தில்லி காற்று மாசுபாடு – காரணம் யார்: விவசாயிகளா? கார்ப்பரேட் நல அரசா?

சம்பா சாகுபடிக்கும் குறுவை விதைப்புக்கும் இடையில் மிகக் குறுகிய காலமே வரும் வகையில் மாநில அரசின் சட்டம் இருப்பதும், இரட்டைப் பயிர் விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதும் தான் தில்லி காற்றுமாசுபாடு பிரச்சனைக்கு மூல காரணம். பிரச்சனையின் மூல காரணத்தை தீர்ப்பதை விட அதைப் பயன்படுத்தி எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை பெருக்கலாம் என்றே இந்த தனியார்மயதாசர்கள் சிந்திக்கிறார்கள்.
ஓவியம் தோழர் செல்வம்

இந்திய நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் தான் காரணம் என ஆளும் வர்க்கமும், அதன் ஊடகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் விவசாயிகள், அறுவடைக்கு பின்பு வயல்களில் வைக்கோல்களை எரிப்பதனால் தான் தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

நவம்பர் 7ம் தேதியன்று, காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றமும் விவசாயிகள் வைக்கோல் எரிப்பதை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் பெருகி வரும் காற்று மாசினால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல வகையான நோய்களுக்கு ஆளாகியும், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வருகின்றனர். சமூக ரீதியான தீர்வுகள் கோரும் இது போன்று காற்று மாசு சிக்கலுக்கு, சமூக ரீதியான தீர்வுகளை மறுத்து, தனிப்பட்ட தீர்வுகளாக, விவசாயிகள் வைக்கோல் எரிப்பதை நிறுத்துவது தான் தீர்வு எனக் கூறும் அரசு தன் பொறுப்பை தட்டிக்கழித்து, விவசாயிகள் மீது பழிபோடுகிறது.

 

 

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், ஜூன் மாதத்தில் தொடங்கும் சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் நடப்படுகின்றன. செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் நடுப்பகுதியில், இந்நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன. அடுத்ததாக குறுவை பருவம் என்பது நவம்பரில் விதைக்கப்பட்டு ஏப்ரலில் அறுவடை செய்யப்படுகிறது. இப்பருவத்தில் கோதுமை பயிரிடப்படுகிறது.

இம்மாநிலங்களில் நெல் அறுவடை முடிந்த பின்பு, கோதுமையை விதைப்பதற்காக விளைநிலங்களை தயார் செய்வதற்கு விவசாயிகளுக்கு (சம்பா அறுவடைக்கும் குறுவை விதைப்புக்கும் இடையே) குறைவான நாட்களே இருக்கின்றன.

இதனால் நெற்கதிர்கள் அறுவடை முடிந்த பிறகு வயலில் எஞ்சும் வைக்கோல்களை விவசாயிகளுக்கு எரிப்பது தான் எளிதான, மற்றும் செலவு குறைந்த வழியாக இருக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலங்களில் இந்த இரண்டு பருவங்களிலும் நெல் மற்றும் கோதுமையே பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றன.

நெற்கதிர்களின் வைக்கோல்களை விவசாயிகள் ஏன் எரிக்கிறார்கள்? பஞ்சாப்பில் இரண்டு பயிர்கள் மட்டுமே ஏன் பெரும்பான்மையாக சாகுபடி செய்யப்படுகின்றது? பல்வகை பயிர்களை பயிரிடுவதால் பஞ்சாப் விவசாயிகளுக்கு என்ன பிரச்சினை என்பதற்கு  நாம் விடை காண வேண்டுமானால், பஞ்சாப்பின் விவசாய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

 

1960களில் நடந்தேறிய பசுமைப் புரட்சியின் விளைவாக, பாசிப்பயறு, சோளம், நிலக்கடலை, பருத்தி போன்ற பல்வகை பயிர்கள் பயிரிடப்படுவதிலிருந்து விலகி இருவகை பயிரான நெல் மற்றும் கோதுமை பயிர் சுழற்சிக்கு பஞ்சாப் மாநிலம் மாற்றப்பட்டது. அரிசி மற்றும் கோதுமையின் ஆதிக்கம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. இந்த இரட்டைப் பயிர் சாகுபடி முறை, நெல் அறுவடைக்கு பிறகு எஞ்சும் வைக்கோல்களை கையாள்வதில் விவசாயிகளுக்கு சவாலை உருவாக்கியது.

மாநிலத்தின் சாகுபடி பயிர்கள் மற்றும் முறைகள் மாறியதால், நீர் அதிகம் தேவைப்படும் நெற்பயிருக்கு பாசனவசதி அதிகமாக தேவைப்பட்டது. 1960களின் இறுதியில் பஞ்சாப்பில் ஒரு இலட்சம் ஹெக்டேருக்கு சுமார் 1500 ஆழ்துளை கிணறுகள் இருந்தன. இக்கிணறுகளின் எண்ணிக்கை 1986ல் ஒரு இலட்சம் ஹெக்டேருக்கு சுமார் 10,000 ஆழ்துளை கிணறுகள் என அதிகரித்தன. 1980களுக்குக் பிறகு பஞ்சாப் மாநிலம் நெற்பயிருக்கான நீர்ப்பாசன நெருக்கடிக்கு ஆளானது. உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தின் சிங்குரு மாவட்டம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை நம்பியே இருக்கிறது இம்மாவட்டத்தின் நீர்ப்பாசனத்திற்காக சட்லெஜ் நதியிலிருந்து வெறும் 8 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பசுமைப் புரட்சி மூலம் வந்த இருபயிர் சுழற்சி முறை உருவாக்கிய நீர்ப்பாசன நெருக்கடியை, அரசியல் ரீதியில் தீர்க்க அரசு முன்வரவில்லை. நீர் வள மேம்பாடு தன் கடமை என இப்பிரச்சினையை தீர்க்கவும் முயலவில்லை

அதற்குப் பதிலாக விவசாயிகள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். இதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது என விவசாயிகளை குற்றவாளியாக்கினர், நிலத்தடி நீரின் பயன்பாட்டை குறைக்க, பஞ்சாப் அரசு 2009 ஆம் ஆண்டு நிலத்தடி நீர் பயன்பாடு சட்டம் என்ற சட்டத்தை பிறப்பித்தது. இச்சட்டத்தின் படி அரசு அறிவிக்கும் தேதிக்கு பிறகே, நாற்றங்காலிருந்து நெற்கன்றுகளை விவசாயிகள் வயலில் நடமுடியும்.

பருவமழையை மட்டுமே நம்பி விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிடவேண்டும் என இச்சட்டம் விவசாயிகளை நிர்ப்பந்தித்தது. ஆனால் இச்சட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், நிலத்தடி நீரிலிருந்து நெற்பாசனத்திற்கு விவசாயிகள் நீர் எடுப்பதையும் தடுக்க முடியவில்லை.

பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்த இச்சட்டத்தால், விவசாயிகள் நெற்பயிர் நடவு தள்ளிப்போனதால், அறுவடையும் தள்ளிப் போனது. நெருங்கும் குறுவை பருவத்தில் கோதுமையை பயிரிட விவசாயிகளுக்கு சிறிது நாட்கள் அவகாசமே எஞ்சியது. இதனால் தன் வயல்களை விரைவில் தயார்படுத்த, விவசாயிகளுக்கு வைக்கோலை எரிப்பது தான் எளிதான வழியாக இருக்கிறது..

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பல்வகை பயிர்களை ஊக்குவிக்கும் அரசின் திட்டங்கள் காகிதத்தில் மட்டும் தான் இருக்கிறது. நெல் மற்றும் கோதுமைக்கே குறைந்த பட்ச ஆதாரவிலை கொடுக்கப்படுகிறது. இதனால் தான் இவ்விரு பயிர்களை பெரும்பான்மையாக விவசாயிகள் பயிரிடுகின்றனர். பிற பயிர்களை தங்கள் நிலங்களில் பயிரிடும் விவசாயிகள், குறைந்த பட்ச ஆதாரவிலை கிடைக்காமல், நொடிந்து போகின்றனர்.

 

 

ஆம் ஆத்மி அரசு, பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்த பின்பு, கடந்த வருடம் பாசிபருப்புக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் மொத்த விளைச்சலில் 60 விழுக்காடு அளவுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை கூட கிடைக்காமல் விவசாயிகள் விற்பனை செய்து நொடிந்து போனது தான் மிச்சம். பஞ்சாப்பின் பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மாற்றுப் பயிராக குடை மிளகாயை இந்த வருடம் பயிரிட்டார்கள், கிலோ ரூ.40க்கு விற்க வேண்டிய குடை மிளகாயை கிலோவிற்கு ரூ.2 முதல் ரூ.5 விற்கு விற்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள்.

பல்வகைப் பயிர்களை பஞ்சாப்பின் ஜலந்தர் பகுதியில் பயிரிட்டால், அதை விற்பதற்கு 20 கிமீ தூரம் தொலைவில் உள்ள கபூர்தலாவிற்கு வரவேண்டும், கபூர்தலாவில் உள்ள மண்டியில் விளைப் பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் பிறகு விவசாயிகள் அங்கிருந்து 45 கிமீ தொலைவில் இருக்கும் ஹோசிராபூரின் மண்டிக்கு வரவேண்டும். இப்படி தான் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளின் நிலைமை இருக்கிறது. பல விவசாயிகள் உருளையை பயிரிடத் தயாராக இருந்த போதிலும், அதற்கான மண்டியும் இல்லை, குறைந்த பட்ச ஆதாரவிலையும் இல்லை.

இதற்கெல்லாம் மேலாக, நெற்பயிர்களிலேயே சில ரகத்திற்கு, குறைந்த பட்ச ஆதாரவிலை இல்லை என்கின்றனர் விவசாயிகள். புசா-1509 எனும் நெற்பயிர், மற்ற நெற்பயிர் ரகத்தை போல விளைச்சலை கொடுக்க கூடியது, அதேசமயத்தில் இதன் விளைச்சல் காலமும் குறைவு. ஆனால் இந்த நெற்பயிர் ரகத்திற்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை அரசு நிர்ணயிக்கவில்லை. அதிக காலம் எடுத்து விளைச்சல் தரும் புசா-44 எனும் நெற்ரகத்திற்கே குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசு நிர்ணயித்திருக்கிறது. இதனால் விவசாயிகள் அறுவடைக்கு பிறகு, கோதுமையை பயிரிட வைக்கோலை எரிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

சம்பா சாகுபடிக்கும் குறுவை விதைப்புக்கும் இடையில் மிகக் குறுகிய காலமே வரும் வகையில் மாநில அரசின் சட்டம் இருப்பதும், இரட்டைப் பயிர் விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதும் தான் தில்லி காற்றுமாசுபாடு பிரச்சனைக்கு மூல காரணம். பிரச்சனையின் மூல காரணத்தை தீர்ப்பதை விட அதைப் பயன்படுத்தி எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை பெருக்கலாம் என்றே இந்த தனியார்மயதாசர்கள் சிந்திக்கிறார்கள்.

விவசாயிகள் வைக்கோல் எரிப்பதை நிறுத்தவேண்டும் என உபதேசம் செய்வதோடு, மாற்று வழியாக வைக்கோல்களை உரமாக மாற்றும் இயந்திரத்தை விவசாயிகள் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். 4.5 லட்சம் விலையுள்ள இயந்திரத்திற்கு ஒரு லட்சம் மானியம் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். ஏற்கெனவே விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிடம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க நீதான் செலவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்து தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக பல்லாயிரம் கோடி ருபாய்க்கு மானியம் வழங்குவதுடன், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை இலவசமாக செய்து கொடுப்பது என எல்லாவற்றையும் செய்யும் இந்த அரசால் விவசாயிகளிடமிருந்து வைக்கோலை வாங்கிக் கொண்டு அதனை உரமாக மாற்றித் தரும் ஆலையை ஏன் அமைக்க முடியவில்லை? அதிக விலை கொடுத்து வைக்கோலை அழிக்கும் கருவியை வாங்க விவசாயிகளை ஏன் நிர்பந்திக்கிறார்கள்? விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பாசன வசதிகள் செய்து கொடுக்காமல் அவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை ஏன் கொண்டுவருகிறார்கள்? பல்வகைப் பயிர்களைப் பயிரிடுவதற்கு ஏன் விவசாயிகளால் முடியவில்லை?

இத்தனை கேளிகளுக்கும் ஒரே பதில் தனியார்மயம். தனியார்மயம் எனும் கொள்கையை அரசு பின்பற்றுவதான் இதற்குக் காரணம். தனியார்மயத்தைக் கைவிட்டு தில்லி வாழ் மக்களின் மீதும், பஞ்சாப் அரியான விவசாயிகளின் வாழ்வாதாரம் மீதும் உண்மையான அக்கறையோடும், சூற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்போடும் அரசு சிந்தித்தால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். எந்த பிரச்சனையையும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிலிருந்து பார்க்கும் அரசு ஒருநாளும் அப்படிப்பட்ட அரசாக மாறாது.

  • தாமிரபரணி

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன