தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை – வெளியீடு

மிகக் குறுகிய காலத்தில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் திவாலாகி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்வி நிறுவனங்கள் பெரும் தொழிற்சாலைகளாக வடிவம் பெறப்போகிறது. இதன் வெளிப்பாடுதான் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்(Deemed university). தமிழ்ச் சூழலில் இவ்வகையான கல்வித் தொழிற்சாலைகள், அரசியல்வாதிகள், தொழிற்சாலை நடத்தும் முதலாளிகள் ஆகிய பிறரால் உருவாக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் பல்கலைக் கழகங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கடந்த வெள்ளியன்று (02/02/2024) சேலம் மாநகரில், மக்கள் கல்விக் கூட்டியக்கம் – தமிழ்நாடு சார்பாக ஒரு கண்டனக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் “தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை” என்ற தலைப்பில் மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒரு சிறு வெளியீட்டைக் கொண்டுவந்துள்ளது. அந்த வெளியீட்டை நமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் இங்கே பதிவிடுகிறோம்.

இந்த சிறு வெளியீடு ஏன்?

நமது மரபில் தண்ணீர், உணவு, கல்வி, ஆகியவற்றை விற்பனை செய்பவன் பாவம் செய்பவன். அவன்/அவள் நரகத்திற்குத்தான் போகவேண்டும். ஆனால், இன்றைய நடைமுறை உலகில், இந்த மூன்றும் பெருமுதலாளிகளின் விற்பனைச் சரக்காக வடிவம் பெற்றுவிட்டன. இந்தக் கொடுமை, தமிழக அளவில், குறிப்பாக கல்வி எவ்வாறு வணிகமாக செயல்படுகிறது என்பது தொடர்பான சில குறிப்புகளை இவ்வெளியீட்டில் பதிவு செய்துள்ளோம்.

மக்கள் நல அரசு (welfare state) என்பது கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பது அடிப்படை நியதி. இருப்பிடம், மருத்துவம், கல்வி ஆகிய மூன்றை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பது ஜனநாயகத்தின் முதன்மையான கோட்பாடு. ஆனால் எதார்த்தத்தில், ஜனநாயக அரசு என்று பெயருக்குச் சொல்லப்படும் இன்றைய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளால் வழிநடத்தப்படுகிறது. அவர்களின் முதன்மையான சந்தைகளில் ஒன்றாக இன்றைய கல்வி நிறுவனங்கள் உருப்பெற்று வருகின்றன. தமிழ்ச் சுழலில் கல்விவணிகம் மிகமிக வளமாகவே நடைபெறுகிறது. அவ்வகையான தகவல்களை இச்சிறுநூல் பேசுகிறது.

கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ், கல்வி புகட்டும் கோட்பாடுகள், முறையியல், பாடத்திட்டங்கள் ஆகியவை கொண்டுவரப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சிபுரியும் அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை, முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களைப் போலவே நடத்தவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். இத்தன்மை உயர்கல்வியில் தலைவிரித்தாடுகிறது. மிகக் குறுகிய காலத்தில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் திவாலாகி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்வி நிறுவனங்கள் பெரும் தொழிற்சாலைகளாக வடிவம் பெறப்போகிறது. இதன் வெளிப்பாடுதான் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்(Deemed university). தமிழ்ச் சூழலில் இவ்வகையான கல்வித் தொழிற்சாலைகள், அரசியல்வாதிகள், தொழிற்சாலை நடத்தும் முதலாளிகள் ஆகிய பிறரால் உருவாக்கப்பட்டுவிட்டது. இவை நீர்நிலைகள், காடுகள் ஆகியவற்றை அரசாங்க உதவியுடன் ஆக்கிரமித்து, பெரிய கல்வி வளாகங்களை உருவாக்கிவிட்டனர். இவற்றில் அரசின் கட்டுப்பாடுகள் எவையும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

இந்தியச் சூழலில் வளர்ந்து வரும் இந்துத்துவ அரசியலுக்கான பரப்புரைக் கூடங்களாக நடுவண் பல்கலைக்கழகங்கள்(Central University) உள்ளன. ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்களை மதவெறி பரப்பும் இடங்களாக மாற்றி வருகிறார்கள். இதன் விளைவால், தமிழகப் பல்கலைக்கழகங்களில் உருவாகியுள்ள அவலங்களை இச்சிறு வெளியீட்டின் மூலம் அம்பலப்படுத்துகிறோம்.

தொடரும்….

மக்கள் கல்விக் கூட்டியக்கம்

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன