரமாக எதிர்த்தவர்களும் கூட தற்போது அவருக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்து வருகின்றனர். ஜெபி மார்கன் முதலீட்டு நிறுவனத்தின் தலைவரான ஜெமி டிமொன், தீவிர டிரம்ப் எதிர்ப்பாளராக இருந்து தற்போது ஆதரவாளராக மாறியிருக்கிறார். டாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அவர் டிரம்பிற்கு வெளிப்படையாக ஆதரவளித்து பேசியிருக்கிறார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நெருங்க நெருங்க, வால்ஸ்டிரீட்டின் நிதிமூலதன சூதாடிகள் ஒருவர் பின் ஒருவராக டொனால்ட் டிரம்பின் பின்னால் அணிவகுத்து நிற்க ஆரம்பித்துள்ளனர். பாசிஸ்டு டிரம்புடன் இந்த நிதிமூலதனக் கும்பல் கரம் கோர்த்திருப்பதென்பது வரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடக்க இருக்கும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது.

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன