சென்னையில் தொடரும் மழை வெள்ளம்: இயற்கையின் பேரிடரா? தனியார்மயம் உருவாக்கிய அழிவா?

ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் உற்பத்திசார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி வியாபாரிகள், மத்திய மற்றும் உயர் வருவாய் பிரிவைச் சேர்ந்த புதுப் பணக்கார கும்பல்- இவர்கள் தான் சென்னையின் இரத்த நாளங்களாக இருந்த நீர்வழித் தடங்களை அழித்த குற்றவாளிகள் என்றால், மாஸ்டர் பிளான் II என்ற பெயரில் அதனைத் திட்டமிட்டுப் பின்னிருந்து இயக்கிய அரசும், உலகவங்கியும் இந்த அழிவின் சூத்திரதாரிகள்.

மிக்ஜாம் புயலுக்கு மீண்டும் எழுதல் மற்றும் உறுதி என்பதை உணர்த்தும் வகையில் மியான்மர் நாடு அதற்கு பெயரிட்டது. ஆனால் சென்னையில் வசிக்கும் மக்கள் இப்புயலின் தாக்கத்தால் நிலைகுலைந்துப் போயுள்ளனர். செயற்கையாகவும், அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இயற்கை, அவ்வப்போது இந்திய நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு உணர்த்தி கொண்டே இருக்கிறது.

 

 

தென்சென்னைப் பகுதியான பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் அருகே வைபவ் என்பவரின் பிளாட், இருக்கிறது. சர்க்கரை நோயால் அவதிப்படும் தனது வயது முதிர்ந்த தந்தையின்  சிகிச்சையின் பொருட்டு, அம்மருத்துவமனையின் அருகிலிருக்கும் எம்பசி ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார், மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை வெள்ளம், அவர் வசித்த கட்டிடத்தில் மட்டுமில்லாது அத்தனியார் மருத்துவமனையிலும் புகுந்து அவரின் வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கிறது. பெரும்பாக்கத்தில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புக்களை மழை வெள்ளம் மார்பளவுக்கு மேல் சூழ்ந்ததால் அங்கு வசித்து வந்த பலர், படகை, வாடகைக்கு பிடித்து தப்பித்து வெளியேறியுள்ளனர்.

வடசென்னைப் பகுதியான புளியந்தோப்பில் உள்ள அடித்தட்டு மக்கள், இம்மழை வெள்ளத்தின் போது பட்ட துயரத்தை சொல்லி மாளாது. மழை நின்று நான்கு நாட்கள் ஆன பிறகும் கூட, அப்பகுதியில்,தேங்கிய மழைநீர் அகற்றபடாததோடு, அடைத்துக் கொண்ட சாக்கடைகளிலிருந்து கழிவுநீர், வெளியேறி மழைநீரில் கலந்தன; தொழிற்சாலையில்  இருந்து வெளியேறிய எண்ணெய் படலமும் ஆங்காங்கே மழை நீரில் கலந்திருக்கிறது, அகற்றப்படாத குப்பைகள் மலை போல உயர்ந்து போயின. இதற்கு மத்தியில் இறந்து போன பூனைகள், நாய்களோடு  தங்களது குழந்தைகளை வைத்துக் கொண்டு தங்கும் அவலநிலை வடசென்னைவாசிகளுக்கு ஏற்பட்டது.

சிறு-குறு நிறுவனங்கள் அதிகளவு இருக்கும் அம்பத்தூர், திருமுடிவாக்கம், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில், மழை நின்று மூன்று நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை. விச்சூர் தொழிற்பட்டையில் ஒரு சிறு நிறுவனத்தை நடத்திவரும் சித்திக் என்பவர், சிறு-குறு நிறுவனங்கள் இருக்கும் இப்பகுதியில் 8 அடி உயரத்தில் தேங்கிநின்ற மழை நீரால் சுற்றுச்சுவர் கூட மூழ்கிவிட்டது: எங்களது இயந்திரங்கள் அனைத்தும் பழுதாகிவிட்டன; நாங்கள் அனைத்தையும் இழந்து விட்டோம் என்கிறார். இம்மழையினால் தோராயமாக ரூ500 கோடி இழப்பு ஏற்பட்டதாக இப்பகுதியின் சிறு உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பினால், எங்களால் இம்மாதத்திற்கான மின்கட்டணத்தையும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாத தவணையும் கூட கட்ட முடியாமல் போயுள்ளது என்கிறார் சென்னையின் சிறு குறு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான மோகன்.

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்த தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் போன்றவற்றில் இடுப்பளவுக்கு நீர் புகுந்திருக்கிறது வடசென்னை பகுதிகளான தண்டையார்பேட்டை தொடங்கி என்ணூர் வரையிலான பகுதிகள் அனைத்துமே மழைநீரில் மூழ்கின.

சென்னையின் இப்பகுதியில் வசித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியவில்லை; மின்சாரம் இல்லை; குடிக்கத் தண்ணீர் இல்லை; அலைபேசி இணைப்பு இல்லை; குழந்தைகளுக்கு பால் இல்லை என இம்மழை வெள்ளத்தின் போது சிக்கிப் பரிதவித்தனர். இதுமட்டுமில்லாமல் இம்மழையினால் 17 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ்நாட்டை ஆண்டுவந்த அதிமுக, திமுக கட்சிகள் போன்றவை சென்னையில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரின் போதும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை போல 47 ஆண்டுகளாக ஏற்படவில்லை என்கிறார் மு.க.ஸ்டாலின். வருடந்தோறும் மழைப்பொழிவின் அளவு குறைவதும் கூடுவதும் இயற்கையின் ஒரு அங்கம். இதை நாம் மாற்றி விட முடியாது. சென்னையில் ஏற்படும் வருடாந்திர மழைப் பொழிவை பற்றி குறிப்பிடும் வானிலை பதிவர் ஆர்.பிரதீப் ஜான் கடந்த எட்டு வருடங்களில் சென்னையின் வருடாந்திர மழைப் பொழிவு அதிகரித்து வருவதாக கூறுகிறார்

மிக்ஜாம் போன்ற மழைப் பொழிவு ன்னைக்குப் புதிதல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில் 235 மி,மீ மழையும், அதற்கு முன்னர், 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் 270 மி.மீ, மழையும் பெய்தது. இதைவிட அதிகபட்சமாக 1976ஆம் ஆண்டு நவம்பரில், சென்னையின் நுங்கம்பாக்கத்தில் 450 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 350 மி, மீ மழையும் பெய்திருக்கிறது என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ஒய்.இ.ஏ.ராஜ். 1996 ஆம் ஆண்டில் உருவான சூறாவளியோ, சென்னையில் 350 மி. மீ கனமழையை கொண்டு வந்திருக்கிறது.

 

 

எனவே மிக்ஜாம் புயல், சென்னையின் அருகே 100 கீ.மீ தொலைவில் இருந்தது; இப்புயல் மெதுவாக நகர்ந்தது; இதனால் தான் இம் மழை கொட்டி தீர்த்தது என இம்மழைக்கு, இயற்கை தான் காரணமும் எனவும் கூறுவதற்குப் பின்னே, திமுக முதற்கொண்டு இதுவரை தமிழகத்தை ஆண்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளின் அலட்சியமும், ஆட்சியாளர்களின் குற்றத்தை மறைத்து கொள்ளும் தந்திரமும் தான் மறைந்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்பு,சென்னையில் 70 முதல் 80 விழுக்காடு மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டது; எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்து விடாலம்; மழை நீர் வடிகால் பணிகள் திருப்திகரமாக இருப்பதாக பரப்பரப்பூட்டும் ஆரவாரமாக விளம்பரம் செய்தனர். நேர்மை, கண்டிப்பு, துடிப்பு நிறைந்த தன் ஆட்சியில் சென்னை நகரை மழை நீரில் இருந்து காப்பாற்றப் போவதாக மு.க.ஸ்டாலின் கூறினார். முதலாளித்துவ பத்திரிக்கைகளும் தன் பங்குக்கு விளம்பரம் செய்தன. ஆனால் இவை அனைத்தும் வடிகட்டிய பொய் என்பதை இந்த மிக்ஜாம் புயல் நிரூபித்துவிட்டது.

மழைநீர் வடிகால் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர் ராஜன் பேசுகையில், சென்னையைப் போன்ற தட்டையான நகரத்தில் மழைநீர் வடிகால் மட்டுமே கைகொடுக்காது. அதேபோல, இவர்கள் அமைத்திருக்கும் மழைநீர் வடிகால்கள் ஒவ்வொரு தெருவுக்கும் அளவு வேறுபடுகிறது. அதிகபட்சமாக 200 மி.மீ மழையை மட்டுமே அவை தாங்ககூடியவை என்கிறார்.(ஜூ.வி 13-12)

மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கான திட்டமிடுதலிலேயே தவறுகள் இருப்பதாகவும், இவை முறையாக கட்டப்படவில்லை என்றும் கூறுகிறார் பொதுப்பணித்துறையின் முன்னாள் மூத்தப் பொறியாளர் முனைவர் வீரப்பன். சென்னையில் 1,200 கி.மீ தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் வடிவமைப்பு சரியாக இல்லை, செயல்பாடும் சரியாக இல்லை. உயர்மட்டத்தில் இருந்து தாழ்மட்டத்துக்குச் செல்வது போன்று வடிகால் பாதைகள் செல்லவில்லை. அதேபோன்று மழைநீர் வடிகால் பாதைகள் பெரிய கால்வாய்களோடோ, ஆற்றிலோ இணைக்கப்படவில்லை.

மேலும், இங்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கான திட்டமிடுதலில் தவறு உள்ளது; மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் கையில் இல்லாமல் துறைசார் வல்லுநர்களின் கட்டுப்பாட்டுக்குள் மழைநீர் வடிதல் சம்பந்தமான பிரச்னைகள் கொண்டுவரப்பட வேண்டும். இதை சரிசெய்யாவிட்டால் இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்கிறார்.

மழைநீர் மட்டுமல்ல, சென்னையில் நீர் வழிந்தோடும் போக்குக்கு ஏற்ப சாலைகளும் அமைக்கப்படுவதில்லை. அதனால் அசோக்நகர் போன்ற பகுதிகளில் எளிதாக மழைநீர் தேங்குகிறது. இதைப் பற்றி 135 வார்டு கவுன்சிலர் யாழினி கூறும் போது, கடந்த 30-40 ஆண்டுகளில் சென்னையில் பல இடங்களில் சாலைப் போடும் போது மில்லிங் எனும் செயலை ஒப்பந்ததாரர்கள் ஒருபோதும் மேற்கொள்வதில்லை. இதனால் அவ்வப்போதும் போடப்படும் சாலைகளின் மட்டம், வீடுகளை விட உயர்ந்து கொண்டே இருக்கிறது, ஆகவே தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் மழைநீர் எளிதாக புகுந்து விடுகிறது என்கிறார்.

தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட ஆளுங்கட்சிகளின் அலட்சியம் ஒருபுறமிருக்க 1980-ல் சென்னையின் மொத்த பரப்பளவில் 15 சதவிகிதம் மட்டுமே கான்கிரீட் கட்டடங்களாக இருந்தன. 85 சதவிகிதம் திறந்தவெளி நிலங்கள் இருந்தன. 2020-ம் ஆண்டின் படி சென்னையின் பரப்பளவில் 85 சதவிகிதம் கான்கிரீட் கட்டடங்கள் இருக்கின்றன. அதிலும் பல அடுக்குமாடிக் கட்டடங்களாக இருக்கின்றன. மீதமிருக்கும் 15 சதவிகித இடமே திறந்தவெளி நிலமாக இருக்கிறது என்கிறது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆய்வு சுருக்கமாக கூறினால், 174 ச.கீமீ பரப்பளவில் இருந்த சென்னை, கடந்த 25 ஆண்டுகளில் 471 கீமீ ஆக வீங்கிப் போனதன் விளைவு தான் சென்னை ஒவ்வொரு மழைக்கும் வெள்ளக் காடாகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேலை நாடுகளைப் போல, சிங்கப்பூர் மலேசியா போல இங்கும் திட்டமிட்ட நகர வளர்ச்சி ஏன் ஏற்படவில்லை என்பதற்கு நிபுணர்களும், நடுத்தரவர்க்க அறிவுஜீவிகளும்,அரசியல்வாதிகளின் இலஞ்சம், ஊழல் மற்றும் அராஜகத்தை காரணமாக முன்வைக்கிறார்கள். இது பிரச்சினையின் ஒரு பகுதிதானே தவிர முழுமையல்ல இந்த திட்டமிடாத பிரச்சினையின் ஆணிவேர் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்க பொருளாதாரப் பாதையில் உள்ளது.

 

 

1991 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தனியார்மயத்திற்கு பிறகான 25 ஆண்டுகளில் மட்டும் போதிய அறிவியில் மற்றும் பொறியியல் ஆய்வுகள் இன்றி நீர்நிலைகளை அழித்து, திட்டமிட்டப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும். கல்லூரிகளும், அரசுக்கட்டிடங்களும் விரைவுச் சாலைகளும் பற்றி அதில் கிடைக்கும் புள்ளி விபரங்களே ஒவ்வொரு பேரிடரின் போதும் சென்னை மக்கள் ஏன் சிக்கித் தவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடையளிக்கும்.

பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள் விரைவுச்சாலைகள், இணைப்புச்சாலைகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள்; அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப பூங்காங்க்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட தனியார் துறையின் திட்டங்களுக்கு கண்மாய்களும், நீர்வழித்திடங்களும் மட்டுமல்ல, சதுப்பு நில காடுகளும் கூடப் பலியாகியிருக்கின்றன.

மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையமும், காய்கறிச் சந்தையும் அதற்கு முன்னர் இருந்த ஏரியை ஆக்கிரமித்தே கட்டப்பட்டன. சென்னையின் அடையாளமாக 2000 ஆண்டுகளில் சொல்லப்பட்ட பறக்கும் ரயில் பாதை முழுவதும், சென்னை கோட்டை தொடங்கி, வேளச்சேரி வரை நீர்வழித்தடங்களின் மீது அவற்றை ஆக்கிரமித்தே கட்டப்பட்டன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் 2008ம் வெளியிடப்பட்ட முழுமைத் திட்டம் II  (Master plan II ) சென்னையின் முக்கிய ஏரிகளை ஆக்கிரமித்து புதிய குடியிருப்புகளை உருவாக்கும் திட்டத்தையே முன்வைக்கின்றன. அதன்படித்தான் திட்டமிட்டு சென்னை நகரம் கடந்த 15 ஆண்டுகளாக உருவாக்கப் பட்டு வருகிறது. இரண்டாவது முழுமைத் திட்டம் அதாவது மாஸ்டர் பிளான் என்பது உலக வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே உடுவாக்கப்பட்டது. தற்போது மூன்றாவது மாஸ்டர் பிளானையும்  உலகவங்கியின் வழிகாட்டுதலோடு உருவாக்கி வருகிறது.  

ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் உற்பத்திசார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி வியாபாரிகள், மத்திய மற்றும் உயர் வருவாய் பிரிவைச் சேர்ந்த புதுப் பணக்கார கும்பல்- இவர்கள் தான் சென்னையின் இரத்த நாளங்களாக இருந்த நீர்வழித் தடங்களை அழித்த குற்றவாளிகள் என்றால், மாஸ்டர் பிளான் II என்ற பெயரில் அதனைத் திட்டமிட்டுப் பின்னிருந்து இயக்கிய அரசும், உலகவங்கியும் இந்த அழிவின் சூத்திரதாரிகள்.

கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், ஊரப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும்; செம்பரம்பாக்கம், போரூர் ஏரி, மாம்பலம், நந்தனம் வடிகால் பகுதி நீரும்; மணப்பாக்கம், ஜாபர்கான் பேட்டை, ராமாபுரம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உபரி நீரும்; வடசென்னை ஏரிப்பகுதிகளிலிருந்து வரும் உபரி நீரும் இணைந்து கால்வாய்கள் மூலம் அடையாறு ஆற்றை வந்தடைந்து கடலில் கலக்கும் விதமாக முந்தைய காலங்களில் நீர்வழித் தடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தாம்பரம், வேளச்சேரி, அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம், பகுதிகளிலிருந்து கால்வாய் வழித்தடங்கள் மூலம் வெள்ள நீர் தேங்காமல் ஆற்றை வந்தடையும் வகையில் இருந்தன. இந்த கட்டுமானத்தை அறுத்தெறிந்து குற்றுயிரும் குலை உயிருமாக்கிவிட்டது சென்னையின் வளர்ச்சி.

பழைய சென்னையின் அடையாளங்களான மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தின் ஒருபகுதி, சூளைமேடு, லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை “லாங்டேங்” என்றழைக்கப்பட்ட சென்னையின் பிரம்மாண்டமான ஏரியின் அழிவில்தான் உருவாயிருக்கின்றன. இந்த ஏரி சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டைம் சைதாப்பேட்டை வரை குதிரை லாட வடிவில் நீண்டிருந்ததோடு, அந்தந்த பகுதிக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் ஏரியும் மாம்பலம் ஏரி, மயிலாப்பூர் ஏரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டதற்கு 1909ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழில் ஆதாரங்கள் உள்ளன.

1970-80 காலக்கட்டத்தில் உருவான முகப்பேர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், 1990களில் தனியார்மயம் புகுத்தப்பட்டபின் உருவான வேளச்சேரியும், பெரும்பாக்கம், மடிப்பாக்கம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளும் பல்வேறு நீர் ஆதாரங்களை அழித்தும் ஆக்கிரமித்தும்தான் எழுந்து நிற்கின்றன.

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்; ஏரிகளைப் பூமியின் கண்கள் என்றனர் நம் முன்னோர்கள்; ரெட்டேரி, நாங்குநேரி, பொன்னேரி என ஊர்களுக்கு ஏரிகளின் பெயரை இட்டு மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள். இதன் மூலம் இந்த ஏரிகள் அழிந்தால் ஊர்களும் அழியும் என்பது அவர்கள் நமக்கு உணர்த்தும் செய்தி.

நவீன வளர்ச்சியோ இந்த நீர்வழித்தடங்களை அறுத்தெறிந்து விட்டுத்தான் எழுந்து நிற்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே சுமார் 4,000 முதல் 6,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன என்பதை பல்வேறு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிலும் தனியார்மயம் தாராளமயம் புகுத்தப்பட்டு, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக காட்டப்பட்ட பிறகு இந்த அழிவு மிகவும் துரிதமாக நடைபெற்றிருக்கிறது.

 

 

இப்படி நீர்வழித்தடங்களை ஆக்ரமித்தும், அழிக்கப்பட்டும் உருவான தனியார்மயத்தின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என கூசாமல் நியாயப்படுத்துகின்றனர். 1991க்கு பின்பு வந்த தனியார்மயத்திற்கு பின்பு வந்த சென்னையின் வளர்ச்சி அனைத்தும் 47 சதவீத நீர்நிலைகளை ஆக்ரமித்தும், அழித்தும் உருவாக்கப்பட்டது என்கிறது ஒரு புள்ளிவிபரம். இந்த வளர்ச்சியை சாதிப்பதற்கு அரசும், தனியாரும் இயற்கையை மட்டுமல்ல மனித உயிர்களையும் பறிகொடுத்துத்தான் உருவாக்கியிருக்கின்றனர். 

விவசாயிகளின் நசிவையும், ஏரிகள், கண்மாய்கள், நீர்வழித்தடங்கள் ஆக்ரமிப்பையும் நாம் பிரித்து பார்க்கமுடியாது. அது போல தனியார்மயம் தாராளமயம் கொண்டு வந்திருக்கும் இந்த செயற்கையான, அராஜகமான வளர்ச்சியையும், ஓட்டுக்கட்சிகளின் சீரழிவைவையும் பிரித்து பார்க்க முடியாது.

தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கவும், மழை நீரைச் சேமித்து வைக்கவும் இருக்கின்ற ஏரிகள், குளங்களையாவது பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு மழை வெள்ளத்தின் போதும், வலுப்படத் தொடங்கும் எனினும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கும் பலரும் விவசாய நசிவைப் பற்றி பேசுவது கிடையாது. ஏரிகளைப் பாதுகாக்க கோரும் பெரும்பாலோர் சுற்றுப்புறச் சூழல் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அல்லது பாதிப்பால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து மட்டுமே இக்கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஏரிகளின் தமிழக நீர்நிலைகளின் பேரழிவுக்கு காரணமான தனியார்மய வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், நீர்நிலைகளை பாதுகாத்துவிட முடியும் எனக் கருதுவது கனவுகளில் கூட சாத்தியமாகாது.

தனியார்மயத்தின் அடியாளாக நிற்கும் அரசு ஒவ்வொரு மழை வெள்ளத்திற்கு பிறகும் கூட விவசாய நிலங்களை மக்களிடமிருந்து அதிரடியாக பறித்து கொண்டு தனியார்மய திட்டங்களை செயல்படுத்தவதற்காக தன் ஆக்டோபஸ் கரங்களை கொண்டு ஒடுக்கி வருகிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் தனியார்மயத்தின் விளைவாக விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை பராமரிப்பது, மேம்படுத்துவது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது என விவசாயத் துறையில் எந்த முதலீட்டையும் அரசு செய்யத் தயாராக இல்லை. தனியார்மயத்திற்கு பின்பு அரசின் தன்மையை மாறிப் போய் விவசாயிகள், விவசாயம் சார்ந்த துணை தொழில் செய்பவர்கள் தங்களது வாழ்வாதரங்களையும் இழந்து, அவர்களை கூலி உழைப்பை மட்டும் நம்பி வாழும் ஏதுமற்றோராக நகர்ப்புறங்களை நோக்கி விசிறியடிக்கும் ஒரு நிகழ்ச்சிப் போக்கை அரசு நடத்தி வருகிறது.

இவற்றுக்கு அப்பால், அரசு இயந்திரமும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து கட்சிகளும் தனியார்மயத்தின் அடியாளாக இருப்பதோடு அவர்களை தங்களது கடமைகளை ஆற்ற மறுத்து மக்களின் எதிர்நிலை சக்தியாக மாறிபோய் இருக்கிறார்கள்.

மக்க்ள் விரோத தனியார்மய பொருளாதார வளர்ச்சி பாதையையும், அதை தீவிரமாக அமுல்படுத்தும் இந்த மக்கள் விரோத கார்ப்பரேட் நலன் அரசையையும் ஒழிக்காமல், நீர்நிலைகள், இயற்கை வளங்கள், விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றை பாதுக்காக்க முடியாது என்பதை ஒவ்வொரு வெள்ளமும் நமக்கு உணர்த்தி செல்லும் செய்தியாக இருக்கிறது.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன