ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்!


ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் :
ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்!

10.03.2024

கல்வி செயற்பாட்டாளர் ஆசிரியர் சு.உமா மகேஸ்வரி அவர்களை பள்ளிக் கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது‌. செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் சு. உமா மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து அறிவியல் பூர்வமான, ஜனநாயகப் பூர்வமான கல்விக்காக செயல்பட்டு வருபவர். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையையும், அதை தமிழ்நாடு அரசு பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்துவதையும் சமரசமின்றி எதிர்த்து எழுதியும் பேசியும் வருபவர்.

கல்வித்துறையில் என்ன சீரழிவுகள் நடந்தாலும் “ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது, அரசுப் பணியாளர்கள் அரசை எதிர்த்துப் பேசக் கூடாது” என்று ஒதுங்கிச் செல்லும் பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மத்தியில் துணிச்சலாக அரசை எதிர்த்து எழுதியும் பேசியும் வரும் மிகச்சிலரில் இவரும் ஒருவர்.

பள்ளிக் கல்வித்துறையில் நிகழ்ந்து வரும் சீர்கேடுகள், அரசின் கல்வித்திடடங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சித்து எழுதியும், பேசியும் வருகிறார். அவரது பதிவுகளால் அரசுப் பணியாளர்களிடையே எரிச்சலை உண்டாக்கி, அமைதியின்மை ஏற்படுத்தி அவர்களை அரசுப் பணியை மேற்கொள்ள முடியாமல் தடுத்துள்ளது, அரசுப் பணியாளருக்கான விதிகளை மீறியுள்ளார் என்று மு.க.ஸ்டாலின் அரசு அவரை 06.03.2024 முதல் காலவரையின்றி பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மேலும் பணியிடை நீக்கம் செய்வதற்கு முதல்நாள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் ரவுடித்தனம் செய்துள்ளனர். ஆம் ரவுடித்தனம் தான். அவரது கைபேசியை பறித்து சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, பிறகு அவர் கல்வித்துறை குறித்து விமர்சித்து எழுதியிருந்த பதிவுகளை எல்லாம் வலுக்கட்டாயமாக மிரட்டி முகநூலில் இருந்து நீக்கச் செய்துள்ளனர். இதை ரவுடித்தனம் என்று சொல்லாமல் வேறு எவ்வாறு நாம் குறிப்பிட முடியும்.

மேலும், புதிய கல்விக் கொள்கை பற்றி எதற்காக எழுதுகிறீர்கள் என்றும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருபுறம் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக தமிழக மக்களிடம் வாய்ச் சவடால் அடித்துக்கொண்டு மோடியின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அதிகாரிகளை வைத்து பள்ளி ஆசிரியரை மிரட்டுகிறது திராவிட மாடல் அரசு.

அதோடு மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பற்றி எழுதி அவரது மனதை நோகடித்துள்ளீர், அவருக்கு மன்னிப்பு கடிதமும் எழுதிக் கொடுங்கள் என்று வலுக்கட்டாயம் செய்து கடிதம் வாங்கிக் கொண்டு மறுநாள் முன்தேதியிட்டு அவரை பணியிடை நீக்கம் செய்ததாக உத்தரவை அளித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

இதுமட்டுமல்லாமல் அந்த இடைநீக்க உத்தரவில் அவரை ஊரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளால் ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் ஒரு கிரிமினல் குற்றவாளியைப் போலவே நடத்தப்பட்டுள்ளார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தொடர்ந்து கல்வித்துறையில் இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற பல்வேறு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை அம்சங்களை பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்திக் கொண்டு, புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று வாய்கூசமல் புளுகித் திரிகிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ். மேலும், கல்வித்துறையில் நடைபெறும் சீர்கேடுகளையும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைகளையும், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அராஜகத்தையும் உமா மகேஸ்வரி அவர்கள் அம்பலப்படுத்தி சுட்டிக் காட்டியதே திமுக அரசிற்கும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அவர்மீதான இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக வாயை திறக்கக்கூடாது, அரசியல் பேசாதே என்ற எச்சரிக்கைதான் உமா மகேஸ்வரியின் மீதான நடவடிக்கையின் அர்த்தம். மீறிப் பேசினால் இதுதான் கதி என்று பணியில் இருக்கும் ஆசிரியர்களை எச்சரிக்கிறது. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் பார்ப்பனிய, சனாதனக் கல்விக் கொள்கையான புதிய கல்விக் கொள்கையின் பாதச்சுவட்டில் கால் பதித்து செல்லுகிறது மு.க.ஸ்டாலினின் திமுக அரசு. அதை அமல்படுத்துவதற்குத் தடையாக உள்ள ஆசிரியர்களையெல்லாம் களையெடுக்கிறது.

இதை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது ஒரு எச்சரிக்கை என்பதே ஆளும் வர்க்கம் நமக்கு சுட்டிக்காட்ட விரும்புவது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக கல்விக் கொள்கையை வடிவமைக்கும் மாநில கல்விக் குழுவில் இருந்த பேராசிரியர் ஜவஹர் நேசன் என்பவர், “புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள்தாம் இதிலும் உள்ளது” என்று கூறிவிட்டு அதிலிருந்து விலகியதும் இத்தகையதொரு நடவடிக்கைதான்.

பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் சமூகம் ஈடுபட்டு வரும் சூழலில், அதன் ஒரு அங்கமாக கல்வித்துறையை செல்லரிக்கும், காவி-கார்ப்பரேட்மயத்திற்கு துணைபோகும் திமுக அரசின் அராஜக செயல்பாட்டிற்கு எதிராக ஆசிரியர், மாணவர், பெற்றோர்கள், ஜனநாயக அமைப்புகள் அனைவரும் ஒன்று திரண்டு இந்நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என்று புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பு கேட்டுக்கொள்கிறது. இது ஆசிரியர் உமாமகேஸ்வரி மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் கல்வி உரிமையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாகும். ஆசிரியர்கள், கல்வியாளர்களைப் பார்த்துவிடுக்கப்பட்டிருக்கும் பகிரங்கமான மிரட்டலாகும்!

இப்படிக்கு
தோழர் முத்துக்குமார்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன