பெண்களை முன்னிறுத்தும் அரசின் திட்டங்களும் அதிகரிக்கும் உழைக்கும் மகளிர் மீதான சுரண்டலும் ஒடுக்குமுறையும்.

பெண்கள் என்றால் ஆண் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிடக் குறைவாக கொடுக்கலாம். வேலை நேரத்தை அதிகரிக்கலாம். சம்பளம் இல்லாத ஓவர்டைம் வேலை வாங்கலாம். பெண் தொழிலாளர்களுக்கு என தனியான வலுவான தொழிற்சங்கங்கள் கிடையாது. அவர்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள். அதுவும் கிராமங்களிலிருந்து படிப்பை முடித்தவுடன் நகரங்களுக்கு வரும் இளம் பெண் தொழிலாளர்கள் என்றால், நிர்வாகம் கொடுக்கும் குருவிக் கூடுபோன்ற அறையில் அடைத்துவைத்து வேலைவாங்கலாம். இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்த முன்னுரிமை கொடுப்பதன் ரகசியம்.

 

 

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் (நரி சக்தி) என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. மகப்பேறு நலன்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட, பெண் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறித்தி ஜனவரி மாத இறுதியில் முதலாளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பெண்களை தலைமைப் பதவிக்கு உயர்த்துதல், வேலைக்கான விளம்பரங்களில் பாலியல் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கான தங்குமிடங்களை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளை வழங்கிய அதே வேளையில் பணியிடத்தில் பெண்களுக்குக் கிடைக்கும் வசதிகள் குறித்த ஆய்வையும் ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.

ஒன்றிய அரசு மட்டுமல்ல தமிழக அரசும் உழைக்கும் மகளிருக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தருவதற்காக பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், உழைக்கும் பெண்களுக்கான அரசு விடுதிகள், பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கான மாத உதவித் திட்டம் என தன் பங்கிற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஆனால் இன்னொரு பக்கம் பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரிய இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம், திறன்சார்ந்த வேலைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகளை நீக்குவது, கூடுதல் நேர வேலையை (overtime work) அதிகரிப்பது என பல்வேறு சட்டதிருத்தங்களையும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் கொண்டு வந்துள்ளன. மூதலீட்டை ஈர்ப்பது, புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவது அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குவது என இந்த நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. உலகமயமாக்கல் காலகட்டத்தில் பெண் தொழிலாளர்கள் குறித்த அரசின் அணுகுமுறையை இந்த நடவடிக்கைகள் அனைத்தும் காட்டுகின்றன.

‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்’, ‘வேலைவாய்ப்பை உருவாக்குதல்’, ‘வறுமை ஒழிப்பு’ போன்ற நவீன தாராளமயக் கொள்கை முழக்கங்களின் பின்னால், தொழிலாளர்கள் இதுகாறும் போராடிப் பெற்ற சலுகைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு, முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்க உதவுவது எனும் உண்மை நோக்கம் ஒழிந்திருக்கிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை மொத்தமாக நீக்கிவிட்டு நான்கு தொகுப்புகளாக அவற்றைச் சுருக்குவது, தொழில் செய்வதை எளிமையாக்குவது என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், “மேக் இன் இந்தியா” திட்டத்தை ஊக்குவிப்பது, தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது அளித்துவந்த சட்டங்களை “இஸ்பெக்சன் ராஜ்ஜியம்” எனக் கூறி நீக்கிவிட்டு ‘ஷ்ரமேவ ஜெயதே’ (உழைப்பே வெல்லும்) என்ற கொள்கையை அமுல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்கள் மீதான் ஒடுக்குமுறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பது என நவீன தாராளவாதக் கொள்கைகளைத் தொடர்ந்து இந்த அரசு அமுல்படுத்திவருகின்றது.

இந்த நடவடிக்கைகள் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் கணிசமான அளவிற்கு அதிகரிக்கும் என்றும் அரசு கூறுகின்றது. ஆனால் நவீன தாராளவாத கொள்கைகளின் காரணமாக நமது நாட்டில் பெண் தொழிலாளர்களின், தொழிலாளர் பங்கேற்பு (labour participation) விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. 2022ம் ஆண்டு கணெக்கெடுப்பின் படி பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை கணக்கிடும், 146 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 127வது இடத்தில் இருக்கிறது. அதுவும் பெண்கள் வேலை செய்வதைச் சட்டப்பூர்வமாகவே தடுத்துவரும் சௌதி அரேபியாவைவிட இந்தியா பின்தங்கியுள்ளது.

இந்திய பெண் தொழிலாளர்களில் 96 சதவீதம் பேர் அமைப்புசாரா துறைகளிலேயே வேலை செய்து வருகின்றனர். பெரும்பான்மை பெண் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களாக, தினக்கூலிகளாக, தற்காலிகப் பணியாளர்களாகத்தான் வேலை செய்கின்றனர். நிரந்தர மாத வருமானம், பி.எப். ஈ.எஸ்.ஐ. பிடித்தம் போன்ற எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பெண்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பை அளித்துவந்த விவசாயத்துறை அழிந்து வருவதால், ஆண்களைப் போன்றே பெண்களும் நகரங்களை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு நகரங்களை நோக்கிவரும் பெண்களைக் குறிவைத்துத்தான் தற்பொது கார்ப்பரேட் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான சட்டங்களை இயற்றுவதுடன், அவர்க்ளுக்குத் தேவையான திறன் படைத்த பெண் தொழிலாளர்களை உருவாக்கிக் கொடுக்கும் வேலையையும் ஸ்கில் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அரசு செய்து வருகிறது. அதேசமயம் பெண் தொழிலாளர்களது நலனை உறுதி செய்யும் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அவர்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரைமுறையற்ற சுரண்டலுக்குள் அரசு தள்ளிவிடுகிறது.

இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களில் (15,80,000), நாற்பது சதவீதம் பேர் அதாவது 6,79,000 பெண் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்கள். வழமையான தொழிற்துறைகளான ஜவுளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் முதல் ஆட்டோமொபைல், மின்னணு சாதன உற்பத்தி, மின்சார வாகனம், சோலார் பேனல் உற்பத்தி வரை பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.

ஓலா நிறுவனம் தனது மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை முழுவதுமாக பெண் தொழிலாளர்களைக் கொண்டே நடத்தி வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் இந்திய தொழிலாளர்களில் 72% பேர் பெண்கள்.

பெண்கள் என்றால் ஆண் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிடக் குறைவாக கொடுக்கலாம். வேலை நேரத்தை அதிகரிக்கலாம். சம்பளம் இல்லாத ஓவர்டைம் வேலை வாங்கலாம். விடுமுறை இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யவைக்கலாம். வரைமுறை எதுவும் இன்றிச் சுரண்டலாம். பெண் தொழிலாளர்களுக்கு என தனியான வலுவான தொழிற்சங்கங்கள் கிடையாது. அவர்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள். அதுவும் கிராமங்களிலிருந்து படிப்பை முடித்தவுடன் நகரங்களுக்கு வ`ரும் இளம் பெண் தொழிலாளர்கள் என்றால், தொழிற்சாலை நிர்வாகம் கொடுக்கும் குருவிக் கூடுபோன்ற அறையில் அடைத்துவைத்து வேலைவாங்கலாம். இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்த முன்னுரிமை கொடுப்பதன் ரகசியம்.

கார்ப்பரேட் முதலாளிகளின் இந்தச் சுரண்டலை அரசு கண்டும் காணாமல் இருப்பதால் பெண் தொழிலாளர்கள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம். இந்திய ஆட்டோமொபைல் துறையில் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த வருடாந்திர அறிக்கை, பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் போதுமான பயிற்சி அல்லது பாதுகாப்பு உபகரணங்களின்றி ஆபத்தான நிலைமைகளில் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக கண்டறிந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் விபத்துக்களில் பெண் தொழிலாளர்கள் தங்களது கைவிரல்களை இழப்பது அடிக்கடி நடப்பதாக சேப் இன் இந்தியா பவுண்டேசன் எனும் தன்னார்வ நிறுவனத்தின் கணெக்கெடுப்பு கூறுகிறது.

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு வாகன உதிரி பாக உற்பத்தித் தொழிற்சாலையில் மட்டும் 22 பெண் தொழிலாளர்கள் விபத்துக்களில் பாதிக்கப்பட்டு கைவிரல்களை இழந்துள்ளனர்.

இவ்வாறு விபத்துக்களில் சிக்கும் பெண் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் இழப்பீடு எதுவும் கொடுப்பதில்லை. குறைந்தபட்சம் மருத்துவ உதவிகளைக் கூடச் செய்வதில்லை. பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் தற்காலிக பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதால் அவர்களுக்கு அரசின் ஈ.எஸ்.ஐ. மருத்துவப் பாதுகாப்பும் கூடக் கிடைப்பதில்லை. தங்களது மருத்துவச் செலவுகளுக்கு கடன் வாங்கிச் சமாளித்து பின்னர் வாழ்நாள் முழுவதும் உழைத்து அதனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் பெண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

இது ஃபரிதாபாத்தில் மட்டும் உள்ள நிலைமை அல்ல. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் என நாடு முழுவதும் உள்ள பல நூறு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் பல ஆயிரம் பெண் தொழிலாளர்கள் விபத்துக்களில் சிக்கித் தங்களது கைகளை இழந்துள்ளதாக சேப் இன் இந்தியா பவுண்டேசனின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாகன உற்பத்தித் தொழிற்சாலை மட்டுமல்ல மின்னணு பொருட்கள் உற்பத்தி உட்பட பெண்கள் பணிபுரியும் எல்லா தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உபகரணங்கள் எதுவும் இன்றி அபாயகரமான நிலைமைகளிலேயே பெண் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் விபத்துக்கள் தொழிற்சாலைகளுக்கு உள்ளேயே கமுக்கமாக பேசி முடிக்கப்படுகின்றன. தங்களது உரிமைகள் குறித்துத் தெரியாத இந்த இளம் பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் தொழிலாளர் ஆணையத்தில் முறையிடுவதும் இல்லை. அப்படியே முறையிட்டாலும் தொழிலாளர் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நிர்வாகம் தப்பித்துக் கொள்வதுதான் நடக்கிறது.

இது போன்ற தொழிற்சாலைகளில் அவ்வப்போது சோதனை செய்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசும் எதையும் செய்யாமல் வாழாவிருப்பதுடன், தொழிலாளர்கள் இதுகாறும் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் வகையில் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை வெறும் நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியுள்ளது.

அமைப்புச்சாரா தொழிற்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. தொழிற்சாலைச் சட்டங்கள் உட்பட எந்த சட்டமும் அவர்களுக்கு பொருந்தாது, பேறுகால சலுகைகள் உட்பட எந்த சலுகைகளும் அவர்களுக்குக் கிடையாது. முறையாக சம்பளம் தாராமல் முதலாளிகள் ஏமாற்றினால் கூட அவர்களால் எங்கேயும் சென்று முறையிட முடியாது.

 

அமைப்புச்சாரா தொழிற்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக தனியாக சட்டமியற்றப்பட்டு (அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம் 2008) 15 ஆண்டுகள் ஆகியும் அதனை இன்னமும் நடைமுறைக்குக் கொண்டுவரவேயில்லை. “பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா”, “பிரதம மந்திரி ஜீவன் சுரக்ஷா யோஜனா”, “அடல் பென்சன் யோஜனா” என ஆண்டுக்கு ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவை காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன, அதற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு எப்போதும் செய்வதில்லை. ஒரு ருபாய்கூட ஒதுக்கப்படாமல் விளம்பரம் மட்டும் செய்யப்படும் இத்தகைய திட்டங்களைக் காட்டி பெண்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக நடிக்கிறது இந்த அரசு.

அரசின் உண்மை முகத்தை, அதன் கார்ப்பரேட் விசுவாசத்தை உழைக்கும் பெண்களின் போராட்டங்கள் திரைகிழித்துக் காட்டியுள்ளன. வருங்கால வைப்பு நிதியை எடுப்பதை தடுத்த மோடி அரசின் அறிவிப்பிற்கு எதிராக ஐதராபாத்திலும் பெங்களூருவிலும் கார்மெண்ட்ஸ் பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களும், சென்னையில் பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் பெண் தொழிலாளர்களின் உறுதியைக் காடியிருக்கின்றன.

பெண்களுக்காக இதைச் செய்கிறோம் அதைச் செய்கிறோம், சலுகைகள் வழங்குகிறோம் என இந்த அரசு கூறுவது வெறுமனே பம்மாத்து என்பதை பெண் தொழிலாளர்கள் உணர்ந்து வருகிறார்கள். தொழிலாளர்களை, குறிப்பாக பெண் தொழிலாளர்களைச் சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட நவீன தாராளவாதம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை முறியடித்தால் மட்டுமே பெண் தொழிலாளர்கள் தங்கள் மீதான சுரண்டலில் இருந்து விடுபட முடியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

  • அறிவு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன