டங்கி பாதை பயணமும் – காவிகளின் ‘விஸ்வகுரு’ பஜனையும்

2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 2023ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான ஒராண்டு கால கட்டத்தில் மட்டும் மொத்தம் 96,917 இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்து பிடிபட்டுள்ளனர். அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துப் பிடிபடுகின்றனர் என்றால் பிடிபடாமல் உள்ளே நுழைந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக இதே அளவிற்கு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சி குறித்தும், மோடி ஆட்சித் தலைமை ஏற்ற பிறகு உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள பெருமை குறித்தும் காவிகள் உருவாக்கி வரும் பிம்பம் மிகப் பெரியது. இணையவெளியில் காவிகள் நடத்தும் கதா காலட்சேபங்களில் அமெரிக்க அதிபர் பிடனும், ரஷ்ய அதிபர் புடினும் மோடியின் ஆலோசனையைக் கேட்டே இயங்குகின்றனர். உலக அரசியலே மோடியின் கண் அசைவிற்கு இணங்கி நடக்கிறது. அனைத்து நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடுகளில் கனடா பிரதமர் மோடியின் கோபப் பார்வையைக் கண்டு ஓடி ஒழிந்து கொள்கிறார். மோடியின் பெருமையை உணர்ந்ததால்தான் பப்புவா நியூகினியா போன்ற நாட்டுத் தலைவர்கள் மோடியின் காலில் ஓடோடி வந்து விழுகின்றனர்.

மோடியோ ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்துகிறார், காலநிலை மாற்ற மாநாட்டில் கர்ஜிக்கிறார். ஒட்டுமொத்தத்தில், இந்தியாவை உலகிற்கே வழிகாட்டும் ‘விஸ்வகுருவாக’ மாற்றும் வேலையில் நரேந்திர மோடி அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைத்து வருகிறார்.

காவிகள் இப்படி ஒரு தனி உலகில் மோடியின் ஆட்சி குறித்துப் புலங்காகிதமடைந்து வந்த வேளையில், உலக அரங்கில் அதுவும் தற்போது காலிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவுடனும், கனடாவுடனும் இந்தியா பலப்பரிட்சை செய்து வருவதாக காவிகள் கதையளந்து வரும் சூழலில், அதே அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்றும், அதற்காக உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்கிறார்கள் என்றும் வெளிச்சம் போட்டுக் காட்டி ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் பாலிவுட் திரைப்படமான ‘டங்கி’தான் அந்த திரைப்படம். ‘டங்கி’ என்பது பஞ்சாபி மொழியில் ஆபத்தான பாதையில் பயணிப்பதைக் குறிக்கிறது. இன்றைக்கும் பஞ்சாப், ஹரியாணா, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பிழைப்புத் தேடி அமெரிக்காவிற்கோ, கனடாவிற்கோ, ஐரோப்பாவிற்கோ செல்வதற்கு சட்டபூர்வமான வழிமுறைகள் கைக்கொடுக்காத போது அவர்கள் இந்த டங்கி அல்லது டாங்கி எனப்படும் ஆபத்தான பாதையில், தங்களது உயிரைப் பணயம் வைத்து அந்த நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனை மையமாக வைத்துத்தான் டங்கி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

டங்கி படம் வெளியான உடனே கொதித்தெழுந்த காவிக் கும்பல், இந்தியாவின் பெருமையைக் கெடுப்பதற்காகவே ஷாருக்கான் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாகக் கடுமையாக சாடினார்கள். இணையவெளி முழுவதையும் ஷாருக்கான் எதிர்ப்புக் கோஷத்தால் நிரப்பினார்கள். ஆனால் காவிகளின் விஸ்வகுரு பிரச்சாரத்தையும், பெருமையையும் சிதறடிக்கும் ஒரு சம்பவம் கடந்த வாரத்தில் நடந்தது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைய நினைத்த 300 இந்தியர்களைக் கொண்ட, நிகரகுவா நாட்டிற்குப் பயணப்பட்ட, விமானம் ஒன்று “மனிதக் கடத்தல்” குற்றச்சாட்டின் கீழ் பிரான்ஸ் நாட்டின் சலோன்ஸ்-வாட்ரி விமான நிலையத்தில், டிசம்பர் 22ம் தேதியன்று தடுத்து நிறுத்திவைக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு 26ம் தேதியன்று இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சசி கிரண் ரெட்டி என்ற கடத்தல்காரன் இந்த விமானத்தைப் பணிக்கமர்த்தி இதற்கு முன்பு பல முறை இந்தியர்களை நிகரகுவா நாட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கான விமானம் என்ற பெயரில் நிகரகுவா நாட்டிற்குச் செல்லும் இந்த விமானம், ஒரு முறை கூட பயணிகளை மீண்டும் அழைத்துவரவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் பாரிஸ் நகருக்கு அருகில் உள்ள வாட்ரி விமான தளத்தில் எரிபொருள் நிரப்ப தரையிரங்கியபோது இந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

 

கடந்த 2019ம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று பரவுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஓருவர் அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காமல் இறந்து போன சம்பவம் சட்டவிரோதக் குடியேறிகளின் ஆபத்தான பயணம் குறித்த உண்மைகளை வெளிஉலகிற்கு கொண்டு வந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் குடியேற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 2023ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான ஒராண்டு கால கட்டத்தில் மட்டும் மொத்தம் 96,917 இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துப் பிடிபட்டுள்ளனர். அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துப் பிடிபடுகின்றனர் என்றால் பிடிபடாமல் உள்ளே நுழைந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக இதே அளவிற்கு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

டங்கிப் பாதை அல்லது கழுதைப் பாதை மூலம் அமெரிக்காவிற்குள் நுழைவதென்பது சாதாரண விசயம் அல்ல, அது மிகவும் ஆபத்தான பயணமாகும். முதலில் தென் அமெரிக்க நாடுகளான ஈக்குவடார், பொலிவியா அல்லது கயானா போன்ற நாடுகளில் இந்தியர்களுக்குச் சுலபமாக சுற்றுலா விசா கிடைக்கும் என்பதால் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் பல்வேறு நாடுகள் வழியாகப் பயணம் செய்ய வேண்டும். சில சமயங்களில் பல நாட்களுக்கு உண்ண உணவின்றி, மூச்சுவிடக் கூட சிரமப்பட வேண்டிய கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு அவர்கள் பயணப்பட வேண்டும்.

சுற்றுலா விசா கிடைத்தவுடன், முதலில் செல்ல வேண்டிய நாடு பனாமா. எல்லாம் சரியாக நடந்தால், பனாமா காடுகள் மற்றும் மலைகளின் வழியாக பயணம் செய்து எட்டு முதல் பத்து நாட்களில் அவர்கள் கோஸ்டாரிகா அல்லது நிகரகுவாவை அடைந்துவிட முடியும்.

பின்னர் அங்கிருந்து கவுத்தமாலாவுடன் இணைந்துள்ள மெக்சிகோவின் தெற்கு எல்லையை அடைய வேண்டும். பின்னர் அங்கிருந்து, அவர்கள் கவுத்தமாலாவைக் கடக்க வேண்டும். எல்சால்வடாரின் தெற்கு எல்லையை அடைவதற்கு முன் ஹோண்டுராஸுடனான வடக்கு எல்லையில் கவுத்தமாலாவை அவர்கள் அடைய வேண்டும். இப்படி நாடு நாடாக கடந்து அமெரிக்காவை அவர்கள் அடைவதற்குக் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை ஆகலாம்.

இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பலரும் வழியில் ஏமாற்றப்பட்டு அமெரிக்காவை அடையாமல் மற்ற நாடுகளில் மாட்டிக்கொண்டு பலவருடங்கள் கழித்து இந்தியா திரும்பியிருக்கின்றனர். அப்படியே வெற்றிகரமாக அமெரிக்காவை அடைந்துவிட்டாலும் கூட அவர்கள் அங்கே வேலை செய்யும் இடங்களில் கடுமையான சுரண்டலுக்கும், முறைகேடுகளுக்கும் ஆளாகின்றனர். சட்டவிரோதக் குடியேறிகள் என்பதால் அவர்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போலீசுக்கும் கூட போக முடியாது.

இது எல்லாம் தெரிந்துதான் இந்திய இளைஞர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு பலியாகி, தங்களது நாட்டில் வாழ வழியின்றி அடைக்கலம் தேடி மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் மத்தியக்கிழக்கு நாட்டு மக்களின் அவல நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் சவால்விடும் அளவிற்கு பொருளாதாரரீதியில் வளர்ந்து வருவதாக காவிகளால் விதந்தோதப்படும் இந்தியாவில் இருந்து, அதுவும் காவிகளின் கோட்டையான குஜராத்திலிருந்து இளைஞர்கள் அமெரிக்காவை நோக்கி இப்படி சட்டவிரோதமாக குடியேறத் துடிக்கின்றனர், அதுவும் உலக அளவில் இப்படி குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் சீனர்களைப் பின்னுக்குத் தள்ளி இந்தியார்கள் முதலிடத்தில் இருக்கின்றனர் என்றால் காவி பாசிஸ்டுகளால் ஊதிப் பெருக்கப்படும் வளர்ச்சியின் யோக்கியதை அந்த அளவிற்கு இருக்கிறது.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன