2024 – மே தினத்தில் உறுதியேற்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
கார்ப்பரேட் சுரண்டலுக்குக் கல்லறை எழுப்புவோம்!

எமதருமை உழைக்கும் பாட்டாளி வர்க்கமே!

மக்கள் சமூகமானது, சுரண்டுவோர் – சுரண்டப்படுவோர் என பிளவுபட்டதன் விளைவு, சுரண்டுவோரின் சொத்துக்கள் (மூலதனம்) பெருத்துக் கொழிப்பதும் சுரண்டப்படுவோர் வறுமையிலும் பட்டினியிலும் பெருகி வருவதும் நடந்தேறுகிறது.

இவற்றை சமன்படுத்தும் முயற்சியாக, ஆட்சியாளர்கள் உறுதியேற்பதும் இயலாமல் போவதும் வழக்கமாகிவிட்டது. இதனால், பெரும்பான்மை உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு, உழைப்புக்கேற்ற கூலிக் கிடைக்காமல், சொற்பக் கூலியுடன் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். படிப்படியாக வறுமைக்கும், பட்டினிக்கும் தள்ளப்பட்டு இதிலிருந்து மீள முடியாமல் தற்கொலையைத் தழுவுகின்றனர்.

சுரண்டும் வர்க்கமோ, வறுமையால், பட்டினியால் வாடியதாகவோ, தற்கொலைக்குத் தழுவியதற்கான தடயமுமோ அறவே இல்லை. அவர்களின் சொத்துக்களின் மதிப்பு மட்டும், அதாவது, மூலதனம் மட்டும் நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் எகிறி வருகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இதனடிப்படையில் இந்தியாவின் கார்ப்பரேட்டுகளில் அதானி, அம்பானி, சிவ நாடார், சாவித்திரி ஜிண்டால், திலீப் ஷாங்வி போன்றவர்களின் சொத்து (மூலதன) மதிப்பு நாளுக்கு நாள் பல்கி பெருகி இன்று ரூபாய் 24.14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது; உலக பணக்காரர்கள் வரிசையில் அணிவகுத்தும் வருகின்றனர்; மேலும் 100 கோடி டாலர் (ரூபாய்  8,300 கோடி) மதிப்புடையச் சொத்துக்களைக் கொண்ட 200 கோடிஸ்வரர்கள் வரை இந்தியாவில் உருவாகி உலகளவில் 3-வது இடத்தில் உள்ளதாக ஃபோர்பஸ் நிறுவனம் கூறுகிறது.

200 கோடிஸ்வரர்களின் முதல் வரிசையில் உள்ள ஐந்து பேர் போக, மீதமுள்ள 195 பேர்களின் மதிப்பு ஏறக்குறைய ரூபாய் 16.19 லட்சம் கோடியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு ரூபாய் 40.33 லட்சம் கோடியாக, அதாவது, மூலதனமாக உள்ளது என போர்பஸ் நிறுவன அறிக்கை மூலம் அறிய முடிகிறது. இந்த மூலதன பெருக்கம் உழைப்பவர்களின் உதிரத்தில் இருந்து உறிஞ்சப்பட்ட, அதாவது, அவர்களின் உழைப்பில் இருந்து திருடப்பட்ட உழைப்பின் மதிப்பாகும் என்கிற மார்க்சின் மதிப்பீட்டை எவராலும் மறுக்க முடியாது.

மேலும், மறுகாலனியாக்கக் கொள்கைக்குப் பிறகு அன்னிய மூலதனமும் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் போல படையெடுத்து வந்தது. ஒன்றிய மோடி அரசு முதல் மாநில அரசுகளும் அந்நிய நாடுகளுக்கு பணிந்து பறந்துச் சென்று, அன்னிய மூலதனத்தை வரவழைத்தன. இதற்காக, மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வாரியிறைத்து, மாநாடு நடத்தியும், விருந்துகள் வைத்தும், கோரிக்கைகளை நடத்தியும் உள்ளன. இதன் மூலம், ஆயிரம் கணக்கானக் கோடிகளில் வந்த அந்நிய மூலதனம், இன்று லட்சக்கணக்கான கோடிகளில் குவியத் தொடங்கின. இருப்பினும் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. வேலைத் திண்டாட்டம் ஒழியவில்லை. பெருகிறது தான் மிச்சம்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவோம்” என்ற பாசிச மோடி அரசின் வாக்குறுதி வாய்க்கரிசியாகியுள்ளது என்பதை ஐ.எல்.ஓ (ILO) அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது, இடைநிலை கல்வியற்ற, வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 65 % மாகவும், உயர்கல்வி படித்த இளைஞர்களின் எண்ணிக்கை 54.2% மாகவும் உயர்ந்துள்ளது என்பதை பட்டவர்த்தனமாக்கியுள்ளது. இந்த லட்சணத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பொறுப்பை சந்தைப் பொருளாதாரத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர், ஆலோசனைகளை கூறியுள்ளனர். இவை, இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் கார்ப்பரேட்டுகளிடம் மண்டியிடச் செய்யும். மறுகாலனிக்கத்தை மேலும் தீவிரப்படுத்தும் கோடரிக் கொம்பாக அமைவதோடு, சமூக, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து அரசின் பொறுப்பை அறுத்தெரிவதாகவும் அமையும்.

சந்தையே அனைத்தும் தீர்மானிக்கும் என்பதை மறுக்காலனியாக்க விதியின்படி கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்தும் அரசின் பொறுப்பில் இருந்து அறுத்தெறியப்பட்டதுப் போல, வேலை வாய்ப்பையும் அறுத்தெறியும் முயற்சியாகவே அரசின் செயல்பாடும் அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பது நிரூபணமாகிறது.

5 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சியை எட்டினால், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்; வேலை வாய்ப்புகள் பெருகும், வாங்கும் சக்தியும் ஆறாக ஓடும் என கதைக்கிறது பாசிசம் மோடி அரசு. இது உண்மையெனில், நம் நாட்டு கார்ப்பரேட்டுகளிடம் உள்ள ரூபாய் 40.33 லட்சம் கோடியில், வெறும் ரூபாய் 10 லட்சம் கோடியைக் கோரிப் பெற்றாலே அல்லது மோடிபாணியில் பறிமுதல் செய்தாலே அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விடுமே ஏன்? மோடி அரசு இதற்கு முன் வரவில்லை; வராது என்பதே நிதர்சனம்.

ஏனெனில், இந்த அரசின் வர்க்கத் தன்மையே, சுரண்டும் வர்க்கமான கார்ப்பரேட்டுகளின் நலனை பாதுகாக்கும் தன்மையுடையது. இதன் வர்க்கத் தன்மையை மாற்றியமைக்க முனையாமல் பெருகிவரும் சொத்தை (மூலதனத்தை) பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்திற்கானதாகப் பயன்படுத்த முடியாது.

இவற்றை, கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கும் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாது. மாறாக, உழைக்கும் மக்களின் நலனையே பிரதானப்படுத்தும் மார்க்சிய – லெனினிய தத்துவத்தால் வார்த்தெடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்க ஆட்சியால் மட்டுமே முடியும். அதுவும், இன்றைய கார்ப்பரேட்டுகளின் நாடாளுமன்ற பாதையால் அல்ல, உழைக்கும் மக்களால் இடைவிடாமல் நடந்தேறும் எழுச்சியின் தொடர்ச்சியாக நடைபெறும் புதிய ஜனநாயகப் புரட்சியால் அமைக்கப்படும் புதிய ஜனநாயக அரசால் மட்டுமே முடியும் என்பதை நினைவில் நிறுத்தி பயணிப்போம்! கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்குக் கல்லறை எழுப்புவோம்!

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன