சத்துணவுப் பணியாளர்களை வஞ்சித்து மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு பணியாளர்களில், சமையலர், சமையல் உதவியாளர்கள், அமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இப்பணியாளர்களின், குறிப்பாக பெண் பணியாளர்களின் உழைப்புச் சக்தியை அரசு, ஒட்ட சுரண்டி வருகிறது. ஆனாலும் அப்பணியாளரகள் கடின உழைப்புச் சக்தியை செலுத்தி மாணவர்களுக்கு வாஞ்சையாக உணவு தயாரித்து கொடுத்து வருகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. உயிர் கொடுக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது…… ……..அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு உணவு தயார் செய்பவர்களுக்கும் உங்கள் முதல்வர் அன்பாக ஒரு கோரிக்கை வைக்கிறேன். தாய் உள்ளத்துடன் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என கூறி இத்திட்டத்தை ஆரவரமாக தொடங்கி வைத்தார்.

 

 

ஆனால் சமீபத்தில் நடைப்பெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தமுள்ள 358 பள்ளிகளில் பயிலும் 65,030 மாணவ மாணவிகள் பயன்பெற்றுவரும் காலை உணவுத் திட்டத்தை, ஆண்டுக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க அனுமதியளிக்கும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை தி.மு.க கூட்டணிக் கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகளைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.

தற்போது காலை உணவுத்திட்டம், அம்மா உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழுவினரால் சமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாணவர்களுக்கான இக்காலை உணவு, சென்னை வார்டுகளில் உள்ள சமுதாய கட்டிடங்களில் சமைக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தை நம்பி பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்பட்டு வரும் இத்திட்டத்தை சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனம் மேற்கொள்வதற்காக ரூ19 கோடியை ஒதுக்குவதாகவும், சமையல் பாத்திரங்கள், சமையலறை என பல வசதி செய்து கொடுப்பதாகவும், தனியார் நிறுவனத்தை கண்காணிக்க அரசு அதிகாரிகளை கொண்ட குழு உருவாக்கப்படும் என இத்தீர்மானம் கூறுகிறது

இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்த மார்க்சிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பினர்களுக்கு பதிலளித்த, மேயர் பிரியா, சென்னை தவிர தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மாநகராட்சிகளிலும் வெளிநிறுவனம் மூலம்தான் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது; திட்டம் ஆரம்பிக்கும்போதே அவுட்சோர்சிங்குக்குதான் கொடுக்கப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியும் இப்போது இணைந்திருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

இக்காலை உணவுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த மு.க.ஸ்டாலின், இந்த திட்டம் நம் மாநிலத்துக்கு நலன் சேர்க்கும். பெரியார், அண்ணா, கருணாநிதி அமைத்த சமூக நீதி பாதையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது என்றார். ஆனால் தமிழகமெங்கும் இருக்கும் சத்துணவு பணியாளர்கள், இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே காலை உணவுத்திட்டத்தை சத்துணவு பணியாளர்கள் கொண்டே நடத்த வேண்டும் என போராடி வருகின்றனர்

இதுமட்டுமில்லாமல் சத்துணவு பணியாளர்களின் பல ஆண்டுகள் கோரிக்கைகளான”பத்தாண்டு பணி முடித்த அமைப்பாளருக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள அரசு துறையில் பணியமர்த்த வேண்டும்; காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்;சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; குறைந்த பட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்;காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை  நிறைவேற்றக் கோரி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டங்கள், மாநிலம் தழுவிய போராட்டங்கள், 70 மணி நேர பட்டினி போராட்டம் என நடத்தி இருக்கின்றனர்.

 

 

பெரியார் அமைத்த சமூக நீதிப்பாதையில் நடப்பதாக ஸ்டண்ட் அடிக்கும்  மு.க.ஸ்டாலின், சத்துணவு பணியாளர்களின் பலவருட  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறினார். திராவிட மாடல் அரசு வந்து இரண்டரை ஆண்டுகள் முடியப் போகிறது.

ஆனால் அப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், திராவிட மாடல் அரசு இருப்பதோடு, தற்போது சென்னை மாநகராட்சி மூலம் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு பணியாளர்களில், சமையலர், சமையல் உதவியாளர்கள், அமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான பணியிடங்கள்  காலியாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இப்பணியாளர்களின், குறிப்பாக பெண் பணியாளர்களின் உழைப்புச் சக்தியை அரசு, ஒட்ட சுரண்டி வருகிறது. சில இடங்களில் விறகு அடுப்பில் தான் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.. சில இடங்களில்  எரிவாயு உருளைக்கான  பணம் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை.ஆனாலும் அப்பணியாளரகள், கடின உழைப்புச் சக்தியை செலுத்தி மாணவர்களுக்கு வாஞ்சையாக உணவு தயாரித்து கொடுத்து வருகின்றனர்.. மானவர்களுக்கு உணவு அளிப்பது தங்களது வேலை என்று பார்ப்பதோடு மட்டுமில்லாமல் கடமை என முன்வந்து பணிபுரிந்து வருகின்றனர்.. பெற்றோர்கள், மாணவர்கள் உணவு பற்றிய விசயத்தில் கூறும் குறைகளுக்கு அரசின் பிரதிநிதியாக பொறுப்பாக பதில் கூறிவருகின்றனர் ஆனால்  ஜனநாயக அமைப்பிற்கு வெளியே இருக்கும் தனியார் நிறுவனங்கள், இது போன்ற மாணவர்கள் நல உணவுத்திட்டத்தை செயல்படுத்தும் போது, அதில் ஏற்படும் குறைகள், முறைகேடுகளுக்கு, சம்பிரதாயமான விளக்கம் கூட அளிக்கப்போவதில்லை என்பது திண்ணம்.

காலை உணவுத்திட்டம் என்ற மக்கள் நலன் சார்ந்த துறையிலும், சத்துணவு பணியாளர்களை நியமிக்காமலும் ஏற்கனவே இருக்கும் அப்பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதோடு, அவுட்சோர்சிங் முறை மூலம்  இத்திட்டத்தை தனியார்மயப்படுத்த முயற்சியிருப்பதன் மூலம், திராவிட மாடல் அரசு தன் கடமையிலிருந்து கை கழுவ முயற்சிக்கிறது. நேரடியாக பொதுநலனுடன் தொடர்புள்ள இது போன்ற திட்டங்களில் எல்லாம் தனியார் நிறுவனம் புகுத்தப்படுவதால், வரிப்பணம் தனியார்களுக்கு வாரியிறைக்கப்படுவதுடன் மாணவர்கள் தங்களின் உணவு மீதான் உரிமையை எந்த விதத்திலும் கோர முடியாத நிலைமைக்கே தள்ளப்படுவர்.காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனங்கள் இலாபமீட்டும் ஒரே நோக்கத்திற்காகத் தான் காலை உணவுத்திட்டத்தை தயாரித்து கொடுக்குமே ஒழிய மாணவர்கள் நலனிருந்து ஒரு போதும் கொடுக்கப் போவதில்லை.

சென்னை மாநகராட்சி,இத்தீர்மானத்தின் மீதான எதிர்ப்பின் காரணமாக, தற்போது  இத்திட்டம் நடைப்பெற்று வருவது போல நடைபெறும் என கூறியிருக்கிறது. ஆனால் தனியார் வசம் இத்திட்டம் ஒப்படைக்கப் பட மாட்டாது என்பதை சென்னை மாநகராட்சி தவிர்த்திருக்கிறது.

மாணவர்களின் காலை உணவுத்திட்டம் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான  முயற்சியும், சத்துணவு பணியாளர்களின் அவலநிலைமையும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் மீதான திராவிடமாடலின் அரசின் யோக்கியதைக்கு சான்றாக இருக்கிறது.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன