பெரியார் பல்கலைக் கழக ஊழல் துணை வேந்தரைப் பாதுகாக்க துடிக்கும் காவிக் கும்பல்

பெரியார்/மெக்காலே குறித்து புத்தகம் வெளியிட்டதற்கு, அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி பேரா. சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்த துணைவேந்தர் ஜெகநாதன், தற்போது அரசு வழங்கக்கூடிய இலவசக் கல்வியை தான் காசாக்க முயற்சித்திருப்பதற்கு தண்டனையாக அவரை பணிநீக்கம் செய்து ஜெயிலுக்கு அனுப்பாமல் வேறு என்ன செய்வது?

 

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த செவ்வாய் கிழமை அன்று கருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தால் ஏழு நாள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அவருடைய வீடு, அலுவலம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளது. பெரியார் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் (பியூஇயு) சட்ட ஆலோசகர் ஐ.இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடந்துள்ளது.

இளங்கோவன் தனது புகாரில், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கே.தங்கவேல் மற்றும் இரு பேராசிரியர்கள், அரசாங்கத்திடம் முறையான அனுமதி பெறாமல், தலா ₹1 லட்சம் முதலீட்டில் – பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி (Periyar University Technology Entrepreneurships and Research Foundation-PUTER) அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனத்தைத் தொடங்கி அந்நிறுவனத்தின் இயக்குநர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிறுவனம் PUTER Park என்ற பெயரில் பெரியார் பல்கலைக்கழகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. சிண்டிகேட் அல்லது மாநில அரசின் அனுமதியின்றி, PUTER Park தலைமை நிர்வாக அதிகாரியின் அறைக்காக 2,024 சதுர அடி இடம், பல்கலைக்கழகத்திற்குள்ளேயே ஒதுக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் மூலம், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பெரும் பணம் சம்பாதித்து, பல்கலைக்கழகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் புகாரில் தெரித்துள்ளார், என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கூடவே அப்ஸ்டாக் என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர்.

இந்நிறுவனங்கள் (பூட்டர் மற்றும் அப்ஸ்டாக்) பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொழில்நுட்பம், தொழில்முனைவு சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றை இவ்விரு நிறுவனங்களும் வழங்கும். இதற்காக பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பூட்டர் பயன்படுத்திக் கொள்ளும். இப்படிப்பிற்காக அதிக கட்டணத்தை பூட்டர் நிறுவனம் வசூலிக்கலாம். இது ஏறத்தாழ பூட்டர் என்ற தனியார் நிறுவனம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் பட்டப்படிப்புகளை வழங்குவதாகும்.

இந்தியாவில் உயர்கல்விப் படிப்பிற்கான பட்டங்களை [UG,PG degrees] அரசு அங்கிகரித்த பல்கலைக்கழகங்கள் மட்டுமே வழங்க முடியும். ஆனால் தற்போது சந்தைக்கு உடனடித் தேவையாக உள்ள சில படிப்புகளை தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் [EduTech Company] பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அதிக கட்டணத்திற்கு இப்படிப்புகளை வழங்க ஆரம்பித்துள்ளன. கூடவே தனியாருக்கான அறிவியல்-தொழில்நுட்ப ஆராய்ச்சிகளையும் இந்நிறுவனங்கள் செய்கின்றனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் [NIRF] முன்னிலை பெறும் கல்விநிறுவனங்களுக்கு இதுபோல தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து படிப்புகளை வழங்குவதற்கான சலுகைகளையும் ஒன்றிய அரசு வழங்குகிறது. இம்முறையானது உயர்கல்வியை முற்றிலும் சந்தைகளிடம் ஒப்படைப்பதற்கான துவக்கம் என்று தான் சொல்லவேண்டும். இது மோடியின் தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களில் ஒன்றாகும். பூட்டர் என்ற நிறுவனம் மூலமாக ஜெகநாதன் பணம் சம்பாதிக்க முயற்சித்திருப்பதும் இதனடிப்படையில்தான்.   

ஆனால், அரசு ஊழியராக இருக்கும் ஒருவர், தான் சார்ந்த நிர்வாகத்தின் ஒப்புதல் இன்றி நிறுவனம் தொடங்க முடியாது. இதற்கு பெரியார் பல்கலைக்கழக விதியும் அனுமதிப்பதில்லை. ஆனால் ஜெயநாதனோ ஒருபடி மேலே சென்று தனது பதவியிவின் துணையோடு ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்து சம்பாதிக்கத் திட்டமிட்டுருக்கிறார்.

துணைவேந்தர் ஜெகநாதன் கவரனர் மாளிகைக்கு மிகவும் நெருக்கமானவர். வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை பல்கலைககழகத்திற்குள் புகுத்தியவர். பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது, பல்கலைக்கழகத்திலும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரசியல் விவாதங்கள் நடத்த தடை, வேதசக்தி என்ற தலைப்பில் கருத்தரங்கம், பெரியார் மற்றும் மெக்காலே வைப் பற்றி நூல்களை வெளியிட்டதற்காக அப்பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரிய சுப்பிரமணியின் மீது நடவடிக்கை எடுக்க குறிப்பாணைக் கொடுத்தது போன்றவற்றை உதாரணமாகக் சொல்லலாம்.

பெரியார்/மெக்காலே குறித்து புத்தகம் வெளியிட்டதற்கு, அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி பேரா. சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்த துணைவேந்தர் ஜெகநாதன், தற்போது அரசு வழங்கக்கூடிய இலவசக் கல்வியை தான் காசாக்க முயற்சித்திருப்பதற்கு தண்டனையாக அவரை பணிநீக்கம் செய்து ஜெயிலுக்கு அனுப்பாமல் வேறு என்ன செய்வது?     

ஜெகநாதன் கைதை தமிழக பாஜக கண்டித்துள்ளது. பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை ஆதாரமில்லாமல் போலீசார் கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் ஒரு நேர்மையான கல்வியாளர் என்று மாநிலத்தில் பலராலும் மதிக்கப்பட்டு வருபவர். ஆனால் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கைது செய்யப்பட்டு இருக்கிறார்.” என்று கூறியிருப்பதோடு, பலகலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் இதில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.  எனவே ஜெகநாதனைக் காப்பாற்றும் திரைமறைவு வேலைகளில் காவிக் கும்பல் இறங்கியுள்ளது என்பது திண்ணம்.

தான் கைதான 12 மணிநேரத்திற்குள் பிணையில் வந்துவிட்டார். அந்த அளவிற்கு கவர்னர் மாளிகையுடன் நெருக்கமானர் ஜெகநாதன். மோடி ஆட்சிக்கு பிறகே தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையாக நடக்கின்றன என்று பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகின்றனர்.  அந்த நேர்மையின் உதாரணம் தான் ஜெகநாதன்.

கல்வி தனியார்மயத்திற்கு பிறகு பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிர்வாகமும் ஊழல்-முறைகேடுகளால் நிரம்பி வழிகின்றன. இதில் திமுக, அதிமுக, பிஜேபி என அனைவருக்குமே பங்குண்டு. உதாரணமாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க கமிட்டி ஒன்றை திமுக அரசு அமைத்தது. பதினொறு மாதங்களாகியும் அக்கமிட்டி இன்னும் அறிக்கை சமர்பிக்கவில்லை.

பேராசிரியர்கள், தனியார் கல்விக் கொளையர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவர்களுடைய கூட்டு நடவடிக்கையே இந்த ஊழல் முறைகேடுகளை சாத்தியமாக்கியுள்ளன. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே இதற்கு அடிப்படை.  

  • அழகு   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன