“மக்கள் அதிகாரம்” அமைப்பை தேர்தல் அரசியலுக்குக் கேடாக பயன்படுத்தும் கலைப்புவாத மருதையன், கோவன், காளியப்பன் கும்பலின் சதியை தோலுரிப்போம்!


“மக்கள் அதிகாரம்” அமைப்பை தேர்தல் அரசியலுக்குக் கேடாக பயன்படுத்தும் கலைப்புவாத மருதையன், கோவன், காளியப்பன் கும்பலின் சதியை தோலுரிப்போம்!


மக்கள் அதிகாரம்
பத்திரிகை செய்தி
20.11.2023.

உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! போலிகள் எச்சரிக்கை!

எமது அமைப்பான மக்கள் அதிகாரம் மற்றும் எமது தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் புரட்சிகர செயல்பாடுகளை பற்றியும் மக்கள்திரள் வழியில் பெருவாரியான மக்களை திரட்டி தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியிருப்பதை பற்றியும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

மறுகாலனியாக்கத்துக்கு எதிராகவும் பார்ப்பன பாசிச அபாயத்துக்கு எதிராகவும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எமது தோழமை அமைப்புகளும், 2015 ஆம் ஆண்டு முதலாக எமது அமைப்பும் பல அரசியல் இயக்கங்களை மக்களிடையே விரிவாக கொண்டு சென்றுள்ளது. கருவறை நுழைவுப் போராட்டம், சாதி தீண்டாமை எதிர்ப்பு இயக்கம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், தேக்குப்பண்ணை அழிப்புப் போராட்டம், திடீர் அரசியல் பணக்கார ரௌடிகளுக்கு எதிரான இயக்கம், மறுகாலனியாக்க எதிர்ப்பு மாநாடு, தமிழ் மக்கள் இசைவிழா, தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு இயக்கம், தில்லை கோவில் மீட்பு – தமிழ் உரிமைக்கான போராட்டங்கள், ரிலையன்ஸ் ஃபிரஷ் எதிர்ப்பு போராட்டம், பச்சை வேட்டைக்கு எதிரான இயக்கம், டௌ கெமிக்கல்ஸுக்கு எதிரான போராட்டம், சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம், தாதுமணல் மற்றும் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், காவி-கார்ப்பரேட் எதிர்ப்பு இயக்கங்கள்-மாநாடுகள் என பல அரசியல் இயக்கங்களை நடத்தியுள்ளோம். மைய அளவிலான இயக்கங்கள் மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலான அரசியல் இயக்கங்களும்-போராட்டங்களும், பொருளாதாரப் போராட்டங்களும் எண்ணிலடங்காதவை.

இவையெல்லாற்றையும் புரட்சிகர உணர்வோடும், மக்களை தேர்தல் அரசியலில் மூழ்க விடாமல், மக்களுக்கான மாற்றுப் பாதையை உணர்த்தும் வகையிலேயே செய்து வந்தோம், வருகிறோம்.
மக்களை புரட்சிகர வழியில் திரட்டுவதில் நம்பிக்கை இழந்த மருதையன், கோவன், காளியப்பன் கும்பல் ஓட்டுசீட்டு அரசியலுக்கு தாம் செல்வதோடு மட்டும் அல்லாமல் மொத்த அமைப்பையுமே இழுத்து செல்வதற்கு 2020-இல் திட்டமிட்டது. அதற்காக, பல்வேறு சதி, சீர்குலைவு, கலைப்புவாத வேலைகளில் ஈடுபட்டது. அக்கும்பலை அப்போதே வெளியேற்றி மக்களுக்கு அதை அறிவிக்கவும் செய்தோம்.

அப்போது, தமது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து பேச திராணியற்ற அக்கும்பலானது எமது அமைப்பிலும் தோழமை அமைப்புகளிலும் அதிகாரத்துவப் போக்கும் ஜனநாயகமற்ற போக்கும் நிலவுவதாக அவதூறுகள் செய்வதில் இறங்கினர்.

அதுமட்டுமல்லாமல், புரட்சிகர அரசியலையும், எமது அமைப்பு மற்றும் தோழமை அமைப்புகளின் புரட்சிகர பாரம்பரியத்தையும் வெறுத்த இக்கும்பலானது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெடு நோக்கோடு எமது அமைப்புகளின் பெயரிலேயே இயங்கி வருகின்றனர். இதுபற்றி கேட்டால், “நாங்கள்தான் பெரும்பாண்மை” என்று கூச்சநாச்சமே இல்லாமல் பேசுகின்றனர். எமது அமைப்புகளின் புரட்சிகர நிலைப்பாடுகளை, புரட்சிகர சித்தாந்ததை கைவிட்டுவிட்ட பிறகு அதன் பெயருக்கோ, அதன் பாரம்பரியத்துக்கோ உரிமை கொண்டாட இக்கும்பலுக்கு அருகதையோ நியாயமோ இல்லை. எமது அமைப்பின் பெயருக்கோ, புரட்சிகர பாரம்பரியத்துக்கோ பெரும்பாண்மை அடிப்படையில் உரிமை கொண்டாட முடியுமா அல்லது புரட்சிகர நிலைப்பாடுகள், சித்தாந்ததின் அடிப்படையில் உரிமை கொண்டாட முடியுமா என்பதை உழைக்கும் மக்களாகியே நீங்களே சிந்தித்து பாருங்கள்!

சென்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடாமல் “பி.ஜே.பி. அதிமுக கூட்டணியை புறக்கணிப்போம்” என்று பிரச்சாரம் செய்தார்கள். “பி.ஜே.பி. அதிமுக கூட்டணியை புறக்கணிப்போம்” என்று தாங்கள் பிரச்சாரம் செய்தது தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்தான் என்று சாதிக்கவும் செய்தார்கள். “கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்” என்பதற்கு ஏற்ப 2024-தேர்தல் நெருங்க நெருங்க இக்கும்பலின் உண்மையான முகம் மக்களுக்கும் அணிகளுக்கும் அம்பலமாகி வருகிறது. இவர்கள் எதற்காக அமைப்பை பிளந்தார்கள் என்பதற்கான உண்மை காரணத்தை இக்கும்பலே இப்போது வெளிப்படுத்தி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பாக, இக்கும்பல் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி “2024 நாடாளுமன்ற தேர்தல்: பாசிச பி.ஜே.பி-யை தோற்கடிப்போம்! இண்டியா கூட்டணியை ஆதரிப்போம்!” என்று தங்களது தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்கள்.

புரட்சிகர அரசியலை கைகழுவி விட்டதை மூடி மறைப்பதற்காக, பாசிசம் வந்துவிட்டது அதனால் தேர்தலில் அதனை தோற்கடிக்க வேண்டும் என்று பாசாங்கு செய்கிறார்கள். ஏதோ புரட்சிகர அரசியல் மீது இவர்களுக்கு பற்று இருப்பது போலவும், பி.ஜே.பி-யை தேர்தலில் ‘விழ்த்திவிட்டு’ இவர்கள் புரட்சிகர அரசியலை தோடர்ந்து கொண்டு செல்லப் போவது போலவும் நாடகமாடி வருகிறார்கள். உண்மையில், திமுக, காங்கிரஸ் போன்ற ஆளும் வர்க்க கட்சிகளுக்கு சேவை செய்து சில சண்மானங்களை பெறுவதற்காகவே இக்கும்பல் முயன்று வருகிறது. அவர்களின் ஆளும் வர்க்க சேவையிலும் புரட்சிகர சக்திகளின் மீதான வெறுப்பிலும் இதனை பார்க்கலாம்.
“தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யை எதிர்க்க திமுக-வை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?” என்று திருவாளர் கோவன் திருவாய் மலர்ந்திருக்கிறார். “பாசிசத்தை களத்தில் தான் ஜெய்க்கனும், குளத்தில்தான் மீன் பிடிக்கனும் என்பதெல்லாம் வெட்டி பேச்சு” என்பது திருவாளர் காளியப்பனின் மேலான கருத்து.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, இக்கும்பலின் ஞானகுருவான திருவாளார் மருதையன் அவர்களோ “ஒரு நகைச்சுவைக் காட்சியில் பைத்தியக்காரனாக வரும் சந்தானம் “நான் டாக்டர் நான் டாக்டர்” என்று பேசுவதை போல, இன்றுள்ள எதார்த்தம் புரியாமல் இவர்களும் (புரட்சிகர அமைப்புகள்) தாங்கள்தான் பாசிச எதிர்ப்பைத் தலைமை தாங்குவோம் என்று கோமாளித்தனமாகப் பேசுகிறார்கள்” என்று புரட்சிகர அமைப்புகளை கிண்டலடித்துள்ளார்.

புரட்சிகர அமைப்பின் மீதும் பாசிசத்தை புரட்சிகர அமைப்புகள் எதிர்த்து நிற்கும் பலத்தின் மீதும் சிறிதும் நம்பிக்கையற்ற, புரட்சிகர அமைப்புகள் மீது வெறுப்பையும் ஏளனத்தையும் வெளிப்படுத்துகின்ற இக்கும்பல்தான் பாசிசத்தை எதிர்க்கப் போகிறதா? தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து விடாப்பிடியாக போராடி வந்துள்ள புரட்சிகர அமைப்புகள் பாசிசத்தை எதிர்க்க போவதில்லையாம்; தி.மு.க-காங்கிரஸ் போன்ற ஆளும் வர்க்க கட்சிகள் தான் பாசிச எதிர்ப்பில் ‘பலம்’ வாய்ந்தவர்களாம். இப்படிப்பட்ட கருத்துக்களை கொண்ட இக்கும்பல், புரட்சிகர அமைப்புகளின் மீது உரிமை கொண்டாட அருகதை இருக்கிறதா?!

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களிடைய, ஜனநாயக சக்திகளுக்கிடையே புரட்சிகர அரசியலைக் கொண்டு, பல்வேறு இன்னல்களை சந்தித்து, சிறை, கைது, வழக்குகளை எதிர்கொண்டுள்ளோம். அதன்மூலம், எதற்கும் அஞ்சாமல் மக்களின் உண்மையான நலனுக்காக பேசுபவர்கள் என்று மக்களிடம் எமது அமைப்புகளுக்கு நன்மதிப்பை உண்டாக்கியுள்ளோம். எமது அமைப்புக்கும் மற்றும் எமது தோழமை அமைப்புகளுக்கும் மக்களிடையே உள்ள இந்த நன்மதிப்பை மூலதனமாக்கி தங்களுடைய பிழைப்புவாத அரசியலுக்காக, ஆளும் வர்க்க கட்சிகளை அண்டிபிழைத்து தங்களை வளர்த்துக் கொள்ளும் இழிநோக்கத்துக்காகவே எமது அமைப்புகளின் பெயர்களை இக்கும்பல் பயன்படுத்துகிறது.

அதனால், புரட்சிகர அரசியலையும், மக்களின் உண்மையான நலனுக்காக போராடுவதையும் கைவிட்டு ஓடிபோன இக்கும்பலை நம்பி மக்களாகிய நீங்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் எமது அமைப்பின் பெயர்களை பயன்படுத்தும் ஒரு போலி ஏமாற்று கும்பல் என்பதை புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தக் கும்பலின் உண்மையான முகத்தை புரிந்துக் கொள்ளுமாறு புரட்சிகர அணிகளை எச்சரிக்கிறோம்.

இப்படிக்கு
தோழர் முத்துக்குமார்
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
9790138614.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன