ஊதிய உயர்வுக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்களின் போராட்டமும்
அதை அடக்கி ஒடுக்கும் வங்கதேச அரசும்

 

 

வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக ஊதிய உயர்வுக்காகப் போராடி வருகிறார்கள். மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக உள்ள 8,000 டகா-வை ($70) (இந்திய மதிப்பில் சுமார் 5800 ரூபாயை) 23,000 டகா-வாக ($209) (சுமார் 17,300 ரூபாயாக) உயர்த்தப் போராடி வருகிறார்கள்.

வங்கதேசத்தின் 3500 ஆடை தொழிற்சாலைகள் அந்நாட்டின் ஏற்றுமதியில் 85%-உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%-உம் வகிக்கின்றன. ஏறத்தாழ 4 மில்லியன் (40 இலட்சம்) தொழிலாளர்கள் – பெரும்பாலும் பெண்கள் – இதில் பணியாற்றுகிறார்கள். ஹென்ஸ் & மெய்ரிட்ஸ்., ஏ.பி.கிளாத்திங்., அடிடாஸ்., ஏ.ஜி பேஷன்ஸ்., வால்மார்ட்., லீவிஸ்., ஜாரா (Hennes & Mauritz, AB Clothing, Adidas, AG Fashions, Walmart Inc., Gap Inc, Levi’s, Zara) போன்ற முன்னணி மேற்கத்திய ஏகாதிபத்திய ஆடை விற்பனை நிறுவனங்களுக்காகத்தான் அங்கு ஆடை உற்பத்தி நடக்கிறது. இவை அனைத்தும் உலகம் முழுவதும் ஆடை விற்பனையில் கோலோச்சும் பகாசுர ஏகாதிபத்திய நிறுவனங்களாகும். மாதாந்திரம் ரூ.17,000-ஐக் கூட ஊதியமாகக் கொடுக்க மனமில்லாத கருணாமூர்த்திகள்தான் இந்த முதலாளிகள்.

வங்கதேசத்தில் விலைவாசி பலமடங்கு கூடியுள்ளது. வீட்டு வாடகை உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பெருகியுள்ளது. இந்த சூழலில் பழைய மாத ஊதியமான ரூ.5,800 தொடர்ந்தால் உண்மை ஊதியத்தின் மதிப்பு (real wage) பல மடங்கு குறைவாகவே இருக்கும். இந்த அடிப்படையில் தான் தொழிலாளர்கள் ரூ.17,000 மாத ஊதியம் கோரிப் போராடுகிறார்கள்.

உண்மை ஊதியம் (real wage) என்பது ஏறும் விலைவாசிக்கேற்ப ஊதியத்தை ஒப்பிட்டுப் பெறப்படுவதாகும். உதாரணமாக, முன்பு ரூ.10,000 மாத சம்பளம் வாங்கிய ஒருவர், வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்ய முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். சில ஆண்டுகள் கழித்து சந்தையில் பொருட்களின் விலைவாசி ஏறுகிறது. ஆனால் அவர் அப்போது வாங்கிய அதே ரூ.10,00-ஐத்தான் ஊதியமாகப் பெறுகிறார் என்றால், அவரால் அவரது தேவையை ஈடுகட்ட முடியாது. அதாவது அவரது ஊதியம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சந்தையில் பொருட்களின் விலையேற்றத்தால் அவரது ஊதியத்தின் [பணத்தின்] மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது என்று பொருள்.

முதலாளிகள் கூலியைக் குறைத்து இலாபம் ஈட்டுவது மட்டுமின்றி, வேலை நேரத்தை நீட்டிப்பது, பணத்தின் மதிப்பு குறையும்போது கூலியை உயர்த்தாமல் இருப்பது போன்ற பல வழிகளில் தொழிலா்ளிகளைக் கசக்கிப் பிழிந்து கொள்ள இலாபம் அடிப்பதை ஆதிகாலத்தில் இருந்து செய்துவருகின்றனர்.

16 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கக் கண்டத்தில் வளமிக்க, எளிதில் தோண்டக்கூடிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், ஐரோப்பிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் புழக்கம் (circulation) அதிகரித்தது. இதனால், மற்ற சரக்குகளுடன் ஒப்பிடுகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு குறைந்துபோனது. [ஆனால்] தொழிலாளிகளோ [16 ஆம் நூற்றாண்டுக்கு] முன்பு வாங்கிய அளவிலான வெள்ளி நாணயங்களையே [ஊதியமாக முதலாளிகளிடமிருந்து] பெற்றனர். அவரது உழைப்புக்காகக் கொடுக்கப்பட்ட பணம் அப்படியேதான் இருந்தது. எனினும் அவர்களின் ஊதியம் சரிந்துவிட்டது. தாம் பெற்ற வெள்ளி நாணயங்களைக் கொண்டு முன்பு வாங்கியதை விடக் குறைவாகவே பிற சரக்குகளை தொழிலாளிகளால் வாங்க முடிந்தது. (மார்க்ஸ், கூலியுழைப்பும் மூலதனமும்) [அந்தக் காலத்தில் வெள்ளியில்தான் பெரும்பாலும் ஊதியம் கொடுக்கப்பட்டது; காகிதப் பணம் பெரியளவில் புழக்கத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்க.]

ஆனால், இதையெல்லாம் ஏளனம் செய்யும் வகையில், தொழிலாளிகளின் போராட்டத்தின் அழுத்தத்தால் “பெருந்தன்மையாக” குறைந்தபட்ச ஊதியத்தை ரூ,9,300-ஆக (113 டாலர்) உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளது அரசு. தன் சொந்த மக்களின் நலனை விட, அவர்களின் உழைப்பை சுரண்டி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தம் எஜமானர்களான ஏகாதிபத்திய முதாலிகள் இலாப வீதம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் வங்கதேச அரசு உறுதியாக உள்ளது.

தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு நடத்திய தாக்குதலில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். “நான் தொழிலாளிகளுக்குச் சொல்கிறேன்: எந்த அளவுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டாலும் அவர்கள் தங்கள் வேலையைத் தொடர வேண்டும்” என்றும் “தொடர்ந்து போராட்டம் நடத்தினால், அவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும், வேலையை இழந்து தங்கள் கிராமத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும்” என்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பகிரங்கமாக தொழிலாளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

எகிறும் விலைவாசியால் பழைய மாத ஊதியமான ரூ.5,800-ஐக் கொண்டு “எங்களால் வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. தக்காளி, வெங்காயம் கூட வாங்க முடியவில்லை” என்று தொழிலாளிகள் போராடி வருகின்றனர். உண்மையில் அவர்கள் கேட்கும் மாத ஊதியமான ரூ.17,800 கூட வாழ்க்கைத் தேவையை ஈடுகட்டப் போதாத ஒன்றுதான்.

ஆனால் முதலாளித்துவ ஊடககங்களோ, இதைத் திரித்துப் புரட்டி “தொழிலாளிகள் பல மடங்கு ஊதிய உயர்வு” கேட்பதைப் போல செய்தி வெளியிட்டு வருகின்றனர். உதாரணமாக, இந்திய, சர்வதேச முன்னணி ஊடகங்கள் “தொழிலாளிகளின் முந்தைய மாத ஊதியத்திலிருந்து 56% உயர்வை வங்கதேச அரசு கொடுத்துள்ளது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் தொழிலாளிகள் மும்மடங்கு ஊதிய உயர்வைக் கோருகிறார்கள்” என்று பேசுகின்றன, எழுதுகின்றன. தொழிலாளிகள் கேட்பது வெறும் ரூ.17,000 மாத ஊதியம் என்பதை மூடி மறைத்துவிட்டு, “மும்மடங்கு ஊதிய உயர்வைக் கேட்கிறார்கள்” என்று மட்டும் கூறுவதன் நோக்கம் என்ன? இச்செய்தியைக் கேட்பவருக்கு “தொழிலாளிகள் அநியாயமான ஊதியம் கேட்கிறார்கள்” என்ற எண்ணத்தை, கருத்தை ஏற்படுத்துவதே.

ஆடை விற்பனை சந்தையில் கோலோச்சும் பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளிகளின் இலாபம் சிறிதளவும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அரசுகளும் ஊடகங்களும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கின்றன. நாம் யார் பக்கம் நிற்கப் போகிறோம்?

  • மரகதமணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன