ஆனந்த் மகிந்தராவின் கல்வி சேவைக் கனவும் சீரழிக்கப்படும் அரசு பல்கலைக்கழகங்களும்

“நிலைமைகள் தங்களுக்கு தகுந்தவாறு மாறியுள்ளதாக” ஆனந்த் மகிந்தரா கூறுகிறார்.  தற்போதைய நிலையில் இந்திய தரகு முதலாளிகள் ஒவ்வொருவரும் அரசின் சலுகைகளுடன் பலநூறு கோடிகளை முதலீடு செய்து தனக்கென ஒரு பல்கலைக்கழகத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மகிந்திராவின் பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது.

 

 

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, தனது மகிந்திரா பல்கலைகக்கழகத்திற்கு நன்கொடையாக 550 கோடி ருபாயை வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.  ஹைதராபாத் நகரில் 130 ஏக்கர் பரப்பளவில் அளவில் இப்பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தப்போகிறார்களாம். இதை ஆக்ஸ்போர்டு, ஸ்டேன்போர்டு போன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு இணையாக உருவாக்க வேண்டும் என்பது இவரின் நீண்டகாலத் திட்டமாம்.

“உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் என்பது எங்களின் நீண்டகால விருப்பம். ஆனால் தனியார் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கான நிர்வாக ரீதியான தடைகள்(red tapisim) இருந்தன. தற்பொது நிலைமைகள் கல்லூரி ஆரம்பிப்பதற்கு ஏற்றவாறு மாறியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். மோடி ஆட்சியில், கார்பரேட் முதலாளிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தங்கள் விருப்பம் போல கல்லூரிகள் ஆரம்பிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதே இதன் பொருள்.

மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் உயர்கல்வி சார்ந்து கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் அரசின் மேற்பார்வையிலிருந்தும் நிதி கடப்பாடுகளிலிருந்தும் படிப்படியாக விலக்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மத்திய/மாநில பல்கலைக்கழகங்களை கைகழுவி விடுவதற்கான வேலைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன.

இதைத்தான் “நிலைமைகள் தங்களுக்கு தகுந்தவாறு மாறியுள்ளதாக” ஆனந்த் மகிந்தரா கூறுகிறார்.  தற்போதைய நிலையில் இந்திய தரகு முதலாளிகள் ஒவ்வொருவரும் அரசின் சலுகைகளுடன் பலநூறு கோடிகளை முதலீடு செய்து தனக்கென ஒரு பல்கலைக்கழகத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மகிந்திராவின் பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது.

பல்கலைகழகங்கள் தொடங்குவதற்கு இவர்களனைவரும் சொல்லும் ஒரே காரணம் “உலகத் தரம் வாய்ந்த கல்வியை இந்தியாவில் வழங்கவேண்டும்.” என்பது. இது மாணவர்களின் நலனிலிருந்து வந்த அக்கறை அல்ல. பல ஆயிரம் கோடிகளை கல்விக் கட்டணமாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்கள் ஏன் கொடுக்க வேண்டும்? அதை நாமே சம்பாதிக்கலாமே என்ற பகற்கொள்ளை கணக்குதான் இவர்களின் அக்கறைக்கு பின்னால் இருப்பது.

“உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும்.  இந்தியர்கள் படிக்க வெளிநாடு செல்வதற்கு பதிலாக வெளிநாட்டு மாணவர்களை இந்திய (தங்களது) பல்கலைக்கழகங்களில் படிக்க ஈர்க்கவேண்டும்.” என்கிறார் மகிந்தரா. என்னவொரு தேசப்பற்று! இப்பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. விண்ணைமுட்டும் அளவிற்கான கல்விக் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. புதியதாராளவதக் கொள்கைகளின் விளைவாக உருவாகியுள்ள மேல்தட்டுவர்க்கத்தினரே இவர்களின் இலக்கு. இப்பல்கலைக்கழகங்கள் காவி பாசிஸ்ட்களின் பாதம் தாங்கிகளாகவும் உள்ளன.             

கார்பரேட் முதலாளிகளின் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி ஒருபுறம் என்றால் அதற்கு அக்கம்பக்கமாகவே அரசு கல்லூரிகள் சீரழிவதும் துலக்கமாகத் தெரிகின்றது.  பொதுவான அம்சத்தில் தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிக்காகவே அரசு உயர்கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தியைக் கூறலாம்.  

 

 

தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி வழங்குகின்ற திட்டத்தினை ஒன்றிய அரசு யுஜிசி-ன் துணையோடு அமல்படுத்தியது. அதன்படி தற்போது டெல்லி பல்கலைக்கழகம், உள்ளிட்ட ஏழு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சியை வழங்கியுள்ளது. பொதுவாக பல்கலைக்கழகங்கள் என்பவை தன்னாட்சியுடன் இயங்கக்கூடியவை. இங்கு மோடி அரசு கூறுகின்ற தன்னாட்சி என்பது நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான விவகாரங்களில் அரசு தலையீடோ அல்லது உதவியோ இருக்காது என்ற வகையிலான தன்னாட்சி.

ஒன்றிய அரசு இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு என நிதி ஒதுக்காது, இனி அனைத்தும் பல்கலைக்கழகங்களின் பொறுப்பு.  அப்பல்கலைக்கழகங்கள் UGC யின் முன் அனுமதியின்றி புதிய படிப்புகள், பாடத்திட்டங்கள், புதிய கல்லூரிகள் தொடங்கலாம். இதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு பேராசிரியர்களுக்கான சம்பளம் இதர செலவுகளை அரசு பல்கலைக்கழகங்கள் ஈடுசெய்து கொள்ள வேண்டும்.  இது நிதிச் சுமையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது திறம்பட மாற்றுகிறது.  அம்பானிக்கும் அதானிக்கும் மகிந்ராவிற்கும் சாதகமாக மோடி அரசு கொண்டுவந்துள்ள இத்திட்டங்களும் கொள்கை முடிவுகளும் அரசு பல்கலைக்கழங்களை இழுத்து மூடும் நிலையை நோக்கித் தள்ளிச்செல்கின்றன.

அழகு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன