தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு
நிலைப்பாடற்றுத் திரியும்
 வினவுக்குத் தலைமையளிக்கும்
லும்பன் கும்பல்! – பாகம் 1

எமது அமைப்பு 40 ஆண்டுகாலமாகக் கடைபிடித்துவரும் “செயலூக்கமிக்க தேர்தல் புறக்கணிப்பை” எவ்விதப் பரிசீலனையுமின்றி இவர்கள் துறந்தோடிவிட்டார்கள் என்பது மட்டுமல்ல, “பங்கேற்பா, புறக்கணிப்பா” என்பதில் எவ்வித நிலைப்பாடுமற்று, நிலைப்பாடு எடுக்கவும் திராணியற்றுப் போய்விட்டார்கள் என்பதே உண்மையாகும்.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் (தற்போது புரட்சிகர மக்கள் அதிகாரம் என்று பெயர் மாற்றியுள்ளோம்) ஆகிய அமைப்புகளின் புரட்சிகர நிலைப்பாடுகளைத் துறந்தோடி, அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பலாகச் சீரழிந்திருக்கும் வினவு இணையதளத்தின் அரசியல் தலைமையை அம்பலப்படுத்தி எமது இணையதளத்தில் ஏற்கனவே இரண்டு கட்டுரைகளை (பிப்ரவரி 2023, மார்ச் 2024) வெளியிட்டுள்ளோம். அவர்கள் எங்ஙனம் மார்க்சிய-லெனினியத்தைத் துறந்தோடி அரசியலற்ற, லும்பன் கும்பலாகச் சீரழிந்துள்ளனர் என்பதை அங்குலம் அங்குலமாக அரசியல்-சித்தாந்த ரீதியாக திரைகிழிக்கும் அக்கட்டுரைகளைப் பற்றி இன்றுவரை அவர்கள் வாய்திறக்கவே இல்லை.

தற்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் எடுத்திருக்கும் ‘நிலைப்பாடு’ குறித்து அவர்களது வெளியீட்டிலும் கட்டுரைகளிலும் உளறி வரும் விசயங்களைப் பரிசீலித்தால், இவர்கள் அரசியலற்ற, சித்தாந்தமற்ற கும்பலாக இருப்பதை உணர்த்தும் இன்னொரு எடுத்துக்காட்டாக இருப்பதை உணரலாம். அதனால், அவர்களது தேர்தல் ‘நிலைப்பாடு’ குறித்து நாம் விரிவாகப் பரிசீலிப்போம்.

தேர்தல் பங்கேற்பா? புறக்கணிப்பா? – என்பதில் நிலைப்பாடற்ற லும்பன் கும்பல்!

பதினெட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இந்தியாவில் மார்க்சிய-லெனினியக் குழுக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கிற எல்லாக் குழுக்களும் தேர்தல் தொடர்பான தங்களது ‘நிலைப்பாட்டை’ அறிவித்துவிட்டன. இக்குழுக்கள் அறிவித்துள்ள நிலைப்பாடுகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. பா.ஜ.க.வைத் தோற்கடிக்க இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள்!
  2. பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்!
  3. செயலூக்கமிக்க தேர்தல் புறக்கணிப்பு! (active boycott)

இம்மூன்றில் பல குழுக்களும் முதலாவது நிலைப்பாட்டை எடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. 2020-இல் எமது அமைப்பைப் பிளந்துவிட்டு ஓடிப்போன மருதையன் கும்பலை அடியொற்றிச் செயல்படும் கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். சில குழுக்கள், உதாரணமாக, சி.பி.ஐ.எம்.எல் (ரெட்ஸ்டார்), ஆந்திராவை மையமாகக் கொண்டு இயங்கும் சி.பி.ஐ. எம்.எல். (வர்க்கப் போராட்டம்) போன்றவை இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்துள்ளன. நாமறிந்தது வரை எமது அமைப்பும் இன்னும் சில மா-லெ குழுக்களும் மட்டும்தான் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இவை மூன்றில் எது சரியானது என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

மேற்கண்ட நிலைப்பாடுகளெல்லாம் சரியோ, தவறோ அவர்கள் ஒரு நிலைப்பாடை எடுத்து இயங்கி வருகின்றனர். வினவு-க்குத் தலைமையளிக்கும் அரசியலற்ற லும்பன் கும்பலோ இதில் எவ்வித நிலைப்பாடும் எடுக்கத் திராணியற்று வாய்க்கு வந்ததை உளறி வருகிறது.

“2024 நாடாளுமன்றத் தேர்தல் : வேண்டாம் பா.ஜ.க., வேண்டும் ஜனநாயகம், மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்” என்ற தலைப்பில் பிரசுரத்தையும் “2024 நாடாளுமன்றத் தேர்தல் : பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி?” என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீட்டையும் இத்தேர்தலை ஒட்டி வெளியிட்டுள்ளனர். இக்கும்பலுக்கே உரிய கலவைவாதத் (eclecticism) தன்மையில், குழப்படியான எழுத்து நடையின் மூலம் வாசகர்களைக் குழப்பும் தன்மையில் இவ்வெளியீடு எழுதப்பட்டிருக்கிறது. எனவே, இவர்கள் கண்ணோட்டத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் விமர்சிக்கவும் இவ்வெளியீடு, பிரசுரத்துடன் வினவுதளத்தில் இவர்கள் எழுதிய சில கட்டுரைகளையும் சேர்த்து நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

மேலே நாம் குறிப்பிட்ட முதல் இரண்டு நிலைப்பாடுகளை எடுத்துள்ளவர்கள் தெளிவாக மக்களை நோக்கி “உங்கள் வாக்குகளைப் பயன்படுத்துங்கள்” என்று அறிவித்து விட்டனர். ஒருசாரார் “இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகவும்” இன்னொருசாரார் “பா.ஜ.க.வுக்கு எதிராகவும்” வாக்குகளைப் பயன்படுத்துமாறு மக்களை நோக்கிக் கூறிவிட்டனர். அதாவது, தேர்தலில் மக்களைப் பங்கேற்குமாறு வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். லும்பன் கும்பல் இப்படிச் சொல்கிறதா? அல்லது தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்கிறதா? இரண்டும் இல்லாத குழப்ப நிலையில்தான் அவர்களே மூழ்க்கிக் கிடக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

தேர்தலில் பி.ஜே.பி. தோற்கடிக்கப்பட வேண்டுமென்றும்; ஆனால் அதற்காக இந்தியா கூட்டணியை ஆதரிக்க முடியாது என்றும்; “மக்கள் கோரிக்கைகளை” இந்தியா கூட்டணி ஏற்றுக் கொண்டால்தான் அவர்களே தேர்தலில் வெல்வது சாத்தியம் என்றும் இக்கும்பல் பல இடங்களில் எழுதியுள்ளது.

உதாரணமாக,

பா.ஜ.க.வைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை[1]

“பா.ஜ.க.வைத் தேர்தலில் வீழ்த்துவது எப்படி என்பது மக்களின் கவலை. ஜனநாயக சக்திகள் “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்று நம்புவதைப் போல மக்கள் இக்கூட்டணியினரை நம்ப வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வைத் தேர்தலில் வீழ்த்துவதில் அடங்கியுள்ளது[2]

“மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் உருவாக்கிய தமது இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளமான சட்டத்திட்டங்களை ரத்து செய்யவும் மக்களுக்கான மாற்று ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கவும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்த வகையிலான மக்கள் போராட்டங்கள் மூலமே மோடி-அமித்ஷா கும்பலைத் தேர்தலிலும் வீழ்த்த முடியும்.”[3]

தேர்தலில் இந்த பாசிசக் கும்பலை வீழ்த்த வேண்டும் என்பதில் உடன்பட்டாலும், நாடாளுமன்றத்தில் உழைக்கும் மக்களும் பங்கேற்கும் வகையிலான அதிகார மாற்றம் தேவை என்பதை முன்வைக்கிறோம்”[4]

இக்கருத்துக்களை ஆராய்வதற்கு முன்னர் “மக்கள் கோரிக்கைகள்” என்றும் “அரசியல் மாற்று” என்றும் இவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள்? என்று பார்த்துவிடுவோம். பாசிச பா.ஜ.க. கடந்த பத்தாண்டுகளில் நடைமுறைப்படுத்திய திட்டங்கள், சட்டங்கள் எல்லாம் இந்து ராஷ்டிரத்துக்கான அடிக்கட்டுமானங்களாகும்; எனவே அவை அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்; விவசாயிகள், மாணவர்கள், பிற உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – போன்றவைதான் மக்கள் கோரிக்கைகள் என்று இவர்கள் முன்வைப்பது.

“அரசியல் மாற்று” என்று இவர்கள் முன்வைப்பது “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசாகும்”. மக்களுக்கு தேர்ந்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் அதிகாரமளிப்பது; இரட்டையாட்சி முறையை ஒழிப்பது; பாசிஸ்டுகளுக்கு ஆதரவான கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவெறி, சாதிவெறி கட்சிகளைத் தடை செய்வது; விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடாளுமன்றத்தை மாற்றியமைப்பது – போன்ற கூறுகளைக் கொண்ட “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைத்தான்” இவர்கள் “அரசியல் மாற்று” என்ற பெயரில் முன்வைக்கிறார்கள்.

இந்த மக்கள் கோரிக்கைகளையும் அரசியல் மாற்றையும் இந்தியா கூட்டணியினர் ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்தால்தான் “ஜனநாயக சக்திகள் இந்தியா கூட்டணியை நம்புவதைப் போல மக்களும் அக்கூட்டணியை நம்பி” வாக்களிக்க முடியும் என்கிறார்கள். இல்லையென்றால் பா.ஜ.க. தோற்று மட்டும் என்ன ஆகிவிடப் போகிறதென்று வெடித்துச் சீறுகிறார்கள்.

“சுருக்கமாக சொன்னால், மக்களைப் பொறுத்தவரையில், மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் உண்மையில் பா.ஜ.க.வை வீழ்த்துவதாகும். அந்த மக்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், பா.ஜ.க.வைத் தேர்தலில் தோல்வியடைய வைத்து ஒன்றும் ஆகபோவதில்லை….

பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும், எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், மேற்சொன்ன மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கட்டும்.”[5]

“2024 தேர்தலுக்கான முழக்கங்களாக மக்கள் கோரிக்கைகளை வைத்துள்ளோம். இதை இந்தியா கூட்டணியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா என்பது தேர்தலின் போதுதான் தெரியும். நிலைமைகள் அவர்களையும் நிர்பந்திக்கும். இந்தியா கூட்டணியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றால், எதற்கு பிரச்சாரம், எதற்கு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம். மக்கள் கோரிக்கைகளை இந்தியா கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பா.ஜ.க.வை எதற்கு தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்?” [6]

இக்கோரிக்கைகளெல்லாம் இந்தியா கூட்டணி ஏற்கும் நிலையில் இன்று உள்ளதா? பாட்டாளி வர்க்கக் கட்சி அதை நிர்ப்பந்தித்து வாக்குறுதி அளிக்க வைக்கவும், சாதிக்கவுமான வலிமையில் உள்ளதா? என்ற எதார்த்தமான பரிசீலனைகளையெல்லாம் ஓரம் வைத்துவிடுவோம். இவ்வாறு மக்கள் கோரிக்கைகளையும், அரசியல் மாற்றையும் இக்கும்பல் முன்வைக்கிறது என்றால், இந்தியா கூட்டணி கட்சிகள் இவைகளை “நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தால்” தேர்தலில் அக்கூட்டணியை ஆதரித்து தேர்தல் பங்கேற்பு செய்கிறோம்; இல்லையென்றால் இத்தேர்தலில் “பா.ஜ.க.வைத் தேர்தலில் தோல்வியடைய வைத்து ஒன்றும் ஆகபோவதில்லை; பா.ஜ.க.வை எதற்காகத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்?” எனவே தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்பதுதானே இவர்கள் தர்க்க ரீதியாக வந்தடைந்திருக்க வேண்டிய முடிவு. இந்த முடிவு எந்தவித மார்க்சிய-லெனியப் பரீசீலனை அடிப்படையிலானதும் அல்ல; முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதமானது என்றபோதிலும் இவர்கள் வைக்கும் “தர்க்க” அடிப்படையில் இந்த முடிவைத்தானே இவர்கள் வந்தடைந்திருக்க வேண்டும்.

ஆனால் குறைந்தபட்சம் இந்தளவில்கூட “தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு” பற்றி எந்தவொரு தீர்மானமான முடிவையும் அறிவிக்காமல், அறிவிக்கத் திராணியில்லாமல் நிலைப்பாடே அற்றுத் திரிகிறார்கள்.

மேலும், தேர்தலில் பங்கேற்பதற்கும் புறக்கணிப்பதற்கும் இக்கோரிக்கைகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்கிறார்கள்.

“நாங்கள் தேர்தலில் நிற்கிறோமா, புறக்கணிக்கிறோமா என்பது எங்களது கொள்கை சார்ந்த விசயம். அதற்கும் நாங்கள் முன்வைக்கும் மக்கள் கோரிக்கைகளுக்கும் தொடர்பில்லை.” [7]

இதை உளறல் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பது!

தேர்தல் பங்கேற்பா, புறக்கணிப்பா என்பதில் நிலைப்பாடு எடுக்கத் திராணியற்ற இந்த ஓட்டாண்டித்தனத்தின் துலக்கமான வெளிப்பாடாக ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளனர் :

“உங்களுக்கு யாருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்று தோன்றுகிறதோ, அவர்களுக்குப் போடுங்கள்”[8]

இவ்வாறாக ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி மக்களைப் பார்த்துக் கூற முடியுமா?! தேர்தல் பங்கேற்பு, செயலூக்கமிக்க புறக்கணிப்பு என்ற இரண்டைத் தாண்டி நடுவில் ஒரு நிலைப்பாடு என்பது மார்க்சிய-லெனினியத்தில் இல்லை.

அவர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை; பங்கேற்கும் யாருக்கும் ஓட்டுப் போடச் சொல்லியும் பிரச்சாரம் செய்யவில்லை; மாறாக மக்கள் எழுச்சி வேண்டுமென்றும் அரசியல் மாற்று வேண்டுமென்றும்தானே பிரச்சாரம் செய்கிறார்கள்; எனவே அவர்கள் தேர்தல் புறக்கணிப்புதானே செய்கிறார்கள் – என்று யாரேனும் கேட்கலாம். தேர்தலில் பங்கேற்பது புறக்கணிப்பது என்பது ஒரு கட்சியாக நாம் பங்கேற்கிறோமா? மக்களை நோக்கி வாக்குக் கேட்கிறோமா? என்பது மட்டுமல்ல. மக்களை குறிப்பிட்ட தேர்தலில் “வாக்களிக்குமாறு” அறைகூவல் விடுக்கிறோமா? அல்லது “புறக்கணிக்குமாறு” அறைகூவல் விடுக்கிறோமா? என்பதே ஆகும். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தேர்தலை செயலுக்கமிக்க வகையில் புறக்கணிக்கிறது என்றால் மக்களையும் அவ்வாறு புறக்கணிக்கச் சொல்வதுடன் சட்ட, அரசியல் சாசன மாய்மாலங்களை உடைத்தெறியும் வண்ணம் மக்களிடம் ஊக்கத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுதான் செயலூக்கமிக்க புறக்கணிப்பு என்பதற்கான பொருளாகும்.

செயலூக்கமிக்க புறக்கணிப்பைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார் :

”செயலூக்கமிக்க தேர்தல் புறக்கணிப்பு என்பதன் பொருள் வெறுமனே தேர்தலில் இருந்து ஒதுங்கி இருப்பதல்ல; தேர்தல் கூட்டங்களை சமூக-ஜனநாயகப் பிரச்சாரம் மற்றும் அமைப்பாக்குதலுக்காக மிகவிரிவாகப் பயன்படுத்துவதுமாகும். தேர்தல் கூட்டங்களை விரிவாகப் பயன்படுத்துவது என்பதன் பொருள் என்னவென்றால், சட்டப் பூர்வமாகவும் (வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதன் மூலம்) சட்ட விரோதமாகவும் சோசலிஸ்டுகளின் முழுத் திட்டத்தையும் முழுமையான பார்வையையும் மக்களுக்கு விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்து, டூமாவை [நாடாளுமன்றத்தை] ஒரு மோசடியான நிறுவனம் என்றும் மக்களை ஏய்க்கும் தனமையிலானது என்றும் அம்பலப்படுத்துவதே ஆகும்.” [9]

இவர்கள் செய்வதும் “ஒருவகையான தேர்தல் புறக்கணிப்புதான்” என்று சொல்லத் துணியும் யாரும், “உங்களுக்கு யாருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்று தோன்றுகிறதோ, அவர்களுக்குப் போடுங்கள்” என்று இவர்கள் பிதற்றி வருவதையும் லெனின் கூறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

மேலே நாம் எடுத்துக்காட்டியதில் இருந்து எமது அமைப்பு 40 ஆண்டுகாலமாகக் கடைபிடித்துவரும் “செயலூக்கமிக்க தேர்தல் புறக்கணிப்பை” எவ்விதப் பரிசீலனையுமின்றி இவர்கள் துறந்தோடிவிட்டார்கள் என்பது மட்டுமல்ல, “பங்கேற்பா, புறக்கணிப்பா” என்பதில் எவ்வித நிலைப்பாடுமற்று, நிலைப்பாடு எடுக்கவும் திராணியற்றுப் போய்விட்டார்கள் என்பதே உண்மையாகும். 

இதுமட்டுமல்ல, இயக்கத்தின் தலைப்பையே “2024 நாடாளுமன்றத் தேர்தல், வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” என்றும் இயக்க வெளியீட்டின் தலைப்பை “2024 நாடாளுமன்றத் தேர்தல் : பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி?” என்றும் வைத்துவிட்டதன் மூலமும் “ஜனநாயக சக்திகள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்று நம்புவதைப் போல மக்களும் இக்கூட்டணியினரை நம்ப வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்” என்றெல்லாம் எழுதுவதன் மூலமும், “பாசிச பா.ஜ.க.வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்குத்தான் நாங்களும் வேலை செய்கிறோம்” என்றும் “தேர்தல் புறக்கணிப்பெல்லாம் செய்யவில்லை; இந்தியா கூட்டணியை எதிர்க்கவில்லை” என்பது போலவுமான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், அமைப்புகளிடையேயும் கள்ளக் கூட்டணி வைக்க, அவர்களைத் தாஜா செய்யும் பணியில் ஒருபுறம் இறங்கியுள்ளனர்.

“எதிரி யாரோ, அவர்களை வீழ்த்துவதற்குதான் இந்த கூட்டணி, நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கானது அல்ல” என்று தெளிவாக சொல்கிறார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின். “பா.ஜ.க.-வை வீழ்த்துவதுதான் எங்கள் குறிக்கோள்” என்று எதிர்க்கட்சிகள் அரசியல் களத்தில் வந்து நிற்கிறார்கள். அதேபோல, நாங்களும் “வேண்டாம் பி.ஜே.பி.” என்றுதான் சொல்கிறோம். ஆகையால், தேர்தலில் தெளிவான எமது முடிவு இதுதான்”[10]

மறுபுறம், பங்கேற்பா, புறக்கணிப்பா என்பதில் ஒரு தீர்மானமான முடிவை இன்றுவரை சொல்லாமால் இருப்பதன் மூலம் தாங்கள் “புறக்கணிப்பில்தான்” இன்றுவரை இருக்கிறோம் என்பதுபோலக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில் சொல்வதுபோல, “ஏணிச் சின்னத்தில் ஒரு குத்து, தென்னைமரச் சின்னத்தில் ஒரு குத்து” என்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, தாம் இன்றும் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்பதுபோலவும் புரட்சிகரமாக இருக்கிறோம் என்பது போலவும் காட்டிக் கொள்ள பல இடங்களில் பின்வருமாறு எழுதியுள்ளனர் :

“உங்களுக்கு யாருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்று தோன்றுகிறதோ, அவர்களுக்குப் போடுங்கள்”

என்று நாம் மேலே எடுத்துக் காட்டிய வரிக்கு அடுத்த வரியே

“ஆனால் எதற்காக ஓட்டுப் போட வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி.”

என்று எழுதியுள்ளனர்.

இன்னொரு இடத்தில், “தேவையில்லாமல் இந்தியா கூட்டணி மீது மிகைமதிப்பீடு வைத்து மக்களை ஆளும்வர்க்க நிகழ்ச்சிநிரலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள். மக்களுடன் கைகோர்த்து நில்லுங்கள்” என்று ‘அதிபயங்கர புரட்சிவாதிகள்’ போல எழுதியுள்ளனர்.

மேலும் “தேர்தல் முறையே அதிகாரத்துக்கிடையிலான போட்டி என்றும்; எல்லாக் கட்சிகளும் கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் கட்சிகள் என்றும்” இன்னும் பலவாறும் தேர்தல் கட்டமைப்பையே அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்பவர்கள் போல சில இடங்களில் எழுதியுள்ளனர்.

நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இதுதான்: இன்றைய தேர்தலில் நீங்கள் பங்கேற்கிறீர்களா? இல்லையா? என்பதல்ல. மக்களைப் பங்கேற்கச் சொல்கிறீர்களா? புறக்கணிக்கச் சொல்கிறீர்கள? மக்களை எந்த அடிப்படையில் பங்கேற்கவோ அல்லது புறக்கணிக்கவோ அறைகூவல் விடுக்கிறீர்கள்? இந்த அதிமுக்கியத்துவமான, பற்றி எரியும் பிரச்சனை பற்றி கேள்விக்கு எவ்வித பதிலையும் அளிக்காமல் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவது போல மக்களை ஏய்க்கும் வண்ணம் இவர்கள் எழுதியும் பேசியும் திரிகிறார்கள் என்பதே உண்மையாகும். ஆனால் வெளிவேடத்திற்கு இந்தத் தேர்தலில் தாம் ஏதோ ஆக்கப்பூர்வமான நிலைப்பாடை எடுத்து, அதற்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இவர்கள் எடுத்திருக்கும் இயக்கத்திலிருந்தும் எழுதியிருக்கும் வெளியீட்டில் இருந்தும் பங்கேற்பு, புறக்கணிப்பு இரண்டில் எந்தவொன்றையும், யாரும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளத்தக்க வகையில், விளக்கத்தக்க வகையில் “இரப்பர் போன்ற இழுத்த இழுப்புக்கு நீளத்தக்க வார்த்தைகளால்” கயமைத்தனமாக எழுதியுள்ளனர்.

இத்தகைய வாதங்களும், அணுகுமுறையும் கம்யூனிச இயக்கத்துக்கு ஒன்றும் புதிதல்ல. இரண்டாவது கம்யூனிச அகிலத்தின் ஓடுகாலித்தனத்தை அம்பலப்படுத்திய தோழர் ஸ்டாலின் இதே பாணியிலான அவர்களின் நடவடிக்கைகளைக் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்:

“பற்றியெரியக் கூடிய பிரச்சனைகளைப் பற்றி திட்டமிட்டே கைகழுவவிட்டன. அவை வேண்டுமென்றே பூசிமெழுகி மூடிமறைக்கப்பட்டன. வெளிவேடத்திற்காகப் பற்றியெறியும் பிரச்சனைகளைப் பற்றிப் பேச [அவர்கள்] ஆட்சேபிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், அப்போதுகூட யாரும் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளத்தக்க, இரப்பர் போன்று இழுத்த இழுப்புக்கு நீளக்கூடிய, எப்படியோ ஒப்பேற்றும் முடிவுகள்தான் மேற்கொள்ளப்பட்டன.” [11]

யாரும் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளத்தக்க, விளக்கத்தக்க வகையில் முடிவுகள் எடுத்திருப்பதால், பங்கேற்பு, புறக்கணிப்பு இரண்டையும் ஆதரித்தும் மறுத்தும் ஆளுக்குத் தகுந்தாற்போல பேசிக்கொள்ள வசதியாக இருக்குமல்லவா! அதுதான் இந்த லும்பன் கும்பலின் நோக்கமும் நடவடிக்கையும் கூட!

000

(தொடரும்..)

செங்கனல் ஆசிரியர் குழு

 

குறிப்பு : இக்கும்பல் தேர்தல் பங்கேற்பு, செயலூக்கமிக்க புறக்கணிப்பு இவையிரண்டில் எவ்வித நிலைப்பாடுமற்று திரிகிறது என்பதை அம்பலப்படுத்தி மட்டுமே மேற்கண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேலும் இவர்களது வெளியீட்டையும் மேற்கூறிய கட்டுரைகளையும் குறுக்கும் நெடுக்குமாக ஆராய்ந்தால், எவ்வித அரசியல் சித்தாந்தமுமற்று தமது வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கும் கும்பலாகச் சீரழிந்துள்ளார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாவதைத் துலக்கமாகக் காணலாம். அவற்றைப் பின்வரும் நாட்களில் விரிவாக எழுதுகிறோம்.

 


[1] வேண்டாம் பி.ஜே.பி. வேண்டும் ஜனநாயகம் இயக்கத்தின் சூடேறிய கேள்விகள் என்ற கட்டுரையில்.. அழுத்தம் எமது

[2] மேற்கூறிய வெளியீடு, பக்கம் 21, அழுத்தம் எமது

[3] வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம் மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம் பிரசுரத்திலிருந்து… அழுத்தம் எமது

[4] மேற்கூறிய வெளியீடு, பக்கம் 34 அழுத்தம் எமது

[5] மேற்கூறிய இயக்கத்தின் சூடேறிய கேள்விகள் கட்டுரை, அழுத்தம் எமது

[6] மேற்கூறியது அழுத்தம் எமது

[7] மேற்கூறியது அழுத்தம் எமது

[8] மேற்கூறிய சூடேறிய கேள்விகள் கட்டுரை

[9] லெனின் தொகுப்பு நூல்கள், ஆங்கிலப் பதிப்பு, தொகுதி 10, பக்கம் 97

[10] மேற்கூறியது, அழுத்தம் எமது

[11] ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், பக்கம் 21

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன