பட்ஜெட் 2024 : பாசிஸ்டுகளின் பொய் மூட்டைகள்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக இவர்கள் அளித்த வாக்குறுதி, மோடியின் அனைவருக்கும் 15 லட்சம் வாக்குறுதியைப் போல வெறும் வெற்று முழக்கம், மக்களை ஏமாற்றும் ஜூம்லா என்பது நாம் அறிந்ததே. கடந்த முறைவரை பட்ஜெட்டில் இந்த வெற்று முழக்கத்தையாவது கூறிவந்தார்கள் ஆனால் இம்முறை அதையும் நிறுத்திவிட்டு விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கமுக்கமாகக் குறைத்துவிட்டார்கள்.

 

 

போபர்ஸ் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஓட்டு போட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம், டாட்ரா டிரக் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், சோலார் பேனல் ஊழல்,  2ஜி அலைக்கற்றை ஊழல் என அனைத்தையும் முன்னிறுத்தி மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் ஆட்சிக்கு வந்தது. இதில் ஒரு ”கூந்தலைக்கூட” இன்றுவரை பிடுங்கவில்லை.

இவர்கள் 2014-க்கு முன்பு மோடி ஆட்சி செய்த குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள்  சொல்லி மாளாதவை. 2014-க்கு பிறகு பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்யா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம், எச்ஏஎல் விமான வடிவமைப்புத் திட்டம் ஆகியவற்றில் பல கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறியிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் தாங்களும், தங்களது கட்சியும் இந்திய நாட்டின் மீது, தேசப்பற்றாகவும், இந்திய மக்களுக்கு நேர்மையாகவும் இருப்பதாக மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் கூறிவருகிறது. பாசிஸ்டுகள் ஒருபோதும் உண்மை பேசமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாகவும், “சமூகநீதி” என்பது அரசியல் முழக்கமாக இருந்த நிலைமாறி இன்று செயலுக்கு வந்துவிட்டதாகவும் தனது உடல் மொழியினாலும், திமிர் பேச்சினாலும் தமிழக மக்களின் மனங்களில் “நீங்கா” இடம்பெற்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா கூறியிருக்கிறார்.

சனாதன தர்மத்தின் சாதிய ஒடுக்குமுறையின் காரணமாக கல்வி மறுக்கப்பட்டு தங்களது சாதிக்கென ஒதுக்கப்பட்ட குலத் தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார உதவிகள் ஆகியவற்றை அரசே வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இராயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்டுவரும் அநீதிக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஒரு ஏற்பாடே இந்த சமூகநீதி. அந்த அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டும் வருகிறது. ஆனால் இதனை பல்வேறு வகையில் எதிர்த்தும் பேசியும் வந்த பார்ப்பனர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கி அதனையே ”சமூகநீதி” என புது அர்த்தம் கற்பித்தவர்கள்தான் இந்தப் பாசிச கும்பல்.  சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அதுவே இன்றைக்கு செயலுக்கு வந்துவிட்டதாக கதையளக்கிறார்கள்.

இந்த பட்ஜெட்டில் தங்களது சாதனையாக 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும், ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கிற்கு 34 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும், தனிநபர் வருமானத்தை 50% உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வறுமையைப் போக்கிய பாஜக ஆட்சியின் உண்மை முகத்தை ஏற்கெனவே 2023ம் ஆண்டின் உலகளாவிய பட்டினி குறியீடு அம்பலப்படுத்தியிருக்கிறது. 125 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 111வது இடத்தைப் பிடித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக இவர்கள் அளித்த வாக்குறுதி, மோடியின் அனைவருக்கும் 15 லட்சம் வாக்குறுதியைப் போல வெறும் வெற்று முழக்கம், மக்களை ஏமாற்றும் ஜூம்லா என்பது நாம் அறிந்ததே. கடந்த முறைவரை பட்ஜெட்டில் இந்த வெற்று முழக்கத்தையாவது கூறிவந்தார்கள் ஆனால் இம்முறை அதையும் நிறுத்திவிட்டு விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கமுக்கமாகக் குறைத்துவிட்டார்கள்.

இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கென 3,63,944 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டைவிட (4,68,289) ஒரு லட்சம் கோடி ருபாய் குறைவு. இப்படிக் கமுக்கமாக விவசாயத்திற்கான நிதியைக் குறைத்துவிட்டு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட் என வாய்க்கூசாமல் புளுகுகிறார்கள். அதேபோல் பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தில் 8 கோடியே 12 லட்சம் விவசாயிகளுக்கு பணம் கொடுக்கப் போவதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். இது முந்தைய ஆண்டுகளில் பயன்பெற்ற விவசாயிகளைவிட 2.25 கோடி குறைவு என்ற உண்மையை அவர் மறைத்துவிட்டார்.

கடந்த ஆண்டுகளில் விவசாயத்திற்கென ஒதுக்கிய நிதியையாவது ஓழுங்காக செலவு செய்தார்களா என்றால் அதுவும் இல்லை 2019-20க்கும் 2022-23க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படாமல் சரண் செய்யப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மறைத்துவிட்டு விவசாயிகளின் நண்பன் என நாடகமாடுகிறார் நிதியமைச்சர்.

ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்குகளைப் பொறுத்தவரை 2023ம் ஆண்டின் இறுதிக்காலாண்டில் 20% ஜன்தன் யோஜனா கணக்குகள் செயல்படாதவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கயின் போது செயல்படாத ஜன்தன் கணக்குகளில் பணம் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது போல இதுவும் ஒரு ஏமாற்றுவேலைதான்.

தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டில் உள்ள மக்கள் தொகையின் மொத்த வருமானத்தில் இருந்து வகுப்பதன் மூலம் பெறப்படும் தொகையாகும். அதாவது அந்த நாட்டில் வேலையில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், குறைந்த கூலி, அதிகக்கூலி, 8 மணி நேர வேலை 12 மணி நேர வேலை, முதலாளி, தொழிலாளி, விவசாயி, நிலப்பிரபு என அனைவரின் வருமானத்தையும் மொத்தமாகக் கூட்டி வகுப்பதாகும்.

மோடி ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் தனிநபர் வருமானம் பலமடங்கு அதிகரித்துள்ளது உண்மைதான் என்றாலும் அவை முழுவதும் மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே உள்ள கோடீஸ்வர முதலாளிகளின் வசம் சென்றுள்ளது, மீதமுள்ள 99 சதவீதம் பேர் மேலும் மேலும் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட் என்ற புளுகிக் கொண்டே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டனர். 2023ல் பொதுக்கல்விக்கு 54,719 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இதற்கு 39,560 கோடியை ஒதுக்கியுள்ளனர். அதாவது முந்தைய ஆண்டைவிட 15,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2023ல் தொழிற்கல்விக்கு 25,049 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இதற்கு 19,594 கோடியை ஒதுக்கியுள்ளது. அதாவது முந்தைய ஆண்டைவிட. 6,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

SC/ST/OBC/Minority நலத்திட்டத்திற்கு 2023ல் 5,280 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இதற்கு 10,188 கோடியை ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. உண்மை என்னவென்றால் கடந்த ஆண்டு 9,336 கோடி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டது 5,280 கோடி. மீதமுள்ள 4,000 கோடியை மடைமாற்றிய உண்மையை மறைத்து விட்டார்கள்.

ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு 2023ல் ஒதுக்கபட்டது 18,174 கோடியாகும். தற்பொழுது இதற்கு 7,712 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களைத் தாண்டி 2 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்போவதாகவும் வேறு ஜம்பமாக அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே வீடு வழங்கும் திட்டம் எனக் கூறி வீட்டுக்கு 1.5 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதிப் பணத்திற்கு வங்கிக்கடனை ஏற்பாடு செய்துகொடுத்து ஏமாற்றி வருகிறார்கள், தற்போது அதற்கும் கூட நிதியே ஒதுக்காமல் எப்படி வீடுகட்டித்தருவார்கள்.

இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்ட நிறைய வெற்று முழக்கங்களுக்கு நேர்மாறாக பட்ஜெட்டின் உள்ளே ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மிகவும் குறைவாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் என்ற பொய்களின் மூட்டையைக் கடைவிரித்து நாட்டுமக்களை நிர்மலா சீத்தாராமன் ஏமாற்றியிருக்கிறார். வாயைத் திறந்தால் வண்டி வண்டியாகப் பொய் பேசும் இந்த நிதியமைச்சரைத்தான் திறமையானவர் என்றும், அவர் தாக்கல் செய்தது அற்புதமான பட்ஜெட் எனவும் வானளாவ புகழ்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். 

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன