அரசு உதவி பெறும் கல்லூரிகளை கை கழுவும் திராவிட மாடல் அரசு!

பல்துறைசார் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஒரு கல்லூரிக்குள் பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகள். அறிவியல் படிப்புகள், கலை-அறிவியல் படிப்புகள், வணிகம்-மேலாண்மை படிப்புகள். திறன் சார்ந்த படிப்புகள், மருத்துவப்படிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. தமிழ்நாட்டிலுள்ள பல அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழங்களாக மாறுவதற்கு முயற்ச்சித்து வருகின்றன. இதன் மூலம் ஏராளமாக கள்ளாகட்ட முடியும் என்ற என்பதிலிருந்து நிகர்நிலை பல்கலைக்கழங்களாக தகுதி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது திராவிட மாடல் அரசும் அதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் ஓரளவிற்கு தரமான உயர்கல்வியை அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லூரிகள் தமிழக மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். மேற்சொன்ன வழிகாட்டுதல்களின் மூலம் அரசு உதவி பெறும் கல்லூரிகளை கழட்டிவிடும் வேலையை சமூகநீதி அரசு செய்துள்ளது.

***************

9/11/23  நாளிட்ட சுற்றிக்கை உயர்கல்வித் துறை செயலாளரிடமிருந்து தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

17/11/23  நாளிட்ட சுற்றறிக்கை கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்து அந்த பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சுற்றறிக்கைகளையும்  பார்க்கும்போது தமிழ்நாட்டின் உயர்கல்வி தளத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ல் குறிப்பிட்டுள்ள பல்துறைசார்  பல்கலைக்கழகங்கள் Multidisciplinary university உருவாகக் கூடிய சூழலுக்கான  முன்னோட்டம் தெரிகிறது.

பல உதவிபெறும் கல்லூரிகள் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டன என்பது தெளிவாகிறது.

உயர்கல்வி துறை செயலாளர் அறிக்கையில் இருந்து உதவிபெறும் கல்லூரிகள் பல நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதற்கு அனுமதி  பெற பல்கலைக்கழகங்களுக்கு கருத்துருக்கள்  அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. உதவிபெறும் கல்லூரிகள் நிகர்நிலை  பல்கலைக்கழகமாக மாறுவதற்கு விரும்பினால் உயர்கல்வித் துறை அனுமதி பெற்றாக வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலர் அறிக்கை கூறுவதோடு அவ்வாறு மாறுவது என்பது உதவிபெறும் கல்லூரியை மூடுவதாகும் எனவேதனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டப்படி அரசு அனுமதி பெற்றாக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இருக்கின்ற  உதவி பெறும் கல்லூரிகளுக்கு மான்யம் கொடுக்க அரசும் இனி தயாராக இருக்குமா  என்பது கேள்விக்குறியே?

கல்விச் சந்தையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் வணிகம் சிறப்பாக  நடப்பதை முன்னரே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பார்க்கிறோம். தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பதை இந்திய உயர் கல்வி நிலை அறிக்கை( AISHE ) யைப் பார்த்தால் தெரிகிறது.

ஆளும் கட்சி தலைவர்களின் குடும்பத்தினர் பலரும், எதிர்கட்சி தலைவர்களின் குடும்பத்தினர் பலரும் முன்னரே நிகர்நிலை பல்கலைக்கழக வணிகத்தில் கோலோச்சுவதும் நாம் அறிந்ததுதான். இடதுசாரி கட்சிகளும் சில தலித் அமைப்புகள் மட்டுமே கல்வி வணிகத்தில் இறங்கவில்லை.

உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதி வகுப்புகளைத் தொடங்க அனுமதி அளித்து சில பாடப்பிரிவுகள் சுயநிதி பாடப் பிரிவுகளாகவும் அதிக கட்டணம் கொடுத்தால் மட்டுமே அவற்றை படிக்கக்கூடிய சூழல் நிலவ அனுமதித்து கல்வி வியாபாரத்தை தொடர அனுமதி அளித்துள்ள அரசாங்கம் உதவிபெறும் கல்லூரிகள் அனைத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறுவதை தடுக்கப் போகிறோம் என்று கூறவில்லை. மாறாக அரசு அனுமதி பெற்று நடத்தலாம் என்ற தொனியில் சுற்றறிக்கை அனுப்புகிறது.

சென்னை துரைப்பாக்கம் டி. பி. ஜெயின்கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவி பெறும் பாட வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை நிர்வாகம் நடத்தவில்லை. உதவி பெறும் பாட வகுப்புகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் AUT டி. பி. ஜெயின் கல்லூரி நிர்வாக நடவடிக்கைக்கு எதிராக போராடியது. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. திருச்சி தேசிய கல்லூரியில் தத்துவத்துறை மூடப்பட்டு விட்டது.

சென்னை குருநானக் கல்லூரியிலும், மதுரை ச.வெள்ளைசாமி நாடார் கல்லூரியிலும் கட்டணக் கொள்ளையை  எதிர்த்து மாணவர் அமைப்புகள் போராடுகின்றன. உதவி பெறும் கல்லூரிகளில் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில், அரசு கட்டணத்தில் படிக்கக் கூடிய வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது.

உதவி பெறும் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகமானால்  கல்வி வணிகச் சந்தையில் மேலும் பல  உயர் கல்விக் கடைகள் கல்வியை ஏலம் கூவி விற்கும் சூழல் உருவாகும். சமூக நீதிக்காக உள்ள அரசு என கூறும் தமிழ்நாடு அரசு  கல்வி வணிகத்தை ஊக்குவிக்கும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக வளர்ச்சியை தடுக்குமா? 

பேராசிரியர். சிவக்குமார்

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன