இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பாதே!
மதவெறி இஸ்ரேலின் இன அழிப்புக்கு துணை போகாதே!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி


கண்டன அறிக்கை

பாலஸ்தீனத்தின் மீது இனஅழிப்புப் போரைத் தொடுத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை, பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் படுகொலை செய்ததுடன், காசா பகுதியையே அழித்துவிடும் நோக்கத்தோடு தனது கொடூர தாக்குதல்களைத் தொடர்கிறது இஸ்ரேல். காசாவில் உள்ள மருத்துவமனைகளையும் கூட விட்டுவைக்காமல் குண்டுவீசித் தகர்த்ததுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்ல அனுமதிக்க மறுக்கிறது.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த பாலஸ்தீன தொழிலாளர்களின் வேலைக்கான அனுமதிச் சீட்டை ரத்து செய்து அவர்களை வேலை நீக்கம் செய்திருக்கிறது. அது மட்டுமன்றி, எல்லைகளை மூடிவிட்டதால் தங்களது நாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் தவிக்கும் பாலஸ்தீன தொழிலாளர்களை விசாரணை என்ற பெயரில் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப்படுத்தி வருகிறது.

பாலஸ்தீனர்களது வேலையைப் பறித்துவிட்டதால் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கு இந்தியத் தொழிலாளர்களை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசிடம் இஸ்ரேலைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

கடந்த மே மாதத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் 42,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இந்திய அரசு ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி தற்போது உடனடியாக தொழிலாளர்களை அனுப்பி வைக்குமாறு இஸ்ரேல் கோருகிறது.

காசாவின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த இனஅழிப்புப் போர் என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, ஒரு அடியாளாக, பிராந்திய ரவுடியாக, அமெரிக்கா சார்பாக இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரேயாகும். அதில் தனது அடியாளுக்கு எல்லா வகையில் ஆதரவாக நிற்பதுடன், பொருளாதார உதவிகள், இராணுவ தளவாடங்கள் என அனைத்தையும் கொடுத்திருப்பதுடன், இஸ்ரேலுக்கு எதிராக மற்ற அரபு நாடுகள் செயல்படும் பட்சத்தில், தனது தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதைக் காட்டுவதற்காக, மத்தியத் தரைக்கடல் பகுதிக்குத் தனது இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியிருக்கிறது அமெரிக்கா.

இப்படி அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக அனுபியிருக்கிறது என்றால், அமெரிக்காவின் தீவிர விசுவாசியான மோடி அரசு நம் நாட்டு தொழிலாளர்களை அனுப்பிவைக்கப் பார்க்கிறது.

இந்தியத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதன் மூலம் இந்த இன அழிப்பு போருக்குத் துணைநிற்கும் இந்திய அரசை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்க்கு அனுப்பும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி கோருகிறது.

தொழிலாளர்களை இஸ்ரேலியர், பாலஸ்தீனர், இந்தியர் எனப் பிளவுபடுத்தி ஒடுக்க நினைக்கும் இஸ்ரேலைப் புறக்கணிக்கும் படியும், பாலஸ்தீனத்தைச் சார்ந்த பல ஆயிரம் சக தொழிலாளர்களைக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப்படுத்தும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்தியத் தொழிலாளர்களை புஜதொமு கேட்டுக் கொள்கிறது.

மதவெறி இஸ்ரேலே பாலஸ்தீனத்தின் மீதான இனஅழிப்புப் போரை உடனே நிறுத்து!

இந்திய அரசே நம் நாட்டுத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பாதே!
இன அழிப்புக்குத் துணை போகாதே!

இந்தியத் தொழிலாளர்களே!

தொழிலாளர்களை இனரீதீயாகப் பிளக்கும் இஸ்ரேலைப் புறக்கணிப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிப்போம்!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன