பருவமழையால் இந்திய நகரங்கள் ஏன் சீரழிவின் விளிம்பிற்கு தள்ளபடுகின்றன?

முதலாளிகளைப் பொருத்தவரை பெருநகரங்கள், தொழிலாளர்களை மிக அதிக அளவில் ஒரே இடத்தில் குவித்து, அதன் மூலமாக மலிவான கூலிக்கு அவர்களைச் சுரண்டும் வாய்ப்பை அவர்களுக்கு  வழங்குகின்றன. முதலாளித்துவத்துவம் இதன் பொருட்டே தனது அனாதிக்காலம் தொட்டு பெருநகரங்களை உருவாக்கி வந்துள்ளது.

பருவமழை தொடங்கிவிட்டாலே, இந்திய நகர்ப்புற மக்களின் வாழ்க்கை அல்லோலப்படுகிறது. தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் என இந்தியாவின் பெரு நகரங்கள் சிறு மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருவதோடு எல்லா வகையிலும் சீரழிந்து வருகின்றன. சிறுமழைக்குக் கூட நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இயற்கை அமைப்பில் உள்ள பல காரணிகள் வெள்ளத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. பருவமழையின் போது ஆறுகளின் வெள்ளப் பெருக்கு சமவெளிகளில் பெருகி ஓடும். ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் அதிகப்படியான நீரோட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும். அதே சமயத்தில் காடுகள் நிறைந்த நிலங்கள், நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவுகின்றன.

ஆனால் இந்திய நகரமயமாக்கல் இயற்கை அமைப்பை சிதைத்து பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்காக விரிவடைந்து கொண்டே செல்கிறது. நீர்நிலைகள், திறந்த வெளிகள், காடுகள் அழிக்கப்பட்டு நகரங்கள் கட்டிடங்களாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.

 

 

இந்திய நகரங்கள் மழையின் போது நிலைகுலைந்து கிடக்கும் போது அதை சீர்படுத்திவிடப் போவதாக மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் அவ்வப்போது ஸ்டண்ட் அடிக்கிறார்கள். நகரங்களை சீரமைப்பதற்கு கோடி கோடியாக ஒதுக்கி பல திட்டங்களை போட்டும் மக்களை ஏமாற்றுகிறார்கள். பருவமழையை ஒட்டி, வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகளைக் காட்டி நகரம் மேம்பட்டுள்ளது என மக்களை நம்பச்சொல்கிறார்கள். மேலும் பல சீரமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு. கிராமப்புற சேவைகளுக்கான நிதியை வெட்டி விடிகிறார்கள். கிராமப்புற மக்களை ஒட்டச் சுரண்டி, நகர்ப்புற மேம்பாடுக்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால் ஒவ்வொரு பருவமழைக்கும் இந்திய நகரங்கள் திணறும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

நகர்ப்புற சீரமைப்புக்கான இந்தத் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுறுவதற்கான காரணம் என்ன?

நகர்ப்புற சீர்குலைவுக்கான அடிப்படை காரணத்தை தீர்க்கும் முயற்சி எது என்பதற்கான விடை நமது இந்திய கிராமப்புறங்களில் இருக்கிறது.

இந்திய கிராமங்களில் வறட்சியும், பசியும், பட்டினியும் நீடிக்கும் வரை இந்திய ஏழை விவசாயிகள் நகர்ப்புறங்களில் தஞ்சம் புகுவதை தடுக்க முடியாது. நகரங்கள் மற்றும் கிராமங்கள், தொழிற்துறை மற்றும் விவசாயத்திற்கு இடையிலான முரண்நிலை அதிகரித்து கொண்டே செல்கிறது. கிராமங்களை நகரங்கள் சுரண்டுவதும் முதலாளித்துவத்தின் கீழ் தொழிற்துறை, வர்த்தகம், கடன்களின் முதலீடு ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான கிராமப்புற மக்கள் நாசமாக்கப்படுவதும் விவசாயிகள் மீதான சுரண்டலும் சேர்ந்தது தான் இந்த முரண்நிலைக்கான காரணமாகும் கார்ப்பரேட் முதலாளிகளின் வர்த்தகம், தொழில்துறை அனைத்தும்  நகரத்திலேயே குவிக்கப்படுகின்றன.

 

 

முதலாளிகளைப் பொருத்தவரை பெருநகரங்கள், தொழிலாளர்களை மிக அதிக அளவில் ஒரே இடத்தில் குவித்து, அதன் மூலமாக மலிவான கூலிக்கு அவர்களைச் சுரண்டும் வாய்ப்பை அவர்களுக்கு  வழங்குகின்றன. முதலாளித்துவத்துவம் இதன் பொருட்டே தனது அனாதிக்காலம் தொட்டு பெருநகரங்களை உருவாக்கி வந்துள்ளது. 

கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்காகவே கிராமங்களில் உள்ள விவசாயம் நசுக்கப்பட்டு வருகிறது, கிராமப்புற பசி, பட்டினியிலிருந்து மீள்வதற்காகவே மக்கள் நகரத்தில் வந்து குவிகிறார்கள். கிராமங்களில் பட்டினியாக கிடந்து சாவதைவிட நகரங்களில் உயிரைக் காப்பாற்றி கொள்ள முடியும் என மக்கள் நம்புகின்றனர். இதன் விளைவாக முதியோர்கள், பெண்கள் மட்டுமே வாழும் அவல நிலைக்கு இந்திய கிராமங்கள் மாறி வருகின்றன. நகரங்களோ விரிவாகிக் கொண்டே செல்கின்றன. இருண்ட கிராம வாழ்க்கைய விட்டு நகர்ப்புற வாழ்க்கையை நோக்கி ஆண்டு தோறும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது பிழைப்புக்காக ஓடி வருகின்றனர்.  நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகையானது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.2 விழுக்காடாக 2035 ஆம் ஆண்டுக்குள் மாறும் என ஐ.நா சபை தரவு கூறுகிறது.

மும்பை, டில்லி போன்ற நகரங்களில் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். 75 இலட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வாழும் நகரங்கள் இந்தியாவில் பல உள்ளன. இதில் புறநகர்ப்பகுதியையும் உள்ளடக்கினால், நகர மக்கள் தொகை சில மடங்கு அதிகரிக்கும்.

கிராமத்தில் இருந்து நகரங்களில் குவியும் ஏழைகள் வாழ்வதற்கு அருகதையற்ற குடிசைகளில், நடைபாதைகளில் வாழ்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு அறை வீடு கொண்ட அடுக்குமாடி கட்டிடங்களில் அடைபட்டு தொழிற்சாலைகளில் வேலைப்பார்த்து தங்களது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

இப்படி மக்கள் தொடர்ந்து இடம்பெயர்வதால், இந்திய நகரங்களில் பேருந்துகள் நெரிசலில் பிதுங்கி வழிகின்றன. சாலைப் போக்குவரத்துக்கள் தாறுமாறாகி ஸ்தமித்து போய் விடுகின்றன. குடிநீருக்காக மக்கள் கோடையில் மட்டுமில்லாமல் வருடம் முழுவதுமே அல்லாடுகின்றனர். சாக்கடைகளிலிருந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றன.குப்பைகள் நாள்தோறும் மலைப் போல குவிந்து வருகின்றன. இப்படி இந்திய நகரங்களின் அவலத்தை சொல்லி மாளாது. இவையனைத்தும் வருங்காலத்தில் எப்படி நகரத்தில் வாழ்வது என மக்களுக்கு எச்சரிக்கைகளை ஏற்படுத்துகின்றன.

கிராமப்புற, சிறு நகர்ப்புற வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வக்கற்ற ஆட்சியாளர்கள், இவ்வாறு நகரங்களில் குவியும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் படப் போவதில்லை. பெரு முதலாளிகளின் நலன்களுக்காக செயல்படும் இந்த அரசு ஒருபோதும் நகரங்கள் மற்றும் கிராமங்கள், தொழிற்துறை மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலைக்கான அடிப்படை முகாந்திரங்களை அகற்றப் போவதில்லை. மக்கள் நலனைப் பற்றி அக்கறை இல்லாத கார்ப்பரேட் நலன் அரசு இருக்கும் வரையில் நகர வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையாகத் தான் இருக்கும்.

  • தாமிரபரணி

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன