தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ரஜினி, விஜய் போன்ற காளான்களைப் பிடுங்கி எறிவோம்! மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுக்கும் வழியில் பயணிப்போம்!

நடிகர் விஜய் திரையில் வசனம் பேசுவதைத் தாண்டி இந்த மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இதுவரை என்ன செய்துள்ளார்? அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து நான்கு வார்த்தைகள் பேசக் கூடத் துப்பில்லாமல் நான் அடுத்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் அதுவரை மவுனமாகத்தான் இருப்பேன் என்கிறார். இவரது அரசியல் கொள்கை என்ன? பொருளாதாரக் கொள்கை என்ன?

 

புலி வருது, புலி வருது என்று பயங்காட்டி வந்த, ரஜினி அரசியலுக்கு வருவது இனி சாத்தியமில்லை என்றாகிவிட்ட சூழலில், விஜய்-ன் மக்கள் இயக்கமானது, தமிழக வெற்றி கழகமாக உருமாறி, சட்டமன்ற, நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில், வலம் வருவது என்ற முடிவை ‘துணிச்சலாக’ எடுத்துள்ளது என்று ஊடகங்கள் ஊளையிடுகின்றன. இந்த ‘துணிச்சலான’ முடிவை வரவேற்று, இவருடைய ரசிக அடிபொடிகள் எல்லாம், மேளதாளத்துடன், வெடி, வேடிக்கைகளுடன் உற்சாகத்தில் ஊறி திளைக்கின்றனர்.

இதன் வருகை ஏற்கனவே தொழுவத்தில் கொட்டைப் போட்டு வரும் மற்றவர்களுக்கு பீதியும், கலக்கமும் ஏற்பட்டுள்ளதாகவும், இவை பிஜேபியின் புஸ்ஸி ஆனந்தின் பின்னணியில் முகமூடியாக இருப்பதால் திமுகவுக்குத்தான் அதிக கலக்கவும், நடுக்கமும் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

திரையுலகில் இருந்து தொழுவத்திற்கு வந்தவர்களில் சிவாஜி முதல் விஜயகாந்த் வரை முதல்வராக வர இயலவில்லை. ஒரு வேலை எம்ஜிஆர் – ஜெயலலிதாவை போல நம்மாலும் முதல்வராக முடியும் என்கிற நப்பாசையும் இருக்கலாம். ஊடகங்கள் ‘குறி’ச் சொல்வது போல, இத்தொழுவப் போட்டியில் ஜெயிப்பாரா?, தோற்பாரா? முதல்வராக வருவாரா?, வரமாட்டாரா? இதுவரை எவரும் செய்யாததை இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்!

இது ஒரு புறம் இருக்கட்டும். இவரைப் போலவே, ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு வந்தவர்கள் அனைவருமே, “மக்களுக்கு நல்லது செய்யணும்ங்கிற அக்கறையில்தான், ஏழைகளுக்கு சேவை செய்யணும்ங்கிற அக்கறையில்தான்” வருகிறோம் என்று கூசாமல் புளுகுவது வழக்கமான ஒன்றுதான். இவற்றை அரசியல் அதிகாரத்திற்கு வராமலேயே செய்யலாமே! ஏன்? அரசியல் அதிகாரத்திற்கு வந்து தான் செய்வேன் என்று அடம்பிடிக்க வேண்டும்.

காரணம் இல்லாமல் இல்லை. தனக்கென்ன ஒரு துதிபாடிக் கூட்டம், அவர்களால் கட்டி எழுப்பப்படும் ஒளிவட்டம், முகத்துதி, பரிவட்டம், பிரபலம் போன்றவைகளை உள்ளடக்கிய ஒரு வகை அதிகாரப் போதை. நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்துவிட்டு நாளைக்கு முதல்வராக வேண்டும் எனக் கனவு காணும் நடிகர் விஜய் திரையில் வசனம் பேசுவதைத் தாண்டி இந்த மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இதுவரை என்ன செய்துள்ளார்? அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து நான்கு வார்த்தைகள் பேசக் கூடத் துப்பில்லாமல் நான் அடுத்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் அதுவரை மவுனமாகத்தான் இருப்பேன் என்கிறார். இவரது அரசியல் கொள்கை என்ன? பொருளாதாரக் கொள்கை என்ன? எதுவும் சொல்ல மாட்டார். 

விஜய் மட்டுமல்ல இதுவரை அரசியலுக்கு வந்துள்ள எந்த சினிமா நடிகரும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் தனது செல்வாக்கை அதிகாரமாக மாற்றிக் கொள்வதையே தங்களது கொள்கையாகக் கொண்டு, வந்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது எல்லாம் ஆளும் வர்க்கத்தின் கொள்ளைக்கு கவர்ச்சியான முகமூடி ஒன்றைக் கொடுத்தது மட்டுமே. இவர்கள்தான் இன்றைய கார்ப்பரேட் முதலாளிகளாக அதிகாரம் செலுத்தி வரும் அந்நிய – உள்நாட்டு முதலாளிகளின் கவசம். தங்கள் சுரண்டலுக்கு கவசமாக செயல்படும் இந்த கைக்கூலிகளால் அமைக்கப்படும் அரசாங்கம்தான், நம்மை நிரந்தரமாக ஆட்சி செய்து, அடக்கி ஒடுக்கிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளின் அடியாள் படையான அரசை இயக்குனராக நிறுவகித்து வருகின்றன.

மக்களின் உண்மையான எதிரிகளாகிய கார்ப்பரேட் முதலாளிகளையும், அதன் அடியாட் படையான அரசையும் கவசமாக இருந்து பாதுகாத்து வரும் இந்த அரசாங்க கைக்கூலிகளால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாலைக் குழைக்கும், அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் மக்களை கடித்துக் குதறும் இவர்களால், மக்களுக்கு சேவை செய்யவோ, நல்லது செய்யவோ முடியுமா? முடியாது என்பதே நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட உண்மை. உண்மையை உரசிப் பார்க்க விலைவாசி உயர்வால், ஜிஎஸ்டி வரி உயர்வால், CAA, NPR போன்ற உரிமைப் பறிப்பு – தடா, பொடா அடக்குமுறைச் சட்டங்களால் சாதி – மதவெறி அரசியலால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களே உரைகற்கள்.

ஒருவேளை எங்களால் முடியும் என சவடால் அடிக்கலாம். அவை கூட இலவசங்களால் மக்களை அசிங்கப்படுத்துவதாகவே அமையும். சுயமரியாதையுடன் கூடிய, ஒரு ஆரோக்கியமான வாழ்வுரிமையை அமைத்துத் தர முடியாது. அவற்றைக் கூட, வெறும் வாய் சவடாலால் அமைத்து தர முடியாது. கல்வி, மருத்துவம், சுகாதாரம், வாழ்வதற்கான வருவாய் போன்ற அடிப்படை உரிமைகள் அடங்கிய தேசிய திட்டம் தேவை. இவை கூட இவர்களுக்கு மலைப்பாகத் தெரியலாம். குறைந்தபட்சம், மக்களைப் பாதிக்கக்கூடிய 50% விலைவாசி உயர்வை, 60% பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை; சிறுகுறு, நடுத்தர தொழில்கள், வணிகங்கள், மக்களிடமிருந்து வருடா வருடம் உறிஞ்சப்படும் 18 லட்சம் கோடி GST வரியை ரத்து செய்வோம்; தனியாருக்கு விற்கப்பட்ட அனைத்து பொதுத்துறை – அரசுத்துறைகள் அனைத்தையும் மீட்டெடுப்போம்; 10% பிரிவினரின் ஆண்டு வருமானம் சராசரியாக 11.66 லட்சமாகவும், 90% மக்களின் ஆண்டு வருமானம் 60 ஆயிரத்திற்கும் குறைவாகவும் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைத்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் போக்க வழிவகை செய்வோம்; கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைக்கான உத்தரவாதம் போன்றவைகளை மக்களின் அடிப்படை உரிமையாக்குவோம் என்று கூட அறிவிக்கலாம். ஆனால், அவற்றைக் கூட மலைப்பாம்பைப் போல நாட்டைச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் மறுகாலனியாக்கப் பிடியிலிருந்து விடுவிக்காமல் சாத்தியமில்லை.

ஏனெனில், எல்லோருக்கும் பொதுவானது என வேடம் தரித்து வந்த அரசானது, மக்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. இதன் மூலம் இந்த அரசானது, பட்டவர்த்தத்தனமாக, பகிரங்கமாக, வெளிப்படையாக இவர்களின் சுரண்டலை, 10% -மாக உள்ள இவர்களின் 80% சொத்துகளை பாதுகாக்கும் அப்பட்டமான அடியாளாகவே முழுமையான வன்முறை கருவியாகவே மாற்றப்பட்டுவிட்டது. இனி எல்லோருக்குமான அரசு என்கிற வேடம் தரிக்க முடியாது. அப்படி தரிக்க முயன்றால் அவற்றை தோல்வியுற்ற – லாயக்கற்ற அரசாக கார்ப்பரேட் முதலாளிகளால் அறிவிக்கப்படும்.

இவை எதையுமே தங்கள் சொந்த அறிவால் அறியாத, உணராத, சிந்திக்கத் தெரியாத, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இயலாத இந்த முண்டங்களால், மக்கள் போராட்டங்களில், பிரச்சனைகளில் ஈடுபடாத இந்த கழிசடைகளால் மக்களுக்கான வாழ்வுரிமையை மீட்டெடுத்து தர முடியுமா? விஜய்’ யென்ன, ரஜினி’ யென்ன எந்த கொம்பனாலும் முடியாது.

வேண்டுமானால், கார்ப்பரேட் முதலாளிகளுடைய கைக்கூலிகளின் வரிசையில் இவர்களும் அணிவகுக்கலாம். வெறும் வாயில் வடை சுடும் இது போன்ற அயோக்கிய – பித்தலாட்டப் பேர்வழிகளை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதே சிறந்த வழிமுறையாக அமையும். மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல, தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ரஜினி, சீமான், விஜய் போன்ற காளான்களைப் பிடுங்கி எறிய முடியும். மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான வழியில் பயணிக்கவும் முடியும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன