இன்னும் 16 மாதங்களில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடுமா?
ஒரு அதீத கற்பனை!

“பாசிசத்தின் ஒற்றை நபராக, பியூரராக கட்சிக்குள்ளும் நாட்டுக்குள்ளும் வளர்ந்துவரும் மோடி, தனது 75-ஆம் வயதில் பிரதமர் பொறுப்பில் இருந்து ஒதுங்கிவிடுவாரா? எல்லா பா.ஜ.க தலைவர்களையும் போல மோடியை கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பாளர்கள் பணிய வைத்துவிட முடியுமா?”

உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது. வெளிவந்ததும் அனுமன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அவர் பேசிய ஒரு கருத்து நாடெங்கும் விவாதப் பொருளாகியுள்ளது.

“இந்தியா கூட்டணியைப் பார்த்து யார் பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க. கேட்கிறது; ஆனால் பா.ஜ.க. கூட்டணி வென்றால் அடுத்த 5 ஆண்டுகள் யார் பிரதமராக இருப்பார் என்று முதலில் அவர்கள் சொல்லட்டும். ஏனென்றால் பா.ஜ.க.கட்சியில் 75 ஆண்டுகள் நிரம்பியவுடன் ஒருவர் முக்கியமான அரசு பதவிகளில் இருக்கக் கூடாது. மோடிக்கு இன்னும் 16 மாதங்களில் 75 வயது ஆகப் போகிறது. எனவே யார் அடுத்த பிரதமர் என்பதைச் சொல்ல முடியாத நிலையில்தான் அவர்களே உள்ளனர்” என்று பேசியுள்ளார்.

மேலும், “மோடி தனக்கடுத்து அமித்ஷாவைப் பிரதமாராக்க நினைக்கிறார். எனவே, அவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் முதலில் உத்திரப் பிரதேசத்தின் முதல்வாரக இருப்பவரும், அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என்று பேசப்படுபவருமான யோகி ஆதித்யநாத்தை முதலில் அப்பொறுப்பிலிருந்து தூக்கியடிப்பார்” “ஏற்கனவே எடியூரப்பா, முரளி மனோகர் ஜோஷி, வசுந்தரராஜே சிந்தியா, சிவராஜ் சிங் சவுகான் போன்ற எண்ணற்ற பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களின் “சிறகுகளை வெட்டிவிட்டார்” மோடி” என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் பேசிய இக்கருத்துக்களை தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருபவர்களும், அதற்கு ஆதரவான யூடியூபர்களும் விவாதப் பொருளாக மாற்றியிருக்கின்றனர்.

 

 

கெஜ்ரிவால் பேசிய கருத்தையும், 75 வயதுக்கு மேல் முக்கிய அரசு பொறுப்புகளில் இருக்க முடியாது என்ற் பா.ஜ.க.வின் நடைமுறையையும் வைத்துக் கொண்டு, மோடிக்கு கட்சிக்குள்ளேயே பயங்கர எதிர்ப்பு இருக்கிறதென்றும்; அதனால் மோடியின் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் இதைப் பயன்படுத்தி மோடியை வீட்டுக்கனுப்பி விடுவார்கள் என்றும் பலரும் கனவு கண்டு வருகின்றனர். சுருக்கமாக மோடி என்ற நபரின் அரசியல் வாழ்க்கையே இன்னும் 2 ஆண்டுகளில் அஸ்தமனமாகிவிடும் என்று நப்பாசை கொண்டுள்ளனர்.

இந்த அடிப்படையில் “மோடியின் ஆட்டம் முடிந்தது” “பற்ற வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்” “இன்னும் 16 மாதங்களில் அஸ்தமனமாகும் மோடியின் அரசியல் வாழ்க்கை” என்று பல்வேறு தலைப்புகளிலான கானொளிகளை நாம் யூடியூப்களில் காண முடிகிறது.

இந்த வாதங்கள் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற பாசிசக் கும்பலின் கொடூரத்தையும் உண்மையான தன்மையையும் மூடி மறைத்துக் குழப்புகின்றன. மோடியே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் தொடர்ந்து பிரதமராக இருக்க முடியாது; அந்தளவு அக்கட்சி பலவீனமாக உள்ளது; அக்கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்புள்ளது என்ற தப்பெண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றன.

முதலில் இவர்கள் சொல்வதுபோல இன்னும் இரண்டு ஆண்டுகளில் மோடி என்ற தனிநபர் மற்றும் கட்சியில் அவரது ஆதரவு கும்பலின் கொட்டம் முடிவுக்கு வருகிறது என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அது பா.ஜ.க. என்ற பாசிசக் கட்சியின் பாசிசத் தன்மையில் என்ன மாற்றத்தை அது கொண்டுவந்துவிடப் போகிறது? இன்னும் இரண்டாண்டுகளில் நரி பரியாகிவிடும் என்று நாம் கனவு காண வேண்டுமா? இந்திய நாட்டில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் அக்கட்சியின் வெறித்தனத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டுவிடப் போகிறதா? அல்லது மோடியைப் போன்ற கொடூரமான நபர்களன்றி பா.ஜ.க.வில் உள்ள வேறு யாரேனும் பிரதமரானால் இந்தளவு கொடூரத்தன்மை இருக்காது என்று நாம் கனவு காணவோ, நப்பாசை கொள்ளவோ வேண்டுமா?

பா.ஜ.க. என்பது மேலிருந்து கீழ் வரை சித்தாந்த ரீதியாக ஆயுதபாணியாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ற கொடிய பாசிச அமைப்பின் அரசியல் முகம் என்றோ; பா.ஜ.க. கட்சியில் உள்ள ஏனைய நபர்களின் பாசிசத் தன்மைகள், கடந்தகால நடவடிக்கைகள் பற்றியோ பாமர மக்கள் அறியாமையில் உள்ளனர். பெரும்பாலானோர் மோடிதான் பிரச்சனை; மோடி வரக்கூடாது என்று பார்க்கின்றனர். மேற்சொன்ன பிரச்சாரங்கள் இத்தகைய அறியாமையை ஆழப்படுத்தி, வலிமைப்படுத்தி மக்களைக் கிலுகிலுப்பூட்டத்தான் பயன்படுமே அன்றி பாசிச எதிர்ப்புக்கு பயன்படாது. மேலும் பாசிசக் கும்பலின் தன்மையை மிகக் குறைவாக மதிப்பிடச் செய்து; அதை வீழ்த்துவதும்; முறியடிப்பதும் பெரிய காரியமல்ல என்ற பிரமையை உருவாக்குவதில்தான் போய்முடியும்.

இரண்டாவதாக மிக முக்கியமானதாக, இவர்கள் விருப்பம் கொள்வதைப் போல மோடி இந்தத் தேர்தலில் வென்றால், 16 மாதங்களில் தன் பொறுப்பில் இருந்து இறங்குவதற்கான வாய்ப்பு மிகமிக அரிது என்ற நிலையே உள்ளது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

75 வயதுக்கு மேல் கட்சியில் இருக்கும் ஒருவர் முக்கிய அரசு பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்பது பா.ஜ.க.வின் எழுதப்பட்ட விதியொன்றுமில்லை. அது பா.ஜ.க. தனது கட்சிக்குள் எழும் கோஷ்டி மோதல்களைச் சரிக்கட்டுவதற்காகக் கடைபிடித்துவரும் பல நடவடிக்கைகளில் ஒன்று அவ்வளவுதான்! இந்த நடவடிக்கையை, மரபை மோடி தனது 75 ஆம் வயதில் மதிப்பார்; அல்லது தனது கட்சியில் தனக்குள்ள எதிரிகளின் நிர்ப்பந்தத்திற்கேனும் பணிவார் என்று நாம் எதிலிருந்து உறுதியாகக் கூற முடியும்?

 

 

அரசியல் சாசனத்தையும் நீதிமன்றத் தீர்ப்புகளையுமே கழிவறைக் காகிதமாகக் கருதி காலில் போட்டு மிதித்துவரும் மோடி போன்ற ஒரு பாசிஸ்டு, தனது தேர்தல் தோல்வியையே ஒப்புக்கொள்ளாமல் கலவரத்தைத் தூண்ட வாய்ப்புள்ள ஒரு பாசிஸ்டு, தனது சொந்தக் கட்சியின் மரபை மதிப்பாரா?! எத்தகைய அபத்தமான கற்பனை இது.

மேற்சொன்ன வாதங்களை வைப்பவர்கள் கூறுவதெல்லாம் “முரளி மனோகர் ஜோஷி, அத்வானி, எடியூரப்பா போன்றவர்களெல்லாம் வயது மூப்பின் காரணமாக ஒதுங்கிவிட்டார்கள் / ஒதுக்கப்பட்டார்கள். இது மோடிக்கு மட்டும் பொருந்தாதா?” “கட்சிக்குள் மோடிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. மோடி அதைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்” என்பதுதான். இவ்வாறு கூறுபவர்கள் பாசிசத்தைப் பற்றிய புரிதலற்றவர்களே ஆவர்.  

பாசிசக் கும்பல்கள் பாசிச ஆட்சியதிகாரத்தை நிறுவுவதற்கு ஏதுவாக எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகின்றன; அவர்களை மிரட்டிப் பணிய வைத்து ஒரு வழிக்குக் கொண்டு வருகின்றன; அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், கல்வி, கலாச்சார நிறுவனங்கள் எல்லாவற்றையும் மிரட்டிப் பணியவைத்து ஒரு வழிக்குக் கொண்டு வருகின்றன. மக்களை பாசிசத்தின்பால் வென்றெடுக்கின்றன. பாசிசக் கும்பல்கள் பாசிச ஆட்சியதிகாரத்தை நிறுவ ஏதுவாகச் செய்யப்படும் இந்த “வழிக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை” நாம் “ஒத்திசைவாக்கல்” (synchronization) என்று அழைக்கின்றோம்.

இந்த “வழிக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள்” கட்சிக்கு வெளியில் மட்டும் நிகழ்வதல்ல. கட்சிக்குள்ளும் நிகழ்வதாகும். ஒரு நாட்டில் ஒரு சில பாசிசக் கும்பல்களுக்குள்ளேயே உள்ள முரண்பாடுகள், ஒரேயொரு பாசிசக் கும்பல் அல்லது கட்சிக்குள்ளே உள்ள முரண்பாடுகள் எல்லாவற்றையும் சரிக்கட்டி, வழிக்குக் கொண்டு வரத் துடிக்கின்றனர் பாசிஸ்டுகள். மோடி கும்பல் கட்சிக்குள்ளும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குள்ளும் கடந்த 10 ஆண்டுகளாகச் செய்து வருவது இதைத்தான். தனக்கு ஆதரவாக உள்ள கோஷ்டிகளை வளர்த்துவிட்டு, அவர்களை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தி வைத்து, தன்னோடு முரண்படுகிறவர்களை மிரட்டிப் பணியவைத்தோ, அல்லது வழிக்குக் கொண்டு வந்தோ, ஓரம்கட்டியோ கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வெறித்தனமாக வேலை செய்துள்ளது அக்கும்பல்.

ஜெர்மனியில் பாசிசத்தை நிறுவிய ஹிட்லரை “ஃபியூரர்” (தலைவர்களுக்கெல்லாம் தலைவர்) என்று நாஜிக்கள் அழைப்பர். “பாசிசத்தின் ஒற்றை நபர்” அதாவது ஃபியூரர் என்ற பாணியில்தான் மோடி இந்தியாவில் செயல்பட்டு வருகிறார். கட்சிக்குள் தன்னை வழிபடும் “ஃபியூரர் வழிபாட்டு” தன்மையை அவர் வெற்றிகரமாகவே உருவாக்கியுள்ளார்.

ஆம். கட்சிக்குள்ளும் ஆர்.எஸ்.எஸ்.க்குள்ளும் மோடிக்கு எதிர்ப்பிருக்கிறது என்பது உண்மைதான். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தேவேந்திர பாட்னாவிஸ், வசுந்த்ராஜே சிந்தியா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி போன்ற எண்ணற்ற முக்கியத் தலைவர்களை, ஆர்.எஸ்.எஸ்.ஸில் முக்கியமாக மதிக்கப்படும் தலைவர்களை மோடி ஓரங்கட்டியுள்ளார். அவர்களெல்லாம் மோடியின் மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இதையெல்லாம் மோடி கும்பல் தெரியாமல் செய்யவில்லை. தவறுதலாகச் செய்யவில்லை. திட்டமிட்டேதான் செய்துள்ளது / செய்து வருகிறது.

உதாரணமாக, நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கார் என எந்த மாநிலத்திலும் முதல்வர் வேட்பாளர்கள் யாரென பா.ஜ.க. அறிவிக்கவே இல்லை. மேற்சொன்ன எல்லா மாநிலங்களிலும் முக்கியத் தலைவர்களை ஓரம் வைத்துவிட்டு “மோடிக்காக ஓட்டுப் போடுங்கள்” என்றுதான் பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. அதற்கு முன்பாக நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் இவ்வாறே பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. இதைக் கொண்டு இந்தியா கூட்டணியினர் “முதல்வர் வேட்பாளர்களையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பா.ஜ.க. பலவீனமாக உள்ளது” என்று பிதற்றித் திரிந்தனர்

வினவு தளத்துக்குத் தலைமையளிக்கிற கும்பலான, எமது அமைப்பின் கொள்கைகளைத் துறந்தோடி அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பலாகச் சீரழிந்திருக்கும் ஒரு கும்பலும் இந்த “பாசிசத்தின் ஒற்றை நபர்” என்பதைப் பற்றி எள்முனையளவும் புரிதலின்றி இந்தியா கூட்டணியினரின் இதே வாதங்களை வாந்தியெடுத்தனர்[1].

இந்தியா கூட்டணியினரும், லும்பன் கும்பலும் சொல்வது போல இது மோடி கும்பலுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல; மோடி கும்பல் திட்டமிட்டு மேற்சொன்ன பா.ஜ.க. தலைவர்களை மோடி கும்பல் ஓரம் கட்டத் துடித்துள்ள செயல் ஆகும். பாசிசத்தின் ஒற்றை நபர், ஃபியூரர் என்ற நிலையை நோக்கி வெறித்தனமாக முன்னேறி வரும் மோடி கும்பலின் செயல்பாடு ஆகும். கட்சிக்குள் மோடியை ஃபியூரராக அதாவது பாசிசத்தின் ஒற்றை நபராக நிலைநிறுத்துவது மட்டுமின்றி; நாடெங்கும் “பா.ஜ.க. என்றால் மோடி மோடி என்றால் பா.ஜ.க” என்ற பியூரர் மனநிலையை உருவாக்குவதற்கு மோடி கும்பல் திட்டமிட்டுச் செய்துவரும் நடவடிக்கையாகும். எனவேதான் கட்சியின் எல்லா மட்டங்களிலும், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் அனைத்துப் பொறுப்புகளிலும் தனக்கு ஆதரவான கோஷ்டியை மோடி கும்பல் ஆதரித்து வளர்த்து வருகிறது.

தேர்தல் அறிக்கையை “பா.ஜ.க.வின் வாக்குறுதிகள்” என்றல்லாமல் “மோடியின் வாக்குறுதிகள்” என்று வெளியிட்டிருப்பதும், தேர்தலை ஒட்டி எல்லா ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தொண்டர்களின் சமூக வலைத்தளக் கணக்குகளின் அடையாளங்களையும் “மோடியின் குடும்பம்” என்று மாற்றும்படி நிர்ப்பந்தித்திருப்பதும் இத்தகைய செயல்பாடுகளின் வெளிப்பாடுகளே.

இவ்வாறு பாசிசத்தின் ஒற்றை நபராக, ஃபியூரராக கட்சிக்குள்ளும் நாட்டுக்குள்ளும் வளர்ந்துவரும் மோடி, தனது 75 ஆம் வயதில் பிரதமர் பொறுப்பில் இருந்து ஒதுங்கிவிடுவாரா? எல்லா பா.ஜ.க தலைவர்களையும் போல மோடியை கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பாளர்கள் பணிய வைத்துவிட முடியுமா? எனவே, கெஜ்ரிவாலின் பேச்சையும், பா.ஜ.க.வின் மரபையும் மட்டும் வைத்துக் கொண்டு “மோடியின் அரசியல் வாழ்க்கையே 16 மாதங்களில் அஸ்தமனமாகிவிடும்” என்று பேசுவதெல்லாம் பாசிசத்தைப் பற்றிய புரிதலற்ற பேச்சுக்களே! அதீத கற்பனைகளே!

கட்சிக்குள் வழிக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை மோடி கும்பல் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள சூழலில், பாசிசத்தின் ஒற்றை நபராக மோடி வளர்ந்துவரும் சூழலில் இவ்வாறான நப்பாசை கொள்வதும் கற்பனைகளில் மூழ்குவதும் பாசிச எதிர்ப்பில் எவ்வித பயனையும் தராது. மக்களைக் கற்பனைகளிலும் பிரமைகளிலும் ஆழ்த்துவதில்தான் போய்முடியும்.

மாறாக, பாசிசக் கும்பலின் பலம், தன்மை, ஆயுதங்கள் இவைகளை நேரடியாக விளக்கி, மக்களுக்குப் புரியவைத்து தட்டியெழுப்புவதில்தான் உண்மையான பாசிச எதிர்ப்புப் பிரச்சாரத்தின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.

  • ரவி

 

குறிப்பு

[1] ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!  https://www.vinavu.com/2023/12/03/five-state-elections-fascists-on-the-losing-side-opposition-opportunism/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன