மறுகாலனியாக்கத் திணிப்பும்! நீளும் நீட் – கியூட் தேர்வுகளும்!

 

பள்ளிப்படிப்பை முடித்து, குறிப்பாக, மருத்துவப் படிப்பை விரும்பும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கனவை எட்ட முடியாது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் – கியூட் போன்ற தேசியத் தேர்வுகள் அனைத்தையும் மாநிலங்களின் விருப்பத்திற்கு உட்பட்டவைகளாக மாற்றும் என அறிவித்துள்ளது. ஆனால், இவைகளை ரத்து செய்வோம் என்றோ, கல்வி அனைத்தையும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றோ அறிவிக்கவில்லை. இருப்பினும், மாநிலங்களின் விருப்பத்திற்கு விடப்படும் என்ற காங்கிரசின் அறிவிப்பும் கூட அதன் வெற்றியைப் பொருத்தே அமையும்.

வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட்டிற்கு (NEET) முன்பிருந்த 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு ‘கட் ஆஃப்’ கணக்கிடப்பட்ட மருத்துவச் சேர்க்கையாக இருக்கலாம். கூடுதலாக, திமுக அரசு கொண்டு வந்த கிராமப்புற மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீடாகவோ அல்லது இவற்றை 25% ஆக உயர்த்திய அதிமுக அரசின் இட ஒதுக்கீடாகவோ இருக்கலாம்.

இவை தமிழ்நாட்டின் ஆளும் கட்சியைப் பொறுத்தே அமையும். இவற்றில் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது, நீட் தேர்வால் ஏற்பட்ட அவலங்கள் – இழப்புகள் – உதாசீனங்கள் நீங்கும். அதே வேளையில், கடின உழைப்பைச் செலுத்திப் படிக்கும் மாணவர்கள் கல்லூரி நுழைவுத் தேர்வின் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ள முடியும். தனிப்யிற்சியோ, அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்யவோ அவசியம் இல்லாமல் போகும். அவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேறும். உயிரைக் கொடுத்து படிக்கும் கிராமப்புற மாணவர்களின் ஏழை – எளிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஏழைகளுக்கான மருத்துவமும், மனமுவந்த சகிப்புத்தன்மையுடன் கூடியதாக இருக்கும். வணிகமயக் கல்வியினால் இவை சாத்தியமே இல்லை.

இவையெல்லாம் மருத்துவ தகுதிக்கு உதவாது. திறமையையும் வளர்க்காது. நீட் (NEET) போன்ற சிறப்புத் தேர்வுகள் மூலம் மட்டுமே கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்ப தகுதியை – திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்கிற கல்வியை வணிகமயமாக்கிய காட்ஸ் [GATT’S] ஒப்பந்தமும், இதையொட்டி அரங்கேற்றப்பட்டு, திணிக்கப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கையும். இதனடிப்படையில் தான் கியூட் தேர்வும் திணிக்கப்பட்டுள்ளது.

இவை கல்வி அரங்கில், 12 வருடப் படிப்பை, அதன் மூலம் பெற்ற செறிவின் ஆற்றலை, கேலிக்கூத்தாக்கி விட்டதோடு, ஏழை – எளிய மாணவர்களின் மருத்துவ கனவைத் தகர்த்து விட்டது. பயிற்சி முகாம்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கவும், ஏகாதிபத்தியங்களின் மருத்துவமனைகளுக்கு மலிவு விலையில் மருத்துவர்கள் இறக்குமதி செய்வதற்கும் வழி வகுத்துவருகிறது. மேலும், கியூட் தேர்வு மூலம் ஏழை – எளிய மாணவர்களின், கிராமப்புற மாணவர்களின் கடைசிப் புகலிடமான கலை – அறிவியல் படிப்புக்கும் ஆப்பரைந்து வருகிறது. இதன் மூலம், ‘காசு இல்லாத உனக்கு கல்வி எதற்கு’? என்கிற உலக வங்கியின் கூற்றும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’? என்கிற பார்ப்பனியக் கூற்றும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிற வகையில் காவி கார்ப்பரேட் பாசிசம் உறுதிப்படுத்தி வருகிறது.

இவற்றைத் தகர்த்தெறிவதோடு, கல்வியைச் சந்தைப்படுத்தி, வணிகமயமாக்கி, நுகர்வு மனப்பான்மையை உருவாக்கும் மறுகாலனியாக்கக் கொள்கையை – அதன் திணிப்பை முறியடிக்காமல், கல்வியை சேவைத்துறையாக மாற்றியமைக்கவோ, வணிகமயமாவதிலிருந்து மீட்டெடுக்கவோ முடியாது.

இதற்கு ஒரு முடிவை எட்டாமல், அதிக மதிப்பெண் பெறுவதற்கு மனப்பாடம் செய்யும் இயந்திரமாக, மாணவர்கள் வளர்வதைத் தடுக்க முடியாது. மாணவர்களிடம் சிந்தனையாற்றல் கல்வியை வளர்க்கவோ, பொது அறிவை வளர்க்கவோ இயலாது. மேலும், ஒரு சமுதாயம் பெற்ற தலைசிறந்த அறிவை, மேலும் வளர்க்கவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லவும், எதிர்காலத்தின் படைப்புத்திறனை வளர்க்கவும் பயன்படாது.

கல்வி என்பது ஒவ்வொருவரையும் சமுதாயத்தின் ஒழுக்கமுள்ள, நல்ல குடிமகனாக்க வேண்டும். உழைக்கும் மக்களை நேசிக்கும் மனிதப் பண்பாட்டை கற்றுத் தர வேண்டும். இவற்றை இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி, அறிவுப்பூர்வமானக் கல்வி, தாய் மொழிக் கல்வி மூலமே கற்றுத் தர முடியும். கல்வியை வணிகமயமாக்கி, நுகர்வு மனப்பான்மையை உருவாக்கி, லாபத்தைக் குறிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கான கல்வியால் கற்றுத் தர முடியாது. அரசால் வழங்கப்படும் கல்வியால் மட்டுமே முடியும். அவற்றால் மட்டுமே சமத்துவம் – சகோதரத்துவம் – சுதந்திரம் என்ற வகையில், ஏற்றத் தாழ்வான பாகுபாடற்ற சமூகத்தை நோக்கி வளர்க்க முடியும்.

இதற்கேற்ப, பட்டி-தொட்டிகள் எங்கும் அரசுப் பள்ளிகளை ஏராளமாக உருவாக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 20:1 என்கிற வகையில் ஆசிரியர்களையும், இதற்கு உகந்த வகையில் கட்டுமானங்களையும் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். அனைத்துப் பாடங்களையும் சிந்தனையாற்றல் கல்வி மூலம் செறித்துக்கொள்ளும், அவற்றை அவர்களின் சொந்த மொழியில், நடையில் விளக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்றுவிக்க வேண்டும். இந்த வகையில் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் போது வேறு எந்தவித சிறப்புத் தேர்வும், அதற்கான பயிற்சியும் தேவையில்லாமல் போகும்.

இதற்கு, இன்றைய தேவை ஒரு உள்நாட்டு போர். மறுக்காலனியாக்கத்தைத் தீவிரமாக அமுல்படுத்தி வரும் காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போர்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன