அரசு போக்குவரத்து தொழிலாளார்களை நம்பவைத்து கழுத்தறுத்தது
திராவிட மாடல் ஸ்டாலின் அரசு!

இதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடியின் ஆட்சியிலும் எப்படி போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கினார்களோ அதே போன்று, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சித் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் வேலைக்குச் செல்வது, தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கச் செய்வது என அதே பழைய வழிமுறையைதான் திராவிட மாடல் ஸ்டாலின் அரசும் பின்பற்றி போராட்டத்தை உடைத்துள்ளது, அத்துடன் போராட்டம் பிசுபிசுத்துவிட்டது என்ற அவதூறு பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

 

அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய ஊதிய உயர்வைப் பெறுவதற்குக் கூட மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஒவ்வொரு முறை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் போதும் அதனை போக்குவரத்துக் கழக நிர்வாகமும், ஆளும் கட்சியும் இணைந்து கைக்கூலிச் சங்கங்களை வைத்து உடைத்து, போராட்டத்தைப் பிசுபிசுத்துப் போகச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதற்கு ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசும் சளைத்ததல்ல என்று தற்போது நிரூபித்துள்ளது.  

ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்ப தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள 96 மாத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், 2003ம் ஆண்டுக்குப் பின்னர் வேலையில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தை கைவிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்னதாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவற்றில் தீர்வு ஏற்பாடததால், அரசு அதில் ஒரு கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்ததால் வேறு வழியின்றி இந்த வேலைநிறுத்தத்தை தொழிலாளர்கள் தொடங்கினார்கள். ஆனால் இதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடியின் ஆட்சியிலும் எப்படி போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கினார்களோ அதே போன்று, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சித் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் வேலைக்குச் செல்வது, தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கச் செய்வது என அதே பழைய வழிமுறையைதான் திராவிட மாடல் ஸ்டாலின் அரசும் பின்பற்றி போராட்டத்தை உடைத்துள்ளது, அத்துடன் போராட்டம் பிசுபிசுத்துவிட்டது என்ற அவதூறு பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இதே திமுக எதிர்கட்சியாக இருந்த போது தேர்தல் வாக்குறுதிகளில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று கூறியது. தீர்க்க முடியாது என்று தெரிந்தே பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சியை பிடித்தது. பிறகு வழக்கம் போல நிதி நெருக்கடியை காரணம் காட்டுவது, போக்குவரத்து துறை நட்டத்தில் இருப்பதாக காரணம் கூறியது. இதற்கு முன்னால் ஆட்சியில் நடந்த ஊழல் முறைக்கேடுகள் தான் நட்டத்திற்கு காரணம் என்று சாடியது. இதன் மூலம் தங்களை யோக்கிய சிகாமணிகளாக காட்டிக்கொண்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நய்ச்சியமாக புதைத்துவிட்டது.

ஊழல் முறைக்கேடுகளில் ஊறி திளைப்பதில், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு சாட்சியங்கள் எதுவும் தேவையில்லை. ஊழல் முறைக்கேடுகளால் பாதிக்கபடுவதென்னவோ விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படியும் ஊதிய உயர்வும் கிடைக்காத போக்குவரத்து தொழிலாளர்களும், கட்டண உயர்வால் அவதியுரும் பயணிகளும்தான். கோடீஸ்வர்களாக வலம் வரும் அதிகாரிகளும் அமைச்சர்களும் அல்ல.

லட்சக்கணக்கான தொழிலாளர்களையும், பல்லாயிரக்கணக்காண பேருந்துகளையும் உள்ளடக்கி இயக்கிவருகிறது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம். நகரம் கிராமம் என கோடிக்கணக்கான சாமானிய மக்கள் பயன்பெற தினமும் சேவையளிக்கிறது இந்தத் துறை. இதில் தொழிலாளர்களின் உழைப்பும் அளப்பறியது. இவற்றின் சேவையை மற்ற மாநிலங்களின் போக்குவரத்துடன் ஒப்பிட முடியாது என்பது உண்மை. ஆனால் போக்குவரத்து துறை வளர்ச்சிக்கேற்ப நிதி தேவையை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்வதில்லை.

நிர்வாகத்தின், அரசின் ஊழல் முறைக்கேடுகளால் ஏற்பட்ட நட்டத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் நியாமான கோரிக்கையை தேர்தலில் வாக்களித்தப்படி நிறைவற்றாமல் நிராகரிப்பது நம்ப வைத்து கழுத்தறுக்கும் செயல்.  அவர்களின் ஒற்றைக் கோரிக்கையான ஏறிவரும் விலைவாசிக்கேற்ப அகவிலைப்படி உயர்வைக் கூட நிராகரிப்பது உண்ணும் உணவுக்கு வேட்டுவைக்கும் வக்கிர செயல்.

ஓய்வூதியர்களாக உள்ள 96000 தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அடிப்படை சம்பளம் அகவிலைப்படி உயர்வு உட்பட ரூ 2000 கோடியை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை தொகை வழங்கப்படவில்லை. அத்தொகை அனைத்தையும் மற்ற துறைகளுக்கு பயன்படுத்திவிட்டு கடந்த ஜெயலலிதா ஆட்சி முதல் இன்றைய திமுக ஆட்சி வரை தொழிலாளர்களுக்கு எதுவும் வழங்காமல் இழுத்தடித்து வருவது எவ்வளவு பெரிய ஐயோக்கியத்தனம்.

இதன்மூலம் அரசுபோக்குவரத்து துறையை சீரழித்து அவர்களின் வாழ்வுரிமையை பறித்து நெருக்கடிக்கு தள்ளி தனியார்மயமாவதை விரைவுப்படுத்தி வருகிறது. இதற்காகவே காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பதும், அதனால் ஏற்படும் பணிச்சுமையை தற்போது பணிப்புரியும் தொழிலாளர்கள் மீது திணிப்பதும் நடந்தேரிவருகிறது.

எனவே நம்முடைய எதிர்ப்பை ஆட்சியாளர்களோடு நிறுத்துக் கூடாது. மேலும் இவர்களுக்கு கடன் கொடுத்து கட்டளை இட்டு இயக்கிவரும் உலகவங்கி, ஐஎம்எப் போன்ற கந்துவட்டி கும்பலுக்கு எதிராகவும், இவர்களின் எஜமானர்களான கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீடிக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் கொடுத்த கடனை வட்டியோடு வசூலிக்க பேருந்து கட்டணத்தை உயர்த்த சொல்வதையும் நிறுவனத்தின் அத்தியாவசிய செலவினங்களை குறைக்க சொல்லியும் கட்டாயப்படுத்தும். முக்கியமாக தொழிலாளர்களின் சலுகையை பண பலன்களை அடியோடு ரத்து செய்வதையும் வலியுறுத்தும். இப்படி பல வகையில் நெருக்கடிக்கொடுத்து போக்குவரத்து துறையையும் பிஎஸ்என்எல் போல தனியாருக்கு தாரைவார்க்க சொல்லுவதையும் தவிர்க்க முடியாது.

அரசு துறை, பொதுத் துறை அதன் நிறுவனங்களையும், சொத்துகளையும் கூறுபோட்டு விற்றுவரும் மாநில அரசுகளால் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் மறுகாலனியாக்கத்தின் அரசியல் பொருளாதார சுரண்டல் விதியோடு இது கலந்துள்ளது. உழைக்கும் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட்டுகளின் ஆதிக்க போரை சிரமேற்றும் நடத்துபவர்கள் இவர்கள் தான்.

ஆதிக்க, அடியாள் போர்வழிகளான இவர்களை மோதிவீழ்த்தாமல் போக்குவரத்து தொழிலாளர்கள் வாழ்வுரிமை உட்பட இதர அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையும் மீட்டெடுக்க முடியாது. இதற்கு தேவை ஒரு மக்கள் எழுச்சி. இதை நோக்கி தொழிலாளர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்காமல் தேங்கி தொழிற்சங்க குட்டைகளிலேயே ஊறி திளைப்பதில் எவ்வித பயனுமில்லை. தொழிலாளர் வர்க்க தலைமையில் உழைக்கும் மக்கள் அனைவரும் வீதிக்கு வருவோம். அமைப்பாக்கிக்கொள்வோம். நாறிவரும் நாடாளுமன்ற குட்டையை மாபெரும் மக்கள் எழுச்சி பேரலையின் மூலம் அப்புறப்படுத்துவோம். அதனுடே மக்களுக்கான அதிகாரத்தை நிறுவுவோம்.  

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன