போர்க்களத்தில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் – மோடி அரசின் சாதனை

வேலையின்றி பசியில் வாடுவதை விட போர் நடக்கும் நாடுகளுக்குச் சென்று செத்துப்போவதே மேல் எனும் நிலைக்கு இந்திய இளைஞர்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது மோடி அரசு.

 

நேற்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் வேலை செய்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். கர்ப்பிணி மனைவியையும் ஐந்து வயதுக் குழந்தையையும் பிரிந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேக்ஸ்வெல் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு ஒரு தோட்டத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்த போது இந்த தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

போரில் ஈடுபட்டிருக்கும் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கே உயிரிழக்கும் இந்திய இளைஞர்களைப் பற்றிய செய்தி வெளிவருவது இது முதல் முறை அல்ல. கடந்த பிப்ரவரி 22ம் தேதி ரஷ்ய இராணுவப் பயிற்சி மைதானம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் சிக்கி, செக்யூரிட்டி வேலைக்காக ரஷ்யா சென்ற குஜராத்தைச் சேர்ந்த ஹெமில் மங்குகியா என்கிற 23 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இவரைப் போல இன்னும் பல இந்திய இளைஞர்கள் ரஷ்யப் போர் முனையில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர்.

இஸ்ரேலில் வேலை செய்யும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று இன்றைக்கு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசுதான் போரில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலில் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பது தெரிந்தும் பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியத் தொழிலாளர்களை அந்நாட்டிற்கு அனுப்பிவருகிறது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில், இந்திய தேசிய திறன் மேம்பாட்டு கழகம் இஸ்ரேல் கட்டுமான வேலை வாய்ப்புக்கான விளம்பரத்தை வெளியிட்டு இருந்தது. அதில் 21 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இஸ்ரேலில் கட்டுமான வேலை செய்வதற்கு மாதம் ரூ 1,36,000-சம்பளத்தில் 10,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாக உபி, ஹரியானா மாநிலத்தில் தனித்தனியே விளம்பரம் கொடுத்தது.

இவ்விளம்பரம் பரவிய உடனே பிகார், பஞ்சாப், உபி, ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த  இளைஞர்கள், போர் நடைபெறும் நாட்டிற்கு வேலை செய்வதற்கு தங்களது உயிரை கூடப் பொருட்படுத்தாமல் வேலைவாய்ப்பு முகாமுக்கு சாரை சாரையாக படையெடுத்தனர்.

ஹரியானாவில் போட்டித் தேர்வு நடைபெற்ற பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாலையிலேயே கூடிவிட்ட இளைஞர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கம்பளி, போர்வைகளை போர்த்திக் கொண்டு, இஸ்ரேலில் தங்களுக்கு வேலை கிடைக்காதா எனும் ஏக்கத்துடன் வரிசையில் நின்றனர்.

இப்படி வரிசையில் நின்ற இளைஞர்களில் பல பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். அவர்களில் ரஞ்சித் குமார் என்பவரும் ஒருவர். அவர் ஆசிரியர் வேலைக்கு படித்திருந்தாலும் வேலை கிடைக்காததால், தற்போது நாள் ஒன்றுக்கு ரூ700க்கு  குறைவான சம்பளத்தில் இந்தியாவில் வேலை பார்த்து வருகிறார். இஸ்ரேலில் மாதம் ரூ1,36,000 சம்பளத்தில் வேலை பார்ப்பதன் மூலம் தன் குடும்ப வறுமையை போக்க முடியும் என்கிறார்.

இரஞ்சித் குமார் போலவே கட்டுமான வேலை செய்வதற்காக. போட்டித் தேர்வுக்கு  வரிசையில் நிற்கும் ஒவ்வொரு இளைஞர்களும் தாங்கள் இஸ்ரேல் செல்வதற்கு தங்களது குடும்பத்தில் தலைவிரித்தாடும்  வறுமையே காரணம் என்கின்றனர்

2014ல் பட்டம் பெற்ற சஞ்சய் வர்மா என்பவர், கடந்த ஆறு ஆண்டுகளாக போலீஸ், துணை இராணுவம், இராணுவம், இரயில்வே போன்றவற்றின் பணியிடங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் தேர்வுகளில் கலந்து கொண்ட போதிலும் ஒரு வேலையும் கிடைக்காததால், இஸ்ரேலின் கட்டுமான வேலைக்கு செல்ல முயற்சிப்பதாக கூறுகிறார். இங்கு அரசு பணியிடங்கள் மிகக் குறைவு. ஆனால் அதற்கு போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் நான் போர் நடைபெறும் நாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறுகிறார்.

உபியின் அஸம்கர் மாவட்த்தில் இருந்து கம்பி வளைக்கும் வேலைக்கு வந்த கன்ஷிராம்(22) என்பவர், என் கிராமத்தில் அனைத்து நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை. இதனால் எனக்கு முறையாக வருமானமே வருவதில்லை. நான் என் கிராமத்தில் சம்பாதிப்பதை விட 15 மடங்கு அதிகமாக சம்பாதிக்க போவதால் போரைப் பற்றி கவலைப்படவில்லை என்கிறார்.

பிகாரிலிருந்து 620 மைல் கடந்து ஹரியானாவிற்கு தேர்வுக்கு வந்திருக்கும் பிரமோத் சர்மா என்பவர் இத்தேர்வுக்காக நான் மூன்று நாட்களாக பேருந்தில் தூங்கியும், சாலையோர பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தியும் வருவதாக கூறுகிறார். கோவிட் சமயத்தில் தில்லியில் தான் பார்த்த கட்டுமான வேலையை இழந்த சர்மா, இஸ்ரேலில் வேலை செய்வது எங்களது குடும்ப வறுமையிலிருந்து மீட்க என் வாழ்நாளில் கிடைத்த ஒரு வாய்ப்பு என்கிறார்.

கோவிட் சமயத்தில் இருந்து தான் ஒரு விவசாய கூலியாக வேலை பார்த்ததாகவும் தனக்கு ஒரு நாளைக்கு ரூ250 க்கு குறைவாகவே வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார். இஸ்ரேல் வேலை வாய்ப்பு எனது குழந்தைகளை வளர்க்கவும், எனது சகோதரியின் திருமணத்திற்கு வழிவகுக்கும் என்கிறார் சர்மா.

இரஞ்சித் போலவே படித்த இளைஞர்கள் தினக்கூலிக்கு வேலைப் பார்த்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். இந்தியாவில் வேலை செய்வோர் விகிதம் கோவிட் சமயத்தை விட 2022-23 ஆம் ஆண்டு குறைவாக இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) கூறுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இவ்விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டு வருவது தான் மோடி ஆட்சியின் சாதனை.

 

 

வேலையின்றி பசியில் வாடுவதை விட போர் நடக்கும் நாடுகளுக்குச் சென்று செத்துப்போவதே மேல் எனும் நிலைக்கு இந்திய இளைஞர்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது மோடி அரசு.

எந்தவொரு நாடும் போர் நடக்கும் பகுதியில் இருந்து தனது நாட்டு குடிமக்களை வெளியேற்றுவதைத்தான் செய்யும். ஆனால் மோடி அரசோ போர்களத்திற்கு பலியாடுகளாக இந்திய தொழிலாளர்களை அனுப்பி வருகிறது. அந்த அளவிற்கு ஏகாதிபத்தியங்களின் விசுவாசமான அடியாளாக சேவகம் செய்ய இந்த பாசிச மோடி அரசு தயாராக இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இது போன்று குறை கூலிக் கொத்தடிமைகளை உருவாக்கித் தரும் பொருட்டுத்தான் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் மேலும் குலைத்து, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

கார்பரேட்டுகளின் விசுவாசமான சேவகனாகவும், இந்திய உழைக்கும் வர்க்கத்தின் எமனாகவும் உள்ள இந்த காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளை முறியடித்து தூக்கியெறியாதவரை இந்தியத் தொழிலாளர்கள் போர் நடக்கும் வெளிநாடுகளில் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாது.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன