காங்கிரஸ் கட்சியால் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?

பாசிச மோடி அரசு கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் நவீன தாராளவாதக் கொள்கைகள் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை அறுவடை செய்யும் பொருட்டு காங்கிரஸ் கட்சி இது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது. ஆனால் காவி பாசிஸ்டுளின் அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் காங்கிரசும் கொண்டிருக்கிறது என்பதால் தனது தேர்தல் வாக்குறுதிகளை அதனால் நிறைவேற்ற முடியாது என்பதுதான் உண்மை.

 

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “நியாயப் பத்திரா”, (நீதிக்கான ஆவணம்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், “இளைஞர்களுக்கான நீதி”, “மகளிருக்கான நீதி”, “விவசாயிகளுக்கான நீதி”, “தொழிலாளர்களுக்கான நீதி” மற்றும் “நீதியை நிலைநாட்டுதல்” போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பத்துக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ருபாய் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் போடப்படும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளம் 400 ருபாயாக உயர்த்தப்படும், நீட், கியூட் போன்ற தேசிய போட்டித் தேர்வுகளை தங்களது மாநிலங்களில் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவெடுக்கலாம், பொருளாதார அடிப்படையிலான இடஒதுகீடு எல்லா சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு மாற்றியமைக்கப்படும், 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செல்போன் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளைத் தனது தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.

தேர்தல் சமயத்தில் மக்களைக் கவர்வதற்காக இதுபோன்று பல வாக்குறுதிகளை ஓட்டுக் கட்சிகள் அளித்தாலும், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அவற்றை பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை. தங்களால் நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தேதான் இதுபோன்ற வாக்குறுதிகளை அக்கட்சிகள் அளித்து வருகின்றன. குறிப்பாக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக எடுக்கப்பட்ட ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல முடிவுகளை மறுபரிசீலணை செய்யப்போவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற நவீன தாராளாவாதக் கொள்கையைத்தான் தனது பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டு பாஜக அரசு இதுவரை செயல்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாலும் இதே நவீன தாராளவாதக் கொள்கையைத்தான் அவர்களும் நடைமுறைப்படுத்துவார்கள். இந்நிலையில் இந்த நவீன தாராளாவாதக் கொள்கைகளுக்கு முரணான எதையும் ஆட்சியாளர்கள் செய்யவும் மாட்டார்கள் செய்யவும் முடியாது. அதன் அடியொற்றித்தான் எதையும் செய்வார்கள்.

உதாரணத்திற்கு பொதுவான சுகாதார பாதுகாப்பு (Universal health coverage) என்பது உலக வங்கியின் திட்டம். அதன்படி அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை தொடங்கி சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்துகள் என அனைத்தையும் இலவசமாக வழங்குவது கூடாது, இதற்கென அரசு மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை அரசின் செலவில் நடத்தக் கூடாது. அதற்கு பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு இவ்வளவு என நிதி ஒதுக்கீடு செய்து அதனை மக்களுக்கு கொடுப்பது, பொது மக்களும் அந்த காப்பீட்டினைப் பயன்படுத்தி மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வது. அரசு மருத்துவமனைகளும் தங்களது வருமானத்திற்கு இந்தக் காப்பீட்டைச் சார்ந்திருப்பது என்ற நிலையை ஏற்படுத்துவது.

இதுதான் முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டம் முதல் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம் வரையில் இருக்கும் அரசின் சுகாதாரத் திட்டங்களுக்கு பின்னால் இருக்கும் பொருளாதார கொள்கை. மருத்துவத்துறைத் தனியார்மயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கொள்கையை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கைவிடாது அதனையே விரிவுபடுத்தும்.

இந்நிலையில் பொது சுகாதாரம் குறித்த தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி “அனைத்து சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்துகள், மறுவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் செய்யமுடியாது எனத் தெரிந்தேதான் காங்கிரஸ் இந்த வாக்குறுதியை அளித்துள்ளது. அதனால்தான் அடுத்த வாக்குறுதியாக ராஜஸ்தான் மாதிரி காப்பீட்டுத்திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும் 25 லட்சம் ருபாய் அளவிற்கு காசில்லாத பொது காப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

பொதுசுகாதாரத்தில் அரசு மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தி, சீரமைத்து, மக்களுக்கு இலவச மருத்துவத்தை அளிப்பதற்கு பதிலாக காப்பீட்டு நிறுவனங்கள் வசம் மக்களின் நலனை ஒப்படைப்பதைப் போல கல்வியில், அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூலமாக இலவசக் கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்கு பதிலாக தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையடிப்பதை அனுமதித்துவிட்டு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதை உலகவங்கி பரிந்துரைக்கிறது.

அந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுவதால் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான கல்விக் கடன் நிலுவைத்தொகையை வட்டியுடன் தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது.

கல்வி தனியார்மயத்தினை நோக்கமாக கொண்ட பொருளாதார கொள்கையில் கல்விக் கடன் என்பது ஒரு பகுதி என்றால், தேசிய அளவிலான தகுதித் தேர்வுகள் நடத்துவது இன்னுமொரு பகுதி. நாடு முழுவதற்கும் பொதுவான ஒரே தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம் உயர்கல்வித் துறையில் மூலதனமிட்டு கல்வி நிறுவனங்களைத் தொடங்க வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, அரசு கல்லூரிகள் பல்கலைக் கழகங்களுடன் போட்டியிடுவதற்கு, மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு களத்தை சமப்படுத்துவது (level playing ground) என்பதுதான் நீட், கியூட் போன்றவற்றின் பின்னால் இருக்கக் கூடிய கொள்கை.

நீட் தேர்வு முறையை முன்மொழிந்து அதனை 2013ம் ஆண்டு நடத்தியதே காங்கிரஸ் அரசுதான் என்பதையும் இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி எந்த மாற்றத்தையும் செய்துகொள்ளாமல் இந்த தேர்வுகளை நடத்துவது குறித்த முடிவை மாநிலங்களின் கையில் விட்டுவிடுவதாக கூறியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்காகவே.

தொழிலாளர் நலன் குறித்த வாக்குறுதிகளிலும் கூட பாஜக அரசு, தொழிலாளர்களுக்கு விரோதமாக 44 தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றியிருப்பதை திரும்பப் பெறுவதைப் பற்றி எதுவும் கூறாமல், பொத்தம் பொதுவாக தொழிலாளர் நலன் பேனப்படும் எனக் கூறியிருப்பதன் மூலம் கார்ப்பரேட் நலன் சார்ந்த தனது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிற்சாலைகளை தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டே நடத்தும் வசதியை கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கொடுப்பதற்காக பாஜக அரசு கொண்டுவந்த நீம், அப்பரண்டிஸ் முறையைப் போலவே புதிய முறையைக் கொண்டுவருவதாக கூறியுள்ளது. அதற்கு இளைஞர்கள் வேலை பெறும் உரிமைச் சட்டம் எனப் பெயரிட்டுள்ளது.

ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக தற்காலிகப் பணியாளர்களை உருவாக்குவதாக கூறிவிட்டு மற்றொருபுறம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் தற்காலிக வேலைகளை ஒழிக்கப்போவதாக கூறுகிறது.   

பாசிச மோடி அரசு கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் நவீன தாராளவாதக் கொள்கைகள் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை அறுவடை செய்யும் பொருட்டு காங்கிரஸ் கட்சி இது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது. ஆனால் காவி பாசிஸ்டுளின் அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் காங்கிரசும் கொண்டிருக்கிறது என்பதால் தனது தேர்தல் வாக்குறுதிகளை அதனால் நிறைவேற்ற முடியாது என்பதுதான் உண்மை.

சென்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுகவும் இதே போன்று பல வாக்குறுதிகளைத் தன்னால் நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தே நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு அவற்றை நிறைவேற்றக் கோரிப் போராடிய துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என அனைவரையும் ஒடுக்கியது.

காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் பொருளாதார நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை பாசிசத்திற்கு எதிராக தங்கள் பக்கம் அணிதிரட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி தனது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக் கொண்டு கார்ப்பரேட்டுகளின் பக்கம் நிற்காமல் மக்கள் பக்கம் இறங்கி வர வேண்டும். அதை விடுத்து இது போன்று வேற்று வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என நினைப்பது, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சியை விரைவில்  தள்ளிவிடும். அது பாசிஸ்டுகளுக்குத்தான் சாதகமாகப் போய் முடியும்.

  • அறிவு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன