லெனினை கற்போம்!
அவரின் சிறந்த மாணாக்கராக உருவாகுவோம்!

எந்த ஒரு சூழ்நிலையிலும், அச்சூழலையொத்த மார்க்சின் நூல்களைக்  கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அதனை தற்போதுள்ள சூழ்நிலைமையுடன் ஒப்புநோக்கி, இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த கற்றல் முறையாகும். இதனை லெனின் எப்படி செய்தார் என்பதற்கு 1905-07 புரட்சியில் இம்முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும் என்கிறார் குரூப்ஸ்கயா.

லெனினின் 154-வது பிறந்த நாளில் லெனினின் கற்றல் முறையையும் அவர் மார்க்சிடமிருந்து எவ்வாறு பருண்மையான சூழ்நிலைமைகளில் ஆலோசனைப் பெற்றார் என்பதையும் தோழர் குரூப்ஸ்கயா நினைவுகூர்ந்ததை இங்கு  வெளியிடுகிறோம்.

இந்தியப் புரட்சிகர இயக்கத்தின் தற்காலிகத் தோல்விக்கும், பின்னடைவுக்கும், பிளவுக்குமான காரணங்களை யதார்த்த பூர்வமாகப் பரிசிலிப்பதும், எந்தவித தயக்கமும் இன்றி தவறுகளைக் களைந்து, சரியான படிப்பினைகளை பரிசீலித்து, தேவையான புதிய அம்சங்களை சேர்த்து சரியான  மார்க்சிய – லெனினிய அடிப்படையில் நாம் பயணிக்க வேண்டியுள்ளது.

நாட்டில் நிலவும் பருண்மையான நிலைமைகளை நாம் பருண்மையாக புரிந்து கொள்ள மார்க்சியத்தை ஆழமாக கற்க வேண்டியுள்ளது. அதற்கு மார்க்சிய ஆசான்கள் மேற்கொண்ட ஆய்வுமுறையை கற்றுக் கொள்வது என்பது மிகவும் அவசியமாகும்.

மார்க்சிய-லெனினிய ஆய்வுமுறையை கிரகிக்காமல், பல்வேறு மார்க்சிய-லெனினிய குழுக்கள், தங்களது முக்கியமான முடிவுகளை இயந்திர கதியில் பொருத்துவது, தமது அகநிலை விருப்பத்தின் பேரில் முடிவுகளை எடுப்பது என செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களின் முடிவுகளுக்கு சான்றாக மார்க்சிய ஆசான்களிடமிருந்து மேற்கோள்களை காட்டி புளங்காகிதமும், சுயதிருப்தியும் அடைகின்றனர். தாம் மார்க்சிய ஆசான்களின் நூல்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் எனப் பீற்றிக் கொள்கின்றனர்.

இந்தியாவில் நிலவும்  இன்றைய பாசிசக் காலகட்டத்தில்,  இந்தியாவில் உள்ள பல மார்க்சிய-லெனினிய குழுக்கள்  எந்தவித மார்க்சிய ஆய்வுமின்றி, தேர்தல் பங்கேற்பு எனும் நிலைப்பாட்டை  முன்வைத்துள்ளனர்.  தங்களது அகநிலை விருப்பத்தின் படி எடுத்த இந்நிலைப்பாட்டின் தர்க்கமுறைக்காக பல்வேறு புரட்சிகரச் சொல்லாடல்களையும்,  மார்க்சிய மேற்கோள்களையும் தங்களது வாதத்தில் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் உள்ள மார்க்சிய-லெனினிய  குழுக்களின் மார்க்சிய ஆய்வுமுறையில்  உள்ள பலவீனம், பருண்மையான நிலைமைகளில் பருண்மையான முடிவுகளை வந்தடைவதில் இருக்கும் சிக்கல்கள் போன்றவற்றால்  இந்திய புரட்சிகர இயக்கம், அகநிலை பலவீனத்தில் சிக்குண்டுள்ளது. இப்போக்குகளை சரிசெய்வது நமது உடனடிக் கடமையாகும்.

இதற்கு ஒரு மாபெரும் புரட்சியை சாதித்த லெனினின் கற்றல் முறையையும் அவர் மார்க்ஸ்-எங்கெல்சின் ஆய்வுமுறையை எவ்வாறு பகுத்தாராய்ந்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்வதன் வாயிலாக அவர்  புரட்சியை எப்படி சாதித்தார் என்பதை நாம் கற்றுக் கொள்ள முடியும்.

லெனின் மார்க்சை எவ்வாறு கற்றார்; அவரிடமிருந்து எவ்வாறு ஆலோசனைப் பெற்றார் என்பதை பின்வருமாறு விளக்குகிறார் குரூப்ஸ்கயா.

லெனின் மார்க்சிய மேற்கோள்களை தங்களது தர்க்கத்திற்கு ஏற்றவாறு  தவறாகப் பயன்படுத்துவதை எதிர்ப்பார் என்பதை குரூப்ஸ்கயா சுட்டி காட்டுகிறார். “இரண்டாம் டூமா பற்றி பி. மேரிங் என்ற தமது கட்டுரையில் லெனின் எழுதுவதாவது: சிலர் தங்களது தர்க்கங்களுக்காக மேற்கொள்களை தவறாக எடுத்தாளுகின்றனர். பிற்போக்குக் குட்டி முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக பெரும் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பது பற்றிய அடிப்படைக் கருத்துகளை கொண்டு அவற்றைச் சரியாக அலசி ஆராயாமல் ருஷ்ய பழமைவாதிகளுக்கும் ருஷ்யப் புரட்சிக்கும் சம்பந்தப்படுத்துகிறார்கள் என்று அக்கட்டுரையில்  மார்க்சிய மேற்கொள்களை தமது தர்க்கத்திற்கு தகுந்தப்படி எடுத்தாள்வதை சாடுகிறார் லெனின்.

 

எந்த ஒரு சூழ்நிலையிலும், அச்சூழலையொத்த மார்க்சின் நூல்களைக்  கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அதனை தற்போதுள்ள சூழ்நிலைமையுடன் ஒப்புநோக்கி, இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த கற்றல் முறையாகும். இதனை லெனின் எப்படி செய்தார் என்பதற்கு 1905-07 புரட்சியில் இம்முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும் என்கிறார் குரூப்ஸ்கயா.

1905 ஜனவரி 9ம் தேதி ‘அரண்மனை சதுக்கத்தில்’ தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கிளம்பிய புரட்சி அலை ஓங்கியது. அப்பொழுது கட்சியும், மக்கள் திரள் அரங்குகளையும் எப்படிக் கொண்டு செல்லவேண்டும, அத்தருணத்திற்கு ஏற்ற செயல்தந்திரத்தை எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது.

இக்கேள்விக்கு விடையளிக்கும் பொருட்டு, மென்ஷ்விக்குகளும் போல்ஷெவிக்குகளும் இருவேறு வகையான செயல்தந்திரத்தை முன்வைத்தனர்

மென்ஷெவிக்குகளோ மிதவாத குட்டி முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் செயல்தந்திரத்தை முன்வைத்தனர்.

ஆனால் லெனினோ இதற்காக மார்க்சிடமிருந்து ஆலோசனைப் பெற்றார். 1848 ஆம் வருடத்தில் பிரஞ்சு, ஜெர்மன் முதலாளித்துவ – ஜனநாயகப் புரட்சி பற்றி மார்க்ஸ் எழுதிய பிரான்சில் வர்க்கப்போராட்டங்கள், ”1848 முதல் 1850 வரை” என்ற நூலையும், ஜெர்மன் புரட்சி பற்றியதும், பி.மேரிங்க் பதிப்பித்ததுமான மார்க்ஸ், எங்கெல்சின் இலக்கிய மரபு என்ற நூலின் மூன்றாம் தொகுதிகளையும் லெனின் ஆழ்ந்து ஆராய்ந்தார் என்கிறார் குரூப்ஸ்கயா.

அன்று இரஷ்யாவின் நிலவிய பருண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி “எதேச்சதிகாரத்தை எதிர்த்து திடமான, விட்டுக்கொடுக்காத போராட்டத்தை நடத்துமாறும், அவசியம் ஏற்பட்டால் ஆயுதமேந்திப் போரிடுமாறும்”, அறைகூவி அழைத்த போல்ஷிவிக்குகளின் செயல்தந்திரத்தை முன்வைத்தார் லெனின். இப்படி ஒவ்வொரு பருண்மையான நிலைமைகளையும் பருண்மையாக புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் -எங்கெல்சிடம் ஆலோசனை பெறுவதை லெனின் தமது கடமையாக வைத்திருந்தார்.

லெனின் மார்க்சை கற்ற முறையின் பெரும் முக்கியத்துவமுள்ள மற்றொரு அம்சத்தை கவனிப்பது அவசியம். மார்க்ஸ், எங்கெல்சு எழுதியவற்றையும், மார்க்சைப் பற்றி விமர்சகர்கள் எழுதியவற்றையும் மட்டுமின்றி மார்க்ஸ் தனது கருத்துக்களை மேற்கொள்ள காரணமாயிருந்த பாதையையும், மார்க்சின் எண்ணங்களை தூண்டி, அவற்றை குறிப்பிட்ட  திசையில் கொண்டு செல்லக் காரணமாயிருந்த நூல்களையும் லெனின் படித்தார். மார்க்சின் உலகக் கண்ணோட்டத்துக்கான ஊற்றுக்களையும், பிற எழுத்தாளர்களிடமிருந்து மார்க்ஸ் எவ்வாறு எடுத்தாண்டார் என்பதையும் லெனின் ஆராய்ந்தார் என்கிறார் குரூப்ஸ்கயா.

உதாரணாமாக, 1858, பிப்ரவரி 1ல் மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் லஸ்ஸால் எழுதிய ”எபீஸ்சைச் சார்ந்த இருட்டு ஹெராக்லிடஸின் தத்ததுவ இயல்” நூலின் இரண்டாவது தொகுதியை மார்க்ஸ் கடுமையாக விமர்சனம் செய்து அது கற்றுக்குட்டியின் நூல் என்றார்.

மார்க்ஸ்  லஸ்ஸாலின் நூலை ஏன் விரும்பவில்லை என்பதை லெனின் புரிந்து கொள்ள லஸ்ஸாலின் நூலைப் படித்து கூடுதலாக புரிந்து கொண்டார். லஸ்ஸாலின் நூலைப் படித்து குறிப்பெழுதி  உதாரணங்களை எடுத்துக் கொண்டு,  மொத்தத்தில் மார்க்சின் முடிவு சரியானது தான். லஸ்ஸாலின் நூல் படிக்கத் தகுந்ததல்ல எனும் முடிவுக்கு  லெனின் வந்தார் என்கிறார் குரூப்ஸ்கயா

இதுமட்டுமில்லாமல், மார்க்ஸ் எவ்வாறு ஹெகலின் இயங்கியலை பொருள்முதல்வாத முறையில் உபயோகித்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு இயங்கியலை நாம் எல்லாக் கோணங்களிலிருந்தும் வளர்க்கமுடியும், வளர்க்க வேண்டும், ஹெகலின் முக்கிய நூல்களிலிருந்து  எடுத்துக்காட்டுகளை சஞ்சிகையில் வெளிட வேண்டும்; அவற்றை பொருள்முதல்வாத முறையில் விளக்க வேண்டும்; பொருளாதார, அரசியல் துறையில் மார்க்ஸ் இயங்கியல் வாதத்தையும், அதன் எடுத்துக்காட்டுக்களையும் உபயோகித்த முறையை உதாரணமாக காட்டி அவற்றை மதிப்பிட வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்தார் லெனின். என்கிறார் குரூப்ஸ்கயா.

லெனின் எவ்வாறு மார்க்சை படித்தார் என்பது நாம் எவ்வாறு லெனினைப் படிக்க வேண்டும் என நமக்கு கற்பிக்கிறது. மார்க்ஸ்-எங்கெல்சிடமிருந்து அவர் கற்ற விதமே அனைத்து திரிபுவாதிகளையும் எதிர்த்து எவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் போராட்டங்களை நடத்தியது சான்றாக உள்ளன. பல்வேறு மார்க்சிய திரிபுகள் தலையெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு புரட்சியாளர் கடமை என்பது மார்க்சிய–லெனியத்தை பாதுகாக்க ஊன்றி நிற்பது ஆகும்.

லெனினின் கற்றல் முறையும், அதன் மூலம் அனைத்து திரிபுவாதிகளையும் எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்களையும் வரித்துக் கொள்வோம். லெனினின் சிறந்த மாணக்கர்களாக பயில்வோம்! செதுக்கி வைத்த லெனினின் ஊழியராக உருவாகுவோம்!

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. லெனினின் கற்றல் பற்றிய க்ரூப்ஸ்கயாவின் கட்டுரை நல்ல பார்வையை அளிக்கிறது. நன்றி

    அதே நேரம் கட்டுரையில் எழுத்துப் பிழைகள் வரிகளின் Alignment ஆகியவை சிறிய பிரச்சினைகளாக உள்ளன. அவற்றை சரி செய்தால் படிப்பதற்கு சிறப்பாக இருக்கும்.