போர் குற்றவாளி – அமெரிக்க அதிகாரி ஹென்றி கிஸிஞ்சரின் மரணம் உலக உழைக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியே..!

 

 

அமெரிக்க அணு – ஆயுத வெளியுறவுக் கொள்கை அதிகாரியும் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியான ஹென்றி கிஸிஞ்சரின் மரணம், உலகம் முழுவதும் தனது மேலாதிக்கத்தை நிறுவிவரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அடியாளான அதிபர்களுக்கும் ஒரு இழப்பே என்றால் அவற்றை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், அமெரிக்க போர் வெறியால் உயிரை, உடல் உறுப்புகளை, வாழ்வுரிமையை இழந்து அகதிகளாக அன்றாடம் அவதிப்படும் உலக மக்களுக்கு போர் குற்றவாளியான ஹென்றி கிஸிஞ்சரின் மரணம் பெரும் மகிழ்ச்சியே என்றால் அவற்றையும் மறுப்பதற்கில்லை.

அந்நிய நாடுகள் மீது அநியாயப் போரை நடத்தும் ஆக்கிரமிப்பு நாடுகளை – அதன் அதிபர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிப்பது உண்டு. இந்த அலைவரிசையில் அணிவகுத்து உலக மேலாதிக்கத்தை நிறுவிவரும் அமெரிக்காவும், அதன் அதிபர்களும் மட்டுமல்ல. அவர்கள் அமைச்சகத்தின் அணுசக்தி – வெளியுறவுக் கொள்கை அமைச்சராக இருந்து அநியாய – நியாயமற்றப் போர்களுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்து கோடிக்கணக்கான அப்பாவி மக்களை அமெரிக்க ராணுவம் – அதன் கூட்டாளி நாடுகளின் ராணுவமும் கொன்றொழித்ததற்கு காரணமான அமெரிக்க கொடுங்கோல் அதிகாரி ஹென்றி கிஸிஞ்சர் என்பவரும் போர் குற்றவாளி மட்டுமல்ல; கொடூர கொலை வெறியனும் கூட.

உலக மேகலாதிக்கத்தை நிறுவ ஆக்கிரமிப்பு போரே சரியான வழிமுறையென்று  அரங்கேற்றி வரும் ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை ‘ராணுவ வலிமையைக் காட்டி அச்சுறுத்துவது; தேவைப்பட்டால் போரை நடத்தி அடிபணிய வைப்பது மூலமே உலக அமைதியை நிலை நாட்ட முடியும்’ என்கிற உத்தியில் உலக மேலாதிக்கப் போர் வெறியை மேலும் ஏரியூட்டிய உலக மக்களின் விரோதியான ஹென்றி கிஸிஞ்சர் ஒரு போர் வெறியன் மட்டுமல்ல, சதி வலையை பின்னும் சிலந்தியும் கூட.

இதற்கான சான்றுகளாக, சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச சிலி அரசின் அதிபரான அலெண்டே அமெரிக்கா ஏகாதிபத்திய எதிரிப்பை, சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்ததற்காக 1973-இல் அமெரிக்க ராணுவ ஒடுக்கு முறையின் மூலம் அலெண்டேயின் சனநாயக அரசை கவிழ்த்தது; அலெண்டே உட்பட 5000 கம்யூனிஸ்டுகளைக் கொலை செய்ய வைத்தது; 1976-இல் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜென்டினா இஸ்பெல் பெரோன் ஆட்சியை சதி செய்து கலைக்க வைத்தது; 1975-இல் கிழக்கு திமோரின் சுதந்திர பிரகடனத்தை இந்தோனேசியாவின் சுகர்த்தேவைத் தூண்டிவிட்டு ஆக்கிரமிப்பு செய்ய வைத்தது; அதே 1975-இல் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி அளித்து கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) இன அழிப்பைச் செய்ய வைத்தது; கம்போடியாவில் வியட்நாம் போராளிகள் ஒளிந்து இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது இரகசியமாக குண்டுகளைப் போட்டு 5 லட்சத்திற்கும் மேலான மக்களைக் கொலைச் செய்ய வைத்தது  போன்ற போர் குற்றங்களை இவர் மீது அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேலும் சோசலிச நாடுகளை போரில் வீழ்த்த முடியாது என்பதை இரு உலகப் போர்களில் உணர்ந்த அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், அவற்றின் தலைமையை சித்தாந்த ரீதியில் சீரழிப்பது மூலம் வீழ்த்த முடியும் என்பதை குருச்சேவ் – கோர்பசேவ் தலைமையிலான ரஷ்யாவில், லியு சௌ-சி, டெங் – தலைமையிலான சீனாவை முதலாளித்துவப் பாதையில் இழுத்து விட்டது மூலம் நிரூபித்து விட்டவர் தான் கம்யூனிஸ்ட் எதிரியான ஹென்றி கிஸிஞ்சர்.

இது போன்ற சதி வேலைகளில் ஈடுபட்டும்; அதிபர்களைத் தூண்டிவிட்டு அமெரிக்க ராணுவத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் போரில் ஈடுபட வைத்தும் மேற்கண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போரில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் படுகொலைக்கும் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் தான் இந்தப் போர்வெறியன் ஹென்றி கிஸிஞ்சர்.

இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமான இவருக்கு வியட்நாமில் அமெரிக்க அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் அமைதியை ஏற்படுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்றால், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அடிவருடியாகவும், உலக உழைக்கும் மக்களின் வாழ்வைச் சிதைத்த கங்காணியாகவும் செயல்பட்ட வகையில் அவரின் ஆளும் வர்க்க விசுவாசத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

யூத மதத்தைச் சேர்ந்த ஹென்றி கிஸிஞ்சர் ஜெர்மனியில் கல்வியைத் தொடர முடியாமல் தனது பள்ளி மாணவர்கள் – குடும்பத்துடன் ஹிட்லரின் வதை முகாமில் வதைப்பட்டு பின்பு அங்கிருந்து மீண்டு, 1938-இல் அமெரிக்கவில் தஞ்சம் அடைந்து, 2-ஆம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து ஹிட்லர் ராணுவத்திற்கு எதிராக போரிட்டு உள்ளார். இருப்பினும் ஹிட்லர் போன்ற போர் வெறியர்களை முறியடிக்க மாற்று நடவடிக்கைகளை, அதாவது போர்வெறியை முறியடிக்க ரஷ்யப் புரட்சி வழிகளில் சிந்திப்பதும் அதற்கான நடைமுறையை வகுப்பதுமே சரியான வழிமுறையாக இருக்கும். அதை விடுத்து மீண்டும் பாசிஸ்டுகளான ஹிட்லர் – முசோலின் வழிமுறையிலேயே இன்னொரு இனத்தை –  நாட்டை போரின் மூலம் ஆக்கிரமித்து அடிபணிய வைப்பது என்கிற வகையில் சிந்திப்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதும் உலக உழைக்கும் மக்களுக்கு எதிரான போக்கே. இவற்றை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. இவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கவும் முடியாது.

எனவே இவரைப் போன்றவர்களின் மரணங்கள் அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க விஸ்தரிப்புக்கும் லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் ஒரு தடையாக அமையுமானால் அவற்றை அங்கீகரித்து வரவேற்று உலக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் மகிழ்வோம்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன