பொது சிவில் சட்டம் – காவிகளின் தேர்தல் நாடகம் ஆரம்பம்

பெண் விடுதலை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், சம உரிமை வழங்குதல் என்ற பெயரில் இதுவரை பாஜக கொண்டுவந்த முத்தலாக் ஒழிப்பு, புர்கா தடைச் சட்டம் போன்றே தற்போது கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டமும் உண்மையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் மீதான அக்கறையிலிருந்து கொண்டுவரப்பட்டதல்ல. இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாக கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு முற்போக்கு முகமூடியை கொடுக்கிறது பாஜக.

 

 

உத்ரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்துத்துவப் பாசிசத்தின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமான பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற “பெருமையை” உத்ரகாண்ட் மாநிலம் அடைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேலையில் தங்களது இந்துவ நிகழ்ச்சி நிரலின் அடுத்தடுத்த அஜண்டாக்களை நிறைவு செய்யும் அவசரத்தில் இருக்கும் காவி பாசிஸ்டுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தினைக் கொண்டுவர முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். தற்போது உத்ரகாண்ட் மாநிலம் முதலில் இதனைக் கொண்டுவந்தாலும், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம் என பாஜக மாநில அரசுகள் அடுத்தடுத்து இதனைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளன.

பெண் சக்தியை பெருமைப்படுத்தும் விதமாகச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை அமுல்படுத்தும்விதமாகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக காவி பாசிஸ்டுகள் இதனை நியாயப்படுத்துகின்றனர்.

“பெண்கள் சமத்துவ உரிமையைப் பெற வேண்டும் என்பது ‘பாரத்வர்ஷ்’ மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாங்கள் அதை நிறைவு செய்துள்ளோம்.” என இது குறித்துப் பேட்டியளித்த உத்ரகாண்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

பெண் விடுதலை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், சம உரிமை வழங்குதல் என்ற பெயரில் இதுவரை பாஜக கொண்டுவந்த முத்தலாக் ஒழிப்பு, புர்கா தடைச் சட்டம் போன்றே தற்போது கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டமும் உண்மையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் மீதான அக்கறையிலிருந்து கொண்டுவரப்பட்டதல்ல. இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாக கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு முற்போக்கு முகமூடியை கொடுக்கிறது பாஜக. காவி பாசிஸ்டுகளின் மோசடிய பொது சிவில் சட்டத்தின் சரத்துகளே அம்பலப்படுத்துகின்றன.  

திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு பதிவு செய்யப்பட்டதை பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. தனிப்பட்ட நபர்களின் திருமணம் குறித்த பதிவுகளை வெளிப்படையான பார்வைக்கு அனுமதிப்பது என்பது, சாதிவெறியில் ஊறித் திளைக்கும் பிற்போக்காளர்கள் தங்களது வாரிசுகளின் சாதிமறுப்புத் திருமணங்களைக் கண்காணிக்கவும் அவர்களை சாதி ஆணவப் படுகொலை செய்யவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.

திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகள் ஒருமாத காலத்திற்குள் அதனைப் பதிவுசெய்ய வேண்டும் என்றதொரு ஆக “முற்போக்கான” அம்சத்தையும் இந்தப் பொதுச் சிவில் சட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை அளிக்கவும் இந்தச் சட்டம் வகைசெய்கிறது.  

வயதுவந்த எந்தவொரு தனிநபரும் யாருடனும் இணைந்து வாழ்வதைத் தடை செய்யும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்தச் சட்டம், அவ்வாறு இணைந்து வாழ்பவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வைப்பது நிச்சயம் அவர்களது நலனுக்காக அல்ல. ஆடுகளை ஓநாய்க்கூட்டம் பாதுகாக்கும் எனக் கூறுவது போல, காதலர் தினத்தன்று ஒன்றாக சுற்றும் ஜோடிகளைக் குறிவைத்துத் தாக்கும் கலாச்சார காவலர்கள் கையில், இணைந்து வாழும் தம்பதிகள் தாங்களாக முன்வந்து தங்களது தகவல்களைப் பதிவு செய்யவேண்டும் என சட்டமியற்றுகிறார்கள்.

பொது சிவில் சட்டம் என்று கூறிவிட்டு பழங்குடியினருக்கு இதிலிருந்து விலக்களிப்பதாக கூறியிருக்கிறார்கள். அதுவே இது மக்கள் அனைவருக்குமான பொது சட்டம் இல்லை என்பதற்குச் சான்று. பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்களினங்கள் மத்தியில் ஒற்றைக் கலாச்சாரத்தை விதைக்கும் முயற்சியே இந்த பொது சிவில் சட்டம்.

காவி பாசிசத்தின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தால் மூளை மழுங்கி, “முஸ்லீம் 4 திருமணம் செய்கிறான், அதையே நாம் செய்தால் சட்டப்படி தவறு” எனக் கொதிக்கும் சங்கிகளின் ஆற்றாமையை சாந்தப் படுத்துவதைத் தவிர இந்தச் சட்டம் வேறு எதையும் சாதிக்கப்போவதில்லை.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன