பட்ஜெட் 2024: தேர்தல் நேரத்திலும் முதலாளிகளுக்கான சேவையில் சமரசம் செய்யாத காவி பாசிஸ்டுகள்

2014ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த போது மோடியும் பாஜகவும் நாட்டின் வளர்ச்சியை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்களது பத்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிப் போயுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயக் கூலிகள் நகரங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். ஆனால் இம்முறை பாஜக வளர்ச்சியப் பற்றிப் பேசவில்லை, அது மதவெறியைப் பேசுகிறது.

 

 

2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மோடி, தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார்.

மோடியின் பேச்சில் மட்டுமல்ல அவர்கள் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிலும் தாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் வென்றுவிடுவோம் என்ற பாசிஸ்டுகளின் திமிர் தெளிவாகத் தெரிகிறது. வழக்கமாக தேர்தல் சமயத்தில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவரும் வகையில் சலுகைகள், மானியங்கள், திட்டங்களை அறிவிப்பார்கள். அதுபோல இம்முறையும் அறிவிப்புகள் இருக்கும் என பத்திரிக்கைகள் எழுதிவந்தன.

ஆனால் முதலாளித்துவப் பத்திரிக்கைகளே ஆச்சரியப்படும்விதத்தில், இதுவரை, தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இல்லாத அளவிற்கு கார்ப்பரேட் சேவைகளை முதன்மைப்படுத்தி, மக்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது பாசிச மோடி அரசு.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் பட்ஜெட் உரையில் அரசின் நிதிப்பற்றாக்குறையை இந்த நிதியாண்டில் 5.8 சதவீதமாகவும் அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாகவும் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதாவது ஒன்றிய அரசின் கடன்களைக் கட்டுப்படுத்தப் போவதாக கூறியுள்ளார். 2024-25ம் நிதியாண்டில், கடன் பத்திரங்களின் மூலமாக ஒன்றிய அரசு பெறப்போகும் மொத்த சந்தைக் கடன் 14.13 லட்சம் கோடி ருபாயாகவும், அதுவே நிகர சந்தைக் கடன் 11.75 லட்சம் கோடியாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இது கடந்த நிதியாண்டில் அரசு வாங்கிய கடன்களை விட மிகவும் குறைவானதாகும். இவ்வாறு தனது கடன்களைக் குறைத்துக் கொள்வதன் மூலம் தனியார் துறைக்கு அதிக அளவிலான கடன் கிடைக்கச் செய்ய ஒன்றிய அரசு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கு அரசு தனது செலவீனங்களைக் குறைக்க வேண்டும். அரசு தனது செலவீனங்களைக் குறைக்கப் போகிறது என்றால் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கப்போகிறது என்று அர்த்தம். விவசாயம், கல்வி என மக்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி அளவைக் கடந்த முறையைவிட இந்த ஆண்டில் குறைத்துள்ளனர்.

ஏற்கெனவே மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்காக கடன் வாங்குவதற்கு ரிசர்வ் வங்கியின் மூலம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், தற்போது நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது மாநிலங்கள் கடன் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள  அளவை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்கப் போகிறது என்பது நிச்சயம். அப்படிக் குறைத்தால் பல மாநில அரசுகள் தங்களது திட்டங்களுக்குப் போதுமான நிதி கிடைக்கப் பெறாமல் தவிக்க நேரிடும்.

மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததுடன், மாநிலங்களின் கையையும் கட்டிப்போட்டு அவர்களும் கடன் வாங்க முடியாமல் செய்ததன் மூலம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அதிக அளவில் கடன் கிடைப்பது உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

இது போதாதென்று 2023ம் நிதியாண்டில் 9.5 லட்சம் கோடி ருபாயாக இருந்த மூலதனச் சேலவீனங்களுக்கான ஒதுக்கீட்டைத் தற்போது 11 லட்சம் கோடி ருபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். மூலதனச் செலவீனங்கள் என்பது கனரக இயந்திரங்கள், நவீன உபகரணங்கள், கட்டிட வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி போன்ற நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்கிட அரசு செலவிடும் பணமாகும். கல்வி, சுகாதாரம் என்று கூறும்போது மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை என இவற்றைக் கருதக் கூடாது. மூலதனச் செலவீனங்கள் என்பது நடைமுறையில் முதலாளிகளுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகளே அன்றி வேறில்லை.

2024-25 நிதியாண்டின் மூலதனச் செலவீனங்களில் பெரும்பான்மையாக மின்சாரத் துறைக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என சமீபத்தில் மோடி கூறியுள்ளார். மின் உற்பத்தித் துறை நிறுவனங்களுக்கான சலுகைகள், மானியங்களை அதிகரிக்கப் போகிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

பிரதம மந்திரி சூர்யோதய யோஜனா என்ற பெயரில் பொது மக்களின் வீடுகளின் மாடியில் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு மானியம் கொடுக்கப்போவதாக அறிவித்திருப்பது எல்லாம் இதற்கு முன்னர் பிரதம மந்திரியின் பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் போல வெறும் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே. அதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யமாட்டார்கள். மாறாக கார்ப்பரேட் மின்சார உற்பத்தி நிலையங்கள், எரிவாயு உற்பத்தி நிலையங்கள், கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், நிலக்கரி சுரங்க நிறுவனங்கள், ஆகியவற்றிற்குத்தான் இந்தப் பணம் போய்ச்சேரப்போகிறது. அதனை மின்னுற்பத்தித் துறை நிறுவனங்களின் கூட்டத்தில் ஆற்றிய உரையில் மோடி உறுதிசெய்துள்ளார்.

 

 

இடைக்கால பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் ருபாயைக் குறைத்துவிட்டு, ஸ்டார்டப் நிறுவனங்கள் தங்களது புதிய முயற்சிகளைத் தொடங்குவதையும், விரிவுபடுத்துவதையும், ஊக்கப்படுத்தும் விதமாக அந்நிறுவனங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்படுவாதாக கூறியுள்ளனர். இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும், அந்நிய முதலீடு பெருகும் என்றும் கூறுகின்றனர். ஏற்கெனவே “ஸ்டார்டப் இந்தியா ஸ்டேண்டப் இந்தியா” என ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ருபாய் மக்கள் பணத்தை சலுகைகளாக கொடுத்து தொடங்கப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் அரசின் சலுகைகளைத் தின்று தீர்த்துவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடையை மூடிவிட்ட சூழலில் தற்போது மேலும் அதற்கு ஒரு லட்சம் கோடி ருபாயை ஒதுக்கியிருக்கிறார்கள்.

2023ம் ஆண்டில் 6,500 பெரும் பணக்காரர்கள் நமது நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் ஸ்டார்டப் கம்பெனி முதலாளிகளாவர். மக்கள் பணத்தைத் திருடிச் சேர்த்த கோடிக்கணக்கான ருபாய் சொத்துக்களுடன் ஸ்டார்டப் முதலாளிகள் வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்குவது ஓடிப்போகும் முதலாளிகளின் எண்ணிக்கையை உயர்த்த மட்டுமே வழியேற்படுத்தும். 

அடுத்ததாக நேரடி வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்திருப்பதன் மூலம், வருமான வரிச்சலுகை கிடைக்கும் எனக் காத்திருந்த மாத சம்பள மத்தியதர வகுப்பினரின் எதிர்பார்ப்பையும் உடைத்து இந்த பட்ஜெட் ஏமாற்றியுள்ளது. அதே சமயம் கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரிகளை இம்முறையும் ஏற்றவில்லை என்பதுடன் ஸ்டார்டப் நிறுவனங்களது வருமானத்திற்கு அளிக்கப்பட்டுவரும் வரிவிலக்கை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்புச் செய்திருக்கிறார்கள்.

2014ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த போது மோடியும் பாஜகவும் நாட்டின் வளர்ச்சியை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்களது பத்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிப் போயுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயக் கூலிகள் நகரங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். ஆனால் இம்முறை பாஜக வளர்ச்சியப் பற்றிப் பேசவில்லை, அது மதவெறியைப் பேசுகிறது.

அயோத்தியில் ராமர் கோவிலைத் திறந்து வைத்திருப்பதுடன், காசி மதுரா என அடுத்தடுத்த இடங்களில் இஸ்லாமியர்களது மசூதிகளை இடித்துக் கோயில் கட்டுவதற்கான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முனைப்பு காட்டுகிறது. இந்து முஸ்லீம் பிரிவினையைத் தீவிரப்படுத்தி, அதன் மூலம் தனது வெற்றியை உத்தரவாதப்படுத்த நினைக்கிறது.

மறுபுறம், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விசுவாசமான அடிமையாய் இருப்பேன் என்பதை கார்ப்பரேட்டுகளுக்குக் காட்டும் வகையிலேயே இந்த இடைக்கால பட்ஜெட்டில், தேர்தலுக்காக தனது கார்ப்பரேட் சேவையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் முதலாளிகளின் நலனை முன்னிறுத்துகிறது.

அயோத்தியிலும் காசியிலும் தெரிவது காவி பாசிசத்தின் முகம் என்றால், இடைக்கால பட்ஜெட் என்பது அதன் இன்னொரு முகம் அதுதான் கார்ப்பரேட் பாசிசத்தின் முகம்.   

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன