மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கையும் – காவி பாசிஸ்டுகளின் அதானி பாசமும்

மொய்த்ராவை நீக்கும் நடவடிக்கையைப் பரிந்துரைத்த பிறகு இதில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை சிபிஐ விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என நெறிமுறைகள் குழு கூறியுள்ளது. அதாவது தீர்ப்பை முதலில் எழுதிவிட்டு பிறகு விசாரணயைத் தொடங்குகிறார்கள். அந்த அளவிற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் செயல்பட்டுள்ளனர்.

 

 

தனக்கு எதிராகவும், தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு எதிராகவும் யார் பேசினாலும் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதைக் காவி பாசிஸ்டுகள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது திரிணாமுல் காங்கிரசின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ராவையும் சேர்த்துள்ளனர்.

அதானிக்கு எதிராக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பாராளுமன்ற நெறிமுறைக் குழு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவை, லோக்சபாவில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது. இதற்கென நவம்பர் 9 அன்று கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் நெறிமுறைக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான வினோத்குமார் சோங்கர் சமர்பித்த அறிக்கையின் மீதான ஓட்டெடுப்பில் 6:4 என்ற வாக்கு வித்தியாசத்தில் மஹூவா மொய்த்ராவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த கூட்டத்தில் 479 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் தொடர்பில் இருந்ததாக காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. பிரநீத்கவுர், மொய்த்ராவிற்கு எதிராக வாக்களித்துள்ளார். இதன் காரணமாகவே 6:4 என்ற வாக்கு வித்தியாசம் சாத்தியமாகியுள்ளது.

பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே மக்களைவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான தர்ஷன் ஹிராநந்தினியிடமிருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு தன்னுடைய மக்களவை இணையதளக் கணக்கின் விவரங்களைப் பகிர்ந்ததாகவும் அவருக்கு ஆதரவான கேள்விகளை மக்களவையில் எழுப்பியதாகவும் மொய்த்ரா மீது குற்றம்சாட்டினார். அதனடிப்படையில் பாராளுமன்ற நெறிமுறைக் குழு இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.

மொய்த்ராவின் கணக்கைப் பயன்படுத்தி ஹிராநந்தினி தனக்குச் சாதகமாக 50க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக ஹிராநந்தினியின் பிரமாணப்பத்திரம் நெறிமுறைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மொய்த்ரா, இது பிரதமர் அலுவலகத்தால் எழுதப்பட்டு, ஹிராநந்தினியை மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்ட பிரமாணப்பத்திரம் என்றும்; ஹிராநந்தினி நெறிமுறைக் குழுவில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்; தான் அவரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்தக் கோரிக்கையை நெறிமுறைக் குழு நிராகரித்துவிட்டது. மேலும் ஹிராநந்தினியின் பிரமாணப்பத்திரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு தனது பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் மொய்த்ராவை பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைத்துள்ளது.

மக்களவையில் மொய்த்ரா இதுவரை 62 கேள்விகளைக் கேட்டுள்ளார், இதில் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் ஹிராநந்தினிக்காக கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது, ஆனால் ஹிராநந்தினி தொடர்புடையதாக நான்கு கேள்விகள் மட்டுமே இதுவரை மொய்த்ரா கேட்டுள்ளார். நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் நிலை, சிறுகுறு தொழில்களின் நிலை குறித்த கேள்விகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று தொடர்பான கேள்விகளையும் கூட ஹிராநந்தினிக்கு ஆதரவாக கேட்கப்பட்டது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நிஷிகாந்த் துபே அக்டோபர் மாதம் 15ம் தேதி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதுகிறார். உடனடியாக அது நெறிமுறைக் குழுவிற்கு அனுப்பப்பட்டு அதன்மீது விசாரணை தொடங்கி அடுத்த 15 நாட்களில் மொய்த்ராவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொய்த்ராவை நீக்கும் நடவடிக்கையைப் பரிந்துரைத்த பிறகு இதில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை சிபிஐ விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என நெறிமுறைக் குழு கூறியுள்ளது. அதாவது தீர்ப்பை முதலில் எழுதிவிட்டு பிறகு விசாரணயைத் தொடங்குகிறார்கள். அந்த அளவிற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் செயல்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் பாஜக ஆதரவு எம்.பி.க்களுக்கு எதிராக பாராளுமன்ற நெறிமுறைக் குழுவிற்கு வந்த வழக்குகள் எதையும் இந்த வேகத்தில் விசாரிக்கப்பட்டதில்லை. குறிப்பாக தற்போது பாஜகவில் இருக்கும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பணம் வாங்கியது ரகசிய கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட நராடா வழக்கு 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு இதுவரை விசாரிக்கப்படாமலேயே முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொய்த்ராவின் மீதான வழக்கு மட்டும் துரிதகதியில் இரண்டே வாரங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இந்த வழக்கில் மொய்த்ராவை தண்டிப்பதை விட அவருக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தைக் கொண்டு செல்வதுதான் நோக்கமாக இருக்கிறது. பொதுவாக பாராளுமன்ற நெறிமுறைக் குழுவில் நடைபெறும் விசாரணைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாது, விசாரணை முடிந்த பிறகே அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும். ஆனால் மொய்த்ரா வழக்கில் ஆரம்பம் முதல், பாஜக எம்பி நிஷிகாந்த் தூபேயின் கடிதம், நெறிமுறைக் குழுவில் அவர் அளித்த சாட்சியம், ஹிராநந்தினியின் பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்ட விவரங்கள் என அனைத்தும் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டு மொய்த்ராவிற்கு எதிராகப் அவதூறுப்பிரச்சாரம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் மஹுவா மொய்த்ராவை பழிவாங்குவதற்கென்றே இந்த வழக்கு நடத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் மோடி அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் மஹுவா மொய்த்ரா முக்கியமானவர். குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என மக்களவையில் தொடர்ந்து குரலெழுப்பி வருபவர். அதானி குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும் என்பது தொடங்கி தற்போது வெளியாகியிருக்கும் அதானியின் 13,000 கோடி ருபாய் நிலக்கரி மோசடி வரை அதானிக்கு எதிராகவும் அவருடன் காவிக் கும்பலுக்கு உள்ள உறவு குறித்தும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மொய்த்ரா தொடர்ந்து பேசி வருகிறார்.

மக்களவையில் மொய்த்ராவின் பேச்சுக்கள் காணொளிகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பல கோடிப் பேரைச் சென்றடைகிறது. இது மோடி அரசை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மொய்த்ரா மீது ஏதாவதொரு குற்றச்சாட்டை சுமத்தி அவரை முடக்கிப்போட வேண்டும் என்ற நோக்கத்தில் காவி கும்பல் இந்தக் குற்றச்சாட்டை கொண்டுவந்துள்ளது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்து அவரைத் தேர்தலில் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காக அவதூறு வழக்கைக் கையிலெடுத்ததைப் போன்று மொய்த்ராவின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறிக்க இந்த நாடகத்தை காவிக் கும்பல் அரங்கேற்றுகிறது.

⦁ அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன